நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/26. நெஞ்சிலே இட்ட நெருப்பு

26. நெஞ்சிலே இட்ட நெருப்பு

“ரத்தக் கண்ணீர் சினிமா வரை சொல்லிக்கொண்டு வத்துவிட்டீர்கள். ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி விவகாரங்கள் பற்றி மட்டும் சொல்கிறேன், சொல்கிறேன் என்று இன்னும் சொல்லவேயில்லையே?” என்று நான் மீண்டும் ஒரு முறை அதை ராதாவின் நினைவுக்குக் கொண்டு வந்தேன். அவர் கொஞ்சம் தயக்கத்தோடு சொன்னார்;

“அந்த விவகாரங்களை நான் இந்த நாட்டுக்கும், நாகரிகத்தின் எல்லையையே தொட்டுவிட்டதாக எண்ணிக்கிட்டிருக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் சில சமயம் சொல்லணும்னும் நினைக்கிறேன்; சில சமயம் சொல்ல வேணாம்னும் நினைக்கிறேன். என்னுடைய தயக்கத்துக்கு அதுதான் காரணம். அந்த அளவுக்கு அது காட்டுமிராண்டித்தனமானது; கர்ணகடூரமானது; இன்றைய மனித குலம் முழுவதையுமே வெட்கத்தால் தலை குனிய வைக்கக் கூடியது. அதைப்பத்தி நான் மொதல்லே கேள்விப்பட்டப்போ என் நெஞ்சிலே யாரோ நெருப்பை வாரிக் கொட்டியது போல இருந்தது...”

“அது என்ன கொடுமை, அப்படிப்பட்ட கொடுமை ?”

“அந்தக் கொடுமை இங்கு மட்டுமில்லே, இந்த உலகம் பூராவுமே பரவியுள்ள கொடுமைங்கிறது அப்புறந்தான் எனக்குத் தெரிஞ்சது. ஆஸ்கார் ஒய்ல்டுன்னு யாரோ ஒரு இலக்கிய மேதை மேல் நாட்டில் இருந்தானாமே...?" “ஆமாம், இருந்தான்...”

“அவன்கூட அந்த வெறி பிடிச்சி அலைஞ்சவன்னு உங்களைப் போன்றவங்க சொல்ல, நான் பின்னால் கேட்டேன். ஒரு ஆண் மேலே இன்னொரு ஆண் மோகம் கொள்வதும், அவனோடு இயற்கைக்கு விரோதமான வழியில் உடலுறவு வைத்துக் கொள்வதும் நினைத்துப் பார்ப்பதற்கே அருவருப்பாயில்லே? இந்த அருவருப்பான காரியத்துக்காக அந்த நாள் நாகப்பட்டினத்துக் கனவான்களில் சிலரும், சென்னை பெரியமேட்டைச் சேர்ந்த கனவான்களில் சிலரும் லட்சக் கணக்கில் செலவழிக்கத் தயாராயிருந்தனர். ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிகளில் பல அந்த நாளில் அவர்களுக்கு ஆள் பிடிச்சிக் கொடுப்பதற்காகவே நடந்து வந்தன. யாராவது ஒரு பையன் கொஞ்சம் அழகாயிருந்து, அவன் பாலகிருஷ்ணன் வேஷமோ, பாலமுருகன் வேஷமோ போட்டுக்கிட்டு மேடைக்கு வந்து நின்னாப் போதும், நான் சொன்ன கனவான்களில் யாராவது அந்தப் பையன் சம்பந்தப்பட்ட கம்பெனி முதலாளியுடன் பேரம் பேசி, அவனுக்காக அவர் கேட்கும் தொகையைக் கொடுத்து, அன்றிரவே அவனைத் தூக்கித் தன் காரிலே வைச்சி, ஊருக்குக் கொண்டு போயிடுவார். அப்புறம் அவன் கதி அதோகதிதான். பாலகிருஷ்ணன், பால முருகன் வேஷம் போட்ட பயல்களுக்கே இந்தக் கதின்னா, பொம்பளை வேஷம் போட்ட பயல்களின் கதியைப்பத்திக் கேட்கவாவேனும் ? அவங்களிலே ஒருத்தனைக்கூட யாரும் ஒழுங்கா இருக்க, ஒழுங்கா வாழ விட்டதே இல்லே. நானும் அந்த ஒழுங்கீனமான காரியத்தைச் செய்யறதிலே ஒருத்தனாத்தான் இருந்தேன். எனக்கும் அப்போ பொம்பளை மோகம்னா என்னன்னே தெரியாது; ஆம்பளை மோகம்தான் தெரியும். அந்த மோகத்திலேதான் எத்தனை காதல், எத்தனை ஊடல், எத்தனை சண்டை, எத்தனை தற்கொலைகள், எத்தனை சொல்லிக்காம ஓடிப்போற ஜோடிகள்...எல்லாம் வேதனையோடு கூடிய வேடிக்கைதான், போங்கள்; அதன் பலனாகச் சக தோழர்களில் சிலர் இன்னிக்கு மகப் பேற்றுக்குக் கூட லாயக்கற்றவர்களாகப் போய் விட்டதைப் பார்க்கிறப்போ என் நெஞ்சே வெடிச்சிடும்போல இருக்குது..." “இந்த அக்கிரமத்துக்கெல்லாம் காரணம் அந்த நாள் நாடகங்களில் பெண்கள் நடிக்க முன் வராதது தான், இல்லையா ?”

“அதுதான் காரணம்னு சொல்ல முடியாது; அதுவும் ஒரு காரணம்னு வேணும்னா சொல்லலலாம். மனுஷன் பல விஷயங்களிலே இன்னும் தன் காட்டுமிராண்டித்தனத்தை விட்ட பாடாயில்லையே? அதைத்தானே பெரியார் இன்னிக்கும் பேச்சுக்குப் பேச்சு சொல்லிக்கிட்டிருக்கார்?”

“டி.பி.ராஜலட்சமி நாடக மேடைக்கு வந்த பிறகு...”

“அந்த அசிங்கம் நாடகமேடையை விட்டுக் கொஞ்சங் கொஞ்சமா மறைஞ்சது என்னவோ உண்மைதான். ராஜலட்சுமியைத் தொடர்ந்து இன்னும் பல பொண்ணுங்க நாடக மேடைக்கு வந்தாங்க. அவங்களிலே ஒருத்தி பிரேமா. அந்தப் பிரேமாதான் ஆண் மோகத்திலிருந்து என்னை விடுவித்து, பொண் மோகம் கொள்ளச் சேஞ்சவ...”

“அப்படியென்றால் உங்களுடைய முதல் காதல் பிரேமாவிடம்தான் அரும்பிற்றா ?”

“ஆமாம், அது முதல் காதலோ, முடிவில்லாத காதலோ, அது எனக்குத் தெரியாது. என்னுடன் நடித்து வந்த அவளை நான் அப்போ மனமார நேசித்தேன். என் இதய ராணியாயிருந்த அவள், வெளியார் பார்வைக்கும் ராணியாவே இருக்கணும்னு நினைச்சி, பட்டுப் புடவையைத் தவிர வேறே எத்தப் புடவையும் கட்ட வேணாம்னு அவகிட்டே சொன்னேன். நெற்றிச் சுட்டியிலிருந்து பாதசரம் வரை நகைங்க சேஞ்சிப் போட்டு, அவ அழகை உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை பார்த்துப் பார்த்து ரசித்தேன். அவளுடைய கொள்ளையழகு மட்டுமில்லே, குரலழகும் என்னைத் தேனுண்ட வண்டாக்கிடிச்சி. ஓய்வு கிடைச்சப்போல்லாம் அவளைப் பக்கத்திலே உட்கார வைச்சிக்கிட்டு, ‘பேசு, ஏதாவது பேசு, பேசிக்கிட்டே இருன்னு; பேசச் சொல்லிக் கேட்டேன்; பாடச் சொல்லியும் கேட்டேன். அந்த அழகு ராணியோடு நான் கோயமுத்துரில் தங்கியிருந்த சமயம் அது. அப்பதான் பம்மல் சம்பந்த .முதலியார், கந்தசாமி முதலியார் மாதிரி படிச்சவங்க சிலரும், கலையிலே பிரியமுள்ள பிராமணர்களில் சிலரும் மெல்ல மெல்ல நாடக மேடைக்கு வந்து கிட்டிருந்தாங்க. அவங்க வந்தப்புறந்தான் ‘கூத்துங்கிறது ‘நாடக மாச்சி; ‘கூத்தாடி'ங்கிறவன் நடிகன், கலைஞன்னு ஆனான். ‘நாடக’ மும் ஒரு ‘கலை'ன்னு ஆச்சி...”

“இதிலிருந்து படித்தவர்களும் பிராமணர்களும்தான் எதையும் ஓர் உன்னத நிலைக்கு உயர்த்த முடியும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் இல்லையா?”

“சந்தேகமில்லாமல். ஒரு காலத்தில் தாசிகளுக்கே உரிய கலையாயிருந்த பரதகலை இன்னிக்கு அவங்களாலே புனிதமான கலையாயிடிச்சே! அந்தக் கலைக்காக அவங்க வீட்டுப் பொண்ணுங்களையே அவங்க அர்ப்பணம் ’செய்யறாங்களே ?”

“அப்படிச் செய்யாவிட்டால் சமூகத்தில் அந்தக் கலைக்கு இன்று கிடைத்துள்ள கெளரவம் கிடைத்திருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்களா ?”

“ஒரு நாளும் கிடைத்திருக்காது. எப்போப் பார்த்தாலும் சமூகச் சீர்திருத்தத்தைப் பற்றியே பேசிக்கிட்டிருக்கும் பெரியார் தலைமையிலே கூட இல்லே இப்போ பரத நாட்டிய அரங்கேற்றம் நடக்குது ?”

“ஆமாம்; மயிலையிலே நடந்த அந்த அரங்கேற்றத்தை நானும் பார்த்தேன். எல்லாமே ‘வெங்காயமாகத் தெரியும் அவருக்கு பரத கலை மட்டும் வெங்காயமாகத் தெரியாமல் போனது எனக்குக் கூட ஆச்சரியமாய்த்தான் இருந்தது!”

“வெங்காயம்னா உரிக்க உரிக்க ஒண்ணுமே இல்லாமப் போகும். பரத கலை அப்படியா? எவன் எந்தக் கண்ணாலும் அதைப் பார்த்து ரசிக்கலாமே!”

“உங்கள் பிரேமாவுக்கும் அந்தக் கலை தெரியுமா?”

“தெரியும்." “அப்படியானால் பிரேமாவைப் பேச வைத்து அழகு பார்த்த நீங்கள், ஆட வைத்தும் அழகு பார்த்திருப்பீர்களே ? ஆனால் அதைப் பக்திக் கண்ணால் பார்த்திருக்க மாட்டீர்கள், இல்லையா,”

“காதலும் ஒரு பக்திதானே ? எத்தனை பக்தருங்க கடவுள்மேலே காதல் கொண்டு பாடியிருக்காங்க!”

“ம், அப்புறம்?”

“அப்புறம் என்ன ஆச்சுன்னா, என் பிரேமாவுக்குத் திடீர்னு ஒரு நாள் காய்ச்சல் அடிக்க ஆரம்பிச்சது. டாக்டரை வரவழைச்சிக் காட்டினேன். அவர் வந்து பார்த்துட்டு, ‘இது சாதாரண ஜூரம் இல்லே, அம்மை ஜூரம், இதுக்கு இப்போ மருந்து கொடுத்துப் பிரயோசனமில்லே, முந்தியே வாக்சினேஷன் சேஞ்சிருக்கணும்னு சொல்லிட்டுப் போயிட்டார். அவர் சொன்னபடி மூணாவது நாளே அம்மை போட ஆரம்பிச்சிடிச்சி. பத்தாவது நாள் அவ என்னை விட்டுப் போறேன்னு போயிட்டா!”

“இப்படி ஒரு சோகம் உங்கள் வாழ்க்கையில் நேர்ந்திருக்க வேண்டாம். பிறகு.?”

“அவளை நான் எல்லாரையும் அடக்கம் செய்யறாப் போல சாதாரணமா அடக்கம் செய்ய விரும்பல்லே; அவளுக்கு ஒரு கலைக் கோயிலே எடுக்கணும்னு நினைச்சேன். நினைச்சபடியே’ கோயமுத்துரிலிருந்த ராஜா சாண்டோ சமாதிக்குப் பக்கத்திலே அவளை அடக்கம் சேஞ்சி, அந்த இடத்திலே இருபது.அடிக்கு இருபது அடி வைச்சி ஒரு கலைக் கோயில் கட்டினேன். ஜி.டி. நாயுடு வந்து அதைப் பார்த்துட்டு, ‘இப்படிக்கூட ஒரு முட்டாள் இருப்பானா? யாரோ ஒரு நடிகை அம்மையிலே குளிர்ந்து போனதற்காக ஆயிரக் கணக்கிலே செலவு செய்து இப்படி ஒரு சமாதி கட்டுவானா ?ன்னார். ‘மும்தாஜுக்காக ஆக்ராவில் தாஜ்மகால் கட்டிய ஷாஜகான் முட்டாள்னா நானும் முட்டாள்தான்’னு சொல்லி, அவரை அனுப்பி வைச்சேன் நான்."