நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/8. பொறையுடைமை
அற்ப சகவாசம் உயிர்க்கு இறுதி விளைவிக்கும்; பிராணசங்கடம். யாவரோடு பேசுவது யாவரோடு பழகுவது என்பதைச் சிந்தித்துப்பார். சின்னவர்களோடு சிநேகம் கொண்டால் அவர்கள் தம் பின்ன புத்தியைக் காட்டுவர். தொடர்ந்து இன்னல்களைத் தந்து கொண்டே இருப்பார்கள்; அதனால் உனக்குக் கொதிப்பு வரும்; மதிப்புக் குறையும். அவர்களைவிட்டு விலகு.
சிறியோர் பிழை செய்வர்; அறிவுடைய பெரியோர் அவற்றை அழிவு தரும் என்று கொள்ளார். அவன் கல்லெடுத்து அடித்தால் நீ சொல்லெடுத்துத் தடுப்பது நல்லது; நீ வில்லெடுத்து விறல் காட்டக் கூடாது. சின்னக் கல்லால் மலம் தொட்டால் அது பிசுபிசுக்கும்; கசகசக்கும். பதிலுக்குப் பதில் என்பது மிருக நிலை; உதைக்கு உதை என்பது பழைய கதை. அவன் உன் பல்லை உடைத்தால் உடனே அவன் பல்லைக் கழற்ற முயற்சி செய்யத் தேவை இல்லை. அவன் வெட்டுகிறான்; நீ அக் கத்தியைத் தட்டிப் பறிக்க வேண்டுமே தவிர அவனை நீயும் வெட்டக்கூடாது; இருவருக்கும் பின் கட்டுப் போட வேண்டி வரும். மருத்துவச் செலவு; அருத்தமே இல்லை.
பெற்று வளர்த்த தாய் சற்றுக் கடுஞ்சொல் சொன்னால் அது சுடு சொல் என்று எடுக்காதே; அவள் அடிமனம் உன்னை அடிக்க அன்று; அனைத்துத் திருத்த, அன்புடைய மனைவி ஆவேசப்படுவாள். தட்டு முட்டு எடுத்துக் கட்டு மீறி வீசுவாள்; அவை ஒன்று இரண்டு பழுதுபடும்; அழுது தொலைப்பாள். உடனே நீ மல்யுத்த வீரனாக மாறி, அவளை மாறிக் குத்த முனையாதே; அது சுத்த முட்டாள்தனம்; அவள் உன்னை அடிக்கும் ஆற்றல் இல்லை; உனக்கு ஊறு நிகழ்த்திப் பேரு எடுக்க விரும்பவில்லை. அதனால் அவள் தன் சினத்தைச் சிறுசுகளிடம் காட்டுகிறாள்.
உன் உயிர் நண்பன் செயிர்த்துப் பேசுவான். அதற்கு உட்கிடக்கை இருக்கும். அவனை வெறும் குடுக்கை’ என்று கருதித் துறக்காதே. பகைவன் சிரிக்கப் பேசுவான். அவன் விரிக்கப் பார்ப்பது சூழ்ச்சி வலை; அதில் ஆழ்ச்சிபடாமல் எழுச்சி கொள்க. புறஉரை வேறு; அகநிலை வேறு; இதனை அறிந்து பழகுக.
ஆண்டுகள் பல ஆகின்றன; எனினும் நரையற்று இருக்கின்றான். அவலம் இல்லாமல் அகமகிழ்வுடன் இருக்கின்றான். காரணம் என்ன?
விழித்து வாழ்கிறான்; சுற்றுப்புறத்தை அறிகிறான். அறிவது அறிந்து அடங்கி வாழ்கிறான், இயன்றவரை இல்லாதவர்க்கு நல்குகிறான்; பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்பி வகுத்துவிட்டு எஞ்சிய ஈவு கொண்டு இன்புற்று வாழ்கிறான் நூற்றுக்கு நூறு அவன் வாழ்க்கையில் வாங்கும் மதிப்பெண். தானும் நிம்மதியாக வாழ்கிறான்; மற்றவர்களையும் வாழ விடுகிறான். உலகம் மகிழ, அம்மகிழ்வில் அவன் புகழ்வு காண்கிறான். நிறைவு அவன் மனம்; அதனால் அவனுக்கு இல்லை யாதும் குறைவு.
பாலும் தேனும் கலந்தால் இனிக்கும் என்பார் வள்ளுவர்; இப்படிச் செறுகிக் கிடந்தது நட்பு; இடையில் சிறிது விரிசல்; அந்தக் குரிசல் செய்வது தவறு; எனினும் நீ அதைத் துற்றித் திரியாதே. நட்பின் பரிசில் என்று அதனைப் பொறுமையுடன் ஏற்றுக் கொள்; மறுபடியும் பழக இயலவில்லை என்றால் சொல்லாமல் கொள்ளாமல் விலகி விடு.
கண்ணாடி சன்னல் நட்பு; உள்ளிருந்து கொண்டு கல் எறிந்தால் இருவர்மீதும் படும். வெளியே வந்துவிடு; கண்ணாடி உடைப்பானேன்? கல்லெடுத்து அடிப்பானேன்? மெல்ல அவனை விட்டு விலகிவிடு; கசப்புக் காட்டாமல் மெல்லக் கழற்றிக் கொள்; நட்பு நிலைக்கும்.
“பேயோடு உறவு கொண்டாலும் பிரிவு அரிது.” என்பர். அதனை விட்டு விலகப் பிடிக்காது; விலங்குகளும் பழகிவிட்டால் ‘காய்’ விட்டுக் கசந்து கழலுதல் செய்யாது; இசைந்தவர் பிரிதல் என்பது கசந்தது ஆகும். நண்பனிடம் கூடிவிட்டுப் பின் குறை கண்டு அவனை விட்டு ஓடிவிடுவது நாடத்தக்கது அன்று. ஒட்டி உறவாடிய பின் வெட்டி ஒதுங்குதல் கெட்டித்தனம் ஆகாது. பிரிந்தவர் பின் கூடினால் பேசவும் முடியாது; அதனால் பிரிவே கூடாது என்பதை மனதில் கொள்க. பொறுமை தரும்.”
பெரியவர்கள் பெரியவர்கள்தான்; தவறுகள் என்பதே தெரிந்து செய்வன அல்ல; தப்பித் தவறிச் செய்தாலும் ஒப்புக் கொண்டு மன்னிக்கும் மாண்பு இவர்களிடம் இருப்பதால் பழகிய பின் யாரும் இவர்களை விட்டுப் பிரிவது இல்லை.
“நச்சு நச்சு என்று செய்யும் தவறுகளை எல்லாம் சுட்டிக் காட்டி அச்சுறுத்திக் கொண்டிருந்தால் யாருமே ஒட்டி நிலைக்க மாட்டார்கள். நண்பர்கள் மட்டும் அன்று; நம்மை நாடி வரும் தொழிலாளர்கள் கூட, கண்டித்துக் கொண்டே இருந்தால் அவர்கள் சண்டை போட்டு விட்டு உன்னை ஒண்டிக் கட்டையாக்கி விட்டுப் போய் விடு வார்கள். ஆறுதல் தந்து ஆதரிப்பதுதான் அறிவுடைய ஆன்றோர் தம் செய்கை, கடன்; உட்கை; எல்லாம்.”
“சுட்டாலும் பால் சுவை குறையாது; சங்கு சுட்டாலும் வெண்மை தரும். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. வயிறு சுட்டாலும் தாம் கெட்டுவிட்ட நிலையைப் பறை எடுத்து அறைந்து கொண்டிருக்கமாட்டார்கள். கண்டவரிடம் உன் கடுமையை எடுத்துக் கூறினால் அவர்கள் உன்னை விடுவிக்கவா போகிறார்கள்? கீழோரிடம் எதையும் சொல்லி நீ தாழ்ந்து போகாதே. யாரிடமும் சொல்லாமல் இருக்க முடியாது; உன் துயரம் தீர்ப்பவர் ஒரு சிலரை நீ சந்திக்கக் கூடும். அவர்கள் செவி சாய்த்துக் கேட்பார்கள்; வழி காட்டி வகைப்படுத்துவார்கள்; ஒளி கூட்டி உன்னை உயர்த்துவார்கள். தக்கவர்களிடம் சொல்லிக் கொள். தகாதவரிடம் விலகிக் கொள்; அவர்கள் ஆற்றப் போவதும் இல்லை; தீர்க்கப்போவதும் இல்லை; எதற்காக எடுத்துக் கூறுகிறாய்? விடு;விடு; விடு.”
“இன்பம் ஒரு போதை; அதன் வேட்கை தீர்க்க இயலாது; தொடர்ந்து அதன்பின் சென்று கொண்டு இருக்கிறாய்; நிழலைத் தேடுகிறாய்; அது நீண்டு கொண்டே போகிறது. நிழலின் நிஜம் இருட்டுதான். அதில் இருக்கும் வரை அது குருட்டுத்தனம். வெளிச்சத்திற்கு வா; பழி தரும் செயல்களைச் செய்து இன்பத்துக்கு வழி தேடாதே; போதைமருந்து இன்பம் தரும்; ஆனால் அது போதமன்று; ஏனைய இன்பங்களும் மயக்கம்; அதில் ஈடுபடத் தயக்கம் காட்டு, அதுவே உனக்குப் புகழ் தரும்.
“ஏன் வால் அறுத்துக் கொண்டாய்?” என்று கேட்டால் “வைகுந்தம் பார்க்க முடிகிறது” என்கிறது குள்ள நரி. தான் கெட்டது; மற்றவர்களையும் கெடுக்கிறது. இது நரிக்குணம்; மதங்கொண்ட யானை அது கீழ்மையைக் கருதாது. அது கரிக்குணம்.
“நல்லோர் தாம் கெட்டுவிட்டாலும் மற்றவர்கள் கெட்டுப் போக வழி கூறமாட்டார்கள். அழிந்து போக நினைக்கமாட்டார்கள். பசி என்பதற்காகப் பரதேசிப் பயல்களிடம் கை நீட்டமாட்டார்கள். கீழ் மக்களை அண்டிப் பாழ்பட்டுப் போகமாட்டார்கள். வானமும் வையகமும் தாமே வந்து காலடியில் விழுவதாயினும் பொய்கலந்த சொல் அவர்கள் பேசமாட்டார்கள்.”