நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/23. நட்பிற்பிழை பொறுத்தல்

23. ஒருவர் பொறை இருவர் நட்பு
(நட்பிற் பிழை பொறுத்தல்)

உமி உண்டு என்பதால் நெல்லை நெகிழ்ப்பார் இல்லை; நுரை உண்டு என்பதற்காக நீரைக் குறை கூறி ஒதுக்கமாட்டார்கள். புல்லிதழ் அதன் புறத்தைச் சுற்றிக் கொண்டு அதன் நிறத்தைக் கெடுக்கிறது என்பதால் நறுமலரை வீசி எறியமாட்டார்கள்; அவைபோல நண்பனின் பழமை பாராட்டி அவன் கிழமையில் எந்தக் குறையும் காணாதே.

கரையை உடைத்துக் கொண்டு நீர் வயலில் பாய்கிறது; கரையை உடைத்துவிட்டது என்பதால் அதன் மீது சினம் கொண்டு அதனை கண்டபடி ஓடவிட்டால் அஃது பயிரை அழிக்கும். வயலுக்கு நீர் தருவார் யார்? நீரோடு நீர் ஊடல் கொண்டால் பயிர் வாடல்தான் மிச்சம். நீரைக் கட்டுப்படுத்தி அதனை மீண்டும் பாய விடுக! பழகிவிட்ட நண்பர் உரிமை பற்றித் தவறுகள் மிகையாகச் செய்துவிட்டாலும் பகையாகக் கொள்ளாது நகையாகக் கொள்வதுதான் தகையாகும்.

சரிதான்; அளவுக்கு மீறித் தவறு செய்துவிட்டான். யார் அவன்? உன் நண்பன்; பலகாலம் பழகியவன்; அந்தப் பழமையைப் பார்க்க வேண்டாமா? உடனே நீ சீறிச் சினந்தால் அவன் உன்னை விட்டு விலகி விடுவான். ஒருவர் காட்டும் பொறுமை இருவர் தம்முள் உள்ள நட்பை நிலைநிறுத்தும். “ஒருவர் பொறை இருவர் நட்பு” இத்திருவாசகத்தை நாளும் கடைப்பிடிக்க நட்புக் கெடாது,

பழகிவிட்ட பிறகு அவர்களை ‘அழகன்று’ என்று அவர்களை விலக்குதற்கு முயன்றாலும் அவர்கள் மழகன்று போல் உன்னையே சுற்றி வருவர். நெஞ்சில் மூட்டும் தீபோல அவர்கள் எரிச்சலை ஊட்டுவர் என்றாலும் அவர்கள் பிழையைப் பொறுப்பது நமைச்சலைத் தாங்கிக் கொள்வதுபோல் ஆகும்.

நல்லது செய்தல் ஆற்றார் எனினும் அவனை விட்டுவிட முடியாது. நட்புக்கொண்டவன், நயத்தக்க நாகரிகம் உடையவன், அவனை எப்படி விட்டுவிட முடியும்? நெருப்பு சுடத்தான் செய்கிறது; பொலிவுமிக்க வீட்டினையும் எரிக்கவல்லது. நெருப்பு இப்படிப் பேரழிவுகள் செய்கிறது. அதற்காக நெருப்பே மூட்டமாட்டோம் என்றால் அடுப்பு எரியாது; வயிறு கடுப்புத்தணியாது. யாரும் நெருப்பு இன்றி வாழ முடியாது. பருப்பில்லாமல் கலியாணம் இல்லை; பகுப்பு இல்லாமல் வகுப்பு அமையாது. தொகுப்பு என்ற நிலையில் பார்த்தால் உன் நண்பனை வெறுப்புக் கொண்டு ஒதுக்க இயலாது.

செறிவு கொண்டு பழகியபின் அறிவு கொண்டு அணைத்துக் கொள்பவரே சான்றோர் ஆவர். பிழைகள் சில கண்டு அவன் உடன் பழகுதல் தவிர்ப்பது அழகு அன்று: கண்ணைக் குத்திவிட்டது என்பதால் ஒருவன் தன் கையை வெட்டிக் களைந்துவிட முடியுமா? அவர்களிடத்து உள்ள குறைகளை எடுத்து அறைபறை செய்தால் அவர்கள் நீசர் ஆவர்.

பகைவர் அவர்கள் நமக்கு மிகைவன செய்வர் எனினும் அவற்றை மிகைப்படுத்தி வருந்தற்க; அறியாமை அவர்களை ஆட்கொண்டுள்ளது என்று அவர்களை மன்னித்துவிடு; தூயவர் ஆகிய நல்லோர் தவறுகள் செய்துவிட்டார் என்றாலும் அவர்கள் தெரிந்து செய்தவை என்று கொள்வது தவறு ஆகும். நண்பனோ, பகைவனோ, யாவனோ எவனாயினும் என்ன? நட்பின் வகை அறிந்து அவர்கள் தகைமையைப் போற்றிப் பழகி வாழ்வதே சிறப்பு ஆகும்.

ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டு அது சேறு என்று கூறினால் அது யார் தவறு? குறை நிறைகளை ஆய்ந்தே நிறை உடையவர் என்று கண்டபின்பே நண்பனைத் தேர்ந்து எடுக்க வேண்டும். தாலி கட்டிக் கொண்ட பிறகு வேலிபோட்டுக்கொண்டு விவாகரத்துக் கோருவது விவேகமன்று. ஏறக்குறைய நல்லது பொல்லது பார்த்து அறுத்துக் கொள்ளாமல் பொறுத்துக் கொள்வது நட்பிற்கு அழகாகும். செறிவுமிக்க நட்பு என்றால் பிரிவு அதனைத் தாக்காது.