நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/14. கல்வி


பொருட்பால்
14. கல்வி கரை இல
(கல்வி)

கல்வி என்பது யாது? நடுவு நிலைமை கெடாமல் ஒழுகும் நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது; அதுதான் கல்வி; மகளிர் தலைவாரிப் பூச்சூடி புனைந்து கொள்வதும்; விலைமிக்க பல நிறத்துக் கரை போட்ட சேலை உடுத்திக் கொள்வதும், ஆடவர் நெஞ்சம் கவர முகத்துக்கு மஞ்சள் பூசிக் கொள்வதும் அழகு என்று பேசலாம்; அவை புறத்துக்கு அழகு செய்வன ஆடை அணிகள் உள்ள அழகைக் கூட்டுமேயன்றிப் புது அழகை ஊட்டாது; கல்வி அக அழகைத் தோற்றுவிக்கும். அறிவு ஒளிவிட, நீதி மிக, நடுவு நிலை பெருக, அவர்கள் நல்லவர்கள் என்று நாலு பேர் நவிலக் கல்வி அழகே அழகு.

இந்த உலக வாழ்வுக்குக் கல்வி கண் போன்றது; எதையும் சாதிக்கும் அரிய கருவியாகும்; இருட்டைப் போக்கும்; ஒளியாக்கும்; எல்லா நன்மைகளையும் தரும்; ஈயக் குறையாது; அதைப் பிறர்க்குக் கற்பிக்க அது மேலும் பெருகுமே தவிரச் சிறுகாது; பிறருக்குச் சொல்லும்போது அவர்கள் எழுப்பும் ஐயம்; அதை மையமாகக் கொண்டு எழும் வினாக்கள்; அவற்றிற்குக் காணும் விடைகள்; அவன் மறுத்துச் சொல்லும் தடைகள் இவை உள்ளொளி பெருக்கி உயர்வு அளிக்கும். உன்னையே நீ அறியச் செய்யும். இதைத்தான் ஞான நன்னெறி என்பர். கல்வி உன்னை மெய்ஞ்ஞானியாக ஆக்கும்; கற்ற கல்விக்குக் கேடு இல்லை. என்றும் நீ இதை மறக்க முடியாது. ‘பாடை ஏறினாலும் ஏடு அதைக் கைவிடக் கூடாது’ என்பர். ‘பாடை’ என்பது மொழி: மொழி நன்கு கற்றுக் கொண்டாலும் கல்வி கற்பதினின்று விட்டு விலகக் கூடாது என்பதே இதன் கருத்தாகும். கல்வியில் ஆர்வலர் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவர்கள் ஏட்டைக் கைவிடுவது இல்லை; கல்விதான் துயர் தீர்க்கும் மருந்து என்று கொள்வர். கல்வியால் விஞ்ஞானம் பெருகுகிறது; அதனால் புது இயந்திரக் கருவிகள் பெருகுகின்றன. அரிய படைப்புகள் உலகத்தில் மிகுந்த வாழ்வுக்கு வளம் தேடித் தருகின்றன.

களர் நிலத்தில் உப்பு விளைகிறது; அது பிறக்கும் இடம் மட்டமானதுதான்; காலடி எடுத்து வைக்கவும் பின்வாங்குவர்; உப்பளம்; அங்கே மீன் உணங்கல் நாற்றம் வீசும்; கடற்கரை உடற்கு ஒவ்வாது என்றும் கூறுவர். என்றாலும் அந்த உப்பு இல்லை என்றால் எந்தப் பண்டம் எடுபடும்? “உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே” என்பர்; நல்ல விலை கொடுத்து இந்த உப்பை வாங்குவர், களர் நிலம் என்று யாராவது களைவார்களா?

பிறக்கும் இடம் எதுவாயினும் அது சிறக்கும் வகையே மதிக்கப்படும்; சாதிகள் இந்த நாட்டில் நீதிகளைக் கெடுத்துவிட்டன. தாழ்ந்தவன் என்பவன் உழைப்பாளி, உயர்ந்தவன் என்பவன் நூலாளி; படிப்பாளி, சாதிபேதம் என்பதே இந்தப் படிப்பால்தான் உண்டாகிவிட்டது.

ஒரு சிலர் மட்டும் படித்து இனம் இனமாக முன்னேறிவிட்டனர். அவர்களைக் கோயில் குருக்கள் என்றும், கணக்குப் பிள்ளைகள் என்றும், கல்வி ஆசான்கள் என்றும், கவிஞர்கள் என்றும் இந்தப் புவிஞர்கள் வேறுபடுத்தினர். இன்று உள்ள பிரச்சனை கீழ் மட்டத்து மக்கள் கல்வி கற்கவேண்டும்; அவர்கள் உயர்வதற்கு அதுதான் வழி. கல்விச் செல்வம் எல்லா இனத்தவரும் அடைய முடியும்; அதனால் அவர்கள் உயர்வு பெறுவர். சாதிபேதமும் சமூக அநீதிகளும் மறையக் கல்வி வாய்ப்பு அனைவர்க்கும் தரப்பட வேண்டும். கல்வி கற்றவன் எந்தச் சாதியாயினும் அவனைச் சமூகம் வரவேற்கிறது; பாராட்டுகிறது. உயர்த்துகிறது.

சொத்து வைக்க எண்ணுகிறாய்; லட்சங்கள் சேர்த்து வைக்கிறாய். அடுத்த தலைமுறை; அது தானும் அழிகிறது; உடையவனையும் அழிக்கிறது; பொருள் அவனைக் கெடுக்கிறது; செல்வச் செருக்கர்ல் அவன் கல்விப் பெருக்கைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. அறிவு குறைந்தால் ஏனைய நிறைவுகள் அமைவது இல்லை. இவனைவிடக் கற்றவன் திறமையாகச் செயல்படுகிறான். தொழில்களில் அவன் வெற்றி காண்கிறான்; இவன் தோல்வி பற்றுகிறான். எனவே சொத்து என்று மக்களுக்கு வைக்க நினைத்தால் கல்விச் செல்வமே உயர்ந்தது; நிலைத்தது; அழியாதது; ஆக்கம் தருவது; ஏற்றம் உண்டாக்குவது.

பொருட் செல்வம் சேர்த்து வைத்தால் நேர்த்தியாகப் பிறர் கொள்ளை அடித்துக் குறைத்துவிடுவர். ஒரே நாள் மலை மடு ஆகிவிடும்; பொன்னன் என்று பேசப்பட்டவன் நன்னன் ஆகிவிடுவான். சிறு பொறி போதும்; அது மிகுந்தால் மலை போன்ற குவிவுகளையும் அழித்து விடும். நெருப்புக்கு எதுவும் முன் நிற்காது. அழிவுக்கு அரசன் தீ தான்; கல்வியை அழல் ஒன்றும் தொடமுடியாது; கல்வி நிரந்தரமானது; ஊற்றுப் பெருக்கு அதனைத் தடுத்து நிறுத்த முடியாது.

இந்த அரிய கல்வி அதற்கு அளவு உண்டா? கரை இல்லை. கற்பவருக்கு நாள்கள் போதா, மெல்ல நினைத்துப் பார்த்தால் அதற்குள் நோய்கள் பல; அதனால் கண்டதைக் கற்றுப் பண்டிதன் ஆகலாம் என்ற நினைப்பை அகற்று. தேடிப் படி; நல்ல நூல்கள் உயர்வுக்கு மாடிப்படி:அன்னப்பறவை நீரும் பாலும் கலந்து வைத்தால் நீரை ஒதுக்கிப் பாலை மட்டும்தான் குடிக்கும். அதுபோல நல்ல நூல்களைத் தேர்ந்து எடு; குப்பைக் கூளம் அதனை நாடாதே; முத்துக் குவியலைத் தேடு, கத்தும் குயில் ஓசை இனிது; சத்தம் செய்யும் திரை இசைப் பாட்டு எல்லாம் கேட்டு உன் ரசனையைப் பாழ்படுத்திக் கொள்ளாதே, சுவை, ஒளி, ஓசை, ஊறு, நாற்றம் இதன் வகை தெரிந்து அறிவு பெறுபவன் உலகில் உயர்வான். கலைமகள் அவள் என்றும் கற்றுக் கொண்டே இருக்கிறாள் கேட்டர்ல் என்ன கூறுகிறாள்? “கற்றது கை மண்ணளவு. கல்லாதது உலகு அளவு” என்று ஒதுகிறாள். கல்விக்குக் கரை இல்லை; அதில் அக்கரை காட்டு; வாழ்வில் கரை ஏறலாம்; கறை நீங்கி வாழலாம்.

தோணி ஓட்டும் படகுக்காரன் அவன் குகன்தான்; அவனிடம் நட்புப் பாராட்டினான் இராமன், ஏன்? அவன் அன்பினன், கறையற்ற காதலன். சாதி இருவர் இடை நின்று பேதிக்கவில்லை. படகோட்டி தொழிலால் கடத்தல்காரன்; அவன் ஒடத்தைச் செலுத்திப் பிறரைக் கரை ஏற்றுகிறான். ஞான குருக்களும் அத்தகையவரே. யார் ஆசிரியன் என்று பேதம் பாராட்டத் தேவை இல்லை; கரை ஏற்றும் ஆற்றல், தொண்டு, பணி, திறமை இவை இருந்தால் அவனை ஆசிரியனாகக் கொள்வர். கல்வி ஆசான் சாதி பற்றி மதிக்கப்படுவது இல்லை; கற்ற கல்விபற்றிப் போற்றப்படுகிறான்.

தேவர் உலகத்தில் அவர்கள் என்ன செய்கிறார்கள்? கேளிக்கைக் கூத்தில் அவர்கள் களிப்புக் காண்கின்றனர். அரம்பையும் ஊர்வசியும் ஆடிக்கொண்டே இருக்கின்றனர்; அவர்கள் பேரழகினர்; கலைநுட்பம் வாய்ந்தவர்கள்; அங்கே அழகுச் சுவை இருக்கலாம்; அறிவு ஒளி அங்கு எங்கே இருக்கிறது? இதைக் காட்டித்தானே தேவர் உலகம் சிறந்தது என்பர். இங்கே பட்டி மன்றங்கள், இலக்கியச் சொற்பொழிவுகள், ஆய்வுக் கழகங்கள், அறிவு ஆராய்ச்சிகள் இவை சொல் விருந்துகள்; கற்ற புலவர்கள் உரையாடல் கவின் உடையது; சுவைபடப் பேசுவது இனிமை தருகிறது. இரட்டுற மொழிந்து சொல் நயம் விளைவிப்பர்; கவிநயம் காட்டிக் களிப்புறச் செய்வர். கவிஞர்கள் பாடி வைத்த பழம் புதையல்களை நாடி எடுத்துப் பொருள் கண்டு, தகைகண்டு, சொல்நயம், பொருள் பயன், அணி நலம் இவற்றைப் புலவர்கள் காட்டுவர். இவர்கள் கூடிப் பேசிப் பிரிந்த பிறகும் அவர்கள் பேச்சுகள் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன. மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து மகிழ வைக்கின்றனர். கவிதை கற்கண்டு; அதன் சுவை கண்டு மலரை நாடும் வண்டு எனச் சுழல வைக்கின்றனர். அவர்கள் எந்தக் களங்கமும் இன்றிக் கலந்து உரையாடி அக மலர்ந்து சிரிக்கும் சிரிப்புக்கு நிகராக எந்த இன்பத்தையும் இணை கூறமுடியாது. அதற்கு ‘செஞ்சொற் கவி இன்பம்’ என்றும், ‘செவி நுகர் கனிகள்’ என்றும் பெயர் கொடுத்து மகிழலாம்.

சோற்றைக் கொட்டினால் வாரி வாரித் தின்கிறான் பசித்துக் களைத்து அலுத்தவன்; ‘பசி ருசி அறியாது’ என்பர். நட்பு நுட்பமானது; பழகி மகிழக் கூடியது; நிலைத்த பயன் பெறுவது. அது சென்று தேய்ந்து இறுவது அன்று. நாளொரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாக மலர்வது. பட்டினத்தார் கரும்பைச் சுவைத்தாராம்; அடிப்பகுதியிலிருந்து தொடங்கிக் கடித்துச் சுவைத்து வந்தார். நுனிப்பகுதி வந்ததும் கசந்துவிட்டதாம். அந்த இடத்திலேயே அவர் சமாதி ஆகி விட்டார் என்று கதை பேசுகிறது. கரும்பு தின்பதில் ஒரு வரன்முறை உண்டு. அடிப்பகுதி சுவைக்கும்; நுனிப் பகுதி சுவையற்று வெறுமை பெற்றிருக்கும் கற்றவர் நட்பு, தொடக்கத்தில் வெறுமையாகத்தான் காணப்படும்; போகப் போகப் பெருமைதரத் தக்கதாக அமையும். கீழோருடன் தொடர்பு தொடக்கத்தில் “ஆகா என்னே செறிவு!” என்று இருக்கும்; பிறகு வரவரச் சரிவுதான் மிகுக்கும்.

பாதிரிப் பூவை மண் குடத்தில் போட்டு அதில் குளிர் நீர் ஊற்றினால் அது மணக்கிறது; நீர் குடிக்க இனிக்கிறது. கல்லாதவர் கற்றவரைச் சார்ந்து ஒழுகினால் அவர்கள் அறிவு மணம் பெற்று வாழ்வில் ஒளி பெற்றுத் திகழ்வர். கற்க முடியவில்லை என்று அதற்காக மனச்சோர்வு கொள்ளத் தேவை இல்லை. எல்லாரும் பிற எல்லாச் செல்வமும் பெற்றுத் திகழ முடியும். ஒரு சிலரே கல்வி வல்லவராகத் திகழ்வர். அதற்கு நுண்மாண் நுழைபுலம் என்பர். அவர்கள் கல்வி கற்றதோடு நில்லாமல் நுட்பமான அறிவு படைத்தவராகத் திகழ்வர். மற்றவர்களையும் பேச வைத்து, அல்லது எழுத வைத்து நூல்களைப் படைக்க வைத்துக் கற்றவர்கள் ஊக்குவிக்க வேண்டும். அறிவு மிக்க எழுத்தை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். “நாரும் மலரைச் சார்ந்து மணம் பெறும்” என்பர். மலரைப் பிணித்துக் கட்டி வைக்கும் நார் தானும் மணம் பெறுகிறது. மலர்களைச் சிதறாமல் சேர்த்துக் கட்டுகிறது. மாலை கவின் பெறுகிறு. கல்லாதவரைச் சார்ந்து ஆள்க; அவர்களும் கல்வி அறிவு பெற்றுத் திகழ்வர்.

‘நூல் பல கல்’ என்றால் அவன் திரைப் பாடல்களை மனப்பாடம் செய்கிறான்; காதல் போதை தரும் கவிதை களை அறிவு நூல் என்று வேதம்போல் பயில்கிறான். மன அழுக்குப் போக வள்ளுவம் கற்றால் பயன் உண்டு. ‘ஓடிப் போனவள்’ என்பவளின் ஓட்டத்தில் நாட்டம் வைத்தால் பயனில்லை. அறிவு வாணர்கள் என்று சொல்லிக் கொண்டு அற்ப விஷயங்களை எழுதுகிறார்கள்; அவ் எழுத்துக்களைப் படைப்பு நூல் என்று பறை சாற்றுகின்றனர். இவை எல்லாம் எழுத்து ஆகா. தினவுக்குச் சொரிந்து கொடுப்பதாகும். சிந்தனையைத் தூண்டும் சீரிய எழுத்துக்களைப் படித்தால் பயன் உண்டாகும். அவை காலத்தை வென்று ஞாலத்துக்கு ஒளி தந்து கொண்டே இருக்கும். காக்கை கத்தல் கர கரப்பு ஆகுமே தவிர அது ‘கர கரப்பு ராகம்’ ஆகாது. திரை இசைப் பாடல்கள் ‘கிலுகிலுப்பை’ என்று தான் கூறமுடியும்; நூல் சில கற்றாலும் நுண்ணறிவு தரக்கூடிய பண்ணமைப்பு அவற்றினுள் இடம் பெற்றிருக்க வேண்டும்.