நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/30. மானம்

30. தம் நிலையில் தாழாமை
(மானம்)

பணம் படைத்துவிட்டாய்; அது உன் உழைப்பால் வந்தது. ஒப்புக் கொள்கிறோம். அதனால் மற்றவர்களைத் தாழ்த்திப் பேச நினைக்கக் கூடாது. மற்றவர்களை வருத்தக் கூடாது. அப்படி வருத்தினால் அது பிறர் மனதைச் சுடும்; காட்டுத் தீப்போல் படும். மானம் உள்ளவர் அதனை நிதானமாக எடுத்துக் கொள்ளமாட்டார். அவர்கள் எரிமலையாக மாற இந்தக் கொடுமையாளர்தாம் காரணம்.

தோலும் எலும்புமாகத் தோன்றி வறுமையிலே வாடினாலும் நல்லியல்பு இல்லாதவரிடத்துத் தம் குறைபாடு எடுத்து உரைக்கார். உரைத்தாலும் அவர்கள் என்ன குறைக்கவா போகிறார்கள். குறிப்பறிந்து உதவும் நிறைமனம் உடையவரிடத்துத் தம் குறைகளைக் கூறினால் தவறு இல்லை; அவர்கள் தீர்த்து வைப்பர்; நீ உன் நிலையில் தாழத் தேவை இல்லை.

நீண்ட நாள் பழகியவள்; “அவன் வேண்ட உடனே அழைத்துச் சென்று சோறும் நீரும் தந்து அவனை மகிழ்விப்போம்; அவன் மிடிமை தீர்ப்போம். அவனும் நம் வீட்டாரோடு பேசி நலன் விசாரிக்கட்டும்; உள்ளம் கலந்து உறவாடுவோம்” என்று இருக்க வேண்டும். செல்வன் ஒருவனைக் காண்கிறான் பழைய நண்பன் “செல்வோம் உம் வீட்டுக்கு” என்றால் “நில்லாய் முற்றத்தின்கண்” என்று சொல்லித் தன் கைப்பட அவன் தட்டுச் சோறு வைத்து “உண்க” என்பான். நாயினும் கீழாக நடத்தும் முறை இது. உள்ளே அழைத்துச் சென்றால் கள்ளே அனைய காரிகை அவன் மனைவியைக் காமுறுவான் என அஞ்சுகிறான். தன் மனைவி மீதே அவனுக்கு நம்பிக்கை இல்லை. வீட்டுக்கு அழைக்காமல் வீதியிலே நிறுத்தி நீதிகள் பேசுகிறான். மனித அபிமானம் நேசம் இவை பசையற்றுவிட்டன. கீழ்மகன் அவன்; அத்தகையவனை நாடிச் செல்வது கீழ்மையாகும்.

“ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு அஃது இழிவு ஆகும்” என்று மானத்தோடு வாழ்பவன் என்றும் மதிப்பு இழப்பது இல்லை. கை நீட்டி அவன் பிறரிடம் கடன் கேட்பது இல்லை. “நன்கொடை தருக” என்று நவின்றது இல்லை. உப்புக்கும் மிளகுக்கும் 'அப்பு' என்று அடுத்த வீட்டை அணுகியது இல்லை. கடிகாரம் நேரம் பார்க்கவும் மற்றவர் கை காட்டு என்று கேட்டதில்லை. எழுதித் தருகிறேன் என்று பிறர் எழுதுகோல் அவரசரத் துக்கும் அங்கீகரித்தது இல்லை. இவன் இப் பிறவியில் இன்பம் பெறுகிறான்; மறுபிறவியிலும் நல் வாழ்வு அடைகிறான்; “யாமார்க்கும் கடன் அல்லோம்” என்ற இறுமாப்பு: அஃது அவனுக்குச் செம்மாப்பு.

குறுக்கு வழியிற் சென்று செருக்கோடு வாழத் தருக்கு உடையவர் நினைக்க மாட்டார்கள். பாவமும் பழியும்தரும் என்றால் அந்த வழிநோக்கிச் செல்லார். அதைவிட ஒரு முழம் கயிறு, மூட்டைப் பூச்சி கொல்லி, இன்னும் இத்தகைய வகையறாக்கள் அவற்றைத் துணை தேடுவர். சாவு ஒரு நாள் நிகழ்ச்சி. அதற்குப் பிறகு நிலையான புகழ்ச்சி, மானத்தோடு வாழ்ந்தான் என்று எங்கும் தொடர்ந்த பேச்சு. பழி அது என்றும் நிற்கும். நினைத்து நினைத்து மனம் அழிய வேண்டியதுதான்; இன்பம் என்று மகிழ்ந்து பிறர்க்கு இடையூறு செய்து வாழ்கின்ற மடையர்கள் என்றும் கடையரே.

வளம் மிக்க இந்நில உலகில் கோடிக் கணக்கில் குவித்து வைத்து அதனால் அவன் ஈசுவரன் என்று பாராட்டப்படுகிறான். நாடி வரும் ஏழையரைக் கண்டால் அவன் கை முடங்குகிறது; குறைகிறது. அழுங்குகிறது. அவன் ஒரு நோயாளி ஆகிறான். இவனா செல்வன்! தரித்திரம் படைத்தவன்; நித்திய தரித்திரன்; பணம் படைத்த பரம ஏழை; இவன் கோடியில் ஒதுங்கிக் கிடக்க வேண்டியது தான். அதே நாலு முழம் வேட்டி; உண்பது நாழி, அவன் ஏழைதான். இல்லாதவன்தான், அவனிடம் குறை கூறினால் அவன் நிறை செய்கிறான். பிறர் துயர் களைகிறான்; இவன்தான் செல்வன்; இந்த நந்நிலம் இவனைப் பெற்றதால் பெருமை பெறுகிறது. நிலம் என்னும் அந்நல்லாள் மகிழ்கிறாள். இவர்கள் தரித்திரர்தாம். எனினும் நற்சரித்திரம் படைக்கின்றனர்.

இல்லாத கொடுமை. அதனால் இந்தச் செல்வனிடம் வந்து நின்று தாம் நிலையில் தாழ்ந்து விட்டதை எடுத்துக் கூறுகிறான்; செல்வன் அவனிடம் பரிவு காட்டுவதுபோல் நடிக்கிறான். “ஐயோ பாவம் நல்லவர்களுக்கே காலம் இல்லை; நீ யாருக்கும் எந்தக் கொடுமையும் செய்தது இல்லை; உனக்கா இந்தத் தாழ்நிலை. உள்ளபோது கேட்டவர்களுக்கு எல்லாம் அள்ளி அள்ளிக் கொடுத்தாயே! உனக்கா இந்தத் தாழ்வு? பாவம்! கிழிந்த வேட்டி; குழிந்த வயிறு; மெலிந்த தேகம் இந்தத் தரித்திரம் மிகவும் கொடுமை; வறுமை மிகவும் கொடியது. நெருப்பிலும் தூங்க முடியும்; இந்த வறுமையில் நிம்மதி இழக்க வேண்டியதுதான்” என்று நீலிக் கண்ணிர் வடிக்கிறான். இந்தப் போலிகளை நினைத்தால் நெஞ்சம் குமுறத்தான் செய்கிறது. கொல்லன் உலைக்களத் தீபோலப் பற்றி எரிகிறது. இந்தப் பச்சோந்தி கள் பகல் வேடக்காரர்கள்; இவர்கள் செல்வர்கள்; வெட்கம்; வெட்கம்; வெட்கம்.

அவன் கேட்கிறான்; கொடுக்க முடியவில்லை. அதற்காக வெட்கப்படத் தேவை இல்லை; பிறரை ஏமாற்றிப் பிழைக்கிறாய்; அஃது உன் தொழிலாகி விட்டது. ஊர் பழிக்கிறது; அதற்கும் அஞ்சவில்லை. எதற்காகவும் வெட்கப்படுவது இல்லை. மொத்தத்தில் தன் குடிப் பெருமை கெடக் கூடிய நிலைக்குத் தாழ்ந்து போவது இழிவாகும். கீழ்த்தரமான வாழ்க்கை வாழ்ந்து மேல்தரமான புகழை அழித்து வாழ்வது வெட்கப்பட வேண்டியதாகும்; ஒரு சில குறைகள் இருக்கலாம்; மொத்தமே ஒட்டை என்றால் அந்த வாழ்வு மதிக்கத்தக்கது அன்று. அடியோடு ஆட்டம் கொடுத்தால் அதை உலகம் மன்னிக்காது. மானம் கெட்டவன் என்று தான் முடிவு செய்யும். அங்கு ஒன்று இங்கு ஒன்று கிழிச்சல் என்றால் அது கந்தல் துணி என்பர். அதுவும் மானத்தைக் காக்கும்; மொத்தமே கழிச்சல், உதவாது என்றால் அதைத் தூக்கி எறிவது தவிர வேறு வழியில்லை; அவர்களை மானம் உடையவர் என்று கூற இயலாது.

மதம் மிக்க யானை அதனைக் காட்டு வேங்கைப் புலி அடித்து வீழ்த்துகிறது; அஃது இடப்பக்கம் விழுந்தால் வேங்கை தன் வலிமைக்கு இழுக்கு என்று அதன் இறைச்சியைத் தொடாது; பசி எடுத்தாலும் அதனைச் சுவைக்காது; செத்து மடியுமேயன்றிச் சத்து அற்ற அந்தச் செத்தையைக் கருதாது. சுவை குன்றிய உணவாக அது மதிக்கப்படும்; “வீரம் குறைந்தது தோல்விக்குத் துவண்டது” என்று அந்த யானை கருதப்படும்.

யானை மிகப் பருத்த ஒன்றுதான்; அதை மிச்சம் வைத்து உண்டாலும் நாலு வாரம் தின்னலாம்; எனினும் அதைத் துச்சமாக மதிக்கிறது வேகம் உடைய வேங்கை அதே போல மானம் உடையவர் விமானம் மீது ஏறி இந்த உலகத்தையே வளைப்பதாயினும் தம் நிலையில் தாழ்ந்து அதனைப் பெறார். வானமே தம் காலில் வந்து விழுந்தாலும் அதனைத் தானமாகப் பெறார்; ஞானவான் களாக வாழ்வர்; நிதானம் தவறமாட்டார்கள்.