தேன் சிட்டு/காலச் சக்கரம்



காலச் சக்கரம்


காலச் சக்கரம் சுழல்கிறது. ஓயாத சுழற்சி ஓயாத முன்னேற்றம். சக்கரம் உருண்டுகொண்டே இருக்கிறது.

காலச் சக்கரம் என்று சுழல ஆரம்பித்தது: எங்கே தொடங்கியது? எங்கே, எப்பொழுது நிற்க போகிறது?-யாரும் திட்டமாகக் கூற முடியாது.

என்றே அது உருண்டோட ஆரம்பித்தது: எங்கேயோ அது தனது பயணத்தைத் தொடங்கியது; போய்க்கொண்டே இருக்கிறது. ஒய்வில்லை: தயக்கமில்லை; உறக்கமில்லை; பின்நோக்கிப் பார்ப்பு தில்லை; ஒரே சீரான ஒட்டம்; ஒரே திசையை நோக்கிப் பிரயாணம்.

காலச் சக்கரத்திற்குப் பின்னோட்டமில்லை; முன்னோட்டமே உண்டு. பின்னோட்டத்தை அது பழக வில்லை. அதை அதற்குப் பழக்குவோரும் இல்லையோ?

எண்ணெய் ஆட்டும் செக்கிலே பூட்டிய மாடு சுற்றிச் சுற்றி ஒரே வட்டத்தில் சுழன்று வந்து கொண்டிருக்கிறது. கிணற்றிலே தண்ணீர் இறைப் பதற்குக் கமலையிலே பூட்டிய மாடு முன்னும் பின்னுமாக ஒரே இடத்தில் போய்க்கொண்டிருக்கிறது. காலச் சக்கரத்தின் போக்கு இவைகளைப் போல் அல்ல. அது முன்னேறிக்கொண்டே இருக்கிறது. ஒரு முறை அடியெடுத்து வைத்த பாதையை அது மறுபடியும் கண்ணெடுத்துப் பார்ப்பதே இல்லை.  காலச் சக்கரத்தின் சுழற்சியிலே அதன் அடியிலே வீழ்ந்து எத்தனை எத்தனை உயிர்கள் அழிந்துவிட்டன! எத்தனை எத்தனை நாகரிகங்கள் நசுங்கிவிட்டன! எத்தனை எத்தனை கலைகள், எத்தனை எத்தனை சாஸ்திரங்கள், எத்தனை எத்தனை காவியங்கள் மறைந்து விட்டன!

காலச் சக்கரத்தில் சிக்காத கலை இல்லை; கவிதை இல்லை; சமூகமில்லை; நாகரிகமில்லை. உலுத்துப் போனவை யெல்லாம், வலுவற்றவை யெல்லாம் அதன் அடியிலே நொறுங்கிப் போகும்; மங்காத ஜீவனுள்ளவை உரம் பெற்று நிமிர்ந்தோங்கும்; காலச் சக்கரத்தையே அனுயாசமாகச் சிங்க நோக்கு நோக்கி நிற்கும்.

காலச் சக்கரம் அதைப் பொருட்படுத்து வதில்லை. காலில் விழுந்து நொறுங்குவதும், காலுக்கு அகப்படாது தலை நிமிர்ந்து நிற்பதும் அதற்கு ஒன்றுதான். அவை இரண்டையும் ஒரே நோக்கோடு பார்த்துக் கொண்டு காலச்சக்கரம் போகிறது. கண்ணை மூடிக் கொண்டு போகிறது என்றுகூடச் சொல்லலாம்.

காலச் சக்கரம் சிறந்த நீதிபதி; தாட்சண்ணிய மற்றது; விருப்புவெறுப்பற்றது. உண்மையான தீர்ப்பே அதன் ஒட்டம்.

காலச் சக்கரம் எத்தனை வாழ்வைப் பார்த்திருக் கிறது! எத்தனை போரைப் பார்த்திருக்கிறது!அவற்றிற்கெல்லாம் அது மோனச் சான்று. வாழ்வின் இன்பத் துளிகளையும், போரின் துன்பக் கண்ணீரை யும் அது ஒரே மனப்பாங்குடன் ஏற்றுக்கொண்டு உருளுகின்றது. அதன் உள்ளத்திலே கருணை யில்லையா? உணர்ச்சியே இல்லையா? அதன் உள்ளம் வெறும் கருங்கல்லா?

காதலின் உயர்வைக் காலச் சக்கரம் பார்த்திருக் றது; காமத்தின் இழிவையும் அது பார்த்திருக்கிறது. இராவணனுடைய காமத்தீ அரக்கர் குலத்தைச் சுட்டெரித்தது காலச் சக்கரத்திற்குத் தெரியும்; ஷாஜஹானின் உயிர்க் காதல் கலைமணியான தாஜ்மஹாலாக வடிவம் பெற்றதும் அதற்குத் தெரியும். அன்பு, கருணை முதலிய உயர்ந்த உணர்ச்சிகளின் அருஞ்செயல், பொறாமை, கோபம் முதலிய இழிந்த உணர்ச்சிகளின் கொடுமை ஆகிய அனைத்தையும் காலச் சக்கரம் கண்டிருக்கிறது. எல்லா வற்றையும் பார்த்துக்கொண்டு அது மெளனமாகப் போய்க்கொண்டே இருக்கிறது. அதன் மெளனத்தின் பொருளைக் காண்பவர்கள் அருமையிலும் அருமை. அப்படிக் காண்பவர்களே பாக்கியவான்கள். அவர்களுக்கே காலச் சக்கரம் வந்த வழி தோன்றுகிறது. அது செல்லும் பாதையும் தோன்றுகிறது. காலச் சக்கரத்தில் கட்டுண்ணாம்மல் தனித்து அப்பால் நின்று சிருஷ்டியின் விளையாட்டைப் பார்க்க அவர்களுக்கே இயலும். மற்றவர்களெல்லாம் காலச் சககரத்தில் கட்டுண்டவர்களே.

காலச் சக்கரம் என்று தேய்ந்து விழும்? அதன் ஒட்டம் என்று ஓயும்? கற்பனை செய்யவே முடிய வில்லை. அதன் ஆரக்கால்களின் ஆணிக் குமிழ்களே இன்னும் தேயவில்லை. அப்படியிருக்கக் காலச்சக்கரம் எப்பொழுது தேயப் போகிறது? அது தேயவே தேயாதா? அதன் வட்டைக்குத் தேய்ணெபதே இல்லையா?

நாழிகை அழியும்; நாள் அழியும்; கோள் அழியும். ஆனால் காலச் சக்கரம் அழியாது.

காலச் சக்கரம் அழியாதென்றால் அது கடவு ளோடு ஒன்றா? கடவுள் ஒருவர்தானே அழிவற்றவர்? காலச் சக்கரமும் கடவுளும் ஒன்றாம்? இல்லை இல்லை. காலச் சக்கரம் கடவுளின் ஊர்தி. அவர் காலத்தை வென்றவர்; காலத்துக்குக் காலன். அவர் அதிலேறிப் படைப்பு விளையாட்டில் மகிழலாம்; அதையே அழித்துவிட்டு ஆழ்ந்த அமைதியில் சாந்தி பெற்றிருக்கலாம். அவரை அடைந்த அன்பர்களும் அவ்வாறிருக்கலாம்.