நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/9. பிறர்மனை நயவாமை
பக்கத்து வீட்டுக்காரி, புதுச்சேலை உடுத்தி அதிகாலையில் நிற்கிறாள். அவள் அங்கு வருகிறாள் என்பதைத் தெரிகிறான்; பூச்சூடி அன்று மாலை அவன் கண்ணில் படுகிறாள்; ‘புதுச் சரக்கு வந்து இறங்கி இருக்கிறது’ என்பது அறிகிறான்.
இவள் யார்? புதிதாக வந்தவள். அடுத்தவன் மனைவி; சொந்த வீட்டுச் சமையல் சுவைக்காது; அடுத்த வீடு தான் சுவைக்கும். இவன் மதம் கொண்ட யானை, களிப்பு மிக்கவன்; கரும்பு வயலை மிதித்து அதனை விரும்பி உண்ண நினைக்கிறான். எப்படியோ அந்தப் புதியவள் இவன் வலையில் வீழ்ந்துவிட்டாள்.
இனி அடுத்து அவள் கைப்பிடிப்பது தான் விருப்பம். அதனை விட்டுவிட்டால் தருமம்; கவர்ந்தது அவள் சருமம். ஊசி இடம் கொடுத்தால் நூல் நுழைய வழி கிடைக்கிறது. என்றாலும் பார்த்து நுழைய வேண்டும்; வழி சிறிது; இருட்டு வேளை? வெளிச்சம்; அவன் கண்கள் கூகின்றன.
கதவைத் திறந்து வைத்தாள்; கணவன் வெளியேறிச் சென்றான்; அவன் வருவது எப்பொழுது? அது தெரியாது. அதற்குள் முடித்துக் கொள்ளலாம். ஏன் உடல் நடுங்குகிறது. வைத்தியரிடம் காட்டினால். ‘இது மன நடுக்கம்’ என்பான். இத்தனை இடுக்கு வழியே நடுக்கத்தோடு ஏன் செல்கிறான்? படுக்கை இன்பம் கிடைக்கிறது என்பதால்தான். இன்பம் சிறிது; அதற்கு அடையும் துன்பம் பெரிது; அவன் முயற்சி வறிது.
அவன் நிலை என்ன ஆயிற்று? அறம் கெட்டது; புகழ் தேய்ந்தது; உறவு முறிந்தது; பெருமை சிறுத்தது; நன்மைகள் அழிந்தன. பகை தொடர்ந்தது; பழி கூடியது; பாவம் அதற்கு மன்னிப்பு இன்றி மனம் உளைந்தது.
அவன் வாழ்க்கை அச்சமே ஆசாரம் ஆயிற்று. அவன் செய்கை அவனுக்கு விசாரம் ஆயிற்று. புகும்போதும் அச்சம்; அவளோடு நகும் போதும் அச்சம். காமம் மிகும்போதும் அச்சம்; எப்போதும் அச்சம். மறைப்பது எப்படி? அதுவும் அச்சம். அகர முதலாக னகர இறுவாய் நரகமே அவனுக்கு வாய்க்கிறது; இவை அச்சத்தின் விளைவு.
பிறர் கண்டால் இவனை மட்டும் பழிக்கமாட்டார்கள்; பிறப்பைப் பற்றியும் ஆராய்வார்கள். “இவன் தாய் ஒருவனுக்கு என்று விரிக்கவில்லை முந்தானை” என்பர். இவன் தாயின் முந்தானை இவர்கள் ஆய்வுக்கு உள்ளாகிறது. அகப்பட்டுக் கொண்டால் கைகால் குறையும். பேடித்தனம் அவன் செய்கை, கல்வி கற்று அறிஞனாக இருக்க வேண்டியவன் விபச்சாரன் என்றும் துச்சாரி என்றும் தூவிக்கப்படுகிறான்.
இவன் கெட்டுச் சீரழியக் காரணம் என்ன? இவன் செட்டாகச் சேரும் சிற்றினம்தான்; கொழுந்தி அழகிய வடிவினள், அவளிடம் அழுத்தமான உறவு; தொடர்ந்து அவளை மருவிக் கெடுவது இந்த ஆள், இவன் ஒரு நாளைக்கு ‘அலி’ என்னும் சொல்லுக்குப் பலியாவது உறுதி.
பக்கத்து வீட்டுப் பத்தினியோடு இவன் செய்யும் சல்லாபம் அதனை எப்படிக் கழுத்தை நீட்டியவள் பொறுத்துக் கொள்வாள்? “பத்துப் பேர் அறியப் பந்தக் கால் எழுப்பி அவளை மனைவி என்று ஏற்ற நீ இந்தக் கந்தல் துணியை எப்படி நாடலாம்? உன் மனைவி மெல்லிய மனம் மல்லிகைப்பூ; அது வாடாதா! இது துரோகம்; அதன் காரணம் பிறன் மனையாள்பால் நீ கொண்ட மோகம்.”
“அரவு அழகாகத்தான் இருக்கிறது; அது நஞ்சு: கரவு என்பது அறிய மாட்டாய்; படம் எடுத்து ஆடுகிறது; அதனை நடம் என்று நயக்கிறாய்; நச்சு உடையது அது; அஃது உன்னை நக்கத் தேவை இல்லை; நீயே அது நஞ்சு உக்க அதன்பால் செல்கிறாய். இது பிள்ளைமை விளையாட்டு அன்று, கள்ளம் அமை உயிர் ஆட்டு; மரணத்தோடு விளையாடும் புதுக்கூட்டு.”
நீதிகள் எடுத்து ஓதி உரைத்தாலும் அவன் அவற்றை ஒரு சேதி என்று ஏற்க மறுக்கிறான்; காரணம் மீதூர்ந்த காமம்; அஃது உடல் இயற்கைதான்; என்றாலும் அதனை அடுதல் அறிவின் செய்கைதான்; அறிவுடையவர் காமம் கரை மீறாது கட்டுக்குள் அடக்கி வாழ்வர்; இயற்கை என்று மிகைக்கை செய்து அறிவாளி இத்தவறு செய்யமாட்டான்.
பிறன் மனை நயத்தல் இளமை செய்யும் குறும்பு; அது காமத்தின் அரும்பு; அது கொடிது; கடிது; வெவ்விது; எதனாலும் அடக்க இயலாது; அம்பும், நெருப்பும், காய் கதிரும் புறத்தைச் சுடும்! காமம் அகத்தைச் சுடும் ஆற்றல் மிக்கது. அதனால் நெருப் பினும் காம விருப்பு மிகுதியும் அஞ்சத்தக்கது ஆகும்.
ஊரே பற்றி எரிகிறது; எரிந்தால் என்ன? ஏரி குளம் உண்டு; அங்குப் பதுங்கிக் குளிர் பெறலாம். காமம் கட்டுக்கு அடங்காது. அஃது எரிந்தால் தப்பித்துக் கொள்ள ஏமமே இல்லை.