நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/12. மெய்ம்மை
அவன் மக்கள் தலைவன்; அப்படி அவன் சொல்லிக் கொள்கிறான். எப்படி அவன் இத்தலைமையைப் பெற்றான்? ‘நன்கொடை’ தருவதாகக் கூட்டத்தில் கூறுவான்; அதை உடனே மறந்துவிடுவான். கைதட்டிய வரும் தொடர்ந்து கேட்டு அலுத்துவிடுவர் வேறு வழி இன்றி.
நல்லவன் என்று சொன்னார்கள். ஊரில் அனாதை இல்லம் கட்ட நன்கொடை கேட்கச் சென்றோம். தொகை ஐயாயிரம் என்று ‘செக்’ எழுதித் தந்தான் தொல்லை பொறுக்க முடியாமல், அதற்குப் பணம் வங்கியில் இல்லவே இல்லை. அவன் கண்ணியத்தை வங்கி மதிக்க மறுத்துவிட்டது; அவன் நல்லவன் தான்.
கஷ்ட காலம் உடனே உதவ வந்தான்; “முதல் தேதி வந்து பாரு” என்றான்; ஆளே வீட்டில் இல்லை; விசாரித்ததில் ‘இன்று முதல் தேதி, அவர் வெளியே போய்விடுவார்” என்று பதில் வருகிறது. அடுத்த நாள் சென்றோம். அவன் ‘இன்று இரண்டு தேதி’ என்கிறான்.
மகளை மணக்க வரதட்சணை தரமாட்டேன் என்று சொல்லி இருக்கலாம். கட்டிக் கொடுத்துவிட்டார். கேட்டால், ‘வரதட்சணை கேட்பு சட்டத்துக்குப் புறம்பு’ என்று சாதுரியமாகப் பேசுகிறான். இவர்கள் செய்வது ஒன்று; சொல்வது ஒன்று. இந்த முரண்பாடுகள் மதிக்கத் தக்கவையா? நீயே முடிவு செய்க!
பிரகலாதன் கதை தெரியுமா? அவன் நாரணன் பக்தன்; இரணியன் அவனை எவ்வளவோ மாற்ற முனைந்தான். ஆசிரியர்கள் அவனைப் பலமுறை திருத்த முயன்றனர். மாற்றவே முடியவில்லை. நன்மையைத் தீயதாக மாற்ற முடியாது. கரும்பைக் கசக்கச் செய்ய இயலாது. அதே போல வேம்பை இனிக்கச் செய்யவும் முடியாது. இராவணனை மாற்ற முனைந்தவர் பலர்; தம்பியர் இருவர்; துணைவி ஒருத்தி மண்டோதரி; இவ்வளவு பேரும் தோற்றுவிட்டனர்.
இறுதிவரை சீதையை மறக்கவே இல்லை. மூடர்களை மாற்ற முடியாது; கல்வி கற்பதும் பயன் இல்லை. காந்தி மகான் கதையும் மாற்றாது. நாய் வாலை நிமிர்த்த முடியாது. இவை வாழ்க்கை உண்மைகள். உம்முடைய கருத்து என்ன?
இந்த வீட்டில் ஏன் திடீர் கூட்டம்? அவனுக்கு லாட்டரி சீட்டில் லட்சம் பத்து விழுந்ததாம்.
அதற்காக ஏன் இவர்கள் வந்து சேர்ந்தார்கள்.
அந்தக் காற்றில் குளிர்காய விரும்புகிறார்கள்.
நடிகை நட்சத்திரமாகிவிட்டாள்; அவள் ஒரு காலத்தில் அவள் தாய் அவளை வீட்டை விட்டுத் துரத்தினாள் இவள் எதற்கும் உதவாதவள் என்று. இன்று அவள் தாய் காரியதரிசி அவள் பிரியதரிசினி.
தேர்தலில், வெற்றி பெற்றுவிட்டான்; எம்.எல்.ஏ; அமைச்சர் பதவி; வோட்டுப் போடதவர்கள் எல்லாம் வாழ்த்துக் கூறுகிறார்கள். ‘அவர் நம்ம தலைவர்’ என்று பேசுகிறார்கள். மேடையில் வசைமாறி பொழிந்தவர்கள் ஏன் இப்படி இவர்கள் திசை மாறிவிட்டார்கள்?
பையன் எதுக்கும் உதவமாட்டான் என்று அப்பா அடித்துத் துரத்திவிட்டார். அவன் துபாய் சென்று ஏகப்பட்ட பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறான். அவன் ‘திறமைசாலி’ என்று அப்பா பாராட்டுகிறார்;
இந்த மாற்றங்கள் எப்படி ஏற்படுகின்றன? நீயே யோசித்து முடிவு செய்க; பொருள் உள்ளபோது உறவு காட்டுவர்; இல்லாதபோது எங்கும் குறைகளை அறைகுவர்.
பையனைப் பெண் பார்த்தாள்; பெண்ணைப் பையன் பார்த்தான். அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். இருவருடைய உள்ளப்போக்கை அறியப் பெரியவர்கள் வினவுகிறார்கள்.
“பையனைப் பெண்ணுக்குப் பிடித்துவிட்டது; பெண்ணைப் பையனுக்குப் பிடித்துவிட்டது” என்று மற்றவர்கள் முடிவு செய்துவிட்டனர்.
பெண் என்ன சொல்கிறாள்? “அப்பா விருப்பம்; அதுதான் என் முடிவு” என்கிறாள். பையனைக் கேட்டால் அவனும் அப்படியே சொல்கிறான். தன் தந்தை விருப்பம் தான் தன் முடிவு என்கிறான்.
அப்பாக்களைக் கேட்டால் இருவரும் சொத்து மதிப்புகளை எடை போட்டு விட்டுத் “தீர்மானமாக எங்களுக்குப் பிடித்துவிட்டது” என்று ஏகோபித்துச் கூறுகிறார்கள். பையனும் பெண்ணும் மறுப்புக் கூறவே இல்லை. காரணம் என்ன? சரியான பதில் தருவோருக்குப் பரிசு பத்தாயிரம்! விளம்பரதாரர் தருவர்; அதை இளம் தம்பதிகள் பெறுவர்.
நாயகன் படம் பார்த்தாயா? நீ எங்கே பார்க்கப் போகிறாய்! உனக்குப் படம் பார்க்கவே பிடிக்காதே. அதில் ஒரு முக்கியமான காட்சி அமைச்சர் மகன் காவல்துறை அதிகாரியின் மகளை வம்புக்கு இழுத்து அவளைக் கெடுக்க முயல்கிறான்; நீதித்துறை செயல் இழந்துவிட்டது. அதன்மீது நம்பிக்கை இல்லை காவல்துறை அதிகாரிக்கு. அவர் துறையிலேயே அவருக்கு நம்பிக்கை இல்லை; முரடர் தலைவனிடம் வந்து முறையிடுகிறார்.
“நீர் காவல் துறை அதிகாரி. நீரே தண்டித்து இருக்கலாமே” என்று கேட்கிறான் முரடர் தலைவன்.
“அமைச்சர் மகனை எதிர்த்து நான் ஒன்றும் செய்ய முடியாது” என்று தன் இயலாமையைக் கூறுகிறார். ஏன் அந்தக் காவல் அதிகாரி கோழையாகிவிட்டார்? நீதி ஏன் தோற்றுவிட்டது? சரியான பதில் எழுதி அனுப்புங்கள். விடை புதிதாக இருக்க வேண்டும். நீரே சிந்தித்து முடிவு செய்க. “சாதிப் பசு; அதற்கு மதிப்பு அதிகம். நீதி தோற்றுவிடுகிறது” என்று பதில் வருகிறது.
“பழகிவிட்ட பிறகு அவர்கள் பழமையைப் பாராட்டுக” என்கிறார் வள்ளுவர்.
“பிறர் தீமை செய்தாலும் மன்னித்துவிடு; வெட்கப்படும்படி நன்மை செய்க” என்றும் கூறுகிறார்.
“மதியதார் வாசல் மிதிக்க வேண்டாம்; துஷ்டனைக் கண்டால் தூர விலகி விடு”, “தீயவரைக் காண்பதுவும் தீதே, தீயார் சொல் கேட்பதுவும் தீதே” - இப்படிப் பல பழமொழிகள் உள்ளன.
ஒரே குழப்பமாக இருக்கிறது; “தீமை செய்தாலும் திரும்ப நன்மையே செய்க” இது வள்ளுவர் வாக்கு; ஏசுநாதர் அறிவுரையும் ஆகும். “தீயவனை விட்டு விலகி விடு. அவனை நீ மதிக்காதே; அவனுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது பெருந்தவறு” இது நாலடியார் கூற்று.
இந்த இரண்டில் எது சரி! முடிவு செய்து மூன்று நாளில் விடை தருவோருக்கு முந்நூறு பரிசு வழங்கப்படும். இஃது இன்றைய டி.வி. விளம்பரம்.
“கரை இல்லாத வேட்டியே இல்லை; குறை இல்லாத மனிதனே கிடையாது. மான் குட்டிக்கு எத்தனை புள்ளிகள்! அந்தப் புள்ளிகளுக்காக அதன் தோலைப் புறக்கணிப்பது இல்லை. தபால் சேவகன் காசு கேட்கிறான் என்பதால் அவன் தரும் கடிதத்தைப் பிரித்துப் படிக்காமல் இல்லை; மாமூல் கேட்கிறான் என்றால் அவனை வேலை விட்டு நீக்குக என்று யாரும் கூறுவது இல்லை; கொள்ளை அடிக்கிறார்கள் அரசியல் கட்சிக்காரர்கள் என்றால் அவர்களை அணுகாமல் இருக்க முடிவதில்லை; குறையில்லாத மனிதர்களே இல்லை; குறையுடைய மனிதர்களிடையேதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நன்கொடை கேட்கிறார்கள் என்பதால் பையனைப் படிக்க வைப்பதை நிறுத்த முடியுமா? குறைகளைத் திருத்துவது வேறு; அவர்களை அடியோடு புறக்கணிப்பது வேறு; நாம் மனிதர்கள்; எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்கமாட்டார்கள். சற்று ஏறக்குறைய பார்த்தும் பாராமல் பழகுவது நல்லது”. நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? இதற்குப் பரிசு கிடையாது.
“வான் வரை என் ஆணை செல்லும்” என்று ஆணவத்தோடு பேசியவர் எல்லாம் பதவி விட்டுக் கீழே தள்ளப்பட்டு விடுகின்றனர். “மக்கள் என்றும் மடையராக இருப்பர்; யானே ஆட்சியைக் காலமெல்லாம் கைப்பற்றுவேன்” என்று ‘கட் அவுட்’ எழுப்பியவர் எல்லாம் ‘கட் அவுட்’ ஆகிவிடுகின்றனர். மக்கள் சாய்த்து வீழ்த்தி விடுகின்றனர். ‘ஜனநாயகம்’ என்பது ஆற்றல் மிக்கது; அக்கிரமக்காரர்களை நீடிக்கவிடாது.
பதவியிலிருந்து கீழே தள்ள முடியாது என்று பகற்கனவு காணாதே. தவறான ஒரு அடிபோதும் சறுக்கி விழ; பதவியிலும், ஆட்சியிலும், அதிகாரத்திலும் உள்ளவர் மக்கள் நலம் காப்பது அவர்கள் பொறுப்பு; அதனைச் செம்மையாக நடத்துவது நீதியின் விருப்பு. அடக்கம் உன்னை உயர்த்தும். அடங்காமை ஆரிருளில் உய்த்துவிடும். இப்படி அறிஞர்கள் அவ்வப்பொழுது அறிவிக்கின்றனர். எது உண்மை? நீ ஆராய்ந்து கூறு; அறம் வெல்லுமா? வெல்லுகிறதா ஆராய்க. இஃது ஐய வினா.
அறநூல் கூறுகிறவர் அனைவரும் இந்த மூன்று செய்திகளை உரைக்கின்றனர். “இளமை நிலைக்காது; யாக்கை நிலைக்காது. செல்வம் நிலைக்காது. அதனால் நிலைத்த தருமங்களைச் செய்க” என்கிறார்கள்.
வாழ்க்கையில் நீ பொருள் ஈட்டுகிறாய். கடினமான உழைப்பு உனது. “ஈக பிறர்க்கு உதவுக” என்கிறார்கள். “அதுவே புகழ் தரும்” என்கிறார்கள். நீ என்ன நினைக்கிறாய்? பொருளை இறுகப் பிடித்துக் கொள்வது நல்லதா? நல்ல செயல்களுக்குப் பயன்படுத்துவது நல்லதா?
“இன்பம் இந்த உலகம் அள்ளித் தருகிறது; துள்ளும் இளமை உனது; இன்பத்தில் தோய்ந்து மகிழ்ந்து கிட அதுதான் தக்கது” இப்படிக் கூறுகின்றவர். பலர்; “நீ கொள்கைகளில் உறுதியாக இரு. இன்பம், பொருள் இவற்றை நாடுவதில் நாட்டம் காட்டாதே. அறமே வாழ்வின் நியதி; குறிக்கோள். அதற்காக வாழ்ந்தால் வீடுபேறு கிடைக்கும்” என்கின்றனர் சிலர். நீ எதை விரும்புகிறாய்? உண்மை எது? எழுதிச் சில வரிகளில் விடை தருக; மதிப்பெண்தான் தர முடியும். ஆசிரியர்கள் கையில் அதுதான் இருக்கிறது வாரி வழங்க.