தேன் சிட்டு/உள்ளத்தின் விரிவு



உள்ளத்தின் விரிவு


நிலைமைக்குத் தக்கவாறு உள்ளம் விரிவடை வேண்டும். இல்லாவிட்டால் மனித இனம் நிலைப் பெற்று வாழ முடியாது.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே சிக வினோதமான உயிர்ப் பிராணிகள் இந்த உலகத்திகே வாழ்ந்து வந்தன. மாறுகின்ற உலக நிலைமைக்கு ஏற்றவாறு அவைகளால் தம்மை மாற்றி அமைத்துக கொள்ள முடியாமற் போனதால் அவை பூண்டோடு அழிந்து போயின. மண்ணிற் புதைந்து கிடந்த அவற்றின் எலும்புக் கூடுகள் சிலவற்றைக் கண்ட பிறகே அவ்வாறான உயிரினங்கள் இருந்தனவென்று மனிதனுக்குத் தெரியவந்தது.

அந்தப் பிராணிகளுக்கு ஏற்பட்ட கதி அவற் றிற்கு மட்டும் தனிப்பட்டதல்ல. அது பொதுவான நியதி. நிலைமைக்கு ஏற்றவாறு தம்மை அமைத்துக் கொள்ளத் தெரியாத எல்லா உயிரினங்களுக்கும் அதே கதிதான் நேரும்; மனிதனும் இந்த நியதிக்கு விலக்கல்ல.

இது அணுகுண்டு யுகம். அணுகுண்டையும் பின்னால் தள்ளிவிட்டு ஹைடிரஜன் குண்டு தோன்றி யிருக்கிறது. அதைவிடக் கொடிய படைகளையும் உண்டாக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலே மனிதன் பழைய பத்தாம்பசலியாக இருக்க முடியாது. அவன் உள்ளம் புதிய நிலைமையைச் சமாளிக்கக்கூடிய வகையில் மாறவேண்டும்.

அணுகுண்டு யுகத்திலே போர் ஏற்படுமானால் மானிட சாதியே அழிந்து போகும். இரண்டாம் உலக யுத்தத்திலே மாண்டு போன மக்களைவிட அதிகம் பேரை இன்று ஒரே நாளில் வீட்டிலிருந்த படியே அணுகுண்டை ஏவி மடித்துவிடலாம்; பெரிய பெரிய நகரங்களெல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்படி ஒரு நாழிகையிலே செய்து விடலாம். வல்லரசுகளின் கையிலே இன்றைக்கிருக்கிற அனுப்படைகளே உலகத்தைத் தூளாக்கப் போதும். அதனால்தான் இனிமேல் போர் ஏற்படக் கூடாது என்கிறேன்.

போரை ஒழிப்பதற்கு என்ன செய்யவேண்டும்? அதற்குத்தான் நமது உள்ளம் மாறவேண்டும், விரிய வேண்டும், புதிய நிலைமைக்கு ஏற்றவாறு அமைய வேண்டும்.

உள்ளம் மாறவேண்டும் என்று கூறுவதைவிட உள்ளம் விரியவேண்டும் என்று கூறுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

ஆதி மனிதன் பெரும்பாலும் விலங்குகளைப் போலத் தன்னைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந் தான். தனது இன்பம், தனது வயிறு-இவற்றிலேயே அவனுக்கு நாட்டம். ஆனால் நாளடைவிலே அவனுடைய எண்ணம் கொஞ்சங் கொஞ்சமாக விரியத் தொடங்கியது. மனைவி, மக்கள், குடும்பம்,  கூட்டம், ஊர், நாடு என்றிப்படி அவன் எண்ணமிடத் தொடங்கினான். அவனுடைய உள்ளம் அந்த அளவுக்கு விரிந்து கொண்டே வந்தது. மனிதன் தான் பிறந்த நாட்டைத் தாய்நாடு என்று போற்றத் தொடங்கினான். அங்கு வாழ்பவர்களெல்லாம் தன்னுடன் பிறந்தோர் என்று பேசிப் பெருமை கொண்டான். அவர்கள் எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று ஆசை கொண்டான். அவர்களுக்காகத் தேவைப்படும்போது தன்னையும் தியாகஞ் செய்ய மார் தட்டி முன் வந்தான். மனிதனுடைய உள்ளத்தின் விரிவு இன்று பெரும்பாலும் நாட் டோடு நின்றிருக்கிறது என்று கூறலாம்.

அணுகுண்டு யுகத்திலே அப்படி நாட்டோடு உள்ளத்தின் விரிவு நின்றுவிடுவது சரிப்படாது. மானிட சாதி அழியாது நிலைக்க வேண்டுமானால் மேலும் உள்ளம் விரியவேண்டும். உலகமே ஒரு குடும்பம், உலக மக்கள் எல்லோரும் உடன் பிறந்தவர்கள் என்கிற எண்ணம் உண்டாக வேண்டும். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உணர்ச்சி நிலைபெறவேண்டும். யாரோ சில கவிஞர் கள் அல்லது சான்றோர்கள் மட்டும் அப்படி நினைத்தால் போதாது; மனித இனமே அப்படி நினைக்க வேண்டும்.

அதற்கு முதற்படியாக எல்லா மக்களும் சுதந்தரமாக வாழ்ந்து தங்கள் திறமைகளை வளர்க்க வசதி செய்யவேண்டும்; அடிமை நாடு, ஆளும் நாடு என்ற பிரிவே இருக்கக்கூடாது. நிறம், மதம், சாதி என்ற வகையிலே பிரிவினைகளும் ஏற்றத்தாழ்வு களும் முற்றிலும் மறையவேண்டும். உலகத்தின் ஒரு மூலையிலே ஒருவனுக்குத் துன்பமேற்பட்டால் மற்றொரு மூலையிலே இருப்பவனுக்கு இயல்பாகவே பரிவு ஏற்படவேண்டும். 'என்னைப்போன்ற ஒருவன் என்னுடன் பிறந்தவன் அங்கே துன்புறுகிறானே, அந்தத் துன்பத்தை நீக்க நான் வழி காணவேண்டும்' என்ற எண்ணம் இயல்பாக உண்டாகுமாறு மனிதனுடைய உள்ளம் விரிவடைய வேண்டும்.

இது ஒன்றே மானிட சாதியை இன்று அழியாது காக்கக்கூடிய சக்தியாகும். "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று இராமலிங்க சுவாமிகள் மனமுருகிப் பாடினார். பயிர் வாடுவதைக் கண்டால் அவருடைய உள்ளம் வாடிறறு. ஒரு மண்கட்டியின் உருவத்தை யாராவது காலால் மிதித்துச் சிதைத்துவிட்டால் அதைக்கூட அவரால் சகிக்க முடியவில்லையாம். அப்படி அந்த அடிகளாருடைய உள்ளம் விரிவடைந்து பயிர்களுக்கும், உயிரே இல்லாத மண்கட்டிக்கும் பரிவு காட்டியது.

மனித உள்ளம் எந்தப் பேரெல்லைக்கு விரியக் கூடும் என்பதைச் சான்றோர்களின் வாழ்க்கையிலிருந்து அறிகிறோம். அந்த அளவு ஒவ்வொரு மனிதனுக்கும் எட்டாததாக இருந்தாலும் மனித இனத்தை வேறுபாடின்றி நேசிக்கும் அளவுக்கு அவன் போகலாம். போகவேண்டிய நெருக்கடி இன்று ஏற்பட்டிருக்கிறது. மனிதன் இந்த நிலையிலே எப்படித் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ளுகிறானே அதைப் பொறுத்திருக்கிறது அவனுடைய இனத்தின் எதிர்காலம்,