நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/பகைவர்களின் கூட்டு முயற்சி

104. பகைவர்களின் கூட்டு முயற்சி

யூதர்களும், குறைஷிகளும் ஒன்று சேர்ந்து மக்காவுக்கும், மதீனாவுக்கும் மத்தியிலுள்ள நாடுகள் அனைத்தையும் இஸ்லாத்துக்கு விரோதமாகச் சண்டை செய்யுமாறு தூண்டி விட்டுக் கொண்டிருந்தார்கள்.

அதனால் பல கூட்டத்தார் ஒன்று சேர்ந்தும், தனியாகவும் மதீனாவைத் தாக்கத் தயாரானார்கள்.

ஒன்றிரண்டு கூட்டத்தார் தாக்குவதற்கான ஆயத்தத்தோடு புறப்படும் சமயம், பெருமானார் அவர்களுக்குச் செய்தி எட்டியது. அவர்கள் படைகளைத் தயார் செய்து கொண்டு, எதிரே செல்ல முற்பட்டார்கள். அதைக் கண்ட அந்தக் கூட்டத்தார் ஓடி மறைந்து கொண்டார்கள்.

ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டு ஷஅபான் மாதம் மதீனாவுக்கு இருநூறு மைல் தொலைவிலுள்ள முரீஸீ என்னும் ஊரில், பனூ முஸ்தலிக் என்னும் கூட்டத்தின் தலைவரான அல் ஹாரிதுப்னு அபீலிரார் என்பவர் மதீனாவைத் தாக்குவதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். இது பெருமானார் அவர்களுக்குத் தெரிந்தது. அந்தச் செய்தி உண்மையே என்று மற்றொரு உளவாளி மூலமாகவும் நிச்சயப்படுத்திக் கொண்டார்கள்.

அக்கூட்டத்தின் தலைவர் தங்களைத் தாக்க புறப்படுவதற்கு முன்னரே, அவரைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பெருமானார் அவர்கள் முஸ்லிம் படைகளை நடத்தி அவ்வூருக்குச் சென்றார்கள். முஸ்லிம் படை வந்த தகவல் தெரிந்ததும், ஹாரிதின் சேனைகளில் பலர் பல பக்கங்களிலும் சிதறி ஓடி விட்டனர். ஹாரிதும் தம் ஊரை விட்டு, வெளியேறி, ஒளிந்து கொண்டார். ஆனால், அவ்வூர் மக்கள் ஒன்று சேர்ந்து அணி வகுத்து நின்று கொண்டு, வெகு நேரம் வரை முஸ்லிம் படையின் மீது அம்புகளை எய்து கொண்டிருந்தனர். முஸ்லிம் படையினரும் சளைக்காமல், அவர்களைத் தாக்கிக் கொண்டிருந்தனர்.

இறுதியாக, பனூ முஸ்தலிக் கூட்டத்தார் தோல்வியுற்றனர்.

இச்சண்டையில், அக்கூட்டத்தாரில் பத்துப் பேர் வரை கொல்லப்பட்டனர். அறுநூறு பேர் வரை சிறைப்படுத்தப்பட்டனர். இரண்டாயிரம் ஒட்டகங்களும், ஐயாயிரம் ஆடுகளும் முஸ்லிம் படையினர் வசமாயின.

சிறைப் பிடிக்கப்பட்டவர்களுள் ஹாரிதின் மகள் ஜூவைரிய்யா என்னும் பெண்மணியும் ஒருவராவர்.

அந்தச் செய்தி அறிந்ததும், அவருடைய தந்தை ஹாரித் பெருமானார் அவர்கள் முன்னிலையில் வந்து “என் மகளைச் சிறைப் படுத்தி வைத்திருப்பது தகுதியானதல்ல. நான் மிகவும் கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆகையால், அவளை விடுவித்து விட வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்.

பெருமானார் அவர்கள் அதற்கு, "ஜூவைரிய்யாவின் கருத்துப் படியே விட்டுவிடுவது நல்லது அல்லவா?” என்று சொன்னார்கள்.

உடனே ஹாரித் தம் மகளிடம் சென்று, “முஹம்மது உன்னுடைய கருத்துப்படி விட்டிருக்கிறார். என் கெளரவத்துக்கு இழுக்கு நேரிடாமல், நீ நடந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

அதற்கு ஜூவரிய்யா, “நபி பெருமானார் அவர்களின் தொண்டிலேயே இருக்க விரும்புகிறேன்” என்று கூறி விட்டார்.

அதன்பின், அந்தப் பெண்மணியைப் பெருமானார் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் போரில் சிறைப் பிடித்தவர்களை எல்லாம் படைகளிடம் பிரித்துக் கொடுக்கப் பட்டனர்.

“எந்தக் குடும்பத்தில் பெருமானார் அவர்கள் திருமணம் செய்துள்ளார்களோ, அந்தக் குடும்பத்தார் அடிமைகளாக இருக்கக்கூடாது” என்று கூறி, முஸ்லிம் படைகள் தாங்களாகவே அவர்களை விடுவித்து விட்டார்கள்.

சில நாட்களில் ஹாரிதும் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

இப்போர் முடிந்து திரும்பி வரும் பொழுதுதான் முனாபிக்குகள், ஆயிஷாப் பிராட்டியார் அவர்களின் மீது பெரும் பழி ஒன்றைச் சுமத்தினார்கள். அந்த வஞ்சகர்களின் தீய வலையில், முஸ்லிம்களில் நால்வர் சிக்கி, அதை உண்மை என நம்பி விட்டார்கள். ஆனால், பின்னர் விசாரணையில் அது நயவஞ்சகர்களின் கட்டுப்பாடான பொய் என்று வெளியாயிற்று.

அதே சமயத்தில், ஆயிஷாப் பிராட்டியார் அவர்களின் சீலத்தைப் பற்றி பெருமானார் அவர்களுக்கு ஆண்டவன் சமூகத்திலிருந்து அறிவிக்கப்பட்டது.