நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/17. பெரியாரைப் பிழையாமை

17. பெரியவர்களை மதிக்கக் கற்றுக் கொள்
(பெரியாரைப் பிழையாமை)

குணம் என்னும் குன்று ஏறி நின்றவர்கள் பெரியவர்கள்; அவர்களை அவமதித்தால் அவர்களை அடக்கி வைக்க முடியாது; ‘சாது மருண்டால் காடு கொள்ளாது’ என்பது பழமொழி. சாது என்பது இந்தச் சான்றோர்களைத் தான் குறிக்கும். ‘என்ன சொன்னாலும் இவர்கள் பொறுத்துக் கொள்வார்கள்’ என்று தப்புக் கணக்குபோடக் கூடாது. அவர்கள் வெறுக்கத்தக்க அளவு அவமதிக்கத் தொடங்கினால் அது திருப்பி அடிக்கும். அவர்கள் சீறிப் பொங்கினால் உன் நிலை மாறி விடும். ஆறி அடங்குவார்கள் என்று எதிர்பார்க்காதே. பொன்னைப் பெற்றாலும் பெற முடியும். பெரியோர்களின் நன்மதிப்பைப் பெறுவது எளிது அன்று. அவர்களை நல்ல வகையில் பயன்படுத்திக் கொண்டு நன்மைகள் பெறலாம். அவர்கள் செயற்கரிய செய்யும் இயல்பினர்; பல நற்காரியங்களை அவர்களைக் கொண்டு சாதித்துக் கொள்ளலாம். அவர் தெரியும் இவர் தெரியும் என்று பறை அறைந்து கொண்டிருந்தால் என்ன நிறைவு அடைய முடியும். கற்ற பெரியவர்களிடம் பல நற்செய்திகளை அறிந்து கொள்ளலாம். உற்ற செல்வர்களாக இருந்தால் பொருள் உதவி பெற்று முன்னேறலாம். பதவியில் மேலோர் ஆயினும் சலுகைகள் பெற்று உயர இயலும்; கல்வி, சால்பு, செல்வம், பதவி மதிப்பு, உயர் நிலை இவை உள்ளவர்கள் பெரியவர்கள்; நம்மை விட வயதிலும் பெரியவர்கள்; அவர்களை மதித்தால் நீ உயர முடியும்.

பெரியோர்கள் அறிவு உடையவர்கள்; அவர்களைப் போற்றியோ தூற்றியோ ஏமாற்றிவிட முடியாது; இவற்றால் அவர்கள் மகிழ்வது இல்லை; கசிவதும் இல்லை; அசைவதும் இல்லை; இழிந்தவர் பழித்தும் அழித்தும் பேசி அவர்கள் மதிப்பைக் குறைக்க முயல்வர்; அவற்றை அவர்கள் பொருட்படுத்துவது இல்லை. எது உண்மை? எது பொய்மை? எது நன்மை? எது தீமை என்று நுட்பமாக அறிந்து கொள்ளும் இயல்பினர் அவர்கள்; அவர்களிடம் நன்மை பாராட்டினால் சீர்மை பெறமுடியும். சிறப்பு அடைய முடியும்.

நஞ்சு உடைய நாகம் கொடிது; அதைக் கண்டு மற்றவர்கள் அஞ்சுவர். அது மலைக் கல்லில் பதுங்கி மறைந்து இருந்தாலும் இடி இடித்தால் ஒதுங்கி அஞ்சும் இயல்புடையது. நடுங்கும்; ஒடுங்கும்; தீயவர்கள் “தம்மைப் பெரியவர்கள் கண்டு கொள்ளமாட்டார்கள். அவர்கள் அப்பாவிகள்; என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டு இருப்பர்” என்று எதிர்பார்த்தால் அது பேதமை ஆகும். பெருமை மிக்க நிலையில் உள்ளவர் சீற்றம் கொண்டால் அதை நீ ஆற்ற முடியாது; போற்றும் காவல் உள்ள இடத்தில் பொதிந்து மறைந்து கொண்டாலும் அவர்கள் காற்றும் புகாத இடத்தில் ஆதிக்கம் செலுத்தி உன்னை அடக்கிவிடுவர். பெரியோரை அவமதிக்காதே.

முளைத்து இலை மூன்று விடவில்லை; அதற்குள் களைத்த சொற்களைக் கொண்டு வளைத்துப் பெரியோர்களைத் தாக்குகிறாய். அறிவில் ஆற்றலில் நம்மைவிட யாரும் உயர்ந்தவர்கள் இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறாய்! அவசரப்படுகிறாய்; ஆவேசமும் கொள்கிறாய். அறம் அறியும் அறிஞர்கள் அவர்கள் தன்னடக்கம் உடையவர்கள். தம்மைத்தான் புகழ்ந்து பேசிக் கொண்டு இருக்கமாட்டார்கள். ஆறி அடங்கி இருப்பர். அவர்களை மதித்து அவர்கள் தகுதி அறிந்து போற்றுவது சிறந்த கோட்பாடு ஆகும்.

சிறியவர் நட்புத் தொடக்கத்தில் சீறி எழும்; காலையில் தோன்றும் நிழல் பெரிதாகக் காணப்படும். வர வர மாமியாராகி விடும்; தேய்ந்துவிடும். பெரியவர் நட்புத் தொடக்கத்தில் சிறிதாகக் காணப்படும். வரவரப் பெருகும்; மாலை நிழல் போல் அது நீண்டு கொண்டே இருக்கும். அது குளிர்ச்சியும் தரும்; மகிழ்ச்சியும் தரும். சிறியோர் தொடர்பைக் குறைத்துக் கொள்; பெரியோர் மதிப்பைத் தேடிக் கொள்.

அரசர் தம் செல்வம் அவர்களை அணுகுபவரே அடைவர்; அனுபவிப்பர்; எல்லாச் சலுகைகளையும் பெறுவர்; பெண் கூட அவளை அணுகினால்தான் அவள் இன்பம் தருவாள், எதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பெரியவர்களும் அத்தகை யவரே. “அவரை நாம் ஏன் மதிக்க வேண்டும்?” “வயது மிக்கவர்கள்; வாலிபம் இழந்தவர்; நரை திரை இவற்றால் நலிவுற்றவர்கள்; கோல் கண்ணாகக் கொண்டு நடைபோடுகிற்வர்கள்” என்ற எடை போட்டு “இந்தக் கிழங்கள் முதிர்ந்த பழங்கள். இவர்கள் நமக்குச் சுமை; இவர்கள் உறவு நமக்குத் தேவை இல்லை” என்று ஒதுங்கி வாழும் இளைய தலைமுறை பல நன்மைகளை இழந்து விடுகின்றனர். அனுபவமும் அறிவும் சான்ற அப்பெரியவர்கள் விலை மதிப்பற்ற செல்வம். இவர்களைப் புறக்கணித்து ஒதுக்கினால் முன்னுக்கு வர முடியாது; ஆண்டியாகவும் அழகிகளை அனுபவிக்க இயலாத அலிகளாவும் தான் வாழ வேண்டி வரும்.

நூல் பல கற்ற ஞான நன்னெறி உடைய பெரியோர்களிடம் கொள்ளும் தொடர்பு தூயது; ஏனைய முரடர்களிடம் கொள்ளும் உறவு தீயது; முரடர்கள் அவர்கள் திருடர்கள்; உன் உழைப்பை வருடிக்கொண்டு சமயம் வரும்போது இடறி விழச் செய்வர்; விட்டுப் பிரிந்தால் சுட்டும் கொன்று விடுவர். சேரிடம் அறிந்து சேர்க; நல்லவர் சேர்க்கை நன்மை தரும்; பிடிக்காவிட்டால் விலகிவிடலாம். தீயவரை விட்டு விலக முடியாது; விலகவிடமாட்டார்கள். ஆப்பு முளையில் அகப்பட்ட குரங்கின் கதையாகத்தான் முடியும்.

ஏடு எடுத்து ஏதாவது படித்துக் கொண்டிருந்தால் அஃது உனக்குப் பீடும் பெருமையும் தருகிறது. நாடிய கல்வி கை கூடுகிறது. நூல் எடுத்துப் பிரித்துப் பார்க்காத அந்த நாள் வீணாளாகும். பத்திரிகை படிக்காவிட்டால் உன் சுற்றுப்புறம் அறியமாட்டாய்; நூல்களைக் கற்றுக் கொண்டே இரு; புரட்டிக்கொண்டே இரு; திரட்டிக் கொண்டே இரு கல்வி ஞானம். அது பயன் உடையது. அதே போலப் பெரியவர்களைச் சாராத நாளும் வீணானதே; பெரிய இழப்பு என்றுதான் கூறமுடியும்; நம்மால் இயன்றது பிறர்க்குக் கொடுக்காமல் கழிந்த நாளும் பயனற்றதாகும். பண்புமிக்கவர்கள் இந்த மூன்று நல்ல பழக்கங்களையும் விடமாட்டார்கள். நாளும் ஏடுகளைப் படித்தல், பெரியவர்களைச் சந்தித்துப் பழகுதல், வறியவர்க்கு ஏதாவது ஈதல் இம்மூன்றும் பண்புமிக்க செயல்கள் ஆகும்.

சிலர் பண்பால் உயர்வு பெற்றவர் ஆவர்; ஞானத்தால் உயர்ந்தவர் ஆவர். அவர்கள் பெருமை மிக்கவர்; என்றாலும் பெருமை சிறுமை பாராட்டாமல் தம்மை அடையும் இளைஞர்களை ஆதரிப்பது, அறிவு கூறுவது, அன்பு காட்டுவது அவர்தம் கடமையாகும். சிலர் செல்வத்தால் செழிப்பு உடையவர் ஆவர். அவர்கள் ஏழை எளியவரிடத்துப் பழகி அவர்களைக் களிப்புறச் செய்தால் அவர்களும் மதிக்கத் தக்கவர் ஆவர்.