நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/18. நல்லினம் சேர்தல்
அறியாப் பருவத்தில் இருந்து ஊர் முரட்டுக் காளைகளுடன் பழகிப் பாழாகிப் போன சிறுவர்கள் கூடத் திருந்த முடியும்; புல் நுனிமேல் தங்கும் பனித்துளி காய் கதிர்ச் செல்வன் கரம்பட்டதும் மறைந்துவிடுகிறது. அதே போலத்தான் தீயவரோடு பழகித் தீயவராக இருப்பவரும் நல்லவரோடு சேர்ந்து வல்லவராக மாறக் கூடும்; சேரும் இடம் அறிந்து சேர்வது உயர்வு தரும்.
நல்லவன் என்று பெயர் எடுக்கச் சில அடிப்படைச் செயற்பாடுகள் தேவைப்படுகின்றன. முதற்கண் ‘அறநெறி யாது?’ என்று அறிந்து கொள்ள வேண்டும். அடுத்தது நாமே கொடிகட்டிப் பறக்க முடியும்’ என்று முடிவு செய்யக்கூடாது. எந்த நேரத்தில் எந்த அழிவு வரும் என்று முன்கூட்டி உரைக்க அல்லது அறிவிக்க இயலாது. நாம் பலரோடு பழகுகிறோம்; அவர்கள் நம்மைத் தாக்கிப் பேசக்கூடும்; கடுஞ்சொல் கேட்டுச் சுடு சொல் கூறத் தேவை இல்லை. அவர்களை மன்னிக்கும் மாண்பு நம்மிடம் அமைய வேண்டும்; அதனோடு அவர்கள் அவ்வாறு கூறக் காரணம் என்ன? நம்மிடம் உள்ள குறை யாது என்று ஆராய்ந்து அவற்றைக் களைய முற்பட வேண்டும். பிறரை ஏய்த்து வாழ வேண்டும் என்று சிறிதும் நினைக்க வேண்டாம். தீய செயல்களை மேற்கொள்வாரை வெறுத்து ஒதுக்கவும்; பெரியவர் கூறும் வாய்மை மிக்க சொற்களைப் போற்றிக் கொள்ளவும்; இந்த நல்ல பழக்கங்கள் சேர்ந்தால் நல்லவன் என்று மதிப்புப் பெற வாய்ப்பு உள்ளது.
இந்த உலகத்தில் நம்மை அடையும் துன்பங்கள் மூன்று; ஒன்று நம் நெருங்கிய உறவினைரைப் பிரிந்து வாழ்தல்; மற்றொன்று தீராப்பிணி, மூன்றாவது கேடுகள். கேடுகள் எவை என்று கூறமுடியாது; இழப்புகளைத் தான் கெடுதிகள் என்று கூறுகிறோம். ‘அவனுக்கு என்ன கேடு என்றால் அவனுக்கு என்ன இழப்பு’ என்பதுதான் கருத்து. இந்த மூன்று துன்பங்களும் அணுகும்போது அவற்றைத் தாங்கவும் போக்கவும் பெரியவர்களின் துணை தேவைப்படுகிறது. நல்லவர்கள் இணக்கத்தை நாடவேண்டி உள்ளது. கற்றறிந்த கல்வியாளரின் தொடர்பு இவற்றை நீக்க வல்லது ஆகும்.
மரணம் என்பது ஒன்று உண்டு என்பதால் இந்தப் பிறவி நிலையற்றது என்று களைய முற்படார். பிறப்பு வெறுக்கத் தக்கது அன்று; அதனைச் சிறப்புற்றுச் செய்வதில்தான் நம் பெருமை அடங்கி இருக்கிறது. பண்புமிக்க நண்பினர்கள் வாய்த்தால் வாழ்க்கை ஒண்பு உடையது ஆகிறது. அஃது ஒளி பெறுகிறது; எனவே வாழ்க்கை வாழ்வதற்கு என்ற நிலை தக்க பண்பினர் நமக்கு அன்பினராக உள்ளனர் என்ற நிலை ஏற்படுவதால்தான்.
ஊரில் உள்ள கழிவுநீர் அதனைச் சாய்க்கடை என்பர்; அஃது ஆற்றோடு சங்கமிக்கும்போது அதன் உவர்த் தன்மையும் கழிவுத் தன்மையும் பேராற்றில் கலந்துவிடுகின்றன. இரண்டும் கலக்கும்போது சிறுமை பெருமை பெறுகிறது. அந்தப் பழமை அதனை விட்டு நீங்குகிறது. அதனையும் அந்த ஆற்றின் கிளை என்றே கருதுவர். அது தூய்மை பெறுகிறது. உயர்வும் அடைகிறது. அதே போலக் கீழ்த்தரம் மிக்க பாழ்பட்ட வாழ்க்கை உடையவரும் மேல் தரம் உள்ள மேன் மக்களோடு சங்கமித்தால் அவர்களும் பழைமை, அழுகல், உளைவுகள், வளைவுகள், நெளிவுகள் அனைத்தும் நீங்கிச் செம்மை அடைகின்றனர்; சீர் பெறுகின்றனர்; சிறப்பு அடைகின்றனர்.
ஒளி வீசும் தண் மதியததை முயல் என்ற கறை சேர்கிறது; அது மதிக்கத்தக்கது அன்று எனினும் வான் நிலவை வையகத்தார் வணங்கும்போதும் தொழும் போதும் இந்த முயலும் மதிக்கப்படுகிறது; அதுவும் வணங்குதற்கு உரிய பொருள் ஆகிறது. சிறியவர்களும் பெரியவர்களோடு சேரும்போது சீர்மை பெறுகின்றனர். அவர்களும் மதிக்கப்படுகின்றனர்.
பாலில் நீர் கலந்தால் பால் நீராகாது; நீர்தான் பால் நிறம் பெறுகிறது; பால் என்றே பருகப்படுகிறது. சிறியவர்கள் பெரியவர்களோடு ஒன்றி உறவாடி நட்புக் கொண்டால் அவர்களும் மதிக்கப்படுகின்றனர். அந்தப் பெரியவர்களைக் கொண்டுதான் இவர்கள் அடையாளம் காட்டப்படுகின்றனர்.
உழவர்கள் ஏர்க் கலப்பை புல் எங்கிருந்தாலும் அதைத் துக்கி எறிந்து சமன் படுத்திவிடும்; என்றாலும் உயரமான இடத்தில் கற்கள் பொதிந்த மரத்தின் அடிப்பகுதியில் முளைத்துக் கிடந்தால் கலப்பை அதனைத் தொடாது. அதே போலச் சார்பு உணர்ந்து அவர்கள் சேர்ந்த இடம் அறிந்து பகைவர்கள் சிறியவர்களைத் தொடமாட்டார்கள். பெரிய இடத்துச் சார்பு இருக்கிறது என்றால் அவர்களைத் தொட அவர்களோடு போரிடப் பின்வாங்குவர். பெரியவர்களின் தொடர்பு சிறந்த தற்காப்பைத் தருவது ஆகும்.
நிலத்தின் தன்மையை ஒட்டி அதன் புலத்தில் விதைக்கும் நெல் நலம் பெறுகிறது, சிறப்பும் பெறுகிறது. நீர் வளமும் நிலவளமும் நெல்லின் செழிப்புக்குக் காரணம் ஆகின்றன. அதே போலக் குடிப் பிறப்புச் சான்றாண்மைக்கு வித்தாகிறது, சத்தாகிறது; உரம் சேர்க்கிறது; உறுதி பயக்கிறது. நற்குடியில் பிறந்த நல்லோர் ஆயினும் அவர்களுக்குத் தீயவர் சேர்க்கையால் சாய்வுகள் ஏற்படுவது உண்டு, மரக்கலம் உறுதி உடையதுதான் என்றாலும் சூறைக் காற்று வீசினால் அது கவிழ்ந்து விடாமல் இருப்பது இல்லை; தீயவர்கள் இணக்கம் சூறாவளி போன்றது. திடீர் என்று அவர்கள் வந்து சேர்வதால் அவர்கள் தாக்குதலினால் நல்லவர் தம் சீர்மையும் கெட வாய்ப்புள்ளது. எனவே உறுதி உடைய பெரியோர்கள் கூடத் தம்மிடம் சேர்பவர் யார் என்றும் கவனிக்க வேண்டும்; கண்டவரோடு உண்டு மகிழ விருப்புக் கொள்ளக்கூடாது. அற்பர் நட்பு உயிருக்குச் சேதம் விளைவிக்கும். மனத்தால் மாசு அற்றவர் என்றாலும் இனத்தால் ஆசு ஏற்பட வழியாகிறது; இனம் கொண்டு அவர் இகழ்ப்படுவர்; காட்டிலே தீப்பற்றிக் கொண்டால் மேட்டிலே உள்ள சந்தனமும் வேங்கையும் வேகாமல் போகாது; உயர் மரங்களும் பற்றி எரியும். கோரைப் புல்லில் பற்றிய தீ ஏனைய மரங்களின் வேரையும் அழிக்கும். சிற்றினம் கூடாது; சேர் இடம் அறிந்து சேர்க.