நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/22. நட்பாராய்தல்
கரும்பைக் கடித்துத் தின்ன நீ பாடம் படித்திருக்கிறாயா? நுனிக்கரும்பு அது தொடக்கம்; இனிப்பு அதன் ஆரம்பம்; மெல்ல மெல்லக் கடித்து அடிக் கரும்புக்கு வா; தொடக்கத்தில் சுவை அதற்கு அமையாது; மெல்ல மெல்ல அது சுவைக் கட்டி, சாறு சுவைக்கும். உயர்ந்தவர் நட்பு பழகப் பழக இனிக்கும். தீயவர்பால் நட்பு செல்லச் செல்லப் புளிக்கும். அடிக்கரும்பு ஆரம்பம்; நுனிக்கரும்பு முடிவு சென்று தேய்ந்து குறையும்.
ஆள் அடி உயரம் அவன் செல்வத்தின் அளவு. இவற்றைக் கொண்டு அமையாது நட்பின் ஆழம். பண்புமிக்கவரின் பழம்பெருமை குடிப்பிறப்பு. இதனை நீ அறிந்து கொள்வது முதற்படிப்பு. அவர்கள் நடுநிலைமை பிறழாத பீடும் பெருமையும் கொண்டவர். அத்தகையவரோடு நீ கொள்வது நட்பின் நன் முடிப்பு.
பருத்துக் கொழுத்த யானை அது பாகனையே கழுத்தை முறித்துக் கொல்லும். உருவுகொண்டு அவனிடம் நட்பு மருவினால் அது யானையின் உறவாக முறியும். நாய்; அலைந்து திரிவதுதான்; குலைத்துக் குலைத்துக் குமைவதுதான். அது நன்றி. கெடாது; நாயகனைக் கடிக்கத் தொடாது. நாயனைய நயத்தவரை நீ நட்பாகக் கொள்க; அது ஒட்பமாக அமையும்.
பக்கத்து வீட்டுக்காரன்; ஆனால் அவன் துக்கத்துக்குத் துணையாகமாட்டான்; எக்களித்து மகிழ்வான்; அவன் நட்பு நயக்காதே. இடத்தால் அகன்று எங்கோ வாழ்ந்தாலும் உள்ளத்தில் உண்மை உறவு கொண்டவர் பள்ளத்தில் விழும்போது படுதா இட்டுக் கொண்டு மறைந்து வாழார். கண்ணன் காரிகைக்குத் தரும் அபயமாக உபயம் செய்ய வருவர்.
கோட்டுப் பூச் சூடிக் கொள்ள அதனைக் கேட்டுப்பெற விழைவர்; மலர்ந்தால் அது கருகாது; கயத்து நீர்ப்பூ நீரை விட்டு எடுத்தாலே கள் நீர் (கண்ணீர்) விடும்; கலுழும்; கசங்கிவிடும். மலர்களுள் இத்தனை வேறு பாடா? மாந்தர் தம்முள் இந்த வேறுபாடு இருக்கும்போது மலர்கள் மட்டும் மங்கியா கிடக்கும். ஒருமுறை பழகிவிட்டால் நீங்காத நட்பு மேலோரிடம் உள்ளது. பலமுறையும் பழகியும் கசங்கி கசந்து கலுழ வைப்பர் கீழோர். அவர்கள் நட்பு. கயத்து மலர் ஆகும்.
பாக்கு மரம்; வீட்டுக்கு அழகு தருகிறது; காய்க்கிறது; பயனும் தருகிறது; ஆனால் அதை வளர்ப்பது அருமை; நீரும் சேறும் நிதமும் அமைத்தால் தான் அது பாக்கு மரம். இல்லையென்றால் அது வெறும் பார்க்கும் மரம்தான் காய்க்காது. அல்சேஷன் நாய்போல் அதனை அடிக்கடி கவனிக்க வேண்டும். கடை மக்கள் நட்பு பாக்கு மரம்; அவ்வப்பொழுது அவர்களுக்கு ஊக்கத் தொகை தந்து நட்பு ஆக்க வேண்டும்.
தென்னை மரம் ஒருமுறை நீர் ஊற்றினால் அஃது உன்னை மறக்காது; நெடுக வளர்ந்தாலும் அதன் புத்தி குறுகவே குறுகாது. காய் தரும். இடைப்பட்டவர் ஒரு முறை தரும் உதவிக்கு வாழ்நாள் வரை நன்றி காட்டுவர்.
பனை மரம் தானே வளரும்; தானே காய்க்கும் தானே தரும்; பிறர் உதவிக்கு அது கை நீட்டுவதில்லை. வள்ளல் சாதி அது. அத்தகைய நட்பை உள்ளுக; இவர்களே தலையாய நட்பினர்.
அரிசி களைந்த கழுநீர்; அதுதான் அப்பொழுது கிடைத்தது; நல்லநீர் கொண்டுவர அவள் நாலுகாதம் செல்ல வேண்டி இருக்கிறது; கறிகாய் அதைப் பறி என்றால் அதனை அறியேன் என்கிறாள். பசிக்குச்சோறு; புசிக்க வேறு தேவைப்படுகிறது. கொல்லைப் புறத்துக் கீரை அதனைப் புளியும் உப்பும் சேர்த்து அரைகுறை யாக வேக வைத்து ‘உண்க அடிகளே’ என்று அமுத மொழி பேசிப் பரிமாறுகிறாள். சூடாக இருக்கிறது உணவு, குளிர்கிறது அவள் வார்த்தைகள். அமுதம் என்று கூறி அக மகிழ்வோடு உண்கின்றனர் வந்த விருந்தினர்; அகம் நக ஒளிவிடும் நட்பு இது.
தடபுடலான வரவேற்பு; புடலங்காய்க் கூட்டு; எல்லாம் வெத்து வேட்டு, நீளம் அடி நான்கு தலைவாழை இலை; பரபரப்பு; சுறுசுறுப்பு, சலசலப்பு. எல்லாம் அடுக்கி வைக்கப்படுகின்றன. எடுத்து இட ஆள் இல்லை; நட்சத்திர உணவகம்தான்; அலுத்து விடுகிறது. இதுவல்ல நட்பு; இது வெறும் நடிப்பு.
நாய்க்கால் சிறுவிரல்களை எப்பொழுதாவது கவனித்தது உண்டா? அவை சேர்ந்தே இருக்கும். பிரிக்கவே முடியாது. அழகான உவமை. அதுபோல் சேர்ந்தே இருப்பர்; அவர் நட்பர். ஆனால் ஈய்க்கால் அளவு உதவ வாய்க்கால் அங்கே சிறிதும் ஏற்படாது. பேய்க்கால் அவர்கள் உறவு; நிலைத்து ஊன்றி நிற்காது. சேண் தூரம் இருந்துதான் கொண்டு வரவேண்டும் வாய்க்கால் நீர்; அது வயலில் விளைக்கும் செந்நெல்; வாழ்வு அளிக்கும். அத்தகையவர் உயர் நட்பினர் ஆவர்.
நல்லது நான்கு நவின்றால் நீ செவி கொடுத்துக் கேட்பாயா? கேள். தெளிவில்லாத முரடர் அவர் நட்பைவிட அவர்கள்பால் கொள்ளும் பகைமை தகைமை, நோய்வாய்ப்பட்டு நொந்து நித்தம் நித்தம் சத்தம் இட்டுக் கொண்டிருப்பதைவிட மொத்தமாக உயிர்விடுவது உயர்வு ஆகும். பண்பட்ட நண்பரைப் புண்பட்ட சொற்களில் தாக்குவதைவிட அவரை அடித்துக் கொன்றுவிடு; இல்லாததைச் சொல்லி நல்லவர் இவர் என்று நற்சொல் கூறி மேலுக்குப் புகழ்வதைவிட வசைச் சொற்கள் நான்கு பேசிக் கற்கள் வீசுவதைப் போலக் கடிந்து உரைப்பது கவின்மிக்க செயலாகும்.
நட்பைத் தேடும்போது நாள்பல ஆயினும் நயத்தக்கவரை நாடி நட்டாகக் கொள்க. பாம்போடு உறவு கொண்டாலும் பிரியும்போது அது வேம்பாக அமையும். பிரிய மனம் வராது; அதனால் தீயவர் நட்பு தவிர்க. அவர்களைப் பின் விட்டு விலக இயலாது.