நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/34. பேதமை

34. “செம்மாக்கும் கீழ்”
(பேதைமை)

கரை ஏறக் கருதாது கறைபடிந்த வாழ்வில் நிறைவு காண்கிறாய்; ‘கதகதப்பும்’ ‘மிதமிதப்பும்’ சூடு பிடிக்கின்றன. இன்ப வாழ்வில் நீந்தி விளையாடுகின்றாய்; அலைகள் எழுச்சியும் வீழ்ச்சியும் தருகின்றன. இன்பம் ஒரு மயக்கம்; அவை நிலைக்கும் என்பது அறியாமை; ஆமையை வெந்நீரில் போடுகிறார்கள்; குளிப்பாட்ட அன்று; மகிழ்வூட்ட அன்று. அது செந்நீரில் வெந்து சாக. அந்த நீர் மிதமான சூட்டில் இதமான இன்பம் அனுபவிக்கிறது அந்த ஆமை, வெதவெதப்பு அதற்கு மிதமிதப்புத் தருகிறது. இன்பம் நிலைத்தது என்று இறும்பூது அடைகிறது. அய்யோ பாவம்; சூடு மிகுகிறது; துடிக்கிறது; உயிர் வெடிக்கிறது. தன்னை இழக்கிறது, அழிவு பெற்றுவிட்டது. இதுபோல உன்நிலைமை ஆகக்கூடாது. பதமாக இருக்கும் போதே ஒருவிதமாகக் கரை ஏறுக. கறை மாறுக; விடுதலை பெறுக இன்பக் கேளிக்கைகளில் ஆழ்ந்து அழிந்து போகாதே.

கடமைகள் காத்துக் கிடக்கின்றன. உடமைகளை இப்பொழுது விடமுடியாது. பெரியவனுக்கு மணம் முடித்தேன்; மகளுக்கு மாப்பிள்ளை; பேரனுக்கு புதுப்பள்ளி; வீடுகட்டியாக வேண்டும் எல்லாம் அரை குறையாக இருக்கிறது. இன்னும் செய்ய வேண்டியவை பாக்கிகள் நிறைய இருக்கு. எப்படி இதனை விட்டுவிட முடியும்? பந்த பாசங்கள் வாழ்க்கையின் நேசங்கள். அறம் துறவு கருணை அருள் இவை எல்லாம் தள்ளிப் போடுகிறான். “என் தாய்க்கு நான் கொள்ளிப் போடவேண்டி இருக்கிறது” என்று சாக்குப் போக்குக் கூறுகிறான். இவன் செய்கை எப்படி இருக்கிறது?

கடலிலே ஒருவன் முழுகி நீராடச் சென்றானாம். “அலைகள் ஓயவில்லை; அலைகள் அடங்கட்டும், நீரில் இறங்குகிறேன்” என்றானாம். அலையும் ஓயப்போவது இல்லை. இவன் நீரில் இறங்கப் போவதும் இல்லை. இல்லில் அகப்பட்டுக் குடும்பச் சுமையை விடமுடியாது. கடமைகளும் தீராது. இவன் அறவாழ்வில் அடிஎடுத்து வைக்க முடியாது. இவர்கள் எல்லாம் சமுசார பந்தத்தினின்று விடுபட முடியாது.

“உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவு இலார்” என்பர் வள்ளுவர். கல்வி நூல் பல கற்றவர்; உயர்குடியில் பிறந்தவர்; தவஒழுக்கம் கொண்டவர். அறிவு முதிர்ச்சி உடையவர் இவ்வளவு இருந்தும் நடைமுறை உலகை அறிந்து வாழ வழி அறியமாட்டார். வீட்டில் மனைவி மக்களோடு போராட்டம். அவர்களை அடக்கி ஆள நினைத்தான். தன் போக்கின்படித்தான் அவர்கள் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். தொழில் துறையில் எல்லாம் தனக்குத்தான் தெரியும் மற்றவர்கள் கற்றுக் குட்டிகள் என்று கூறி அவர்களை அடக்கி வைக்கிறான். பிறர் உரிமைகளை மதிக்க மறுக்கிறான். இவன் வாழ்வு தோல்வியுறுகிறது; மனம் உளைகிறான் களைப்புதான் ஏற்படுகிறது. உலக நடை இது என்று அறிந்து செயல்படுபவர் அறிவு குறைந்தவராயினும் அவர் வெற்றி பெறுவார். அவரால் மற்றவர்களுக்கு இல்லை தொல்லை. விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்தான் எதையும் சாதிக்க முடியும். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதித்தால் அது சாதனை ஆகாது; மற்றவர்களுக்கு அது வேதனையாகும்.

“கல்லாதவரே மிகவும் நல்லவர். ஏன் எனில் அவர்கள் மிகையாகச் சொல்லாதவர்கள்” என்று கூறுவது வழக்கம். இவை எல்லாம் புகழ் மொழிகள் அல்ல; இகழ் மொழிகளே. அதற்கு மாறுபட்டு நாலடியார் நாலு வார்த்தைகள் பேசுகின்றன. கல்லாதவரை இவ்வாறு கூறி ஏசுகின்றன. கல் கல்லாதவரைவிட மேலானது. அது இருக்க கிடக்க, நடக்க, வீடுகட்ட எல்லாவற்றிற்கும் உதவுகிறது என்று கூறுகிறது. இதற்கு ‘மலைப்பிஞ்சு’ என்று அழகான சொல்லும் உள்ளது. கூட்டத்தைக் கலைக்க எதிரிகளைத் தாக்க இந்தப் பிஞ்சுகள் பயன்படுகின்றன. கல் சடப்பொருள், திடப்பொருள் அது ஒருவகையில் பயன்படுகிறது. அறிவு ஜீவியாக இருக்க வேண்டிய மனிதன் கல்லாதவனாகக் கிடந்தால் அவனுக்கும் கல்லுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? அவன் மானிடனாகப் பிறந்தும் உயர்வு பெறத் தகுதியற்றவனாகிவிடுகிறான். அறிவு அற்ற நிலையில் அவன் கல்லைவிடத் தாழ்ந்தவன் ஆகின்றான்.

நாவிற்கு நரம்பு இல்லை என்றால் அது ஒரு வரம்புக்கு உட்படாது; தம்மினும் எளியவர் தம்மிடம் வேலைக்கு அமர்ந்தால் ‘இடு எடு’ என்று ‘கெடு பிடி’ காட்டுவது இன்று நடைமுறை. ‘ஆகாத பெண்டாட்டி அவள் கால்பட்டால் குற்றம், கைபட்டால் குற்றம்’ என்பது பழமொழி. தாம் இட்ட பணிகளைச் சற்றுப் பிசகாசச் செய்து விட்டால் அவர்களை நோக்கிக் கெடு பிடி; திட்டு வசவு. ‘நா காக்க’ என்று கூறியது இவர்களையும் நோக்கியே. பணி செய்பவர் அவர்கள் அடிமைகள் அல்லர், மிடிமைக்காக அவர்கள் பணி செய்கின்றனர். ஆட்களைக் கனிவாக நடத்துவது கண்ணியம் ஆகும்; அது நன்மை தரும்.

சில முரடர்கள்; கல்லாத கசடர்கள்; அவர்கள் தீமை செய்தே பழகிவிட்டவர்கள்; அவர்களைத் திருத்தலாம் என்று திருக்குறள் கொண்டு சொல்கிறாய்; அதை நீ தான் படித்துக் கொண்டிருக்க முடியும். அவனுக்குப் பொருள் விளங்காது. தனி மனிதன் மட்டும் அன்று. இனித் திருக்குறளைப் படித்தால் பயன் இல்லை என்று சமூகம் பேசி வருகிறது. ஆட்சியில் உள்ளவர்கள் இன்று ஊழலில் உழல்கிறார்கள் என்று உலகம் பேசுகிறது. துணிந்து எதிர்க்க முடியுமா? நீ தோல்வி தான் காண்பாய். சில அநீதிகள் கால் ஊன்றிவிட அவற்றையே மூலதனமாக வைத்து இன்று நிறுவனங்கள் நடைபெறுகின்றன. எதையுமே மாற்ற முடியாது என்ற நிலைக்கு வந்து ஆகிவிட்டது. கல் பாறையை அகற்ற நீ கை கொடுத்தால் உன் கைதான் நசுங்கும்; பாறை அசங்காது. அதை அகற்றக் கடப்பாறை தேவைப்படும் அதைவிட இயந்திரத் துக்கி தேவைப்படும். ஒரு பிரளயம் வந்தால் தவிர இந்தக் குப்பைகளை ஒழிக்க முடியாது அதனைப் புரட்சி என்று பேசுகிறார்கள். அதிலும் இன்று நம்பிக்கை அற்றுவிட்டது. நக்சலைட்டுகள் பயங்கரவாதிகள் இவர்கள் உருவாகிவிட்டனர். இன்று இவர்கள் புதுப் பிரச்சனைகள் ஆகிவிட்டனர்.

அதோ அது யார் வீடு, ‘அமைச்சர் இல்லம்’ என்று அழகு தமிழில் அறிவிக்கின்றனர். அங்கே ஒரே கூட்டம் ஏன்? மனு நீதிச் சோழனிடம் சென்று நீதி கேட்க அன்று; அநீதியை விலைக்கு வாங்க; தவறான வழிகளில் சலுகைகளைப் பெற. நியாயத்துக்கே அங்கு விலை பேசப்படுகிறது. அது நிதித்தலம் என்று பேசிக் கொள்கிறார்கள். போன காரியம் வெற்றியா? இல்லை என்று வெறுங்கை காட்டுகிறார்கள். அங்கே நெருங்கிக் குழுமி இருக்கின்றனர். நல்லதும் அங்கே நடைபெறு வதும் இல்லை கெடுதலும் இல்லை; ஏன் அங்குச் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள்? அதற்கு விடை நாலடியார் கூறுகிறது. நெய் இருக்கும் பாத்திரம்; மூடி இறுகத்தான் உள்ளது; எதுவும் கிடைக்காது என்றாலும் அதைச் சுற்றி எறும்புகள் ஏறிக் கொண்டும் இறங்கிக் கொண்டும் இருக்கின்றன. இந்த எறும்புகள் நிலைதான் அதிகாரமும் பணமும் உடையவர்கள் இல்லமும் அதைச் சுற்றி வரும் கூட்டமும்.

எல்லாம் இருக்கிறது என்றாலும் எதுவும் இல்லாதவனாக வாழ்கிறான். வசதிகள் எது இல்லை? இன்றைய மின் அணு இயந்திரங்கள் எல்லாம் நிறைந்துவிட்டன. அரைக்க, வெளுக்க, துடைக்க, எடுக்க, பிடிக்க இவற்றிற்கு எந்திரங்கள் அல்லது எடுபிடி ஆட்கள். அவர் மனைவி ஊதிவிட்டாள். எடை கூடிக் கொண்டே இருக்கிறது. அவள் நடை அதன் இயக்கமும் தடை. பிள்ளைகள் செல்வம் கொடுத்துச் செழிப்பில் கெட்டுவிடுகிறார்கள். என்று பேசிக்கொள்கிறார்கள். சொன்ன பேச்சுக் கேட்பதில்லை. பணியாட்கள் நாடகக் குழுவில் இருந்து வந்தவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள். எங்கும் எதிலும் உண்மை இல்லை; அதைவிட அவனிடமே எந்த நன்மையும் இல்லை. நல்லதே செய்து அறியமாட்டான். நாலு பேர் வாழ வழிவகை செய்யமாட்டான். எச்சில் கையாலும் காக்கையை ஒட்ட மாட்டான். மிச்சம் மீதி எதுவும் பணியாட்களுக்கும் தரமாட்டான். ‘இல்லை’ என்ற சொல்தான் அங்கு எதிரொலிக்கிறது. அவன் மனத்திலும் மகிழ்வு இல்லை; அதற்கு யார் பொறுப்பு? அவனே தான். மற்றவர்களை மகிழ்விக்க நினைக்காதவன் அவன் மட்டும் எப்படி மகிழ்வோடு இருக்க முடியும்? அலுப்புத்தான் அவர்கள் நிலுவையாக நிற்கும்.

விரும்பி உன்னிடம் வருகிறார்கள்; உன் சிறப்புகளைப் பேசிப் பாராட்டுகிறார்கள். நீ நடிகனாக இருந்தால் அவர்கள் ரசிகர்கள்; எழுத்தாளனாக இருந்தால் வாசகர்கள்; ஆசிரியனாக இருந்தால் அவர்கள் மாணவர்கள்; தலைவனாக இருந்தால் அவர்கள் தொண்டர்கள். மதிக்க வந்தவர்கள் அவர்களை அவமதித்து அனுப்பிவிடுகிறாய்; பிறகு நீ தனிமையில் வாடுகிறாய். காரணம் நீ பிறரை மதிக்காமைதான். நீ உண்மையில் மகாமேதாவி என்று கர்வப்படுகிறாய். தலைக்கணம்; அதனால் உனக்குத் தலைவலி ஏற்படுகிறது; தவிர்க்க முடியாது.

தகுதி என்பது உன் மதிப்பீட்டால் வருவது அன்று; மற்றவர்கள் பாராட்டால் பெறுவது. நீ எந்தத் துறையில் இருந்தாலும் உன்னைப் பாராட்டிப் பேச நண்பர்கள் தேவை; ரசிகர்கள் வேண்டும்; விமரிசகர்களும் தேவை. விமரிசனம் கண்டு எதிர்த்து வீரவசனம் பேசுகிறாய்; அதற்குப் பொது வாழ்வில் கால் வைக்கக் கூடாது.

குறைகளும் நிறைகளும் உரையில் எடுத்துக் காட்டுவர். நடுநிலைமையில் இருந்து அவற்றை ஆய்ந்து உன்னை நீ வளர்த்துக் கொள். கலைத்துறைக்கே இது மிகவும் அடிப்படை.

கவிதை ஒன்று எழுதிவிட்டால் தன்னைக் கண்ணதாசன் என்று கூறித் தலை கனக்கின்றான். கதை ஒன்று எழுதிவிட்டால் காண்டேகர் வாரிசு தான் என்று அளக்கிறான். நாடகம் ஒன்று எழுதிவிட்டால் தன்னைப் பம்மல் என்று விம்மிதத்தோடு பறை சாற்றுகிறான். அழகிய உரைநடை எழுதிவிட்டால் தன்னைப் புதுமைப் பித்தன் என்று பிதற்றுகிறான். இப்படி ஒவ்வொரு துறையிலும் தனக்கு விஞ்சியவர் இல்லை என்ற தறுக்குபவர் பலர். இவை வீண்செருக்கு; பாராட்டு என்பது பிறரிடமிருந்து பெறுவது. உன்னையே நீ உயர்த்திப் பேசுவது தற்புகழ்ச்சி என்று கூறுவர். இப்படியே உன்னை நீ புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தால் உன்னைப் பாக்கத்து மருத்துவமனைக்குத் தள்ளிச் சென்றுவிடுவர். பத்துப்பேர் வந்து மருத்துவம் பார்த் தாலும் உன் பித்த நிலையை மாற்ற முடியாது. எதுவும் மிகையாகக் கொண்டால் அது பிறர் நகையாக மாறிவிடும். உனக்கும் தகுதி இருக்கிறது; மேலும் உழைத்து உயர்வு அடைக. நீயே உன்னைப் பற்றிப் பேசாதே. அஃது உனக்குக் கேடாக முடியும்; போட்டிகள் பெருகும். உன்னை வீழ்த்த மற்றவர்கள் முயல்வர். அடக்கம் அழகு தரும்.