நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/மடத்தில் நடந்தது

61. மடத்தில் நடந்தது

சுவாமி தர்மானந்த சரஸ்வதிக்கு முன், கை கட்டி வாய் பொத்தி மெய் குழைந்து பவ்யமாக நின்றான் வேலைக்காரன் பிரமநாயகம். ‘சுவாமி என்ன கட்டளையிடப் போகிறதோ?’ என்று அறியும் ஆவலில் அவனுடைய உடம்பே ஒரு கேள்விக் குறியாகக் குறுகி நின்றது.

செங்காவி உடையில் அந்த உடையின் நிறத்திலும் பன்மடங்கு சிவப்பாகவும் வளங் குன்றாத மேனிக் கட்டுடனும் காட்சியளித்தார் தர்மானந்த சரஸ்வதி. கீழே புலித்தோல் விரிப்பு, மேலே மின்சார விசிறி. மடத்தில் இடம் பெறுகிறதே என்பதற்காகச் சிவப்பு நிறம் பூசப் பெற்று அந்த மின் விசிறியும், சந்நியாசம் வாங்கிக் கொண்டிருந்தது! அது மட்டுமா? அங்கே மின்சாரத்தை இணைத்த ‘வயர்’ எல்லாம் சிவப்பு நிறம்தான்! சிவப்பு நிற ‘வயர்’தான் கிடைத்ததென்று அப்படி அமைக்கவில்லை. சுவாமிகளே சிவப்பு நிற ‘வயர்’தான் வாங்க வேண்டுமென்று கண்டிப்பாகச் சொல்லிச் செய்த திட்டம் அது. அந்த மடத்தில் பிரமநாயகம் என்ற வேலைக்காரப் பயலின் உடம்பு ஒன்றைத் தவிர மற்ற எல்லாம் சிவப்புத்தான். தர்மானந்த சரஸ்வதியால் சிவப்பாக்க முடியாதது அது ஒன்றுதான். அதாவது அட்டைக் கரி நிறத்தில் உருகின தார் மாதிரிப் பளபளக்கும் பிரமநாயகத்தின் உடம்பு ஒன்றைத்தான் அவர் சிவப்பாக்க இயலவில்லை.

“அடேய் பிரமநாயகம்.” கீழே குனிந்து விரித்திருந்த வேதாந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த சுவாமிகள் வேலைக்காரன் இன்னும் வரவில்லையோ என்று நினைத்துக் கொண்டு மறுபடியும் குரல் கொடுத்தார்.

“சாமி!” - என்று மேலும் கூனிக் குறுகிக் குழைந்து பவ்யமானான் பிரமநாயகம். நிமிர்ந்து பார்த்தார் சுவாமிகள்; நன்றாகப் பழுத்த பறங்கிப் பழத்தில் கீற்றுக்கள் இடையிடையே குழிந்து மடிந்தாற் போல் வயிற்றுச் சதை மடிப்புக்கள் சரிந்த விலாப்புறத்தில் கையைச் செலுத்தி இடுப்பிலிருந்து விபூதிப் பையை எடுத்தார் சுவாமிகள். விபூதிப் பைக்குள் விரல் விட்டுத் துழாவி ஒரு முழுக் கால் ரூபாய்க் காசையும் எடுத்தார். சுவாமிகளின் விபூதிப் பையேதான் அவருடைய மணி பர்ஸும். விபூதியால் கிடைக்கிறதை விபூதியோடு சேர்த்துத்தானே போட்டு வைக்க வேண்டும். அந்தப் பையில் காசு நிறைந்தால் விபூதி குறைந்திருக்கும். காசு குறைந்திருந்தால், மறுபடியும் விபூதி நிறையும். இந்தப் பிரசாத நிறைவு, குறைவுக்குக் காரண காரியம் காசாக இருப்பதில் தப்பு ஒன்றும் இருக்க முடியாது. வெறுங்கையே முழம் போட்டுவிடுமா, என்ன?

“இந்தா அரைச் சேர் பாதாம் பருப்பு வாங்கிக் கொண்டு வா”

பிரமநாயகத்துக்கு முன்னால் பருத்திச் சுளை தெறித்து விழுவதுபோல் வெள்ளிக் காசு வந்து விழுந்தது. வேதாந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டே ஐந்து நிமிஷத்துக்கு ஒரு தரம் பாதாம் பருப்பில் இரண்டும் சீனாக் கல்கண்டுத் துண்டு ஒன்றும் வாயில் போட்டு மென்று பழக்கம் அவருக்கு பாதாம் பருப்பும், சீனாக் கல்கண்டும் சேர்ந்து கரையும்போது நாவுக்குக் கிடைக்கிற சுகமான ருசி இருக்கிறதே, அந்த ருசிக்கும், வேதாந்தத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்று தோன்றுகிறதல்லவா? தோன்றுவது தவறில்லை! ஆனால் உண்மையில் அப்படி ஒரு சம்பந்தமும் இருப்பதற்கு நியாயமில்லை. ருசிகளை வெல்ல வேண்டுமென்றல்லவா வேதாந்தம் சொல்லித் தொலைக்கிறது!

பிரமநாயகம் காசை எடுத்துக் கொண்டு ஓடினான். மடத்துக்கு வெளியே எதிர்ப்புறத்து வீதியில் இருக்கும் மளிகைக் கடைக்குப் போய்ப்பாதாம் பருப்பு வாங்கி வருவதற்காகத்தான்!

பிரமநாயகம், பாவம்! பாதாம் பருப்பு என்ன ருசி என்று கூட அவனுக்குத் தெரியாது. அரைச் சேர் பாதாம் பருப்பு என்று கேட்டுக் காசு கொடுத்துக் கடையில் வாங்குவான். அப்படியே கொடுத்த பொட்டலத்தை மடத்தில் கொண்டு போய்க் கொடுத்துவிடுவான். நடுவழியில் பொட்டலத்தைப் பிரித்துப் பார்க்க வேண்டு மென்றோ, ஒன்றிரண்டை மென்று தின்னலாமென்றோ அற்ப நப்பாசை தப்பித் தவறியும் அவனுக்கு ஏற்பட்டதில்லை. ஆசைகளைக் கடந்துவிடும் வயதுக்கு வந்திருந்தான் அவன். அவன் வாழ்ந்து சலித்துப்போன கட்டை பிரமநாயகம் பெரிய சம்சாரி. ஆணும் பெண்ணுமாக ஏழெட்டுக் குழந்தைகள். நோயாளிபோல் நைந்த மனைவி. கிழட்டுப் பெற்றோர். மடத்தில் அவனுக்குக் கொடுக்கிற சம்பளத்தை அப்படியே வீட்டில் கொண்டு போய்க் கொடுத்தால் எல்லோருக்கம் ஒருவேளைக் கஞ்சியாவது ஒழுங்காகத் தேறும். இப்படிப் பட்ட பஞ்சைப் பாமரனுக்கு நப்பாசைகள் வேறு வைத்துக் கொள்ள முடியுமா? இந்த ஏழ்மையே அவனைத் தர்மானந்த சரஸ்வதியை விடப் பெரிய வேதாந்தியாக்கியிருந்தது. தர்மானந்த சரஸ்வதியின் சங்கதி வேறு.அவர் செளகரியங்களால்,செளகரியங்களுக்காகவே வேதாந்தியானவர். எனவே அவருக்கு ருசிகளும், பசிகளும் இருக்கலாம். பிரமநாயகத்துக்குப் பாதாம் பருப்பின் ருசியை அறியும் ஆசை இருந்தால் ஏழெட்டுக் குழந்தைகளும், மனைவியும் கிழட்டுப் பெற்றோரும் பட்டினி கிடக்க வேண்டியதுதான்! -

அதனால் அந்தப் பாமரனுக்கு நாக்குச் செத்துப் போய்ப் பல வருடங்களாயிற்று. சுசிருசிகளில் அவனுக்கு ஆசை விழுவதே கிடையாது. “இந்தா பெரியவரே! பொட்டலத்தை வாங்கிக்க-எங்ங்னே பராக்குப் பார்க்கிறே?" என்று பொட்டலத்தை நீட்டினான் கடைக்காரன். பிரமநாயகம் பாதாம் பருப்புப் பொட்டலத்தை வாங்கிக் கொண்டு மடத்தை நோக்கி நடந்தான்.

என்னவோ பாதாம் பருப்புச் சாப்பிட்டால் தகதகவென்று உடம்பு பொன் நிறத்துக்கு மின்னும் என்று சுவாமிகள் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்ததை எப்போதோ பிரமநாயகம் கேட்டிருந்தான். ஆனாலும் அதிலெல்லாம் அவனுக்கு அக்கறை உண்டாகவில்லை. ஒரு பருப்பும் சாப்பிடாமல்தான் கருமை மின்னுகிறதே அவன் உடம்பு! இத்தனை வயதுக்குமேல் பாதாம் பருப்பா அவன் உடம்பை வெளுத்துவிடப் போகிறது? அவன்தான் பெரியவேதாந்தியாயிற்றே! பாதாம் பருப்புப் பொட்டலம் எப்படியிருக்கிறது என்றுகூடப் பாராமல் அப்படியே கொண்டுபோய்ச் சுவாமிகளுக்கு முன்னால் வைத்தான்.

சுவாமிகள் பொட்டலத்தைப் பிரித்து வலதுகை எட்டி எடுக்க முடிந்த மாதிரிப் பக்கத்தில் வைத்துக் கொண்டார். இன்னும் ஒரு சம்புடத்தைத் திறந்து வேறு ஒரு காகிதத்தில் கொஞ்சம் சீனாக் கல்கண்டும் எடுத்து வைத்துக்கொண்டார். பிரமநாயகம் ஒரு மூலையில் சுவரோரமாக நின்று கொண்டிருந்தான். சுவரில் சாய்ந்த மாதிரியும் சாயாததுபோலும் பொத்தின மாதிரி நின்றான் அவன். பட்டும் படாமலும் இருப்பதுதானே அவன் பழக்கம். அவன்தான் பெரிய வேதாந்தியாயிற்றே!

சுவாமிகள் கல்கண்டும், பாதாம் பருப்பும் எடுத்துச் சுவைத்துக்கொண்டே வேதாந்தப் புத்தகத்தில் மூழ்கினார். அந்தச் சமயத்தில்,

“நமஸ்காரம்!” என்று குரல் வந்தது. தர்மானந்த சரஸ்வதி நிமிர்ந்தார்.அதே ஊரில் பக்கத்துத் தெருவிலிலுள்ள மற்றொரு மடமான அறுபத்து மூவர் மடத்தைச் சேர்ந்த குட்டித் தம்பிரான் ஒருவர் வந்து கொண்டிருந்தார். ;தனிமையின் சுகத்தில் ஐந்து நிமிஷத்துக்கொரு கையாகப் பாதாம் பருப்பும், கல்கண்டும் சாப்பிட்டுக் கொண்டே வேதாந்தத்தில் மூழ்க விடாதபடி, இவன் வந்துவிட்டானே!’ என்று குட்டித் தம்பிரான்மேல் உள்ளூறக் கோபித்துக்கொண்டே, "நமஸ்காரம் வரணும் வரணும்! ஏது இவ்வளவு தூரம்?” என்று இனிக்க இனிக்க வரவேற்றார் தர்மானந்தர்.

"திருமேனி பாங்குதானே?” என்று நலம் விசாரித்துக் கொண்டே எதிரே உட்கார்ந்து கொண்டார் குட்டித் தம்பிரான். அவர் பார்வை தர்மானந்தருக்குப் பக்கத்தில் இருந்த பாதாம் பருப்பு, சீனாக் கல்கண்டு காகிதங்களின் மேல் சென்றது. சென்ற அளவில் நிற்கவில்லை.

“என்னது? பாதாம் பருப்பா? நல்ல பருப்பாத் தேடி வாங்கிருக்கேளே?” என்று வெட்கத்தைத் துறந்த வெளிப்படைக் கேள்வியாகவும் எழுந்தது. கேள்வியில் ஆசை தொக்கி நின்றது.

"நானென்ன கண்டேன்? இதோ நிற்கிறானே பிரமநாயகம், இவன்தான் வாங்கிக் கொண்டுவந்தான்.நல்ல பருப்பு,கெட்டபருப்பு-என்று கண்டோமா? வெளியே உலக நடமாட்டம் இருந்தால் அல்லவோ அதெல்லாம் தெரியும்” என்று சிரித்தபடி பதில் சொன்னார் தர்மானந்தர்.பதில்தான் சொன்னாரே தவிர, இந்தாருங்கள்! சாப்பிட்டுப் பாருங்கள்! என்று அந்தக் குட்டித்தம்பிரானிடம் ஒரு பருப்பும் எடுத்து நீட்டவில்லை. குட்டித் தம்பிரான் வெட்கத்தை விட்டுக் கேட்டது பெரிய அநாகரிகம் என்றால் தர்மானந்தர் ஒரு பருப்பாவது உபசாரத்துக்கும் தராமலிருந்தது அதைவிடப் பெரிய அநாகரிகமாகத் தோன்றியது. ஆனால் 'பிரமநாயகம் பயல்’ இந்த அநாகரிகத்தை எல்லாம் கவனித்தும் கவனிக்காததுபோல் சுவரோரமாக அசையாமல் நின்று கொண்டிருந்தான்.

குட்டித் தம்பிரானின் கண்களும் பாதாம் பருப்பு - கல்கண்டு பிரதேசத்திலிருந்து மீளவில்லை."நீங்களும் கொஞ்சம் எடுத்துச் சாப்பிடுங்களேன்” என்று தர்மானந்தரும் சொல்கிற வழியாயில்லை. விநாடிகள் ஆயின.

“சிவஞான போதத்திலே ஒரு சந்தேகம்; சுவாமிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு போகலாம்னு வந்தேன்” என்று குட்டித் தம்பிரான் பேச்சை ஆரம்பித்தார்.

“ஆகா பேஷாகக் கேளுங்கோ, சொல்றேன். என்ன சந்தேகம்?”

பாதாம் பருப்பு - கல்கண்டைத் தவிர எதைக் கேட்டாலும் கொடுத்துவிட அவர் தயார் குட்டித் தம்பிரான் கேட்டார்:

“ஐம்பொறியின் நீங்கான் நீர்ப்பாசி போல் நீங்குமலகன்மம் வரின் நீங்கானை நீங்கும் நினைந்து இதுக்கு விளக்கும் தெரியணும்.”

“அற்புதமான இடத்தைத்தான் கேட்கிறீர்கள். நீரிற்பாசி பரந்திருக்கிறது. ஒரு கல்லை விட்டெறிந்தால் பாசி நீங்கி அவ்விடத்தில் நீர் தெளிந்து தெரியும். அதுபோல் சிவனுடைய சார்பு பட்ட இடத்தில் பாசம் நீங்கித் தெளிவு பிறக்கும். இப்போது விளங்குகிறதோ, இல்லையா? மனிஷாளுக்குச் சிவ சம்பந்தம் கிடைச்சப்புறம் மனசிலே ஆசை பாசமெல்லாம் நீங்கிப் போயிடணும்.”

“என்ன அழகாச் சொல்லியிருக்கார் பார்த்தேளா!”

“இது ஒண்ணு விளங்கிட்டால் லோகமே ஷேமமாயிருக்கும்”

எது?”

“ருசிகள் அடங்கிடணும். மனசு துல்லியமாகச் சின்ன நினைவுகளே இல்லாமே இருக்கணும்.”

இரண்டு பேரும் நெடுநேரம் வேதாந்த விசாரத்திலே ஈடுபட்டிருந்தனர்.இடையில், "இதோ வரேன். இருக்கோ” என்று கூறி விட்டுத் தர்மானந்தர் எதற்கோ உட்பக்கம் எழுந்து போனார். அந்தச் சமயத்தில் குட்டித் தம்பிரான் அவசர அவசரமாக ஒரு காரியம் பண்ணினார். காகிதத்திலிருந்து பத்துப் பன்னிரண்டுபாதாம் பருப்பை அள்ளி மடியில் கட்டிக் கொண்டார். பின்னால் சுவரோரமாகப் பிரமநாயகம் நிற்பதையே அவர் கவனிக்கவில்லை. பிரமநாயகம் இந்த அசிங்கத்தைப் பார்த்தான். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. பார்த்தும் பார்க்காததுபோல் இருந்துவிட்டான். அவன்தான், பெரிய வேதாந்தியாயிற்றே!

தர்மானந்தம் திரும்பி வந்தார். மீண்டும் இருவருக்குமிடையே வேதாந்த சர்ச்சை ஆரம்பமாகிச் சிறிது நேரம் நடந்தது. சிறிது நேரத்திற்குப் பின் தற்செயலாகப் பாதாம்பருப்பில் திரும்பிய தர்மானந்தரின் பார்வையில் சந்தேக நிழல் படிந்தது. காகிதத்தை எடுத்துப் பருப்புகளை எண்ணினார் அவர். அடுத்த கணம் பிரம நாயகத்தைப் பார்த்துச் சீறினார். “ஏண்டா நாயே! எத்தனை நாளா இப்படிப் பண்ணுகிறாய்? அரைச் சேர் வாங்கினால் முப்பது பருப்புக்குக் குறையாமே இருக்குமே? இன்னிக்குக் கால் சேரா வாங்கிட்டு இரண்டனாக் கமிஷன் அடிச்சியா? என்னை ஏமாத்திடலாம்னு நினைச்சியா? எத்தனை நாள் எண்ணிப் பார்த்திருக்கிறேன் தெரியுமா? இவ்வளவு நிலுவைக்கு இத்தனை பருப்பு இருக்கும்னு எனக்கு அத்துப்படி”

பிரமநாயகம் குட்டித் தம்பிரான் பக்கம் பார்த்தான். அவர் பேச்சு மூச்சுக் காட்டவில்லை. குத்துக் கல்லாக உட்கார்ந்திருந்தார்.

“என்னடா திருட்டு முழி முழிக்கிறே?” தர்மானந்தர் பிரமநாயகத்தை மேலும் விரட்டினார்.

வெறும் பாமரனாகிய அந்த வேலைக்காரனின் கருப்பு உடம்பில் சிவப்பு இரத்தம் சூடேறி ஓடியது. முன்னால் பாய்ந்து கல்லடி மங்கனாக உட்கார்ந்திருக்கும் அந்த குட்டித் தம்பிரானின் மடியை அவிழ்த்துக் காட்டிவிடலாம் போல் அவன் கைகள் துடித்தன. செய்திருக்கலாம்; செய்தால் அவனுடைய நேர்மையை நிரூபித்திருக்க முடியும்.

"திருட்டு நாய்! என் முன் நிற்காதே! தொலைந்து போ” என்று தர்மானந்தர் மேலும் இரைந்தார்.பிரமநாயகம் பார்த்தான். குட்டித் தம்பிரானின் விழிகள் அவனை நோக்கிப் பரிதாபமாகக் கெஞ்சின.

‘என் மானத்தை வாங்கிவிடாதே’ என்பதுபோல் இறைஞ்சின அந்தக் கண்கள். பார்க்கப் போனால் தர்மானந்த சரஸ்வதி, குட்டித் தம்பிரான், இரண்டு பேரையும்விடப் பிரமநாயகம் வயது மூத்தவன். பெரிய சம்சாரி, அவர்களை விட உலகில் அவன் வாழ்ந்து சலித்தவன். அவனுக்கு வேதாந்தம் தெரியாது. ஆனால் மனித நாகரிகம் தெரியும். அவனுக்குச் சிவஞான போதம் தெரியாது. ஆனால் விட்டுக் கொடுக்கத் தெரியும். காரணம்! அவன் நிஜமாகவே பெரிய வேதாந்தி. “இன்னும் ஏண்டா, நிற்கிறாய்? பெரிய வேதாந்தி” தர்மானந்தர் இரைகிறார். அந்தக் குற்றத்தைத் தான் செய்யவில்லை என்று சொல்லாமல், தானே செய்ததாக ஒப்புக் கொண்டதுபோல் தலை குனிந்தபடி வெளியேறினான் பிரமநாயகம். அவன்தான் பெரிய வேதாந்தியாயிற்றே! அவனுக்கு எதிலும் ருசி கிடையாது. பிறர் குற்றவாளி என்று நிரூபிக்க முனையும் நியாயமான முனைப்பில்கூடத்தான்! தான் குற்றவாளியில்லை என்று காட்ட முயலும் விருப்பில் கூடத்தான்.

அவன் செளகரியங்களால், செளகரியங்களுக்காக வேதாந்தியானவனில்லை. ஏழ்மையால் வேதாந்தியானவன்.வீட்டுக்குப் போய்ப்பெரிய சம்சாரத்தைப் பற்றி இனி எப்படிப்பிழைப்பது? என்று கவலைப்படவேண்டிய வேதாந்தி அவன், ஆம் நிஜமான வேதாந்தி.