நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/36. கயமை

36. கசடு அற வாழ்க
(கயமை)

கசப்பான செயல்களைச் செய்பவர் கயவர் எனப்படுவர். யார் யார் எத்தகைய கசப்புகளைச் செய்கின்றனர். நாலடியார் கூறுவன இவை; மகன் இளையன்; என்றாலும் இன்பத்துக்கு வளையான்; கட்டியவளோடு ஒட்டி உறவாடுகிறான். வாழ்க்கை அன்பில் சுழல்கிறது அமைதி தவழ்கிறது. பிரச்சனையே இல்லை. தந்தை முதியர்; என்றாலும் புது தாரம் வேண்டும் என்கிறார் மனைவி புனிதவதியாகிவிட்டாள். இவர் இச்சைக்கு அவள் பச்சைக் கொடி காட்ட மறுக்கிறாள். பணத்திமிர் ‘துரு துரு’ என்று அவரைத் தவறான செயலுக்குத் துண்டுகிறது. இது கேட்பதற்குக் கசப்பாகத்தான் இருக்கிறது. அதனால் இது கயமை எனப்படும்.

தவளை நீரிலேயே கிடக்கிறது; என்றாலும் அதன் சொரித் தன்மை நீங்குவது இல்லை. அழுக்கு அகல்வது இல்லை. நூல் பல கற்றவராயினும் பால் விருப்பு அவர்களை விடுவது இல்லை. பெண்பால் அவர் கண்பார்வை சென்று அவளை வம்புக்கு இழுக்க அது விசாரணைக்குரிய செய்தியாக மாறுகிறது. இதுவும் கசப்பான செய்திதான்; ஆகவே இது கயமை ஆகும்.

“கொடிறு உடைக்கும் கூன் கையர்க்கு அல்லால் படிறு உடையவர் படியமாட்டார். ஈர்ங்கை விதிரார்” “அடித்தால் தான் அம்மியும் நகரும்”, “அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவார்” என்பவை பழமொழிகள். பச்சை மரமானாலும் உளிகொண்டு செதுக்கினால்தான் அது நெகிழ்வு தரும். வன்மை உடையவர் அன்புக்குப் பணியார் அச்சுறுத்துதலுக்கே பணிவார். இஃது அவர்கள் கீழ்மையாகும். கசப்பான செய்தி. அதனால் இது கயமையாகும்.

மலை நலம் நினைப்பான் குறவன்; நிலம் நலம் நினைப்பான் உழவன்; செய்த நல்வினை நினைத்து நன்றி பாராட்டுவர் சான்றோர்; கீழ்மகன் குறைகளையே பேசி இழிவுபடுத்துவான். அவனுக்கு நல்லதே தெரியாது இதுவும் கசப்பான செயல்; கயமையாகும்.

“புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்வதைவிட உயிர்விடுவது அறம் கூறும் ஆக்கம்” என்பார் வள்ளுவர். நேரே பார்க்கும்போது “இந்திரன்” என்றும் “சந்திரன்” என்றும் பேசிவிட்டுச் சற்று மறைந்ததும் அவர்களை இழித்தும் பழித்தும் கூறுபவர் உளர். அதை விட நேரே; ‘டேய்! நீ அயோக்கியன், கீழ்மகன்’ என்று கூறிவிடலாம். நீ ஒரு கோழை; அது மட்டும் அன்று அறிவிலி; விண் பெருமை மற்றவர்களைக் குறைவாகப் பேசுவதால் நீ மிக உயர்ந்தவன் என்பது உன் கணிப்பு; உன் சொல் கசப்பு; அதனால் நீ கயவன் ஆகிறாய்.

கவர்ச்சியாக உடை உடுத்தி அதை வைத்துத் தொழில் நடத்துவது பெண்மைக்கு இழுக்கு. மகளிர் அழகாக இருப்பது பிறரைக் கவர அன்று. பிறர் நேசிக்க; அழகு மகிழ்ச்சியை ஊட்டலாம். அஃது என்றும் இன்பம் தருவது; கவர்ச்சி விபச்சார நோக்கு உடையது. பிறரைக் கெடுக்க முயல்வது; அதனால் கசப்பானது; கயமையும் ஆகும்.

“நூறு பிழை செய்தாலும் மன்னிக்க” என்று கேட்டுக் கொண்டாள் சிசுபாலனின்தாய்; அதுவரை கண்ணன் பொறுத்தான். அதற்கு மேல் சென்றபோது தான் ஒறுத்தான். பிழைகள் நூறு செய்தாலும் சான்றோர் பொறுப்பர். ஒரு நன்மை செய்திருந்தால் அதைப் பாராட்டித் தீமைகளை மன்னிப்பர். கீழோர் எழுநூறு நன்மைகள் செய்து ஒரு சில தவறுகள் செய்துவிட்டால் அவற்றையே எடுத்துப் பேசுவர். இது கீழ்மையாகும்; கசப்பான செய்தி; எனவே கயமையாகும்.

காட்டு யானை அதன் தந்தம் அழகு உடையது; கூர்மைமிக்கது; வலிவுடையது; வீட்டுப் பன்றி அதனை ஏன் காட்டு யானைபோல ஆக்கக்கூடாது என்று ஒரு அறிவாளி நினைத்தானாம். அவன் என்ன செய்தான்? வைரக் கற்களைப் பதித்து ஒரு பூண் செய்து அதற்கு மாட்டினான். அப்பொழுதும் அது யானைபோல் ஆக முடியவில்லை. அதன் கம்பீரம் இதற்கு எப்படி வரும்? இது சகதியைத் தேடிக்கீழ்மையில் வாழ்கிறது; மட்டமான மனிதர்களை எவ்வளவு கூர்மைப்படுத்தினாலும் அவர்கள் தம் திட்டங்களில் இருந்து மாறுவது இல்லை. தம் இட்டமான செயல்களையே செய்து சீர் அழிவர்; பேர் கெடுவர். ஊரார் இகழ்வர். இவர்கள் வாழ்வு கசப்புமிக்கது. கயமை உடையது ஆகிறது.

தாமரை இலை நீருக்குள்ளும் அமிழாது, தன் எல்லைக்கு மேலும் நீளாது. ‘நீரளவே ஆகுமாம் நீராம்பல்’ என்பது பழைய பாட்டு; இந்தத் தாமரை ஒரு நிலையில் நிற்காது. தளர்ந்து கொண்டே இருக்கும். தண்டு ஊன்றி நிலைபெறவும் செய்யாது. அப்படியே அழிந்துபோக வேண்டியதுதான். ஒரு சிலர் இப்படிப் பகற்கனவு கண்டு கொண்டே வாழ்க்கையை நடத்துவர். “இப்படிச் செய்தால் லட்சங்கள் வரும்; அப்படிச் செய்தால் லட்சியங்கள் நிறைவேறும்” என்பர். இருந்த இடத்தில் இருந்து கொண்டே கோட்டை கட்டுவர். ஒரு சிறு துரும்புகூட எடுத்துப் போடமாட்டார்கள். இதைப் போலவே காலமெல்லாம் பேசிக்கொண்டு எந்த அளவும் உயரமாட்டார்கள். உள்ள நிலையிலேயே இருந்து தேய்ந்துவிடுவர். கசப்புமிக்க வாழ்வு; பிறரை ஏமாற்றிக் கொண்டே காலம் ஓட்டுவர். லட்சங்கள் வரும் என்று சொல்லிக்கொண்டே தாம் பிறர் மதிக்க வாழ்வர். இவர்களும் கயவர்களே.

நெட்டி இருக்கிறதே அது கெட்டியான பொருள் அன்று. ‘தக்கை’ என்று கூறுவர். அது நீரில் வளர்வதுதான்; மேற்பகுதி கூடப் பசுமை பெற்று இருக்கும். அடிப்பகுதி பசையற்று வறட்சியாக இருக்கும். அதுபோலப் பலர் ஈவு இரக்கம் காட்டாமல் கல்நெஞ்சு உடையவராக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். வசதிகளுக்குக் குறைவு இல்லை. நினைத்தால் மற்றவர்களுக்கு உதவலாம். ஆனால் உதவமாட்டார்கள். கேட்டால் அவர்கள் தங்களுக்கு உள்ள கஷ்டங்களை விவரித்துக் கூறுவர். ஊதாரித்தனமான செலவுகள் செய்வர். தன் சொந்த நலனுக்கு எது வேண்டுமானாலும் செய்து கொள்வர். மனைவியையும், வீட்டையும் அலங்கரிப்பர். மற்றவை அவர்களுக்குப் பொருட்டு அல்ல. கடின சிந்தையர்; கயவர் இவர்.