நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/உடன்படிக்கைக்கு உடன்படாதவர்கள்

149. உடன்படிக்கைக்கு உடன்படாதவர்கள்

முஸ்லிம்களும், குறைஷிகளும் செய்து கொண்ட ஹுதைபிய்யா உடன்படிக்கையின் படி, தங்களுக்கு விருப்பமானவர்களுடன் கூட்டு உடன்படிக்கை செய்து கொள்ள உரிமை உண்டு என்ற நிபந்தனை இருந்தது. அதை அனுசரித்து குஸாஅ என்னும் கூட்டத்தார், முஸ்லிம்களுடன் கூட்டு உடன்படிக்கை செய்து கொண்டு, முஸ்லிம்களாகி விட்டனர். அதேபோல், பனூ பக்கர் என்னும் கூட்டத்தார் குறைஷிகளுடன் நட்பு உடன்படிக்கை செய்து கொண்டனர். இந்த இரு கூட்டத்தாருக்கும் மத்தியில் வெகு காலமாகவே பகைமை இருந்து வந்தது. பனூ பக்கர் கூட்டத்தார், குஸாஅ கூட்டத்தாரை நசுக்கி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்களைத் தாக்கினார்கள். குறைஷிகளும் உடன்படிக்கையைப் புறக்கணித்து, அவர்களுக்கு மறைமுகமாக உதவி புரிந்து வந்தார்கள். இக்ரிமா, ஸுஹைல், ஸப்வான் ஆகிய குறைஷித் தலைவர்கள் மாறுவேடம் பூண்டு, பனூ பக்கர் கூட்டத்தாருடன் சேர்ந்து சண்டை செய்தனர்.

குஸாஅ கூட்டத்தாரில் சிலர் கஃபாவில் தஞ்சம் அடைந்தார்கள். ஏனென்றால், கஃபாவின் எல்லைக்குள் சண்டை சச்சரவு செய்வதும், கொலை செய்வதும் கூடாது. ஒருவர் எவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்திருந்தாலும், கஃபாவுக்குள் தஞ்சம் புகுந்துவிட்டால், அவரை ஒன்றும் செய்யக்கூடாது என்பது புனித சம்பிரதாயம்.

ஆனால், இந்தச் சம்பிரதாயத்தையும் பொருட்படுத்தாமல், பனூ பக்கர் கூட்டத்தார், குஸாஅ கூட்டத்தாரில் பலரைப் புனித தலத்திலேயே வெட்டிக் கொன்று விட்டனர். குறைஷிகள் அதைத் தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

குஸாஅ கூட்டத்தாரில் நாற்பது பேர் ஒட்டகங்களில் ஏறி, மதீனாவுக்குச் சென்று, பெருமானார் அவர்களிடம் மக்காவில் நடந்தவற்றை முறையிட்டு, தங்களுக்கு உதவி புரியுமாறு வேண்டிக் கொண்டனர்.

பெருமானார் அவர்கள் சில நிபந்தனைகளைத் கூறி, ஒரு தூதரை குறைஷிகளிடம் அனுப்பினார்கள்.

சண்டை செய்யாமலேயே, சமாதான முறையில் அதைத் தீர்க்கக் கருதினார்கள் பெருமானார் அவர்கள்.

குறைஷிகள், பெருமானார் கூறி அனுப்பிய நிபந்தனைகளை ஏற்க மறுத்து விட்டனர். ஆனால், ஹுதைபிய்யா உடன்படிக்கையை நிராகரிப்பதை மட்டும் ஒப்புக் கொள்ளுவதாகச் சொன்னார்கள்.

தூதர் மதீனாவுக்குத் திரும்பி விட்டார்.