நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/13. தீவினையச்சம்

13. தீயவை செய்ய அஞ்சுக
(தீவினை அச்சம்)

வாயில்லாத ஜீவன்கள்; எதிர்த்துப் பேச இயலாத உயிர்கள்; அவற்றை வதைத்து வயிற்றில் அடக்குகிறீர்கள்; உங்கள் வயிறு என்ன சுடுகடா? இல்லை புதைகாடு.

செத்துவிட்டவர்களை ஊருக்குள் புதைத்து அவர்களை அடக்கம் செய்ய அஞ்சுகிறீர்கள். ஏன்? அது முடை நாற்றம் வீசும் என்பதால், ஆடு, கோழி இவற்றை அடித்துக்கொன்று அவற்றைப் புதைத்து வைக்க உங்கள் வயிற்றைத் தேடுகிறீர்களே! உங்கள் வயிறு அழுகல் அடுக்கும் குப்பை மேடா?

தூய உடம்பை வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மாய்ந்த சடலங்களைத் திணிப்பதைத் தவிருங்கள். தீவினைகள் என்பவை கொள்ளை, கொலை, கள்ளம் இவை மட்டும் அல்ல; உயிர்க் கொலையும் தீவினை தான். ‘புலால் மறுத்தல்’ நல்வினைகளுள் நயத்தக்கதாகும். இஃது அருளறத்தின் அடிப்படையாகும்.

கொலைத் தொழிலை விலைத் தொழிலாக மாற்றி உயிர்களை அலைத்துத் துன்புறத்துவது கொடிது; இவற்றோடு வயலில் வலைவிரித்துப் பல்வகைப் பறவைகளைப் பிடித்து, அவற்றின் தோலை உரித்து, வதைத்து, உயிர்க் கொலை செய்து, ‘சுவைக்கிறது’ என்று தின்று மகிழ்கின்றனர். வானத்து வண்ணப் பறவைகள் அவற்றின் சிறகுகளை உடைத்து முடமாக்குகின்றனர். பறவைகளை வாட்டும் வேட்டுவனைச் சிறைப்பிடித்து விலங்கிட்டு இழுத்துச் சென்றால் அவன் இன்னல் எத்தகையதாக இருக்கும்? எண்ணிப் பார்க்கிறானா? வாயற்றவை; எடுத்து உரைக்கத் தெரியாது. நீ மானிடன்; கத்திக் கதறிக் கொடுமை என்று புலம்புவாய்; சட்டம் உன்னை விடுவிக்கும். நீ மட்டும் உன் கொலைத் திட்டத்தை விட்டு விலகமாட்டாய். நியாயந்தானா? உன் செயலை நிறுவி அது தக்கது என்று தோற்றுவிப்பாய்.

கோழிப்பண்ணைகள்; அவை விற்பனைத் திண்ணைகள்; அவற்றுள் ஒன்றைப் பிடித்து அடித்துக் கொன்று தோல் வேறு உடல் வேறு என்று பிரித்துப் கொன்று தோல் வேறு உடல் வேறு என்று பிரித்துப் பார்க்கின்றனர். அதன் அங்கம் தொழுநோயாளியைப் போல் காட்சி அளித்து அச்சுறுத்தவில்லையா? அடுத்த பிறவியில் சங்குபோல் வெளுத்துக் கைவிரல்கள் உளுத்து அவர்கள் தொழுநோயாளியாக மாட்டார்கள் என்று எப்படிக் கூற முடியும்? அறிவாளிகள் இந்தக் கொடுமையைச் சிந்தித்துப் பார்ப்பார்களா? உயிர்க் கொலை தீவினை; அதனைச் செய்வதற்கு அஞ்சுக; பாவ வேட்டையைச் சுமக்க எண்ணுபவர் இத்தீவினை ஆற்றுவர். கொல்லான் புலால் மறுத்தவனை இந்த உயிர்கள் எல்லாம் தெய்வமாகத் தொழும். அவற்றை வாழவிடுக! அவற்றிற்கும் இவ்வுலகில் வாழ உரிமை உண்டு.

அடுத்தது தீயவர் நட்புக்கு அச்சம் காட்டுதல் தேவைப்படுகிறது; பால் போல் வெளுத்து இருந்தான் முன்பு, இப்பொழுது அவன் புளித்துத் தயிராகிவிட்டான். காரணம் புரைமோர் பட்டதும் பால்திரிந்து தயிராகி விடுகிறது. நெய் குளிர்ச்சி உடையதுதான். அது சூடான நெருப்பில் பட்டால் அதுவும் சூடு ஆகிறது; தொட முடிவது இல்லை. நல்லவர் கெட்டவர்களோடு சேரும் போது அவர் புளித்த தயிராகவும், சுட்ட நெய்யாகவும் மாறி விடுகின்றனர். இதை வைத்து அவர்கள் இன்னார் என்று குறிப்பிடுகின்றனர். நிலத்தியல்பால் நீர் திரிகிறது. தீயவர்களோடு நல்லவர்கள் சேர்ந்தால் நல்லவர்களும் தீயவர் ஆகிவிடுகின்றனர்.

“சேரிடமறிந்து சேர்” என்பது பழமொழி; பெருமை உடையவர்களுடன் சேர்வது பெருமை தரும்; அஃது அவனை உயர்த்தும்; வளர்ச்சிக்கும் வழி வகுக்கும்; ஒளி பெற்றுத் திகழ்வான்; அந்த நட்பு வளர்பிறை போன்றது; தீயவரோடு நட்பு தேய்பிறை போன்றது;‘வர வர மாமியார் கழுதைபோல் ஆனாள்’ இது பழமொழி. நட்பும் அத்தகையது; அது திருப்பி எட்டி உதைத்தாலும் வியப்பதற்கு இல்லை.

யாரையும் முழுவதும் நம்புவதற்கு இல்லை; விழிப்பாக இருக்க வேண்டி இருக்கிறது? நல்லவர்களைத் தேடுகிறோம்; சான்றோர் என்று மதிக்கிறோம்; சேய்மையில் இருந்து பார்க்கும்போது அவர்கள் தூய்மை நிறைந்தவர் என்று தோன்றுகிறது. நெருங்கிப் பழகினால் அவர்கள் சுருங்கிய உள்ளம் கண்களில் படுகின்றது. சந்தனம் உள்ளே இருக்கும் என்று கருதி அந்தப் பெட்டி யைத் திறந்து பார்த்தால் பாம்பு அங்கே படுத்துக் கிடக்கிறது. அதிர்ச்சி ஏற்படுகிறது; ஏமாற்றம் காணப்படுகிறது. யாரையும் புறத்தோற்றம் கண்டு மதிப்பதற்கு இல்லை.

யாரும் ஒருவர் உள்ளத்தை மற்றவர்கள் ஆராயும் திறன் படைத்தவர் அல்லர் காண்பது ஒன்று; அவர்கள் உள்ளம் வேறு! பேசுவது ஒன்று நடந்து கொள்வது வேறு ஆக இருக்கிறது. மனம் வேறு; செயல் வேறு என்று பலர் உலகில் நடந்து கொள்கின்றனர். எனவே தக்க நட்பினர் யார் என்று தேடிக் காண்பது எளிது அன்று.

உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் பச்சோந்திகள் அவர்களை நம்ப வேண்டாம். சமயத்தில் கழுத்து அறுத்து விடுவார்கள்; எனவே பொன்னை உரை கல்லில் வைத்துப் பார்ப்பதுபோலக் கொஞ்சம் தேய்த்துப் பார்த்தே நட்பினைத் தேர்ந்துகொள்க. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்; ஒன்று இரண்டு சொற்களில் அவர்கள் நடிப்பு வெளிப்பட்டு விடும். தீயவர் நட்பைத் தீவினை என்று அஞ்சுக; அவர்களை விட்டு விலகுக.

கத்தி கையில் இருந்தால் அது தற்காப்புக்கு உதவும் என்று கருதுகிறாய்; தீயவர் தொடர்பு சமயத்துக்கு நன்மை என்று கருதலாம்; அடியாட்களை வைத்துக் கொண்டு கடினமான செயல்களைச் சாதிக்கலாம் என்று கணக்குப் போடலாம்; மடியில் கனம் இருந்தால் வழியில் தனம் பறி போகும். உன் கைவசம் உள்ள கத்தியே பகைவர் கைக்குக் கூர்வாள் ஆகிவிடும். அதை வைத்து உன்னைக் குத்த வாய்ப்பை நீயே ஏற்படுத்தித் தருகிறாய். அற்பர்கள் உறவு கைக் கத்தி போன்றது. அவர்களை விட்டு விலகு, உனக்கு அபாயம் நேராது.

என்னப்பா இளைத்திருக்கிறாய்? என்றால் அவன் என்ன சொல்கிறான். சுமக்க முடியாத குடும்பச் சுமை; மனைவி மக்கள் மேல் பாசம்; அவள் கேட்ட வரம் தந்து ஆக வேண்டும். மகன் கண்ணில் பட்ட பொருள் வாங்கித் தர வேண்டும். அவர்கள் வசதிக்கு இவன் வணக்கம் செலுத்துகிறான். விட்டு விடுதலையாகி உயிர்க்கு ஆக்கம் தேடுக; பற்றுகள் நீங்குக, அளவுக்கு மீறிய பாசம் உன் உயிர்க்கு நாசம்; பாசம் என்றாலே கயிறு: அஃது எப்படியும் செல்லாமல் இழுத்துப் பிடிக்கும். உன் கழுத்துக்குச் சுருக்கு அதனால் அதை முற்றிலும் விலக்கு, பாசமுள்ள மாந்தர்கள் மிகுதி, அவையும் உனக்குக் கெடுதி, இதுவும் தீவினை என்று அஞ்சுக.