நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/10. ஈகை

10. கைக்கு அழகு தருவது ஈகை
(ஈகை)

ஈவது தான் கை கைக்கு அழகு தருவது கொடைப் பண்பு; வற்றிவிட்ட பிறகு ஊற்றாக வரும் நீர்ப் பெருக்கு; அது பிறர் வேட்கை தீர்க்கும்; தாகம் எடுப்பவர்க்கு அது உதவுவது; நன்கொடை, கைப்பொருள் அற்ற நிலையில் பையைத் தேடித் துழவித் தருகிறானே அதுதான் பெருமை. உற்றவன் கொடுக்கிறான் என்றால் அது வெறுமை; உலகப் புகழ்மை; அது காட்டாது மெய்ம்மை. கொடையோடு பட்ட குணன் உடைய வர்க்குச் சுவர்க்கத்தின் கதவு அடையாது. சுவர்க்க வாசல் புகுமுன் அங்கே உள் நுழைவதற்கு ‘விசா’ வேண்டும்; அஃது அவன் கொடுத்துச் சிவந்த கைகள்; அவற்றைக் காட்டினாலே அனுமதி, அவனுக்கு வெகுமதி.

“வயது உனக்கு என்ன?” “அறுபத்தி ஆறு”; “மூப்பு உன்னை அடைகிறது; நோய் இன்னும் அதற்குப் பெயர் தரவில்லை; நாளும் புதிய படைப்புகள்; வழி இல்லை துடைப்புகள்; அவை இன்று நடப்புகள்; அடங்கி இரு ஆரவாரம் ஏன்? செயல்களைக் குறைத்துக் கொள்; தூக்கம் இழக்கிறாய்; காரணம் பற்றுகள் உன்னைப் பிய்த்துத் தின்னுகின்றன. மற்று இனிச் செய்வது யாது? பகுத்து உண்க; பல்லுயிர் ஓம்புக; காசு இருக்கும்போது வேசிபோல் பற்றிக் கொள்ளாதே. ஆசு நீங்கி அருளுக; மாசு நீங்கி வாழ்க, ஈத்துப் புகழ் பெறுக.”

“நெருப்பிலும் தூங்க முடியும்; நிரப்பினுள் கண்படுத்தல் இயலாது” என்பது வள்ளுவர் வாக்கு; வறுமை ஒருவனை நடுங்க வைக்கும்; நிம்மதியாக இருக்க விடாது; அதனால் வறியவர் வேறு அரண் இன்றி இவனைச் சரண் அடைகின்றனர். இங்கே கொட்டியா வைத்திருக்கிறது?’ என்று கெட்டியாகக் கூறி மறுத்து விடுகிறான்; அவர்களைத் துரத்தியும் விடுகிறான். போகின்றவன் மனம் வேகின்றான். “எத்தனை நாளைக்கு உன் வாழ்வு? நீயும் ஒரு நாளைக்கு நடுத்தெருவுக்கு வராமல் இருக்கப் போவதில்லை” என்று சாபம் கொடுக்கிறான்; பாபம் அவன் எரிச்சல் வயிறு.

கொடுத்தால் ஒன்றும் குறைந்துவிடாது; பிறர்க்கும் கொடுத்துத் தானும் உண்டால் செல்வம் செழிக்கும்; அவன் புகழ் கொழிக்கும்; தீமைகள் அழியும், துன்பங்கள் ஒழியும். “நீ இறுகிப் பிடித்தாலும் பணம் உன்னை விட்டுப்போகாமல் இருக்காது; கெட்ட காலம் வந்தால் அஃது உனக்கு விடுதலை தந்து கெடுதலை விளைவிக்கும். ஆக்கமும் அழிவும் வினைப் பகுதியின் செயல்கள்; இவ்வுண்மை அறிக; வறியவர்க்கு ஈக; அதோ நடுத்தெருவுக்கு வந்து ‘நாராயணா’ என்று பாராயணம் செய்கிறானே; அவன் எப்படி இவ்வாறு வேறாயினான்? சென்ற பிறவியில் அவன் செய்த கருமம்; செய்யாத தருமம்; இப்பிறவியில் அவனைத் தாக்கி இருக்கின்றன.

பேசும் முன் சிலர் பொடி போட்டால்தான் உற்சாகமாகப் பேசுவார்கள்; நெடியாகத்தான் இருக்கும்; என்றாலும் இது சிலருக்குப் பழக்கம் ஆகிவிட்டது. நீ சோறு தட்டில் இட்டு உண்பதற்கு முன் வெளியே எட்டிப் பார்; காத்திருப்பான் ஒரு பரம ஏழை; அவனுக்கு இம்மி அளவு; அது கம்மிதான். ஒரு பிடி அரிசி தானம் இடு; சிரமமாகத்தான் இருக்கும். என்றாலும் இதை மறக்காதே.”

வறியவன் வந்து நிற்கிறான்; அவனைப் பார்த்துக் கேட்கிறான். “முகவரி கெட்டா இங்கே வந்து நிற்கிறாய்? வள்ளல் பாரி என்றா என் வீட்டு முன்னால் எழுதி ஒட்டி இருக்கிறேன்? ‘காரி’ என்பவன் யார் தெரியுமா? அவனும் ஒரு உபகாரி, அவர்கள் கொடுத்துக் கெட்டவர்கள்; வள்ளல் என்று பெயர் எடுத்தவர்கள் எல்லாம் வறுமைப் பள்ளத்தில் உழல்கிறார்கள். நமக்கு ஏன் வள்ளல் பட்டப் பெயர்? கொடுப்பதும் இல்லை கெடுவதும் இல்லை” என்று கம்பீரமாகப் பேசுகிறான்; இவன் நடுநிலைமைவாதி.

ஒழுங்காகத்தான் வாழ்கிறான்; மாதம் முப்பது; இருபதில் கெடுபிடி; வீட்டில் அடிதடி, இல்லை அரிசி ஒருபடி என் செய்வது? கேட்டு வாழத்தான் வேண்டும். இரவல்; இரத்தல் என்பதுதான் இரவல் ஆயிற்று. எப்படியாவது நிரவல் செய்ய இதுதான் வழி; சே! மானம் கெட்ட பிழைப்பு: தானம் தராவிட்டாலும் பரவாயில்லை. பிறரைக் கேட்டு வாழ நினையாதே; எந்த இக்கட்டு வந்தாலும் பிறர் படிகட்டு ஏறாதே. மானம் உயிரினும் மதிக்கத்தக்கது. ஒருமுறை கேட்கத் தொடங்கினால் அதன்புறம் நீ மாறமாட்டாய்; தேறமாட்டாய்.

ஊர் நடுவே மரம் பழுத்தது போன்றது என்பர் உபகாரியின் செயல்; குடிநீர் பொதுக் கிணறு. மருந்துச் செடி இவையும் பலருக்கும் பயன்படுகின்றன. இவற்றைப் போன்றவர் உபகாரிகள் என்று உயர்த்திப் பேசினார் வள்ளுவர்; இன்னொரு புது உவமை பலரும் பறித்துச் செல்லும் பனை மரம் ஊர் நடுவே உள்ளது. இஃது உபகாரி உயர்வு; சுடுகாட்டில் காய்க்காத ஆண் பனை அபகாரியின் தாழ்வு. இஃது எப்படி? வள்ளுவர் உவமைக்குத் தோற்கவில்லை நாலடிப் பெருமை.

உபகாரிகள் அவர்கள் வீட்டுக் காவல் இல்லை; துரத்துவதற்கு ஏவல் இல்லை; கத்தி மறைத்து வைத்துச் சுற்றிலும் காவலாளி இல்லை. அடையாத நெடுங் கதவு; அவர்கள் மனம் தூய திறந்தவெளி.

இவர்களுக்கு மாறுபட்டவர்கள் அபகாரிகள்; சுற்றிலும் மதிற்சுவர்கள். ‘நாய் கடிக்கும்’ இது அறிவிப்புப் பலகை. இரும்புக் கதவு உள்ளே எட்டிப் பார்ப்பதைத் தடுக்க முழு கதவடைப்பு; துணிந்து “பிச்சைக்காரர்கள் அனுமதிப்பது இல்லை” என்றும் எழுதியும் வைக்கமாட்டார்கள்; அப்படி எழுதி வைத்தாலும் தொல்லை இல்லை. தம் கஞ்சதனத்தை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள். இப்படியும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கை பயனற்றது; இயற்கை நியதிக்கு மாறுபட்டது. மனிதன் ஒதுங்கி வாழ இயலாது; வாழக் கூடாது. ஈகை இல்லை என்றால் அந்த வாழ்க்கை சோகைதான்.

மழை உதவுகிறது; அஃது என்ன எதிர்பார்க்கிறது? கைம்மாறு கருதாத செய்கை அதன்பால் உள்ளது. அஃது உலக அபிமானம்; இந்த உலகம் வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம். மனிதன் பிறர்க்கு ஈவது; தருவது மனித அபிமானம்.

இன்று நாம் உதவினால் மற்றொரு நாள் அவன் திருப்பித் தருவான் என்று நினைப்பது கீழ்மை; சுருக்கமாகச் சொன்னால் வட்டி வியாபாரம்; கூடுதலாகக் கிடைக்கும் என்று நாடுதல் ஆகும்.

நீ தருவது மிகச் சிறியதாக இருக்கலாம்; இன்று இயன்றது அதுதான். இதைப் போல நாளும் செய்துவா! மொத்தத்தில் கணக்குப் போடு; சிறு துளி பெரு வெள்ளம். கேட்பவனும் வீடு வீடு செல்கிறான். ‘ஒரு பிடி சோறு’ என்று தான் கேட்கிறான். அவன் பிச்சைப் பாத்திரம் மணிமேகலையின் அட்சய பாத்திரம் ஆகி விடுகிறது; நிறைந்து விடுகிறது. சிறு பிடிதான்; அது பல படியாகிறது; அதுபோல நீ இடுவது சிறுதுளிதான்; தொடர்ந்து அளித்தால் அது பெருவெள்ளம் ஆகிறது.

கடிப்பு அடிக்கும் முரசின் துடிப்பு; அதன் ஓசை அந்த ஊர் எல்லை வரை மட்டும்தான் எட்டும்; வானத்து இடி அதன் ஓசை மலைகளையும் முட்டும்; நடுங்கச் செய்யும்; அலையோசை போல் அதிரும். நீ கொடுத்து அதனால் எழும் புகழ் ஓசை மூவுலகும் கேட்கும்; எந்த ஓசை மிகவும் பெரிது? யோசித்துப் பேசு; ஈக; அதனால் புகழ் சேர்க்க.