தேன் சிட்டு/முரண்பாடுகள்



முரண்பாடுகள்


"இந்த உலகம் எல்லா நலன்களையும் பெற்று இன்பமாக இருக்க வேணும்; அதுதான் என்னுடைய ஆசை” என்றார் ஒரு பெரியவர்.

"எதற்காக உலகம் நலமாக இருக்கவேணும்? எல்லா நலன்களும் கிடைத்து இன்பத்தோடிருந்தால் மனிதன் விலங்காகிவிட மாட்டானா?” என்று பதட்டத்தோடுட ஒரு வழுக்கைத் தலையர் கேட்டார்.

தாம் கூறிய இந்தக் கருத்திற்காவது எதிர்ப்போ மாறுபாடோ இராது என்று பெரியவர் எதிர்பார்த் திருந்தார். இதிலும் அவர் ஏமாற்றமடைய நேரிட்டது.

இன்றைய உலகம் முரண்பாடுகள் நிறைந்தது; முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களிலே நம்பிக்கை கொண்டது. எதை ஒரு பகுதி வேண்டும் என்கிறதோ அதையே மற்றொரு பகுதி வேண்டவே வேண்டாம் என்கிறது. படை வலிமையைப் பெருக்குவதின் மூலமே உலகத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்பது இன்றைய உலகத்தில் உலவி வரும் ஒரு கருத்து. படைகளையெல்லாம் கடலிலே தூக்கி எறிந்துவிட்டு அஹிம்சை வழியைப் பின்பற்றினால் தான் உலகத்தில் போரின்றி அமைதி நிலவும் என்பது அதற்கு நேர்மாறாக உலவி வரும் மற்றொரு கருத்து. இரண்டு கருத்துக்களையும் தனித்தனியே ஆமோதிக் கின்றவர்களும், வற்புறுத்துகின்றவர்களும் எங்கு மிருக்கிறார்கள். அதேபோல முதலாளித்துவம் பொதுவுடைமை, குடியரசு சர்வாதிகாரம், விடுதலை கட்டுப்பாடு என்று இப்படிப்பட்ட முரண்பட்ட கொள்கைகளையும் அவற்றிற்குத் தனித்தனியேயுள்ள வெறிமிகுந்த ஆதரவுகளையும் எடுத்துக் கூறிக் கொண்டே போகலாம்.

திரைப்படத் தணிக்கையைப்பற்றி நேற்று மாலை நடந்த ஒரு கூட்டத்திற்கு நான் தற்செயலாகப் போக நேர்ந்தது. திரைப்படக் கலை நல்ல முறையில் வளருவதற்குத் தணிக்கை மிகவும் தேவை என்று ஒரு கட்சி அழுத்தம் திருத்தமாகப் பேசிற்று; இக்கலை வளர வேண்டுமானால் தணிக்கை அறவே கூடாது என்று மற்றொரு கட்சி வன்மையாக வற்புறுத்தியது. இந்தக் கருத்து வேறுபாட்டில் மாட்டிக்கொள்ளக் கூடாதென்று நான் மெதுவாக அங்கிருந்து நழுவி அமைதியை நாடிக் கடற்கரைக்குச் சென்று ஓரிடத்தில் அமர்ந்தேன். மணல் வெளி அசைவற்று அமைதியாக இருந்தது. கடல் அலைகள் ஓய்வின்றி உருண்டு சுருண்டு தரையில் மோதின. நிலத்திற்கும் கடலுக்கு முள்ள முரண்பாட்டைக் கவனிப்பதற்கு முன்பே அருகில் அமர்ந்திருந்த சில இளைஞர்களின் முழக்கம் என் சிந்தனையை வேறெங்கும் செல்லவிடாது தாக்கியது. "பாரத நாடு உலகிற்குத் தந்துள்ள தத்துவ ஞானத்திற்கு இணையே கிடையாது. அதை நான் இமயமலையின் உச்சியிலிருந்து முழங்கவும் பின் வாங்கமாட்டேன்" என்று முழங்கினான் ஒருவன்.  "என்னடா, உங்கள் தத்துவம்? அதை நம்பி நம்பித் தான் இந்த நாடு கெட்டுக் குட்டிச் சுவராயிற்று கிடைத்த சுதந்திரத்தைக் காக்க இனிமேலாவது அதையெல்லாம் நெருப்பிலே போட்டுவிட்டு மேல் நாடுகளின் வழியைப் பின்பற்ற வேண்டும்" என்று மற்றொருவன் இடியிடித்தான். நான் சட்டென்று எழுந்து வீட்டை நோக்கி ஒடினேன். "ஏண்டா உனக்காக எத்தனை நேரம் காத்திருப்பது? உன்னிடத்திலே ஒரு விஷயத்தைப்பற்றி விவாதித்து முடிவு கட்டலாமென்று ஐந்து மணிக்கே வந்தேன்" என்று என் நண்பன் அறைக்குள்ளிருந்தவாறே வரவேற்றான். "விவாதமா? என்ன விஷயம்?" என்று தயங்கித் தயங்கிக் கேட்டேன். "கவிதைக்கு யாப்பு முதலிய வரம்புகளும் கட்டுப்பாடுகளும் இருக்கக் கூடாது என்பது என்னுடைய கட்சி. நீ அதற்கு மாறான கருத்தைத் தெரிவித்ததாகக் கேள்விப் பட்டேன். அதைப் பற்றித்தான் இப்பொழுது விவாதிக்க வேண்டும்” என்றான் நண்பன். எங்கு சென்றாலும் இவற்றிற்குத் தப்ப முடியாது என்று எனக்கு அப்பொழுதுதான் விளங்கிற்று.

எனக்கு இந்த மாறுபாடுகளைப்பற்றி அச்சமோ, வெறுப்போ கிடையாது. ஒரளவுக்கு அவற்றை நான் பாராட்டுகிறேன். அவ்ற்றினால்தான் உலகம் சுவை யுடையதாகத் தோன்றுகிறது. இந்த மாறுபாடுகளே வாழ்க்கைக்கு உப்பு. இவையில்லாவிடில் வாழ்க்கை சப்பையாகப் போய்விடும்.

ஆனால் உப்பு அளவுக்கு மீறினால் எல்லாம் கெட்டுப் போகும். சுவை கொடுக்கும் உப்பே உண்டி முழுவதையும் பயனற்றதாகச் செய்துவிடும். இந்த உண்மையை எப்பொழுதும் உள்ளத்தில் கொள்ள வேண்டுமென்பதுதான் என்னுடைய ஆசை

உண்மையையும் பொதுநலத்தையும் உறுதி யான அடிநிலையாகக் கொண்ட எந்த மாறுபட்ட கருத்துக்களையும் பரிவோடு பார்க்கவேண்டும். தன் கொள்கைதான் நூற்றுக்கு நூறு சரியானது; வேறொன்றிலும் உண்மையே இருக்க முடியாது என்ற குருட்டுப் பிடியே தொல்லைகளை விளைவிக்கின்றது. வடிவ கணிதத்திலே மறுக்க முடியாத பல உண்மைகள் வெளியிடப்படுகின்றன. அவற்றிற்குத் தேற்றங்கள் என்று பெயர். சில தேற்றங்கள் எவ்வளவு உண்மையோ அவ்வளவு அவற்றின் மறு தலைகளும் உண்மையாக இருக்கும். எடுத்துக் காட்டாக எளிமையான வடிவ கணித உண்மை ஒன்றை நோக்குவோம்.

ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களும் ஒன்றுக்கொன்று சமமாக இருந்தால் அதன் கோணங்களும் ஒன்றுக்கொன்று சமமாக இருக்கும். இது தேற்றம். இதன் மறுதலையாவது: ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களும் ஒன்றுக் கொன்று சமமாக இருந்தால் அதன் பக்கங்களும் ஒன்றுக்கொன்று சமமாக இருக்கும். இதுவும் உண்மைதான்.

கருத்துக்களிலும் பல சமயங்களில் இந்த உண்மையைக் காணலாம். முரண்பட்ட கருத்துக் களிலேயும் உண்மை பதுங்கியிருப்பதை உணரலாம். நேர்மையோடும், பொதுநல நோக்கோடும், பரந்த மனப்பான்மையோடும் கருத்துக்களையும் பிரச்சினை களையும் ஆராயும் திறமையை அனைவரும் பெற்று விட்டால் இந்த முரண்பாடுகளால் தீங்கே விளைய முடியாது. ஆனால் ஒவ்வொருவனுக்கும் தன்னைப் பற்றி நம்பிக்கையிருக்கிறது; மற்றவர்களைப்பற்றி ஐயமும் அவநம்பிக்கையும் அச்சமும் முன்னால் நின்று தெளிந்த பார்வையைத் தடுத்துக் கண்ணை மறைக் கின்றன. அதனால் ஒவ்வொருவனும் தன்னுடைய கருத்தைத் தெளிவாக எடுத்துக் கூறுவதையும் செயல் முறையில் நிறைவேற்றுவதையும் பின்னணியில் வைத்து மற்றவர்களின் நோக்கத்தைப்பற்றி உலகத்திலே அச்சத்தையும் பகைமையையும் வளர்ப் பதையே முதன்மையாகக் கருதத் தொடங்குகிறான். இவ்வாறு அனைவரும் முனைவதினாலே அதுவே நாளடைவில் ஒரு வெறியாகிவிடுகிறது; உண்மை ஆழத்தில் புதைந்து மறைந்துவிடுகிறது.

உலக யுத்தத்தின்போது சிறைப்பட்ட சில ஜெர்மானிய வீரர்களைப் பார்த்து நேசக் கட்சி வீரர்களில் பலர் ஆச்சரியப்பட்டார்களாம். எதனால் ஆச்சரியம் தெரியுமா? ஜெர்மானியரை அவர்கள் மனிதர்களாகப் பார்த்துத்தான் இப்படி ஆச்சரியம், அருகிலே பார்க்கும் வரையில் அவர்களை மனிதத் தன்மையற்ற அரக்கர்களாகவே அவர்கள் எண்ணி யிருந்தார்கள். அப்படித்தான் அவர்களுக்கு எடுத்துக் கூறி வந்திருக்கிறார்கள்.

இவ்வாறு மக்கள் தாமே கற்பனை செய்து கொண்ட பூதங்களினால் அல்லல்படுகிறார்கள். எல்லா மக்களும் இன்பமெய்தி வாழவேண்டும் என்ற எண்ணம் உண்மையாக இருக்குமானால் முரண்பட்ட கொள்கைகளைப் பற்றி அஞ்சவேண்டியதில்லை. ஒரே சிகரத்தை நாடி இருவர் வேறு வேறான கோடிகளிலிருந்து புறப்படலாம். குறிக்கோள் ஒன்றாக இருக்கும் வரையில் அவர்கள் பகைமை கொள்ள வேண்டியதில்லை. உள்ளத்திலே நேர்மையும் பரிவும் இருந்தால் மனித சாதியின் நலத்தை நாடுவோர் தாம் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு அவற்றால் புதிய வலிமை பெற்றுத் தமது இலட்சியத்தில் வெற்றியடைய முன்னேறலாம் பிறருடைய அனுபவத்தில் உள்ள நல்ல பகுதிகளை ஏற்றுக்கொள்வதிலே சிறிதும் தயக்கமோ ஐயமோ வேண்டுவதில்லை. அறிவு வாய்ந்த மனிதனுக்கு இந்தத் துணிச்சல் வேண்டும். இதுவே சமுதாயத்தை நிலைபெறச் செய்வதற்கு இன்று முக்கியமானதாகும்.