நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/கூட்டு முயற்சியில் தாக்க வருதல்

105. கூட்டு முயற்சியில் தாக்க வருதல்

பனூ நலீர் கூட்டத்தார் கைபரில் குடியேறி, நிலைத்த பின் அவர்கள் முஸ்லிம்களுக்கு விரோமாக சூழ்ச்சிகள் செய்யத் தொடங்கினார்கள்.

அவர்களுடைய தலைவர்கள், மக்கா குறைஷிகளிடம் சென்று, “தங்களுக்கு உதவி புரிய வேண்டும் என்றும், அவ்வாறு செய்வதாயிருந்தால் இஸ்லாத்தை வேரோடு பெயர்த்து விடலாம்” என்றும் சொன்னார்கள்.

இத்தகைய ஒத்துழைப்புக்காகக் காத்துக் கொண்டிருந்த குறைஷிகள், அவர்கள் கூறிய ஆலோசனையை மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டனர். மதீனாவைத் தாக்குவதற்காகக் குறைஷிகள் தயாரானதோடு, சுற்றுப்புறங்களில் உள்ளவர்களையும் தங்களுடன் சேர்த்துக் கொண்டனர்.

யூதர்களும் தங்களுடன் நட்பாயிருந்த ஒவ்வொரு கூட்டத்தாரையும் சேர்த்துக் கொண்டார்கள்.

குறைஷிகள், யூதர்களின் படை பலம் மொத்தம் இருபத்து நான்காயிரம் வரை சேர்ந்தது. அந்தப் படைக்கு அபூ ஸூப்யான் தலைவராக ஆனார்.

குறைஷிகள் இருபத்து நான்காயிரம் வீரர்களுடன் மதீனாவைத் தாக்க வரும் செய்தி, பெருமானார் அவர்களுக்குத் தெரிந்தது. உடனே, தோழர்களைக் கூட்டி, ஆலோசனை செய்தார்கள்.

தோழர்களில் ஸல்மான் பார்ஸி என்ற பார்ஸி தேசத்தார் போர் முறைமையில் திறமையானவராக இருந்தார்கள். குறைஷிகள் ஏராளமான படையுடன் வருவதால் அவர்களோடு, எண்ணிக்கையில் மிகக் குறைவாயுள்ள முஸ்லிம் படை, சம தளத்தில் எதிரே நின்று சண்டை செய்வது சரியல்ல என்றும், முஸ்லிம் படையை ஒரு பாதுகாப்பான இடத்தில் சேகரித்து வைத்து, அதைச் சுற்றிலும் அகழ் தோண்டிக் கொள்ள வேண்டும் என்றும் ஸல்மான் பார்ஸி அவர்கள் ஆலோசனை கூறினார்கள், அதை அனைவரும் ஏற்றனர்.

அகழ் தோண்டுவதற்கு ஏற்பாடாயிற்று.

மதீனா நகரைச் சுற்றி மூன்று புறங்களில் கட்டடங்களும், சிறு குன்றுகளும், தோட்டங்களும் அமைந்திருந்தன. அம்மூன்று பக்கங்களுக்கும் அவை பாதுகாப்பாக இருந்தன. எனவே திறந்திருந்த ஒரு பகுதியில் அகழ்கள் தோண்டுவதற்குப் பெருமானார் அவர்கள் மூவாயிரம் தோழர்களுடன் சென்றார்கள். அகழின் அளவைப் பெருமானார் அடையாளம் போட்டுக் கொடுத்தார்கள். முப்பதடி சதுரமும், பதினைந்து அடி ஆழமுமான அளவுள்ள அகழைப் பத்துப் பேர் சேர்ந்து, தோண்ட வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள். மற்றவர்களுக்குக் கட்டளையிட்டதோடு நிற்கவில்லை. மற்றவர்களால் தோண்டி எடுக்கப்படும் மண்ணைப் பெருமானார் அவர்கள் அள்ளி அப்புறப்படுத்திக் கொண்டும், சில சமயங்களில் அவர்களே தோண்டிக் கொண்டும் இருந்தார்கள்.

களைப்புத் தோன்றாமல் இருப்பதற்காக, அகழ் வெட்டும் தோழர்கள் அரபிக் கவிதையை மிகுந்த உற்சாகத்தோடு பாடிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கவிதையின் பொருள்:

“ஆண்டவனே! உன் கருணை எங்கள் மீது இல்லாதிருந்தால், நாங்கள் நேரான வழியை அடைந்திருக்க மாட்டோம்; தருமங்கள் செய்திருக்க மாட்டோம்; உன்னை வணங்கியிருக்க மாட்டோம்,

“ஆண்டவனே! எங்களுக்கு நலத்தையே அருள்வாயாக! பகைவர்கள் எங்களுக்கு எதிராக வந்தால், எங்களுடைய கால்கள் நிலையாக நிற்குமாறு கருணை புரிவாயாக. பகைவர்கள் எங்களைத் துன்புறுத்தி, இடையூறுகள் செய்து, எங்களை இஸ்லாத்தை விட்டு விடுமாறு செய்து விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், 'நாங்கள் அதை மறுத்து நிற்கிறோம்', 'நாங்கள் அதை மறுத்து நிற்கிறோம்,' 'நாங்கள் அதை மறுத்து நிற்கிறோம்'” என்ற இறுதிச் சொற்களைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

அவர்கள் எல்லோரும் அவ்வாறு பாடிக் கொண்டிருக்கும் போது, பெருமானார் அவர்கள், “ஆண்டவனே! மறுமையில் சுகமாயிருப்பதே உண்மையான சுகம். ஆகையால், அன்சாரிகளுக்கும், முஹாஜரீன்களுக்கும் கருணை காட்டி ஆதரிப்பாயாக!” என்று வேண்டிக் கொள்வார்கள்.