நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/இருள் விலகியது

86. இருள் விலகியது

முஸ்லிம் வீரர்களோ தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனினும் அவர்களுடைய கவனம் முழுவதும், பெருமானார் எங்கே இருக்கிறார்கள் என்பதிலேயே இருந்தது.  பெருமானார் அவர்கள் கவசம் அணிந்திருந்ததினால், அவர்களுடைய கூர்மையான கண்கள் மட்டுமே தெரிந்தன. அதைக் கண்ட கஃபுப்னு மாலிக் என்பவர், “ முஸ்லிம்களே! நாயகம் இங்கே இருக்கின்றார்கள்” என்று குரல் எழுப்பினார். அதைக் கேட்டதும், முஸ்லிம் வீரர்கள் எல்லோரும் அந்தப் பக்கமாக விரைந்து சென்றனர். அவர்கள் போவதைக் கண்ட குறைஷிகளும் தங்கள் படைகளை அந்தப் பக்கமாகத் திருப்பினார்கள். இதைக் கண்ணுற்ற நாயகம் அவர்கள், “இறைவா! இவர்கள் எங்களுக்கு மேலே போய் விடக்கூடாதே” என்று பிரார்த்தித்தார்கள். இதனால் ஹலரத் உமரும், இன்னும் சில “முஹாஜிர்” தோழர்களும், குறைஷியரை எதிர்த்துத் தாக்கிக் குன்றின் கீழே பின் வாங்கச் செய்தார்கள்.