நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/வெற்றியும் இழப்பும்

148. வெற்றியும் இழப்பும்

ரோமாபுரிச் சக்கரவர்த்தியின புஸ்ரா மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஷர்ஜீல் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். அவருக்குப் பெருமானார் அவர்கள் ஹாரிதுப்னு உமைர் என்னும் தூதர் மூலம் கடிதம் அனுப்பினார்கள்.

தூதர் ஹாரிதை, ஷர்ஜீல் கொன்று விட்டார். தூது சென்றவரைக் கொல்வது கடுமையான குற்றம். ஆகையால், அவரைத் தண்டிப்பதற்காகப் பெருமானார் அவர்கள் மூவாயிரம் பேர் கொண்ட படை ஒன்றை அனுப்பி வைத்தார்கள்.

அந்தப் படைக்கு முதலில் ஸைதுப்னு ஹாரிதா அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள். “போரில் அவர் உயிர் துறந்தால், ஜஃபர் தளபதியாக இருக்க வேண்டும் என்றும், அவரும் வீர மரணம் அடைந்தால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா தளபதியாக ஆக வேண்டும் என்றும், அவரும் போர்க்களத்தில் மாண்டு போனால், பின்னர் தங்களுக்குள்ளே ஒருவரைத் தளபதியாகத் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்” என்றும் கட்டளையிட்டுப் பெருமானார் அவர்கள் சிறிது தூரம் வரை சென்று, படையை அனுப்பி வைத்தார்கள்,

படை மதீனாவை விட்டுப் புறப்பட்ட செய்தியை அறிந்த ஷர்ஜீல், பெரிய அளவில் படையைத் திரட்டி வைத்திருந்தார்.

இரண்டு படைகளும் ‘முதா' என்னும் இடத்தில் கைகலந்தன. முஸ்லிம் படை அளவில் சிறிதானாலும், ஆவேசத்துடன் போரிட்டது.

ஸைது, (ரலி-அன்ஹீம்) அப்துல்லாஹ், ஜஃபர் ஆகிய மூன்று தளபதிகளும் ஒருவர் பின் ஒருவராகப் போர்க் களத்தில் வீர மரணம் அடைந்தார்கள்.

அதன் பின்னர், படையினர் ஆலோசித்து ஹலரத் காலித் இப்னு வலீதைத் தளபதியாகத் தேர்ந்தெடுத்தனர்.

பல பகுதிகளில் பிரிந்து, போரிட்டுக் கொண்டிருந்த படையினரை காலிது ஒன்று திரட்டி வீரமாகப் போரிட்டார். போர்க்களத்திலிருந்து செய்தி வருமுன்னே, பெருமானார் அவர்கள் நிகழ்ச்சிகளை அறிந்து, மதீனாவில் உள்ளோருக்கு அறிவித்தார்கள்.

பகைவர்களின் படை பலமோ, பன்மடங்கு பெரிது, ஆகையால், முஸ்லிம் படைக்கு மேலும் இழப்பு உண்டாகும் என்று கருதி, பகைவர்களைப் பின் தொடராமல் மதீனாவுக்குத் திரும்பி வந்து விட்டார்கள்.

இப்போரில், முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்த போதிலும், வெற்றியினால் பலன் எதுவும் கிட்டவில்லை.

படைகள் திரும்பி வந்ததும், ஒரு பக்கம் மகிழ்ச்சியும் ஒரு பக்கம் துன்பமாகவும் இருந்தது.

இளம் வயதினரான ஜஃபரின் மனைவியின் துக்கத்தையும், அவர்களுடைய ஆண் குழந்தையைக் கையில் எடுக்கும் போது உண்டாகும் துன்பத்தையும், பெருமானார் அவர்களால் தாள முடியவில்லை.

அதே போல் ஸைதின் பெண் குழந்தையைப் பார்த்தவுடன் பெருமானார் அவர்கள் அளவற்ற துயரம் அடைந்தார்கள்.