நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/பிரளய தாண்டவம்

25. பிரளய தாண்டவம்

வானப் பரப்பில் வெண் பஞ்சுப் பொதிகளென மினுக்கும் மேகங்களைத் தழுவி நிற்கும் பனிமலை. படரும் ஆசைகளைப் போல எழுச்சி பெற்று நிற்கும் சிகரங்களுக்கெல்லாம் நடுநாயகமாக விளங்கும் கைலாச சிகரம். நன்றாக வார்த்தெடுத்த வெண்கல மணியின் பேதமற்ற நாத அலைகளைப் போல ‘ஓம் ஓம்’ என்ற ஒலி அலைகள் காற்றைச் சாடி மோதுகின்றன. சங்கு முழங்குகிறது. மணிகள் ஒலிக்கின்றன. ‘ஜண் ஜண், ஜன, ஜன ஜண்’- எட்டுத் திசைகளிலும் இனிமையை வாரி வழங்கும் ஒர் ஒலிக் காவியம் எழுத்தில் எழுத முடியாத ஒர் ஒசை ஒவியம்.

பாடகமும், சிலம்பும், தண்டையும், சலங்கையும், வளைகளும், மணிகளும் ஒலிக் கலவையாக ஒன்று கூடின. ஒலிக் கலவையின் நடுமையமாக மிருதங்கத்தின் மேல் மிதித்தால் உண்டாகின்றாற் போன்ற சத்தம். அது பாதங்கள் தரையை மிதிக்கும் நாதம். நாதத்தைக் குழைய வைக்கும் படியான பறை. அடிமை கொள்ளும் மென்மை. நிருத்தியம், அது சாதாரண நிருத்தியமில்லை - நிருத்தியத்தின் நிருத்தியம். பரதத்தின் பரதம்; ஊழியின் ஊழி; சலனத்தின் சலனம், கூத்தின் கூத்து, அவிநயத்தின் அவிநயம்; ஆடுகிறவனும், ஆடுகிறவளும் ஆடவில்லை அங்கே! ஆட்டுகிறவனுடன் - ஆட்டிவைப்பவன் ஆடிக் கொண்டிருக்கிறான்!

பிரம்மசிருஷ்டியின் திகிரி வேகத்தின் எல்லையை மீறி தாகத்தின் எல்லையைத் தொட்டுத் துழாவி எட்டி இறுகிக் கொண்டிருந்தது. உலகத்தின் ஆட்டத்தில் பூதங்கள் ஐந்தும் ஆடின. பூதங்களை உண்டாக்கிய பரம் பொருள், பரம் பொருளை உண்டாக்கிய மாயை, மாயையை உண்டாக்கிய சூன்ய வஸ்து எல்லாம் கிடுகிடாய்த்துக் கொண்டிருந்தன. சலசலத்து வெலவெலத்துக் கொண்டிருந்தன.

“என்ன நடக்கிறது? ஏன் நடக்கிறது? எங்கு நடக்கிறது? ஐயோ!” தேவர்களை எண்ணி மானிடர்கள் கலங்கினார்கள். அசுரர்களை எண்ணித் தேவர்கள் கலங்கினார்கள். தருமத்தை எண்ணி அசுரர்கள் கலங்கினார்கள். மண், விண், பாதலம், கடல் எல்லாம் கலங்கின. எண்ண முடியாததை எண்ணிக் கலங்கின. காண முடியாததைக் கண்டு கலங்கின. உணர முடியாததை உணர்ந்து கலங்கின. கதித்தன, அதிர்ந்தன, பிதிர்ந்தன. எல்லாம் ஆயின!

நயனங்கள் மூன்றும் கீறி வைத்த நெருப்புத் துண்டங்களெனக் கனன்றன. சடா முடியில் நாகம் முசுமுசு என்று மூச்சை விஷமாக்கி, விஷத்தைக் காற்றாக்கி வெளித்தள்ளியது. விழிகளின் கனற்சியும் விஷ மூச்சின் வெப்புமாகத் தேங்காய்த் துண்டமெனத் தோன்றிய சீதப் பனி மதியின் பாதிப் பிறை வடிவை வெதுப்பு வெதுப்பென்று வெதுப்பின. கங்கை சுட்டாள், சடையிடையே செருகிக் கிடந்த கொன்றை மலர்க் கொத்துக்களும் தாழைமடல்களும் வாடிக் கருகின. அக்னியைச் சிருஷ்டிக்கும் பிரளய வாயில்களா அந்த விழிகள்? பிருதிவியை மிதித்து மிதித்துச் சிதைத்து அழித்தொழித்து இல்லையாகும்படி செய்து விடவா அந்தப் பாதங்கள் இப்படி வெறிக் கொண்டு விட்டன! கரங்கள்! அவை ― கரங்களா, அல்லது மின்னல்களா? கரங்கள் ஆடிக் களிக்கின்றனவா? கரங்களில் பிடித்திருக்கின்ற திரிசூலம் ஆடிக் களிக்கின்றனவா? ஐயோ! ஒன்றும் புரியவில்லையே? ஆட்டுவது யார்? ஆடுவது யார்? ஆட்டப்படுவது எது? எது? எது? ஏன்? ஏன்? ஏன்…?

ஊழி வந்துவிட்டதா? எம்பெருமான் பித்தனாகி விட்டானா? சடையாடச் சடை பெற்ற பிளையாட, பிறை கொண்ட சிரம் ஆட, சிரம் கொண்ட உடல் ஆட, உடல் கொண்ட தராதலம் ஆட ஆட்டம் ஒரே ஆட்டம்! ஓய்வு ஒழிவில்லாத ஆட்டம் முக்கண்ணன் ஆடுகின்றான்; யூத கணங்கள் ஆடுகின்றன. எட்டுத் திசைகளும் ஆடுகின்றன. எட்டுத் திசைப் பாலகர்களும் ஆடுகிறார்கள். மால் ஆடுகின்றான், மறைகள் ஆடுகின்றன. மறைகளைப் படைத்த பிரமன் ஆடுகின்றான். இந்திரன் ஆடுகின்றான். தேவர்கள் ஆடுகின்றனர். விநாயகன் ஒரு மூலையில் தன் யானைப் பாதங்களை மிதித்து ஆடுகிறான். குழந்தை முருகனும் தாறு மாறாக மிதித்து ஆடுகிறான். நந்தி சாட்டையை வீசி எறிந்து விட்டு ஆடுகிறான். நாட்டியப் பெண்களாகிய கந்தர்வ சுந்தரிகளெல்லாம் ஆடுகின்றனர்.

எம்பெருமானின் சரீரத்தைச் சேர்ந்த ஜட, ஜீவ, சேதனாசேதன வஸ்துக்களெல்லாம் ஆடுகின்றன. மான் ஆடுகிறது, மழு ஆடுகிறது, கங்கை ஆடுகிறாள், பிறை ஆடுகிறது. ஆனால்…?

அச்சரீரத்தின் உபாங்கமாகிய உமை ஆடவில்லை. உமையின் கருவிழி ஆடவில்லை. அந்தக் கருவிழிகளின் இமைகள்கூட அசையவில்லை. அர்த்தத்தின் அர்த்தம்போல, விளக்கத்தின் விளக்கம் போல, புரிந்தும் புரியாத அமைதியோடு அவள் வீற்றிருந்தாள்.அது கையாலாகாத அமைதியா? சினத்தின் அமைதியா? பொறுமையின் அமைதியா? பொறாமையின் அமைதியா? யார் கண்டார்? யார் காண முடியும்? யாருக்குத் தெரியும்?

கைலாசபதியின் மான் தோல் விரித்த ஆசனம் வெறுமையாக இருந்தது. அதனருகே இருந்த ஆசனம்! ஏற்றி வைத்த குத்து விளக்கா? எழுதி வைத்த சித்திரமா? செதுக்கி வைத்த சிலையா? இல்லையானால், உருக்கி வைத்த பொற் பிழம்பா? அமைதியின் வடிவாக வீற்றிருந்தாள் எம் அன்னை. அவளைச் சுற்றி ஒரே ஆட்டம், ஒரே ஓசை. ஒரே பிரளயம்! அவளுக்கு உள்ளேயோ ஒரே அமைதி. ஒரே தனிமை, ஒரே சிந்தனை. அவள் தாய் அல்லவா? எனவே, தாயாகவே வீற்றிருந்தாள்.

கடல் வானை முத்தமிடுகிறது. திசைகள் நேர் எதிரெதிரே முட்டிக் கொள்கின்றன. எல்லை ஊரை விழுங்குவதைப்போலப் பஞ்சபூதங்கள் உலகை விழுங்கத் தயாராகின்றன. தரை, வானம், கடல், பாதாளம், திக்கு, திகந்தம் என்ற பேதங்கள் குன்றுகின்றன. ‘எல்லாம் சமாப்தி’ என்ற அபேதம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. சிவம் உலகைச் சவமாக்கும் முயற்சியில் முனைந்துவிட்டது. உயிர்களைக் காக்க வேண்டிய பேருயிர் உயிர்களை விளையாடி வேதனைக்குள்ளாக்கத் தொடங்கிவிட்டது. கண்ணைத் திறந்து பார்க்க வேண்டிய நேரத்தில் கண்ணிருந்தும் காண விரும்பாதவள் போல உட்கார்ந்திருக்கிறாள். பொறுப்பை உணர்த்த வேண்டியவள் பொறுப்பில்லாதவளாகிவிட்டாளோ?

ஓலம்! ஓலம்! ஓலம்! ஈரேழு பதினான்கு புவனங்களிலும் வாழ்கின்ற உயிர்க்குலங்களின் வேதனை ஓலம்.அழிகின்ற நேரத்திலும் அழியாத ஆசையின் ஓலம். தான் அழிந்தாலும் அழியாது நிற்கும் ‘தனது’ இடுகின்ற ஓலம். நம்பிக்கையின் இறுதி மூச்சு. உயிரின் அந்திமக் குரல். பாவத்தின் பரிதாபத்தை எடுத்துரைக்கும் இரைச்சல். அழிக்கின்றவனும் அவன் இடமும் எஞ்சி நின்றன.மற்றவை அழிந்து கொண்டிருந்தன.

தாயின் கண் திறந்தது. உமைக்கு உடலெல்லாம் செவிகளாயின. உயிர்களின் ஓலத்தைக் கேட்டாள். உடலெல்லாம் கண்களாயின. அந்திம காலவேதனையைப் பார்த்தாள். உடலெல்லாம் மனங்களாயின. பிரளயத்தின் வேதனையை உணர்ந்தாள்.

கேட்டாள், பார்த்தாள், உணர்ந்தாள். உணர்ந்தவள் கிளர்ந்தாள். எழுந்தாள், ஆடாத கருவிழிகள் ஆடிச் சிவந்தன. அசையாத இமைவில்கள் அசைந்து வளைந்தன. புருவம் சுளித்தது. பவழச் செவ்விதழ்கள் கோணின.

சிலம்பும் மெட்டியும் ஒலிக்கத் தரை மேல் ஓங்கி மிதித்தாள். இலட்சோபலட்சம் கண்டா மணிகளோடு கூடிய மாபெருங் கதவொன்றைக் காலால் உதைத்தது போன்ற ஓசை உண்டாயிற்று. அந்தப் பேராசையில் அடங்கி நின்றது எம்பொருமானின் பிரளய ஓசை. எம்பெருமான் திகைத்தான்! ஓசையை அடக்கிய பேரோசை என்ன வென்று பார்த்தான். பார்த்தவன் பதைத்தான், பதறினான்.

உமை வலது பாதத்தை ஓங்கிக் கொண்டிருந்தாள்.எம்பெருமான் அவளை நோக்கி ஓடினான். எரித்த விழிகள் மூன்றும் சிரித்தன. பாய்ந்த திரிசூலம் பதுங்கியது. மிதித்துத் துள்ளிய கால்கள் பதித்து நடந்தன. கங்கை குளிர்ந்தது. தாழையும் கொன்றையும் மணம் வீசின. பிறை நிலவு பொழிந்தது. நாகம் படம் விரித்து மகிழ்ச்சியாட்டம் போட்டது.

“தேவீ என்ன இது? உனக்கு ஏன் இந்தக் கோபம்?”

உதைப்பதற்காகத் துக்கி ஓங்கிய பாதம் அவன் மார்புக்கு நேரே அப்படியே நின்றது. ஒற்றைக் காலால் நின்று கொண்டே அவனை ஏறிட்டுப் பார்த்தாள் உமை.

‘ஐயோ! பார்வையா அது? விழிகளின் சவுக்கடி கண்களின் போர்.’

“ஓகோ! நான் மன்மதனை எரித்து நீறாக்கியபோது என்னைப் பார்த்துப் பழகிக்கொண்ட பார்வையோ இது” - எம்பெருமான் குறும்புச் சிரிப்புச் சிரித்தான். எம்பெருமாட்டி நெருப்பாய் எரிந்தாள்!

“தேவிக்குத் தரையின் பலத்தைக் கால்களால் பரீட்சிக்க வேண்டிய அவசியம் என்னவோ?”

“எல்லாம் தேவனுக்கு நேர்ந்த அவசியம்தான்!”

“ஓ! நான் ஆடியதைக் குறிப்பிடுகின்றாயா? எனக்கு இது விளையாட்டு. இப்படியே செய்து வழக்கமாகிவிட்டது. இந்த யுகாந்த நாடகத்தை என்னால் நிறுத்த முடியவில்லை.”

“உயிர்களை அழிப்பது உங்களுக்கு நாடகமாக இருக்கலாம். வழக்கமான விளையாட்டாக இருக்கலாம். ஆனால் நான் பெற்றவள், தாய்! பாசத்துக்காகவும் அன்புக்காகவும் சரீரத்தைச் சுமந்து வாழ்கிறவள்.”

“இருக்கட்டுமே, தேவீ! அப்படியே இருந்தாலும் பிறப்பிடமாயிருந்தவளைவிடப் பிறப்பித்தவனுக்கு உரிமை அதிகம்தானே?”

“ஆள்வதுதான் உரிமைக்கு அடையாளம், அழிப்பது அல்ல”

“நான் என்ன செய்யலாம், பார்வதி? இந்த உலகத்தை வசதியோடு வாழ்விக்கிறபோதெல்லாம் அங்கிருப்பவர்கள் என்னைப் பற்றி நம்புவதோ, உணர்வதோ இல்லை! நான் ஏதாவது கஷ்டங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தால்தான் என்னை நினைக்கிறார்கள்; என்னை நம்புகிறார்கள்.”

“குழந்தைகள் முருகனும், கணபதியும் நம்மை மறந்துவிட்டால் அவர்களுக்குக் கஷ்டத்தை உண்டாக்கியா நாம் அவர்களது பெற்றோர் என்பதை உணர்த்துகிறோம்?”

“நீ சொல்வது சரிதான்! ஆனால் இங்கிருந்து நான் எதை ஆடினாலும் அதன் சுழற்சி வேகத்தை உயிர்கள் சமாளித்துத்தான் ஆக வேண்டும். காரணம்; இது ருத்திர பூமி. ரெளத்திரத்தை உண்டாக்கும் இடம். சம்ஹாரத் தொழில் நிகழும் களம். நீ ரஸிக்கும்படியான கலைத்தாண்டவத்தை நான் இங்கு ஆட முடியாதே பார்வதி. என்ன செய்வது? கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.”

“ஏன் முடியாது? எல்லாம் முடியும். வெறியாட்டம் ஆடாமல் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஆடினால் அது மனோரம்மியான நிருத்தியமாக இருக்கும். நீங்கள் திரிசூலதாரியாகத் தாண்டவம் ஆடத்தான் துறுதுறுத்துப் போய்த் திரிகிறீர்கள். அதனால்தான் உங்களால் முடியவில்லை.”

“உண்மைதான்! இந்த அபூர்வமான கலை மனத்தை உயர்த்தப் பயன்பட வேண்டும். வெறும் ஆசை ஆபாசங்களைக் கிளறி மனத்தை அழிக்கும் வெறியாட்டமாகப் பயன்பட்டுச் சீரழிந்துவிடக்கூடாது!”

“நல்ல வேளை! உலகத்தவர்களும் இதை வெறியாட்டமாகப் பயன்படுத்திவிடாமல் பரத முனிவர் காப்பாற்றிவிட்டார். அவர் செய்த பெருந்தொண்டினால்தான் உலகத்தில் இது ஒரு புனிதமான கலையாக மட்டும் இருக்கிறது.”

“என்னவோ, போ தேவீ…! உலகத்தார் வாழப் பயன்படுத்தும் கலையை நான் அழிக்கப் பயன்படுத்துகின்றேன். என் தொழிலும் நானும் செய்த பாவம் இது!”

“ஒன்று செய்தால் என்ன?”

“என்ன செய்ய வேண்டும், தேவீ!”

“இந்த மகோன்னதக் கலையை இதுவரைதான் அழிப்பதற்கென்றே பயன்படுத்திவிட்டீர்கள். உலகின் சம்ஹாரத் தொழிலைச் சில யுகங்களுக்குப் பஞ்ச பூதங்களே தாமாகச் செய்து கொள்ளட்டும். நாம் இருவரும் உலகத்துக்குப் போய் வாழ்வு கொழித்து உயர்வதற்கு இந்தக் கலையைப் பயன்படுத்திப் பார்ப்போமே?”

“அது அவ்வளவு சுலபமாகச் சாத்தியமாகிவிடுமா, பார்வதீ!”

“ஏன் ஆகாது? நான் சொன்னபடி கேட்டால் ஆகிவிடும். நீங்கள் கேட்கத்தான் வேண்டும்!”

“அவசியம் கேட்கிறேன், சொல் தேவி.”

“நாளையிலிருந்து உங்கள் பெயர் நடராஜன். என் பெயர் சிவகாமி.”

“எதற்காக இந்தப் பெயர் மாற்றம்?”

“கலைத் தொழிலை உயர்த்த உலகம் செல்கிறோம் அல்லவா? அதனால்தான் அந்தத் தொழிலுக்கும் உலகத்துக்கும் ஏற்ற இந்தப் பெயர்கள்…”

“சரி! அப்படியே செய்வோம். ஆனால் பூவுலகில் எந்த ஊரில் எந்த இடத்தில் போய் நம்முடைய இந்தப் புதிய கலைத் தொழிலைத் தொடங்குவது…?”

“அதற்கும் இடம் தேர்ந்தெடுத்துவிட்டேன் சுவாமீ! சோழநாட்டில் ‘தில்லையம்பலம்’ என்ற ஓர் இடம் இருக்கிறது. அங்கே நாட்டியமாடுவதற்கு ஏற்ற பொன் வேய்ந்த அரங்கங்களெல்லாம் இருக்கின்றன. தெய்வீகத் தொடர்புடைய புனிதமான ஊர். திருச்சிற்றம்பலம், சிதம்பரம் என்றெல்லாம் அதற்கு வேறு பெயர்கள் உண்டு. உங்களுக்கும் எனக்கும், என் தமையனார் திருமாலுக்கும்கூட அங்கே கோவில்கள் இருக்கின்றன.”

“நல்லது, நாளைக்கே புறப்படுவோம். உலகப் பிரளயத்துக்காகப் பயன்பட்டு வீணாகும் நிருத்திய கலையை உலக நலத்துக்காகச் செலவிடப் பயில்வோம். சுடலை மேட்டில் சாம்பல் பூசி, எலும்பு அணிந்து மண்டையோடு ஏந்திச் சூலமுகம் பிடித்து ஆடிய ஆட்டத்தை, பொன்னம்பலத்தில் சந்தனம் பன்னிர் பூசிச் சர்வாபரணங்களும் அணிந்து மானும் மழுவும் ஏந்தி அழகுக் கலையாக ஆடுகிறேன். நீ ‘சிவகாமியாக’ இருந்து இரசிக்கலாம். முடியுமானால் சேர்ந்து ஆடிக் கற்றுக் கொள்ளலாம்.”

குழப்பம் அடங்கியது. ஓலம் நின்றது. ஓசைகள் நின்றன. பிரளயத்துக்குப் பின் தோன்றிய புதிய உலகம் மழைக்குப்பின் மலர்ந்த மல்லிகைப் பூவைப் போல அமைதியாகக் குளிர்ந்த நிலையில் இருந்தது.

கைலாச சிகரம்! ― அங்கே சூனிய அமைதி நிலவியது. நந்திதேவரின் கம்பீரமான அதட்டல் குரல் கேட்கக் காணோம். முனிகணங்களின் ஓங்கார சப்தம் ஒலிக்கவில்லை. சங்கங்கள் முழங்கவில்லை. மணிகள் நாதத்தால் கீதம் பாடவில்லை. எம்பெருமான் இல்லை, எம்பெருமாட்டி இல்லை. யாருமே இல்லை. சாவு நிகழ்ந்த வீடாக, பாழ்பட்டுப் போன வெறுமனையாக, திலகமிழந்த நெற்றி போல, எல்லோரையும் இழந்தும் ― தன்னை இழக்காமல் வெறும் கல்லாய், மலையாய், வீண் நிலமாய், வீற்றிருந்தது கைலாச சிகரம்.

அதற்குப் பெருமை நல்கி வந்த அம்மையும் அப்பனும், அம்மையப்பனைச் சேர்ந்தவர்களும், சேர்ந்தவைகளும், அங்கில்லாமற் போனால் வீண் நிலமாகத்தானே இருக்க முடியும்?

கைலாசம் சூனியமாய்ப் போன அதே நாளில், சூன்யமாக இருந்த சிதம்பரம் கைலாசமாக மாறியது. சிதம்பரத்தில் அன்றைக்கு மழை பெய்தது. அது அதற்கு முன்பு பெய்திருக்க முடியாத புனிதமான மழை. பூக்கள் மலர்ந்தன. அது அதற்கு முன்பு மலர்ந்திருக்க முடியாத புனிதமான மலர்ச்சி. காற்று வீசியது. அது அதற்கு முன்பு வீசியிருக்க முடியாத புனிதமான காற்று. வெயில் எரித்தது. அது அதற்கு முன்பு கொடுத்திருக்க முடியாத புனிதமான ஒளியைக் கொடுத்தது.

ஏன் இந்தப் புதுமை? கைலாசத்தைச் சூனியமாக்கிய தெய்வத் தம்பதிகள் அன்று சிதம்பரத்தைக் கைலாசமாக்கிவிட்டார்கள். எம்பெருமான் நடராஜனாகவும், எம்பெருமாட்டி சிவகாமியாகவும் அங்கே பொன்னம்பலத்தில் குடிபுகுந்துவிட்டனர். கலையை அருளாக வழங்கும் புனிதத் தொழிலைத் தொடங்குவதற்கு வந்துவிட்டார்கள். பிரளயத்தை உண்டாக்கிய கலையைப் பெருமையை உண்டாக்கும் வரப்பிரசாதமாகப் பயன்படுத்துவதற்குத் துணிந்துவிட்டார்கள்.

எம்பெருமான் நடராஜனாகக் கால் மாறி ஆடினான். முன்பு அண்டங்கள் குலுங்க மிதித்த பரதம் இப்போது அரங்கம் மகிழ மதித்து ஆடியது. கனன்ற விழிகள் ஆர்வம் ததும்பும் மனோபாவங்களைப் படம் பிடித்தன. திரிசூலம் வீசிய கரம் விரல்களை வளைத்து அபிநயம் பிடித்தது. அழிவு அழகாகியது!

மனைவி எப்போதும் கணவனின் ரசிகைதானே? சிவகாமி கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்க, உடலும் உள்ளமும் புளகிக்கக் கரங்கூப்பி நின்று கொண்டு அந்த நிருத்தியமூர்த்தியின் நிர்மலமான அழகைப் பருகிக் கொண்டிருந்தாள்.

உயிர்கள் எல்லாம் வணங்கிக் களித்தன. உயிர் குலத்தின் பிரதிநிதியாகிய தாயே அவனருகில் நின்று வணங்கிக் களிக்கும்போது உயிர்கள் வணங்காமலிருக்க முடியுமா? ‘நான் அழிக்க முடியும்’ என்ற அகந்தையை நீக்கி, ‘நான் வளர்க்க முடியுமானால் நல்லது’ என்ற அறிவை உண்டு பண்ணிய சக்தியை ஆடிக் கொண்டிருந்த சிவன் பெருமிதத்தோடு நன்றி சுரக்கும் கண்களால் கண்டான். சக்தியின் பவழக் கனியிதழ்களில் நாணம் கோலமிட்டது. சிரம் தாழ்ந்தது. நடராஜன் ஆடினான். சிவகாமி சிரித்துக் கொண்டே அவனை ஆட்டிவைத்தாள். யுக யுகாந்திரங்களாக இந்த திருத்தியம் நடந்து கொண்டிருந்தது.

லி பிறந்தது! - இருபதாம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிற இயந்திர நூற்றாண்டு வந்தது. மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் அனுபவங்களும் மாறின. உலகமும் மாறியது. கலைகளின் இலட்சியங்களும் மாறின.

சிதம்பரத்தில் ஒருநாள் நள்ளிரவு. பொன்னம்பலத்திற்குள் உமை, வெளியே சென்றிருந்த எம்பெருமானை எதிர்பார்த்து உறங்காமல் வீற்றிருந்தாள். அடிக்கடி வலக்கண் துடித்தது. அவள் அஞ்சினாள். உலகையெல்லாம் அழித்துப் பழகிய கடவுளுக்கு யாரால் என்ன அழிவு வந்துவிட முடியும்? ஆனாலும் உமையால் பயப்படாமல் இருக்க முடியவில்லை. ‘என்னவோ ஏதோ, தீமைக்கு அறிகுறியாக வலக்கண் துடிக்கிறதே?’ என்று நினைந்து மனம் குழம்பினாள். நடு யாமத்திற்கு மேல் ஆகிவிட்டது.

திடீரென்று எம்பெருமான் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அம்பலத்திற்குள் பரபரப்போடு ஓடி வந்தார். அவர் கையில் ஏதோ ஒரு சிறு புத்தகம் இருந்தது.

“பார்வதி புறப்படு புறப்படு! இனிமேலும் இங்கே தாமதிக்கக்கூடாது… நம்முடைய தொழிலை மற்றொருவர் செய்ய விடுகிறதாவது…? அவன் குரலிலே ஆத்திரமும் படபடப்பும் நிறைந்திருந்தன.

“என்ன நடந்தது? ஏன் பதறுகிறீர்கள்? எங்கே புறப்பட வேண்டும்? கொஞ்சம் விவரமாகத்தான் சொல்லுங்களேன்!”

“எல்லாம் பின்பு சொல்கிறேன். நீ இப்போது உடனே இங்கிருந்து கிளம்பப்போகிறாயா? இல்லையா? வாகைலாசத்துக்கு, மூட்டையைக் கட்டிக் கொள்.”

“ஏன் இப்படிப் பழைய பிரளயதாண்டவம் மாதிரி குதிக்கிறீர்கள்? விஷயத்தைச் சொன்னால்தான் நான் புறப்படுவேன்!”

“எல்லாம் உன் யோசனையால் வந்த வினைதான்! நிருத்திய கலையைக் கருவியாக வைத்துக் கொண்டு உலகைப் பிரளயம் செய்யக்கூடாது என்றாய். உன் கருத்துப்படியே அதைக் கைவிட்டு இங்கே உன்னோடு வந்தேன்!…”

“ஆமாம். அதனால் இப்போது என்ன கேடு வந்துவிட்டதாம்!”

“ஒருவகையிலா கேடுகள் வந்திருக்கின்றன? நான் பிரளயதாண்டவத்தால் அழிக்காமல் விட்ட உலகத்தை இச்சீரழிந்த அலங்கோல தாண்டவத்தால் அழித்துவிடுவார்கள் போலிருக்கிறது!” தம் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்தவாறே கூறினார் அவர்.

“யார் அவர்கள்? என்ன அலங்கோலம் செய்கிறார்கள் அப்படி?”

“என்ன அலங்கோலமா? இதோ நீயே பார்!” ― எம்பெருமான் தம் கையிலிருந்த புத்தகத்தைக் கோபவேசமாய்ப் பார்வதி தேவியின் பக்கமாக வீசி எறிந்தார்.

பார்வதி அதை எடுத்துப் பார்த்தாள். மறுகணம் முகத்தில் அருவருப்புச் குழக் கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள். அவள் உடல் நடுங்கிக் குலுங்கி ஓய்ந்தது.

அது ஓர் ஒன்றே காலணாச் சினிமாப் பாட்டுப் புஸ்தகம். அதன் அட்டையிலே வெகு ஆபாசமான முறையிலே ஒரு பெண்ணின் உருவம் அச்சிடப்பட்டிருந்தது.

“சீ. மானங்கெட்டவள்! தாய்க்குலத்தின் அதிதேவதையான என்னில் ஒரு சிற்றணு இப்படியுமா இருக்கிறது? உலகமும் ஆண்குலமும் உருப்பட்டாற்போலத்தான்!”

தேவி காறியுமிழ்ந்தாள்.

“மன்மதனைப் போய் எரித்தீர்களே? இந்தப் புஸ்தகத்தையும் இவளையும் இப்போது எரியுங்களேன்!”

“இதை எரித்து என் நெற்றிக் கண்ணைக் கறைப்படுத்திக்கொள்ளச் சொல்கிறாயா தேவீ? என்னால் முடியாது.”

“சரி, சரி! உடனே புறப்படுங்கள். ஒழுக்கத்தையும் நல்ல மனத்தையும் அழிக்கும் இவர்கள் ஆடிக் கெடுக்கப் போகிற உலகத்தை நீங்களே ஊழிக்கூத்தால் அழித்துவிடுங்கள்.”

“ஐயோ! நானாவது உரிய காலத்தில் காரணமில்லாமல் அழிக்கமாட்டேன்! இவர்களோ இளைஞர்களாக இருக்கும்போதே மனிதர்களை அழித்து ஒழுக்கத்தைக் குலைத்துவிடுகிறார்களே?”

“எக்கேடாவது கெட்டுப் போகட்டும், நீங்கள் வாருங்கள். நாம் நம்முடைய இடத்துக்குப் போகலாம்!”

எம் பெருமானும் தேவியும் கைலையங்கிரிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

கையலைங்கிரியிலிருந்த சூனியம் சிதம்பரத்துக்குப் புறப்பட்டுச் சென்றது.

(உமா, பொங்கல் மலர், 1958)