நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/15. குடிப்பிறப்பு

15. குடிப்பெருமை போற்றுக
(குடிப் பிறப்பு)

பசி தன்னைப் புசிக்கிறது என்றாலும் சிங்கம் கொடிப் புல்லைக் கடித்துக் கூடப் பார்க்காது உடுக்க உடையின்றி, கிடக்க இடமின்றி, உண்ணச் சோறும் இன்றி வறுமை உற்றபோதும் நல்ல குடியில் பிறந்தவர் தாழ்ந்து போகமாட்டார்கள்; பிறர் கையேந்தி நிற்கமாட்டார்கள், ஈக என்று கேட்டு உண்ணமாட்டார்கள்; பெருமை குன்றும் செயல்களைச் செய்யமாட்டார்கள்; தவறான வழிகளில் சென்று பொருள் ஈட்டமாட்டார்கள்; அவை தம் குடிக்கு இழுக்கு என்று வழுக்கியும் தவறு செய்ய மாட்டார்கள். தான் பிறந்த குடும்பத்தின் பெயர் கெடும்படி நடந்து கொள்ளமாட்டார்கள்; நாட்டை அன்னியரிடம் காட்டிக் கொடுக்கமாட்டார்கள்; குடிக்கு ஊறு நிகழத் தக்க அழிசெயல்களில் ஆழ மாட்டார்கள்.

கட்டிய வீடு காலப் பழமையினால் ஒட்டி உறைவதற்குத் தகுதி அற்றதாகிவிட்டாலும் அதனால் அதனை விட்டு விலகி ஓடி வெளியே சென்று ஒதுங்கமாட்டார்கள்; அந்த வீட்டிலேயே ஒரு மூலை கிடைக்காமல் போகாது; ஒதுங்கி இருந்து வாழ்க்கை நடத்த முடியும்; என்னதான் இடிந்து பழுதுபட்டாலும் அது முற்றிலும் ஒதுக்கக்கூடியது என்று கூற முடியாது. நற்குடிப் பிறந்தவர் வறுமையால் நொடிந்துவிட்டாலும் அவர்கள் வெறுமையில் மடிந்து போகமாட்டார்கள். தம் சால்பு குன்ற நடந்து கொள்ளமாட்டார்கள். பசி என்று அவர்களை நாடிச் சென்றால் புசி என்று ஏதாவது கொடுத்துதான் உதவுவார்கள்.

அடுக்கு மூன்று என்று வீடு மிடுக்காக இருக்கலாம். அங்குச் சென்றால் தம் நடுக்கம் தீரும் என்று அங்குச் சென்றால் அது அவர்கள் குற்றமே. வீடு அழகாக இருக்கலாம்; உள்ளம் அழுகலாக இருந்தால் ‘சாக்கடை’ நாற்றம்தான் வீசும். சான்றாண்மை, மென்மைத் தன்மை யாகிய இரக்கப்பண்பு, நல்லொழுக்கம் இம்மூன்றும் நற்குடிப் பிறந்தவர்க்கே அமையுமே அன்றிப் பொருள் மட்டும் படைத்த செல்வர்க்கு அமையும் என்று கூறமுடியாது.

நற்குடிப் பிறந்தவர் அவர்கள் நடத்தையே தனித்தன்மை வாய்ந்தது ஆகும்; புதியவர்கள் வந்தால் உடனே எழுந்து நின்று அவர்களை அமரச் செய்ய அஞ்சலி செய்வர்; எதிர் சென்று வரவேற்பர்; வந்தபின் அவர்களை அமர வைத்து இன்னுரையாடி இனிமை கூட்டுவர்; அன்பு காட்டுவர்; விருந்து நல்குவர்; பின் அவர்கள் விடைபெற்றுச் செல்லும்போது அவர்களுடன் சில அடிகள் நடந்து ‘சென்று வருக’ என்று விடை தந்து அனுப்புவர். இவை எல்லாம் அவர்தம் நல் நடத்தைகள் ஆகும்.

இன்னார் இன்ன வீட்டார் என்றால் அவர்களிடம் சில எதிர்பார்ப்புகளைப் பிறர் காண்பர். அவர்கள் அடுக்கிய நன்மைகள் செய்யலாம்; அதை மற்றவர்கள் எடுத்துப் பேசிப் புகழ்வார் என்று கூற முடியாது. அஃது அக்குடிக்கு இயல்பு என்று நவில்வர். வாய்விட்டுப் புகழ மாட்டார்கள். அதே சமயம் சில தவறுகள் நிகழ்ந்து விட்டால் அது அந்தக் குடும்பத்துக்குத் தகாது என்று பழி துற்றுவர்; இழித்துப் பேசுவர். நல்லதுக்குப் புகழ்ச்சி இல்லை; தவறுகள் நடந்துவிட்டால் அதை மிகைப் படுத்திப் பேசுவர். உலகம் அப்படித்தான். நிலவு தரும் சந்திரன் அதன் ஒளியைப் புகழ்ந்து பேசுவதைவிட அதில் உள்ள களங்கத்தைத்தான் கவிஞர்கள் சுட்டிக் காட்டுவர். பதவிகள் வகிப்பவர் நூறு நன்மைகள் செய்தாலும் ஒரு தீமை செய்துவிட்டால் அவர்களை உலகம் பழித்துக் கூறும்; அந்தப் பதவிக்கு அவர்கள் தகுதி இல்லை என்று கூறிவிடும். முகவரி இல்லாத முனியன் தவறு செய்தால் அதைச் ‘சனியன்’ தெரியாது செய்துவிட்டான் என்று ஒதுக்கி விடுவர்! தனிப்பட்டவர் தவறுகள் மன்னிக்கப்படும்; தகுதி மிக்க பதவிகளில் இருப்பவர் மிகுதிகள் செய்துவிட்டால் உலகம் ஒப்புக் கொள்ளாது; எனவே குடிப்பெருமை உடையவர் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டிய நிர்பந்தம் உள்ளது என்பதை அறிக.

மாட்சி மிக்க குடியில் பிறந்தவரிடம் சில நற்செயல்களை மற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த வீட்டுப் பிள்ளை படிக்காமல் திரிந்தால் மற்றவர்கள் துடித்துப் போவார்கள்; கடிந்து பேசுவார்கள். நயன்மிக்க செயல்களைச் செய்யாமல் கயமை மிக்க கீழ்த்தரமான செயல்களில் இறங்கிவிட்டால் அவற்றைச் சுட்டிக் காட்டாமல் இருக்க மாட்டார்கள். “கெட்டுக் குட்டிச்சுவர் ஆகிறானே” என்று திட்டிக்கொண்டு இருப்பார்கள்; பேசும் சொற்களில் கூசும் இழி சொற்கள் கலந்து விட்டால் அவன் நாசம் அடைந்துவிட்டதாக மற்றவர்கள் துவேஷிப்பார்கள். “இவன் வாயில் இந்த மாதிரி சொற்கள் வருவது தகாது என்பர்”. ‘சேரிடமறியாமல் சேர்ந்து ‘சேரி’ மொழி அவனிடம் ஏறிவிட்டது” என்று வருந்துவார்கள். கேட்டு இல்லை என்றால் அந்தக் குடும்பத்தைப் பழித்துப் பேசுவார்கள். அவன் வைத்துக் கொண்டே இல்லை என்று சொல்லுவதாகக் கூறுவார்கள். ‘போகும்போது இவன் என்ன எடுத்துக் கெண்டு போகப் போகிறான்?’ என்று ஆராய்ச்சியில் இறங்கிவிடுவார்கள். “யாருக்கு வைத்துவிட்டுப் போகப் போகிறான்” என்று கேட்பார் “பிள்ளையா குட்டியா இவனுக்கு என்ன கேடு?” என்று அவன் சொந்த வாழ்க்கையைத் தேடி உண்மை காண முயல்வார்கள். மாண்குடிப் பிறந்தவர்க்கு இப்பழிச் சொற்கள் வந்து சேரும். அக்குதொக்கு இல்லாமல் யாரோ எவரோ எதுவும் பேசமாட்டார்கள். அவன் தனிக்காட்டு அரசன், கடலில் மரக்கலத்தில் செல்லும் வலைஞன்; அவன் உண்டு; அவன் கை வலை உண்டு; யார் அவனைப் பற்றி விமரிசிப்பார்கள்? நாலு பேர் நடுவே வாழும் மனிதர்கள் நற்பண்புகளுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உலகம் எதிர்பார்க்கிறது.

“ஏன்’யா? உன்னை யார் அடித்தது? எதற்காக ஊர் வம்பு?” என்று கேட்பாரும் உளர். “அது எப்படி ஒதுங்கி வாழ முடியும்? என் குடிப் பெருமைக்கு ஒவ்வாது” என்று விடை கூறுவர். “நம்மவர்களுக்கு நாம் செய்யாவிட்டால் பின் யார் செய்வார்கள்? இனி நன்மை அதைக் கருதித்தான் ஆக வேண்டும்” என்பர்; வாய் திறந்து வணக்கம் என்று சொல்லாமல் தன் வழி பார்த்து விழி வைப்பாரும் உளர். “வணக்கம் என்று சொன்னால் குறைந்தா போய்விடுவான்” என்று பேசுவார். இன்சொல் இதை மற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள். “வாரிக் கொடுத்துவிட வேண்டாம். எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டால் என்ன? வாய் முத்தம் உதிர்ந்தா விடும்?” என்று கேட்பார். அவர்கள் செயலில் நன்மை எதிர்பார்ப்பது போல அவர்களிடம் மன நன்மையும் எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் மனம் எப்பொழுதும் நல்ல நிலையில் நின்று செயல்பட வேண்டும்; நன்மை கருதும் செயல்களையே அவர்கள் எண்ணிக் கொண்டிருக்க வேண்டும்.

தனக்கு நூறு கஷ்டம் இருக்கலாம்; அவற்றை எல்லாம் நற்குடிப் பிறந்தவன் கவனித்துக் கொண்டு இருக்கமாட்டான். தனக்குள்ள இடர்களை எல்லாம் மடித்து வைக்கும் பழைய துணிகளைப் போல எடுத்து வைத்து விட்டு ஊருக்கு உறும் இடையூறுகளை எண்ணிச் செயல்படுவான். உச்சிமீது வான் இடிந்து விழுந்தபோதும் அச்சம் இல்லை என்று இறுமாந்து பேசும் தறுமாப்பு அவனிடம் அமைகிறது. பிடுங்கல்கள் நூறு இருந்தாலும் அவற்றைப் பற்றியே பேசிக்கொண்டு ஒடுங்கி இருக்க மாட்டான். தனக்குத் தலைவலி என்றாலும் மனவலி காட்டிப் பிறர் வலியைத் தீர்க்கத் தயங்கான். தொல்லைகள் தனக்குப் பல இருந்தாலும் அவையே வாழ்வின் எல்லை என்று அடங்கி விடமாட்டான்.

ஒரு பக்கம் பாம்பு கவ்வுகிறது. அதற்காக வானத்துத் திங்கள் ஒளிவிடாமல் மறைந்துவிடுவதில்லை. தன் துயரைப் பொருட்படுத்துவது இல்லை; உலகுக்கு ஒளி தருகிறது. குடிப்பிறந்தவரும் துயரில் மடிந்து கிடப்பது இல்லை; பிறர் துயரைக் கடிந்து நீக்கி வாழ முற்பட்டுச் செயலாற்றுவர்.

மான்குட்டி மான்குட்டிதான்; அதற்குச் சேணம் பூட்டினாலும் அது குதிரையாகாது. புல்லைத் தின்பதில் இரண்டுக்கும் வேறுபாடு இல்லை; போர் என்று முனைந்து அவசரத்துக்கு மானைத் தேரில் பூட்டினால் அது ஏன் என்று கேட்காது; தின்னத்தான் தெரியுமே தவிர வேறு எதையும் பண்ணவே தெரியாது. சப்பாணிகள் பலர் இருக்கிறார்கள்; பணம் படைத்தவர்கள் பலர் உள்ளனர்; குணம் படைக்க வேண்டாமா? அவர்களை அடைந்து ஓர் உபகாரம் என்று கேட்டால் ‘வேறு இடம் பார்’ என்று கைவிரித்து நிற்பார்கள். உபகாரிகள் பை விரித்துத் தருவார்கள். இதுவே நற்குடி பிறந்தவரின் நற்செயல் ஆகும்.

கோடையில் ஆற்றுநீர் வற்றிவிட்டால் மணல் ஊற்றில் கை வைத்தால் நீர் வேட்கை தீரும். அடிசுடும் அந்நாளிலும் நீர் ஊற்றுப் பொய்க்காது; அதுபோல் வறுமை உற்று அவர்கள் வாழ்வு நொடிந்து விட்டாலும் ‘இல்லை’ என்று சொல்லிக் கதவு அடைக்கமாட்டார்கள். உள்ளதைத் தந்து அதற்குமேல் தர இயலவில்லையே என்று வருந்தி விடை தருவார்கள்.