நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/சகோதர உணர்ச்சி
குறைஷிகள் இழைத்த கொடுமைகளுக்கு ஆளாகித் துரத்தப்பட்டு, மதீனாவுக்கு வந்த முஸ்லிம்கள் வெறுங் கையோடேயே வந்தனர். அவர்களில் பலர் மக்காவில் செல்வத்தோடும், நல்ல நிலையிலும் இருந்த போதிலும், குறைஷிகளுக்குப் பயந்து வெளியேறியதால், எதையுமே கொண்டு வர இயலவில்லை. அணிவதற்குச் சட்டை கூட இல்லாமல் இருந்தனர்.
அவர்கள் “முஹாஜிரீன்” என்று கூறப்படுவார்கள். அதாவது குடி பெயர்ந்தோர். அத்தகையவர்களுக்கெல்லாம் மதீனாவில் உள்ள அன்சாரிகளின் இல்லங்களே விருந்தளிக்கும் வீடுகளாகத் திகழ்ந்தன. எனினும், அவர்கள் பிறருடைய தயவில், உயிர் வாழ விரும்பவில்லை. உழைப்பின் பெருமையை உணர்ந்து, உழைத்து உண்டவர்கள்.
அவர்களுக்கும், அன்சாரிகளுக்கும் சகோதர பாசத்தை ஏற்படுத்தி வைக்கப் பெருமானார் அவர்கள் கருதினார்கள்.
புதிய பள்ளிவாசலில், அன்சாரிகளையும், மக்காவிலிருந்து குடி பெயர்ந்தோர்களையும் அழைத்து, ஒவ்வொரு அன்சாரியிடமும் ஒரு முஹாஜிரைக் காட்டி, “ இவர் உம்முடைய சகோதரர்” எனக் கூறி, அவர்களுக்குள் சகோதரப் பாசத்தை பெருமானார் அவர்கள் வலியுறுத்தினார்கள்.
அவ்வாறு சேர்த்து விடப்பட்டவர்களை அன்சாரிகள் பாசமிக்க சகோதர உணர்ச்சியோடு, தங்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய், தங்களிடம் இருந்த பொருள்களில் பாதியைக் கொடுத்தனர்.
அன்சாரிகளின் சொத்துகள் யாவும் தோட்டங்களாகவே இருந்தன.
அவர்கள், பெருமானார் அவர்களிடம் வந்து, “எங்களுடைய தோட்டங்களை எங்களுக்கும், முஹாஜிரீன்களுக்கும் சரி பாதியாகப் பிரித்துக் கொடுத்து விடுமாறு” கேட்டுக் கொண்டார்கள்.
முஹாஜிரீன்கள் வியாபாரத்தில் மட்டுமே பழக்கமானவர்கள். ஆகையால் தோட்டங்களை அவர்களுக்குக் கொடுப்பதால், பயன் உண்டாகாது என்று கருதிய பெருமானார் அவர்கள், அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை.
அதன்பின் அன்சாரிகள் பெருமானார் அவர்களிடம், “நாங்களே பயிர் முதலான மற்ற வேலைகளையும் செய்கிறோம். ஆனால் வருமானத்தில் முஹாஜிரீன்கள் பாதியை எடுத்துக்கொள்ளட்டும்” என்று கூறினர். அவர்களும் அதற்குச் சம்மதித்தனர்.