நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/மதீனாவிலிருந்து யூதர்கள் ஓட்டம்
பத்ருப் போரில் முஸ்லிம்களுக்குக் கிடைத்த வெற்றியானது யூதர்களுக்கு அச்சத்தை விளைவித்தது.
இஸ்லாம் வலுவாக வேரூன்றி விடு முன், அதை நசுக்கி விட வேண்டும் என்ற கெட்ட எண்ணம் யூதர்களுக்கு ஏற்பட்டு விட்டது.
அதனால், முஸ்லிம்களுடன் ஏற்கனவே செய்து கொண்ட உடன்படிக்கையை மீறிச் சண்டை செய்யப் போவதாக கைனுகா கூட்டத்தினர் அறிவித்தார்கள்.
அத்துடன் தற்செயலாக நிகழ்ந்த மற்றொரு நிகழ்ச்சியும் பகையைத் துரிதப்படுத்துவதற்குக் காரணமாய் அமைந்தது.
ஒரு நாள், முஸ்லிம் பெண் ஒருவர் சாமான்கள் வாங்குவதற்காக கைனுகா கூட்டத்தைச் சேர்ந்த யூதருடைய நகைக் கடைக்குச் சென்றார். அப்போது அங்கே கூடியிருந்த யூதர்கள் சிலர், அந்தப் பெண்ணின் ஆடையின் ஒரு முனையை அவள் அறியாது, ஓர் ஆணியில் மாட்டி விட்டனர். அதனால் அப்பெண் எழுந்த போது ஆடை அவிழ்ந்து விட்டது. அப்பொழுது அவ்வழியாகப் போய்க் கொண்டிருந்த முஸ்லிம் ஒருவர், அந்தக் கடைக்குப் போய் யூதனை அடித்தார். அவன் கீழே விழவும், அங்கிருந்த யூதர்கள் எல்லோரும் கூடி அந்த முஸ்லிமைக் கொன்று விட்டனர்.
இந்தச் செய்தியை பெருமானார் அவர்கள் அறிந்தார்கள். உடனே அங்கே போய் “ஆண்டவனுக்குப் பயப்படுங்கள். அவ்வாறு பயப்படாவிடில், பத்ரில் உள்ளவர்களுக்கு வந்ததைப் போல் உங்கள் மீதும் துன்பம் வந்து இறங்கும்” என்று எச்சரித்தார்கள்.
யூதர்கள் உடனே பெருமானரிடம் “நாங்கள் குறைஷிகள் அல்லர்: எங்களுடன் போர் புரிவதாயிருந்தால், போர் வீரர்கள் என்றால், உண்மையில் யார் என்பதை உங்களுக்குக் காண்பிப்போம்” என்று சொன்னார்கள்.
அதோடு மட்டுமன்றி, உடன்படிக்கைக்கு விரோதமாக முஸ்லிம்களுடன் சண்டை செய்யப் போவதாகவும் அறிவித்தார்கள்.
ஆகவே, பெருமானார் அவர்களுக்கு, அவர்களுடன் சண்டை செய்ய வேண்டிய நிலைமை உண்டாயிற்று.
முஸ்லிம்கள் கைனுகா யூதர்களின் கோட்டைகளை முற்றுகை இட்டார்கள்.
பதினைந்து நாட்களுக்குப் பிறகு, பெருமானார் அவர்கள் செய்யும் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக யூதர்கள் சொல்லி அனுப்பினார்கள். முஸ்லிம்கள் அனைவரும், யூதர்களைக் கொன்று விட வேண்டும் என்ற ஆவேசத்தோடு இருந்தார்கள்.
ஆனால், யூதர்களோடு இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு உபை, பெருமானாரிடம் வந்து யூதர்களை மதீனாவை விட்டு வெளியேற்றினால் போதுமானது என்று வேண்டிக் கொண்டார்.
பெருமானார் அவர்கள் அதற்குச் சம்மதித்தார்கள். கைனுகா கூட்டத்தார் மதீனாவை விட்டு வெளியேறி, ஷாம் மாநிலத்தில் போய்க் குடியேறினார்கள். அவர்கள் மொத்தம் எழுநூறு பேர்கள். அவர்களில் முந்நூறு பேர்கள் கவசம் தரித்தவர்கள்.
இது ஹீஜ்ரீ இரண்டாவது வருடம் ஷவ்வால் மாதத்தில் நடந்த நிகழ்ச்சியாகும்.