நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/தீயவனின் கோரிக்கை
இஸ்லாம், அரேபியா தேசத்தின் பல பகுதிகளிலும் பெரும்பாலும் பரவி விட்டது.
தனிப்பட்ட சில சிறிய கூட்டத்தார்களைத் தவிர, முஸ்லிம்களுக்குப் பெரிய விரோதிகள் அந்த நாட்டில் ஒருவரும் இல்லை.
ஆனால், ஒரு கூட்டத்தார் மட்டும் இஸ்லாத்தில் சேர்ந்திருப்பதாக வேடம் போட்டுக் கொண்டு முஸ்லிம்களுக்கு மத்தியில் இருந்து, மறைமுகமாக விரோதமாகவே இருந்து வந்தார்கள்.
இஸ்லாமிய வரலாற்றில், முனாபிக்குள் என்று கூறப்படுபவர்களே அவர்கள். முனாபிக்குள் என்றால் வஞ்சகர்கள் என்று பொருள்.
முனாபிக்குகள் பல சந்தர்ப்பங்களில் விளைவித்த பலவகையான துரோகங்கள், இடையூறுகள், தொல்லைகள், நம்பிக்கை மோசம், கொடுமைகள் பலப்பல. அவற்றை விவரித்தால் ஆத்திரம் மேலோங்கும்.
முனாபிக்குக் கூட்டத்தின் முக்கியத் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபை என்பவன். பெருமானார் அவர்கள் மதினாவுக்கு வந்தது முதல் ஹிஜ்ரீ ஒன்பதாம் வருடம் வரை அவன் இஸ்லாத்துக்குத் தீங்கு செய்வதையே முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்தான். அவன் எவ்வளவோ சூழ்ச்சிகளைச் செய்தான். அவற்றில் எதுவும் வெற்றி பெறவில்லை. முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினை உண்டாக்கக் கருதி முனாபிக்குக் கூட்டத்தினர் வேறு ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள்.
பெருமானார் அவர்கள் தபூக் சண்டைக்குப் புறப்பட்டுச் செல்லும் போது, அக்கூட்டத்தார் பெருமானார் அவர்களிடம் சென்று, புதிய பள்ளிவாசலுக்கு வந்து தொழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள்.
சண்டையிலிருந்து திரும்பி வந்த பின் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டுப் பெருமானார் அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள்.
முஸ்லிம்களுக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடனேயே, அந்தப் பள்ளிவாசல் கட்டப்பட்டிருப்பதாக, ஆண்டவனால் பெருமானார் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
அப்பள்ளிவாசலை எரித்து விடுமாறு பெருமானார் அவர்கள் கட்டளை இட்டார்கள். உடனே அது எரிக்கப்பட்டு விட்டது.
ஹிஜ்ரீ ஒன்பதாவது வருட இறுதியில், அப்துல்லாஹ் இப்னு உபை கடுமையான நோய்க்கு ஆளானான். அந்நோயிலிருந்து பிழைக்கும் நம்பிக்கை அவனுக்கு உண்டாகவில்லை. ஆனால், அவனுடைய மகன் உண்மையான முஸ்லிமாக இருந்தார்.
உபை தன் மகன் மூலமாகப் பெருமானார் அவர்களிடம் இரண்டு கோரிக்கைகளைச் சொல்லி அனுப்பினான்; அவ்வாறே அவர் மகன் வந்து “தம் தந்தை மரணம் அடைந்தபின், பிரேதத்தைப் போர்த்தி அடக்கம் செய்வதற்காகப் பெருமானார் அவர்களின் ஆடை ஒன்றைத் தரவேண்டும். தந்தைக்காகப் பெருமானாரே 'ஜனாஸாத்' தொழுகை நடத்த வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டார்.
தீமைகள் பல புரிந்தவனானாலும், அவனுடைய கோரிக்கையைப் பெருமானார் அவர்கள் மறுக்கவில்லை. அவ்வாறு தொழுகை நடத்துவதற்குப் பெருமானார் அவர்கள் சம்மதித்து, தங்களுடைய சட்டை ஒன்றைக் கொடுத்தார்கள்.
இப்னு உபை மரணம் அடைந்ததும், ஜனாஸாத் தொழுகைக்காகப் பெருமானார் அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது உமறு அவர்கள், பெருமானார் அவர்களின் சட்டையைத் துணிந்து பிடித்து, “அல்லாஹ்வின் விரோதிக்காகத் தாங்கள் பிரார்த்தனை செய்யப் போகிறீர்களா?” என்று கேட்டார்கள்.
விரோதிகளிடமும் கூட முற்றிலும் கருணை உள்ளம் கொண்ட பெருமானார் அவர்கள் “உமறே! சற்று விலகி நில்லும்.” (செல்கிறேன்) என்றார்கள்,
அப்பொழுது, உமறு அவர்கள், “'அவர்களுக்காக (முனாபிக்குகளுக்காக) நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள்; அல்லது கேட்காமல் இருங்கள். அவர்களுக்காக எழுபது தடவை மன்னிப்புக் கேட்டாலும், ஆண்டவன் அவர்களை மன்னிக்க மாட்டான்' எனத் திருக்குர்ஆனில் ஆண்டவன் அருளியிருக்கிறானே!” என்று சொன்னார்கள்.
புன்முறுவல் பூத்தவர்களாகப் பெருமானார் அவர்கள் “அவர்களுக்காக மன்னிப்புக் கேட்கவும் அல்லது கேளாமல் இருக்கவும் ஆண்டவன் எனக்குச் சுதந்திரம் கொடுத்திருக்கிறான். மன்னிப்பதும், மன்னிக்காமல் இருப்பதும் ஆண்டவனுடைய விருப்பத்தைப் பொறுத்தது” என்று கூறிவிட்டு, உபைக்காகத் தொழுகை நடத்தினார்கள்.
பெருமானார் அவர்களின் மேலான கருணை உள்ளத்தைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்து இப்னு உபையின் கூட்டத்தாரில் ஆயிரம் பேர், அன்றைய தினமே உண்மையான முஸ்லிம்களானார்கள்.
அதன்பின், முனாபிக்குகள் முற்றிலும் அடங்கி விட்டார்கள்.