நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/29. இன்மை
காவி உடை உடுத்தி இந்தப் பாவ உலகினின்று விடுதலை பெற்றவன் ஆயினும் அவனும் நாலு காசு வைத்திருந்தால்தான் நாலு பேர் சுற்றி வருவார்கள். சாதிக்காரர்தான் எதையும் சாதித்துவிடலாம் என்று நினைக்கலாம்; என்றாலும் குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே என்பதை மறந்து விட முடியாது.
நீர் அதைவிட நெய் நுண்மையது; அதைவிடப் புகை நுழைய முடியாத இடமே இல்லை என்பர். அந்தப் புகையும் நுழைய முடியாத இடத்தில் வாழ வகை அறியாத வறிஞன் நுழைந்து விடுவான்; அவர்கள் பிழைக்க வழிதேடி எங்கும் வட்டமிடுவர். காரணம்? இல்லாத கொடுமைதான்.
காசு நாலு இல்லை என்றால் சுற்றமும் சூழார்; சொந்தம் பந்தம் எல்லாம் தலைகாட்டாது. பண்டம் இல்லை என்றால் வீடு சுத்தமாக இருக்கும்; ஈமொய்க் காது. வரப்போக யாருமே இல்லை; காரணம் பருக நீரும் கிடைக்காது என்பதால் அருகே வரமாட்டார்கள். தரித்திரம் எந்தச் சரித்திரமும் படைக்காது.
காசு இருக்கும்போது காக்காய்க் கும்பல் நம் வீட்டைச் சுற்றி வட்டமிடும்; திட்டமிடும். இல்லாத நோயைப் பற்றித் துருவித் துருவிப் பேசி நலன் விசாரிப்பர். “அப்பா சுகமா? அம்மா நலமா?” என்று கேட்பார்கள். காசு இல்லை என்றால் தூசு துடைக்கவும் ஆள் வரமாட்டார்கள். “கால் தூசும் பெறமாட்டான்” என்று அந்தப் பக்கம் திரும்பியும் பார்க்கமாட்டார்கள்.
“வண்டாய்ப் பறந்து வாழ வழி அறியாமல் வாடினால் கண்டு கொள்ளவே யாரும் வரமாட்டார்கள். அதிகாரமும் அப்படித்தான். நேற்று அவன் அரசு அதிகாரி. இன்று கோயில் பூசாரி. பொழுது போகவில்லை; கோயிலைச் சுற்றி வருகிறான். குங்குமப் பொட்டு அவன் நெற்றியில் ஓலமிடுகின்றது. அந்த வீடு வெறிச்சிடுகிறது. எல்லாம் இருந்தால்தான் விருந்தினரும் சுற்றத்தாரும்.
இல்லாமை என்ற நிலை ஏற்பட்டால் பிறந்த குலப்பெருமை மாயும்; பேராண்மையும் சாயும்; கல்வியும் ஒயும். எதுவுமே ஒளிவிடாது; யாருமே அவனைப் புகழ்ந்து பேசார். எல்லாம் மங்கிக் கிடந்து செயலிழந்து தன்னை மறந்து வாழ வேண்டியதுதான்.
வறுமை உற்றபோது இவன் வாடி வதங்குகிறான்; அது தெரியாமல் பழகிய சுற்றத்தவர் அவன் வீடு தேடி வந்து விடுகின்றனர். இவன் குரல் கொடுத்துக் ‘குடிக்க’ என்று மனைவியை அழைக்க, அவள், “பிழைக்க வழி இல்லாத நிலையில் இந்த ஜம்பம் எதற்கு?” என்று கேட்க இந்தச் சிக்கல்கள் எழுகின்றன. உள்ளூரில் இருந்து கொண்டு உதவ முடியாமல் இருப்பதைவிட எங்காவது கண்காணாத தேசம் வெளியூர் சென்று பிழைப்பது தக்கது ஆகும். அங்கே யாரும் வந்து இவன் பெயரையும் சொல்லி அழைக்கமாட்டார்கள். வீட்டுக்கு வெளியே அழைப்பு மணி அழுத்தம் இருக்காது.
வறுமையில் சிக்கியவர்கள் வாழ வகையின்றித் தவிக்கும்போது அவர்களிடம் நற்குணங்களை எதிர்பார்க்க முடியாது. ‘வா’ என்று வரவேற்கும் பண்பும் ‘இரு’ என்று சொல்லும் இன்பும் எதிர்பார்க்க இயலாது. பெற்ற குணம் விலகும். கற்ற கல்வி தலை எடுக்காது. அறிவு விளக்கமும் அவனை அணுகாது. அன்றாடம் அடுப்பு எரிய வேண்டும். அதைப் பற்றிக் கவலை; மற்றைய ஒளி அவன் காணத் தயாராக இருக்காது.
ஒரு குறிப்பிட்ட வீட்டுக்குச் சென்றால் அந்த ‘மகாலட்சுமி’ சோறு போடுவாள் என்று யாரோ சொல்லக் கேட்டு, அவன் அந்த ‘வீடு’ திருமகள் இல்லம்’ என்று நுழைகிறான். அந்த வீட்டு மருமகள் சொல்கிறாள். “இன்று போய் நாளை வா” என்கிறாள். உடனே சற்று நேரத்திற்குள் மாமியார் வருகிறாள். “அவள் என்ன சொன்னாள்? என்று கேட்கிறாள். “நாளை வா என்றார்கள்” என்கிறான் வந்தவன். "இந்த வீட்டில் அவளுக்கு என்ன அதிகாரம்? நான் சொல்கிறேன். இந்தப் பக்கம் எப்பொழுதும் வராதே” என்று திருத்தமாகக் கூறுகிறாள்.
உள்ளுரில் இருந்து வேதனைப்படுவதை விட வெளியூர் சென்று நாலு வீடு கேட்டு வயிற்றுப் பசி தீர்த்துக் கொள்வது வகையான வாழ்வாகும். அங்குப் பகை இல்லை; உறவு இல்லை; இந்த நகை இல்லை. பூ இழந்த கொடியை எந்த வண்டும் நாடாது.
பொருளிழந்த வறியவனை எந்தச் சுற்றமும் சூழ மாட்டார்கள். அவர்கள் தனித்து வாழ வேண்டியதுதான்; சுற்றம் என்று சொல்லிக் கொள்ளத் தேவை இல்லை. அற்றபோது சற்று விலகி வாழ்வதே மேலாகும்.