நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/குற்றமும் மன்னிப்பும்
உடன்படிக்கையை மீறி அநியாயம் செய்து வரும் மக்காவாசிகள் மீது படையெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.
முஸ்லிம்களுக்கு நட்பாயுள்ள மற்ற கூட்டத்தாருக்கும் படையில் கலந்து கொள்ளுமாறு, பெருமானார் இரகசியமாகச் செய்தி அனுப்பினார்கள்.
ஆனால், படை எங்கே செல்கிறது? எதற்காகச் செல்கிறது? என்ற செய்தி எவருக்கும் தெரியாது. மக்காவாசிகளுக்குத் தெரியாமல் இருக்கும் பொருட்டு, தகுந்த ஏற்பாடுகளைப் பெருமானார் அவர்கள் செய்திருந்தார்கள்.
இதற்கிடையே, ஹாதிப் என்னும் முஸ்லிம், மக்காப் படையெடுப்புக்காக ஏற்பாடாகிறது என்பதை எப்படியோ தெரிந்து கொண்டார். உடனே, இரகசியமாகக் குறைஷிகளுக்கு ஒரு கடிதம் எழுதி, ஒரு பெண் மூலம் மக்காவுக்கு அனுப்பி வைத்தார்.
ஹாதிப் கடிதம் அனுப்பிய செய்தி, பெருமானார் அவர்களுக்கு இறையருளால் அறிவிக்கப்பட்டது.
உடனே பெருமானார் அவர்கள், அலி அவர்களை அனுப்பி, அந்தப் பெண்ணிடமிருக்கும் கடிதத்தைக் கைப்பற்றி வருமாறு கட்டளையிட்டார்கள்.
அந்தப் பெண்ணின் கூந்தலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கடிதம் கைப்பற்றிக் கொண்டு வரப்பட்டு, பெருமானார் அவர்கள் முன்னே வைக்கப்பட்டது. ஹாதிபை அழைத்துப் பெருமானார் அவர்கள் விசாரித்த போது, தம் நெருங்கிய உறவினர்கள் எவ்வித ஆதரவும் இல்லாமல், மக்காவில் இருப்பதால், அவர்களுக்குக் குறைஷிகளால் தீங்கு நேரிடாமல் இருப்பதற்காகக் குறைஷிகளுக்கு உதவி செய்ய விட வேண்டும் என்று கருதி, கடிதத்தை அனுப்பியதாகக் கூறி, தம் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
“உத்தரவு கொடுத்தால், இந்தப் பாதகனின் தலையைத் துண்டித்து விடுவேன்” என ஆவேசப்பட்டார் உமர் அவர்கள்.
ஹாதிப் ஒரு முக்கியமான முஸ்லிம் தோழர். பத்ருப் போரில் கலந்து கொண்டவர்.
பெருமானார் அவர்கள், உமர் அவர்களிடம், “தோழரே, பத்ருச் சண்டையில் ஈடுபட்டவர்கள் செய்யும் பாவங்களை ஆண்டவன் மன்னித்து விட்டான்” என்று கூறி, ஹாதிபை மன்னித்து விட்டார்கள்.