நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/ஒரு கவியின் விலை

118. ஒரு கவியின் விலை

முதலில் விமான நிலையத்துக்குக் கார் அனுப்பினால் போதும் என்றுதான் அவள் நினைத்தாள். போட்டி அதிகமாக இருக்கும் போல் தோன்றவே தானே நேரில் போகா விட்டால் சரிப்பட்டு வராதென்று தோன்றியது. வேறு யாராவது நேரில் போய் அவரும் அவர்களோடு தங்கிக் கொள்ளலாம் என்று புறப்பட்டுப் போய் விட்டால் அவளுடைய மதிப்பு என்ன ஆவது? அவள் தோழிகளிடம் சொன்னதெல்லாம் வீணாகி விடுமே?

கிளப்பிலும், தோழிகளிடமும், தெரிந்தவர்களிடமும்,”ஹி வில் ஸ்டே வித் அஸ்” என்று தினம் வாய் அலுக்காமல் சொல்லித் தீர்த்தாயிற்று. மற்றவர்கள் எல்லோரும், “ஐ யாம் ஹிஸ் ஃபேன்” என்று பணிவாகச் சொல்லிய போது அவள் அதே வாக்கியத்தைத் திமிராகச் சொல்லியதன் மூலம் ‘ஹி இஸ் மை ஃபேன்’ என்பது போல் பொருள்படப் பேசிக் கொண்டிருந்தாள். அவரோடு இணைத்துக் கொள்வதில் அவ்வளவு பெருமை அவளுக்கு.

“‘இன்றைய கவிதைகளின் நிலைமை’ என்ற பொருளில் நுண்கலைக் கழகத்தில் ஒரு சிறப்புப் சொற்பொழிவாற்றத்தான் அவர் இங்கே வருகிறார். நுண்கலைக் கழகச் செயலாளர் என்ற முறையில் எங்கள் வீட்டில்தான் தங்க ஏற்பாடாகியிருக்கிறதாம். இவரே சொன்னார்” என்றாள் நுண்கலைக்கழகக் காரியதரிசியின் மனைவி.

“அதெல்லாம் இல்லை. ஒட்டல் பிரம்மப் பிரகாஷில் ஒரு ஏஸி சூட் ரிசர்வ் செய்யச் சொல்லித் தந்தி வந்திருக்கிறதாம்” என்றாள் நீதிபதி சுகவனத்தின் மனைவி.

கவி குமுதசந்திரன் தன்னுடைய பள்ளித் தோழன்-சிறுவயதிலிருந்தே அவனுடைய பல கவிதைகள் தன்னுடைய தூண்டுதலில்தான் தோன்றின; அவன் தன்னோடுதான் தங்குவான் என்று எல்லோரிடமும் சொல்லி வந்த அவளுக்கு இந்தப் பேச்சுக்களெல்லாம் எரிச்சலூட்டின. விமான நிலையத்திற்கு நேரிலேயே போய் அவனை மயக்கி வளைப்பதென்று முடிவு செய்தாள் அவள். அவளால் அதைச் செய்யவும் முடியும். இளம் வயதிலேயே அந்தக் கவி தன்னைக் காதலித்தான் என்று கூட அவள் சில அந்தரங்கமான தோழிகளிடம் சொல்லிச் செருக்குக் காட்டியிருக்கிறாள். அவன் தன் வீட்டில் இன்று வந்து தங்கும்படி செய்யா விட்டால் அவ்வளவும் பொய்யாகி விடும் இப்போது, அவைகளை மெய்யாக்க வேண்டும் அவள்.

உயர்தர இராணுவ அதிகாரியாகியதன் கணவனைப் பற்றி அவளுக்குக் கவலையே இல்லை. அவர் தனக்கு முழு சுதந்திரம் எடுத்துக் கொண்டது போல் அவளுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார். குழந்தையும் இல்லாததால் கட்டுக் குலையாத மேனியோடு பத்து வயது குறைவாகவே மதிப்பிடும்படி இருந்தாள் அவள். ஒரு யுவதியின் மெருகும் மினுமினுப்பும் கொண்டு, வயதில் மட்டும் பேரிளம் பெண்ணாயிருந்த அவளுக்கு எழுத்து, கதை, நாவல், கவிதைகள், பத்திரிகைகள் என்றால் கொள்ளை ஆசை. அவளே எழுத முயன்று தோற்றவள். அதனால் எழுதி வென்றவர்கள் மேல் எல்லாம் தீராத தாபமும் தவிப்பும் உண்டு. அதுவும் வாலிப வயதினனான கவி குமுத சந்திரனிடம் அவள் பித்துக் கொண்டிருந்தாள் என்றே சொல்ல வேண்டும்.

“முதலில் அவன் மன்மதன் பிறகு கவியும் கூட” என்று சில சமயங்களில் தோழிகளிடம் இம்மாதிரி ஏக்கத்தோடு பேசியிருக்கிறாள் அவள். உயர் வர்க்கப் பெண்களின் அந்தரங்கமான வம்புகளில் இப்படி அவரவர்கள் தங்களுக்குப் பிடித்த வசீகரமான ஆண் பிள்ளைகளைப் பற்றி மற்றவர்களிடம் தாராளமாக மனம் விட்டுச் சொல்வதும் உண்டுதான்.

அவர்களில் ஒவ்வொருவரும் ஒரு ரகசியத்தையாவது மற்றவர்களிடம் சொல்லியிருப்பார்களாதலால், அந்த ரகசியம் வெளியே போகக் கூடாது என்ற கவலையில் யாருடைய எந்த ரகசியத்தையும் எவரும் வெளியிட மாட்டார்கள் என்ற பொதுப் பாதுகாப்பு நிச்சயமாக உண்டு. கன்னக்கோலை ஒளித்து வைக்க எந்தத் திருடனுக்கும் இடம் கிடைப்பதில்லை; அவர்கள் எல்லோருமே அப்படி ஒளித்து வைக்க இடமில்லாமல் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டவர்கள். உண்மைகளையும், பொய்களையும் கலந்து பேசியவர்கள் ஒருவருடைய பொய்யை மற்றொருவர் சந்தேகித்தது கூடக் கிடையாது. மெய்யைப் பாராட்டியதும் கிடையாது.பொய்களைத் துவேஷிக்கவும், உண்மையை வியந்து கொண்டாடவும் கூட முடியாமல், ‘ஸொபிஸ்டிகேஷன்’ அவர்களைத் தடுத்ததுண்டு. இருந்தாலும் இன்று ஒரு விஷயம் நேருக்கு நேர் பொய்யாகி விடாமல் இருப்பதற்கும், உண்மையாவதற்குமாக அவள் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது; கவலைப்பட வேண்டியிருந்தது. அசட்டுக் கவுரவம்தான். ஆனாலும், அதை விட முடியவில்லை.

தன் தோழிகளிடம் அவள் சொல்லியிருந்ததெல்லாம் முழுப்பொய்யுமல்ல, அந்தப் புகழ் பெற்ற கவி அவளது பள்ளித் தோழன் என்பது மட்டும் உண்மைதான். அதை அவனுக்கே எழுதி, ‘அவளை மறுபடி சந்திப்பதில் தான் மகிழ்ச்சியடைவதாக’ அவன் கைப்படப் பதிலும் அவளுக்குக் கிடைத்திருந்தது. அந்தப் பதில் கிடைத்த துணிவில்தான் அவள் விமான நிலையத்துக்கு அவனை அழைத்து வர நம்பிக்கையோடு புறப்பட்டிருந்தாள் அன்று.

சந்தன நிறத் தோள்களின் செழுமை தெரியும்படி ‘ரவிக்’ அணிந்து கூந்தலின் மேல் மல்லிகை சூடி, கழுத்திலும் நெஞ்சிலும் வசீகரமான வாசனையுள்ள ‘செண்ட்’டை ஸ்பிரே செய்து கொண்டு விமான நிலையம் சென்றாள் அவள்.

“ஆடைகளை நான் சபிக்கிறேன்
அவை மறைக்கப் பிறந்தவை
உன்னிடமுள்ள இரகசியங்களை
அவை எனக்கு மறைக்கின்றன.

என்னிடமுள்ள இரசனைக்கும்
உனக்கும் நடுவே திரைகள் எதற்கு?
திரைகளும் ஆடைகளும் எல்லாம்
அடுத்த பிறவியில் அந்தகர்களாகப்
பிறந்து அவலப்படட்டும்”

என்ற பொருளில் கவிதை ஒன்று எழுதியிருந்தான் அவன். மிக இளமையில் அவன் எழுதிய கவிதை இது. அதனால் கொஞ்சம் விரசம் என்று கூடச் சில விமர்சகர்கள், இந்த வகைப் பாடல்களை அவனுடையவற்றிலிருந்து தனியே பிரித்துச் சாடுவது உண்டு. செழுமையான தோள்களும், பின்னும் முன்னும் இடையிலும் பொன் சதை மேடுகளும், தங்க வாய்க்காலும் மின்ன ரவிக் தரித்துப் புறப்பட்ட போது அவனது இந்தப் பழங்கவிதையையே அவள் நினைத்தாள். விமான நிலையத்திற்கு அவனை வரவேற்கவும் அழைத்துச் செல்ல முயல்வதற்கும் யார் யார் வந்திருப்பார்கள் என்று அவள் எதிர்பார்த்தாளோ, அதை விட அதிகமாகவே வந்திருந்தார்கள். பலர் கைகளில் மாலைகள் இருந்தன. தானும் ஒரு மாலை வாங்கி வந்திருக்கலாமே என்பது அவளுக்கு அப்போதுதான் தோன்றியது. அந்தரங்கத்தில் தானே ஒரு பூமாலைப் போல் அவன் நெஞ்சில் சரியவும் தயாராயிருந்தாள் அவள். அவனைப் பொறுத்த வரை அவள் எல்லாச் சிறைகளையும், தளைகளையும் உடைத்துக் கொண்டு நிற்கவும் ஆசைப்பட்டாள். அவள் கணவன் ஊரில் இல்லை. ஏதோ அலுவலாக டெல்லி போயிருந்தான். அவன் டெல்லிக்குப் போனால் வர நாளாகும். அங்கே சிநேகிதர்களும், சிநேகிதிகளும் அவனுக்கு அதிகப் பேர் உண்டு.

கணவனைப் பற்றி நினைப்பதை நிறுத்தி விட்டு விமான நிலையத்திற்கு வந்திருந்தவர்களை நோட்டம் விட்டாள் அவள்.

“ஹலோ இந்து...!”

தன்னைக் கூப்பிடுவது யாரென்று அவள் திரும்பினால், விஜயா நின்று கொண்டிருந்தாள். விஜயாவைப் பார்த்ததும் அவளுக்குப் பொறாமையாய் இருந்தது. தன்னை விட அன்று அவள் நன்றாக அலங்கரித்துக் கொண்டு வந்திருந்ததாகத் தோன்றியது அவளுக்கு. வரப் போகும் மன்மதனை விஜயா தன்னோடு அழைத்துக் கொண்டு போய் விடுவாளோ என்று கூடப் பயமாக இருந்தது. இந்துவும் விஜயாவும் பேசிக் கொண்டிருக்கும்போதே ஹேமா நுண்கலைக் கழகக் காரியதரிசியின் மனைவி வந்தாள்.

“உனக்குத் தெரியுமா இந்து? குமுதசந்திரனுடைய ‘வசந்த காலத்து இரவுகள்’ கவிதைத் தொகுதி பிரெஞ்சிலே மொழி பெயர்ப்பாகி நல்ல விற்பனையாம். உனக்குத் தெரிஞ்சிருக்க ணுமே இது? நீதான் கவிஞருடைய பள்ளித் தோழியாச்சே? உனக்குத் தெரியாதது என்ன இருக்கு” என்று ஹேமா தன்னிடம் கூறிய போது, அவள் தன்னைக் கிண்டல் செய்கிறாளா அல்லது சுபாவமாகத்தான் பேசுகிறாளா என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் இந்து திணறினாள்.

ஏர்ப்போர்ட் லவுன்ஜ் வாசனைகளாலும், வர்ணங்களாலும், பெண்களாலும் நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு நறுமலராக மலர்ந்து கொண்டிருந்தாற் போலிருந்தது. ஒவ்வொருத்தியிடமிருந்தும் ஒரு சுகமான இங்கித நறுமணம், பூ வாசனைப் பவுடர், ஏதோ ஒரு செண்ட், மூன்றும் கலந்து உருவான வாசனைக் கட்டணி, கண்கள் உணர்ந்து லயிக்க விரும்பும் வர்ணங்களும், நாசி விட்டுவிட விரும்பாத நறுமணங்களுமாக அப்போது அங்கே ஒரு வசீகரச் சூழ்நிலை உருவாகியிருந்தது.

சவர்லே, இம்பாலா, கடிலாக், பென்ஸ் என்று வரிசை வரிசையாக விமான நிலைய முகப்பில் நின்ற கார்களையும் ,தன்னுடைய காரையும் பார்த்துப் பெருமூச்சு விட்டாள் அவள். தன்னுடைய காரில் ஏறித் தன்னோடு உடன் வராமல், வேறு யாரோடாவது அந்தக் கவிஞன் போய் விடுவானோ என்று நினைக்கவும் கூட முடியாமல் தவித்தாள் அவள்.

விஜயா மறுபடி வியந்த குரலில் பேசத் தொடங்கினாள் : “உனக்குத் தெரியுமோ அது? அடுத்த மாதம் உலக சமாதானத்தை முன்னிட்டு ஜெனிவாவில் யூனெஸ்கோ கலாசாரப் பிரிவினர் ஒரு பெரிய கவி சம்மேளனத்திற்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறார்களாம். அதற்காக நம் நாட்டின் சார்பில் அனுப்பப்பட இருக்கிற ஒரே கவிஞராக இவரைத்தான் தேர்ந்தெடுத்திருக்காங்களாம்!”

“வேறே யார் அதற்குப் போக முடியும், இவரைத் தவிர!”

“அது சரி இந்து! இவர் ஏன் இன்னும் தனிக்கட்டையாகவே இருக்கிறார்? எங்களை விட இந்த விஷயம் உனக்குத்தான் அதிகம் தெரிஞ்சிருக்க முடியும்?”

“பதினான்கு வருஷங்களுக்கு முன் என் தலையில் வேறு விதமாக எழுதப் பட்டிருந்தால் இன்று அவர் தனிக்கட்டை ஆகியிருக்க முடியாது. இன்று நானும் இங்கே இப்படி உங்களோடு நின்று கொண்டிருக்க மாட்டேன். நீங்கள் இப்போது யாரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்களோ, அவரோடு கை கோர்த்தபடி விமானத்திலிருந்து கூட இறங்குவேன். ஒரு மாலை கொண்டு வந்திருப்பதற்குப் பதில் நீங்கள் எல்லோரும் இரண்டு மாலைகளோடு வந்திருக்க வேண்டியிருக்கும்” என்று கொஞ்சமும் தயங்காமல் விஜயாவுக்கு உடனே பதில் சொன்னாள் இந்து.

“இந்து திடீரென்று இன்றைக்குக் கல்யாணப் பெண் போல் அழகாயிருக்கிறாள்” என்று சிரித்துக் கொண்டே சொல்லி அவளை வம்புக்கு இழுத்தாள், அதுவரை சிறிது நேரம் பேசாமல் இருந்த ஹேமா.

“நான் மட்டுமென்ன? எல்லோருமே இன்று கல்யாணப் பெண்களைப் போலத்தான் சிங்காரித்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.”

“என்ன சிங்காரித்துக் கொண்டு வந்து ஆகப்போவது என்ன? வருகிறவரை நீ கொத்திக் கொண்டு போகப் போகிறாய்.”

“டோண்ட் பி ஸில்லி”

விமான நிலைய முன்னறிவிப்பு ஒலித்தது. சில விநாடிகளில் அந்த விமானம் தரையிறங்கியது. தரையில் வேகமாக வந்து அமரும் வெண்ணிற அன்னப் பறவையைப்போல் அழகாயிருந்தது அந்த ஆவ்ரோ 74 விமானம். எல்லாருடைய மனமும் பரபரப்பு அடைந்தது.

கவி குமுதசந்திரன் விமானம் நின்றதும் அதில் பொருத்தப்பட்டிருந்த படிக்கட்டுகளின் வழியே கீழே இறங்கி, லவுஞ்ஜுக்கு வருகிற வரை காத்திருக்க அவர்கள் யாருக்கும் பொறுமையில்லை. எல்லாரும் விமானம் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி ரன்வேயில் நடந்து போய் முண்டியடித்துக் கொண்டு நின்றார்கள். அப்படி விரைந்து சென்றவர்களில் முன்னால் இருந்தாள் இந்து. தோள்பட்டையிலும் கழுத்திலும் நெஞ்சிலும் எம்பிராய்டரி பூவேலை செய்த லக்னோ வெள்ளை வாயில் ஜிப்பாவும், அதே நிறத்தில் பைஜாமாவும் கூலிங் கிளாஸுமாக இறங்கி வந்தான் கவி குமுதசந்திரன். நல்ல சிவப்பு. பின்புறமாக வாரிய அமெரிக்கன் கிராப். சுருள் சுருளான கேசம். கருந்திராட்சைக் கொத்திலிருந்து ஒன்று தனியே விலகி வந்த மாதிரி முன் நெற்றியில் ஒரு சுருள் கேசம் அழகாக வந்து சரிந்திருந்தது. கவி மன்னனாகிய அவன் ரசிகர்கள் புடைசூழ இறங்கி நடந்து வருவது இளவரசன் பரிவாரங்களோடு வருவது போலிருந்தது. சிங்கம் நிமிர்ந்து நடந்து வருகிற மாதிரி ஒருவித ராஜ கம்பீர நடை அவனுடையதாயிருந்தது. இந்து புன்னகையோடு முன்சென்று தன்னைத் தானே அவனுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“நான் இந்து! அந்த நாளில் உங்கள் பள்ளித் தோழி. இப்போது கூட நான் எழுதிய கடிதத்துக்கு நீங்கள் பதில் எழுதியிருந்தீர்கள். தங்குவதற்கு எல்லா ஏற்பாடும் நானே செய்து விட்டேன்.”

“உங்களை மறுபடியும் சந்திக்க நேர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சி.”

அவன் ‘உன்னை’ என்று சொல்லியிருந்தால், தன் இளமையையும், உரிமையையும் அங்கீகரித்தது போலிருக்குமே என்று ஏங்கினாள் அவள்.

மாலைகள் கழுத்தை நிறைத்தன. புகைப்படங்கள் எடுக்கப் பட்டன. கவியின் மிக அருகே அவனை வேறுயாரும் தங்களோடு தங்க அழைத்துக் கொண்டு போய் விடாமல் பாதுகாப்பாகவும், பிடிவாதமாகவும் அவள் நின்று கொண்டு தடுத்து விட்ட காரணத்தால் எல்லாப் புகைப்படங்களிலும் அவள் நிச்சயமாக உடன் இருப்பாள். நுண்கலைக் கழகத்தின் சார்பில் அழைக்கப்பட்டு வந்திருக்கிற அவனை ஒரு பொது இடத்தில் தங்குமாறு வற்புறுத்த வேண்டுமென்று எண்ணியிருந்தவர்கள் கூட அருகே நின்று அவனை ‘எஸ்கார்ட் செய்து, அழைத்துப் போவது போலிருந்த இந்துவின் முகத்தை முறித்துக் கொள்ளப் பயந்து பேசாமல் இருந்து விட்டார்கள். இந்துவுக்காக மட்டும் பயப்படவில்லை. அவள் மாதம் மூவாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் ஒரு பெரிய அதிகாரியின் மனைவி. அவளோடு தங்குவதை அந்தக் கவிஞனே விரும்புகிறானோ என்ற ‘டெலிகேட்டான’ சந்தேகம் வேறு எல்லாருக்கும் இருந்தது. அந்தத் தனிப்பட்ட சிநேகிதத்தை மாற்று உறைத்துப் பார்க்க அவர்கள் யாருமே விரும்பவில்லை.

“நான் பந்தயம் வேண்டுமானால் கட்டுகிறேன். பார்த்துக் கொண்டே இருங்கள். அவர் என்னோடுதான் தங்குவார்” என்று அவள் முன்கூட்டியே பெருமை அடித்துக் கொண்டிருந்ததனால் எல்லாருமே தயக்கத்தோடு அவளிடமே விட்டுவிட்டார்கள். இந்துமதியின் வீட்டில் அவனைத் தங்க விடாமல் தடுத்தால், அவளுக்குக் கோபம் வருமோ என்று கவலைப்பட்டதை விட அவனுக்கே அதனால் கோபம் வந்துவிடுமோ என்றுதான் அவர்கள் எல்லாருமே பயந்தார்கள்.

அழைத்தவர்கள் நாசூக்காக நடந்து கொள்ளாத கூட்டத்திலோ, கவியரங்கத்திலோ பேசவும் பாடவும் மறுத்துப் பாதியிலேயே கோபித்துக் கொண்டு போயிருப்பதாக இந்தக் கவிஞனைப் பற்றி நிறையச் சம்பவங்கள் கேள்விப்பட்டிருந்தார்கள் அவர்கள்.

“சாயங்காலம் நாலுமணிக்குக் கூட்டம். மூன்றரை மணிக்கு வந்து கூப்பிட்டுக் கொண்டு போக வருகிறோம்” என்று மட்டும் பயபக்தியோடு கவிஞனின் அருகே வந்து சொன்னார் நுண்கலைக் கழகக் காரியதரிசி,

“அவசியமில்லை; மூன்றே முக்காலுக்கு நானே இவரை அழைத்துக் கொண்டு வந்து விடுவேன்” என்று அவனைப் பதில் சொல்ல விடாமல் தானே முந்திக் கொண்டு அவனுக்காகப் பதில் சொன்னாள் இந்து.

கவிஞன் இதைக் கேட்டுப் புன்னகை பூத்தான். தான் காரியதரிசிக்குச் சொல்லிய பதிலை அந்தப் புன்னகை மூலம் அவனும் அங்கீகரிப்பதாக இந்து புரிந்து கொண்டாள். மாலைக் குவியல்களுக்கு நடுவே காரில் பின்சீட்டில் கவிஞன் அமர்ந்திருந்தான். டிரைவிங் அவள் பொறுப்பாக இருந்தது. கார் நகர்ந்ததும், யாரோ ஒருத்தி இன்னொருத்தியிடம், “இந்து ஒரு கவியை அழைத்துச் செல்கிற மாதிரி அவரை அழைத்துப் போகவில்லை. கைதியை இழுத்துப் போகிற மாதிரி இழுத்துப் போகிறாள்” என்று குத்தலாகச் சொல்லியது அவள் காதிலேயே அரைகுறையாக விழுந்தது. அவன் காதிலும் விழுந்திருக்குமோ என்று அவளுக்கு பயமாக இருந்தது. செய்கிற உபசாரத்தில் இந்த வார்த்தைகளை அவன் கேட்டே இருந்தாலும், மறந்து போகும்படி பண்ணி விடலாம் என்று நம்பினாள் அவள்.

இந்து காரை லாவகமாக ஓட்டிக் கொண்டே அவனோடு பேச்சுக் கொடுத்தாள்:

“என் கணவர் ஊரில் இல்லை; டில்லிக்குப் போயிருக்கிறார். நீங்கள் வரப் போவதும் நம் வீட்டில் தங்கப் போவதும் அவருக்குத் தெரியும். நீங்கள் வருகிற நேரத்தில் தான் வீட்டில் இருந்து உபசரிக்க முடியாமற் போனதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லி விட்டுப் போயிருக்கிறார் அவர்.”

“அடடா, உங்களுக்கு வீண் சிரமம். அவர் ஊரில் இல்லாதபோது...”

“தான் இல்லை என்ற குறை வைக்காமல் கண்ணுங்கருத்துமாக உங்களைக் கவனித்துக் கொள்ளும்படி அவரே சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.”

அழகிய அடர்ந்த தோட்டத்திற்குள் புகுந்து நெடுந்தூரம் உள்ளே சென்று ‘போர்டிகோவில்’ கார் நின்றது. அவள் அவசர அவசரமாக முன்பக்கக் கதவைத் திறந்து கொண்டு இறங்கி வந்து பின் கதவைத் திறந்து விட்டாள். ஒரு கையில் சூட்கேசும் மற்றொரு கையில் ரோஜாப் பூ மாலைகளுமாக இறங்கினான் அவன்.

“என்னிடம் கொடுங்கள்! நான் கொண்டு வருகிறேன்” என்று மாலை, பெட்டி இரண்டையுமே வாங்கிக்கொள்ளக் கைகளை நீட்டினாள் அவள். பெட்டியை வைத்துக் கொண்டு மாலைகளை மட்டுமே நீட்டினான் அவன். மாலைகளை வாங்குவதற்குள் அவனது பூப் போன்ற கையை ஒரு தரம் நன்றாக ஸ்பரிசிக்க முடிந்தது அவளால். போலியாக ஒரு மன்னிப்பும் கேட்டாள் அவள்.

“மன்னிக்க வேண்டும்! உங்கள் கை எது, ரோஜாப் பூ மாலை எது என்று தெரியவில்லை. இரண்டும் ஒரே நிறமாக இருக்கின்றன.”

“நான் அவ்வளவு சிவப்பில்லை. ரொம்பவும் என்னைப் புகழ்கிறீர்கள் நீங்கள்.”

“நீங்கள் எவ்வளவு சிவப்பு என்று உங்களுக்கே எப்படித் தெரியும்? உங்கள் அழகை நாங்கள்தானே சொல்ல முடியும்?”

“நானே அழகைத் தேடிக் கொண்டிருப்பவன், கவிஞன். நீங்கள் என்னிடம் எப்படி அதைத் தேட முடியும்”

“கவிதையைப் போலவே பேசவும் செய்கிறீர்கள்.”

“இதைச் சொல்வதிலிருந்து உங்களுக்கு எவ்வளவு தூரம் கவிதை ரசனை இருக்கிறது என்பதுதான் தெரிகிறது.” என்று கொஞ்சம் குத்தலாகப் பதில் வந்தது அவனிடமிருந்து. இந்துவுக்கு அது கிண்டல் என்று புரிந்தாலும் பதிலுக்கு அவள் அவனைச் சாடவில்லை.

“நான் ஏதாவது தப்பாகச் சொல்லியிருந்தாலும், தயவுசெய்து மன்னித்து விடுங்கள்” என்று மேலும் பணிவாக இறங்கிப் பேசினாள் அவள். காரியத்தைச் சாதிக்க முடிந்த பணிவினால் தவறு எதுவும் கிடையாது.

ஹாலில் அவனை உட்கார வைத்து விட்டு,”சீதா, சீதா' என்று உட்புறம் நோக்கிக் குரல் கொடுத்தாள் இந்து. அவளை விட உடற்கட்டும் இளமையும் உள்ள இன்னொரு யுவதி வந்தாள். சின்னப் பெண்தான். ஆனால் இந்துவை விடத் துறுதுறு வென்றிருந்தாள். இந்துவை விட லட்சுமீகரமான களையுள்ள முகம் அவளுடையது. “ஐயாவோட சூட்கேஸை ஏ.ஸி. ரூம்லே கொண்டு போய் வை.” என்று இந்து அந்தப் பெண்ணுக்குக் கட்டளையிட்டதிலிருந்து அவள் வேலைக்காரி என்று அநுமானிக்க முடிந்தது. முன்னும், பின்னும், பக்கங்களிலும், எப்படிப் பார்த்தாலும் தாமிரத்தில் செதுக்கி எடுத்தது போன்ற நிறத்தில் வடிவில் அவள் சூட்கேஸை எடுத்துக் கொண்டு நடந்த போது அந்த நடையோடு கூடிய முதுகுப் புறமும் கால்களும் மிக நளினமாக இயங்குவதை அவன் பார்த்தான்.

அவன் அவளை அப்படிப் பார்ப்பது பிடிக்காதவள் போல் “எங்க வேலைக்காரி! நம்ம பக்கம்தான். சின்ன வயசிலேயே வந்தா, மத மதன்னு வளர்ந்துட்டா. ரொம்ப நல்லாச் சமைக்கிறா. எஸ்.எஸ்.எல்.ஸி. வரை படிச்சிருக்கா. அவளுக்கும் உங்கள் கவிகள்னா உயிர்.”

“அப்படியா?”

“நிமிஷமாப் பூத்தொடுப்பாள்...”

“தேவலையே...”

“பிரயாணம் செய்து வந்த உடற்களைப்புக்கு இதமாக இருக்கும்; கொஞ்சம் பீர் சாப்பிடுங்களேன். ஃபிரிஜிலே வச்சிருக்கேன். கொண்டு வரட்டுமா?”

அவன் தலையை ஆட்டினான். கிளாஸ் நிறைய துரை கொப்பளிக்கும் பீரோடு வந்தாள் அவள்.

“இந்து! சின்ன வயசிலே ஸ்கூல்லே படிக்கிறப்போ பேசவே பயப்பட்டு நடுங்குவீர்கள் நீங்கள்.”

“அத்தனைக்கத்தனை இப்ப வாயாடி ஆயிட்டேன். இவருடைய உத்தியோகம் அப்படி. ஆபீஸர்ஸ் மெஸ்லே வாரம் தவறாமே புதுசு புதுசா எத்தனைப் பேரைப் பார்க்கணும், பழகணும், பேசணும், சோஷலா இருக்கணும்...”

“அதனாலே ரொம்பவும் சோஷலா மாறியாச்சு இல்லியா?”

“ஆமாம்.”

காலியான பீர் கிளாஸை டேபிளில் வைத்தான் அவன். “இப்ப மணி பதினொண்ணரை, லஞ்ச் எத்தனை மணிக்கு வச்சுக்கலாம்?”

“ஒரு மணிக்கு வச்சுக்கலாம். அது வரை நான் கொஞ்சம் தூங்கலாம்னு பார்க்கிறேன்.”

“போகலாம். வாருங்கள்.”

அவன் அவளைப் பின் தொடர்ந்தான். ஏ.ஸி. ரூமில் கொண்டு வந்து விட்ட பின்பும் தன்னைத் தூங்க விடாமல் அவள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தது அவனுக்குப் பிடிக்கவில்லை.

“ஆடைகள் கண்ணிழக்க வேண்டும் என்ற உங்கள் கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும்! அதை நான் பலமுறை திரும்பத் திரும்பப் படித்திருக்கிறேன்.”

“இப்போது எனக்கே அந்தக் கவிதை பிடிக்காது! மிகவும் சிறுபிள்ளைத்தனமான தொரு திமிரில் அன்று அந்தக் கவிதையை எழுதி விட்டேன்.”

“அந்தக் கவிதையிலுள்ள இந்தத் திமிர்தான் எனக்குப் பிடித்திருக்கிறது...”

மேலே சம்பாஷணை வளர இடங்கொடுக்காமல் கைகளைத் தூக்கிச் சோம்பல் முறித்துக் கொட்டாவி விட்டான் அவன்.

“சரி! உங்களுக்குத் தூக்கம் வருகிறது, தூங்குங்கள்.” என்று சொல்லிக் கொண்டே வெளியே போனாள் அவள். போனவள் மறுபடி திரும்பி வந்து ஒரு புன்முறுவலை மெல்ல உதிர்த்தபடி, “டிஸ்டர்ப் பண்றதா நினைக்காதீங்க. உங்களுக்கு எது வேணும்னாலும் கூச்சமில்லாமக் கேட்கலாம். இதை உங்கள் வீடு மாதிரி நினைச்சுக்கணும்...”

“மன்னிக்கணும் இந்து! எனக்கு வீடுன்னு எதுவுமே கிடையாது. நான் ஒரு புகழ் பெற்ற நாடோடி.”

“சும்மா ஒரு உபசாரத்துக்காக இப்படி நீங்கள் சொல்லிக்கலாம்!”

“உபசாரமில்லை. நிஜமே அதுதான்...”

“எங்களைப் போல் உங்களால் கொள்ளை கொள்ளப்பட்ட ரசிகைகளின் வீடுகள் எல்லாம் உங்களுடையவையாயிருக்கும் போது நீங்கள் எப்படி நாடோடியாயிருக்க முடியும்?”

”என்னைக் கொள்ளைக்காரன் என்கிறீர்களா?”

“இல்லை, நீங்கள் இப்படிப்பட்ட கொள்ளைக்காரராவதை நாங்களே விரும்புகிறோம்.”

“என்ன சொல்கிறீர்கள்? புரியவில்லையே?”

அவள் மறுபடியும் புன்னகை செய்தாள். அவசியமில்லாமலே சரியாத தோள் புடவையைச் சரிய விட்டு மறுபடியும் நேர் செய்து அணிந்து கொண்டாள்.அங்கேயே பிடிவாதமாக எதற்காகவோ நின்றாள்.

அவன் மறுபடி கொட்டாவி விட்டான். ஒரு நிமிடம் திரும்பி நடந்து புன்னகையோடு மீண்டும் எதற்கோ தயங்கினாற் போல் நின்று விட்டு,”சரி தூங்குங்கள். ஒன்றே கால் மணிக்கு எழுப்புகிறேன்” என்று கூறியபடி மெல்ல வெளியேறினாள் அவள்.

அவள் வெளியேறும் போது கதவைச் சற்று அதிகமாகவே அழுத்திச் சாத்தியிருக்க வேண்டும். அவ்வளவு அதிக ஒசை அவனுக்குப் பிடிக்காது. காதைக் குத்தியது. எப்போதும் இனிய இங்கிதமான ஓசைகளில் லயிப்பவன் அவன்,

பகல் உணவுக்கு எழுப்ப இந்து வரவில்லை.வேலைக்காரிதான் வந்தாள். இந்துவின் வெண் தந்த நிற முகத்தையும், தோள்களையும் விட இவளுடைய கோதுமைநிறம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த நிறம் வெறும் நாசூக்கைத்தான் காட்டும். இந்த நிறமோ ஆரோக்கியத்தின் அடையாளம். அவன் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பது கண்டு அவள் சிரித்தாள். அந்தச் சிரிப்புக் கபடமில்லாத லட்சுமிகரமான சிரிப்பாயிருந்தது. அவளுடைய பல் வரிசை இடைவெளியில்லாமல் முத்துக்களைக் கோத்தது போலிருந்தது. அவளிடம் ஏதாவது பேசவேண்டும் போல் ஆசையாயிருத்து அவனுக்கு. அவன் பேசுவதற்குள் அவளே பேசி விட்டாள். “அம்மா உங்களைச் சாப்பிடக் கூப்பிட்டாங்க.”

“அது சரி. நீ நன்றாகப் பூத் தொடுப்பாயாமே?”

“ஆமாம் உங்களுக்குத் தொடுத்துத் தரட்டுமா? நான் பூத் தொடுப்பேன்னு அம்மா சொன்னாங்களா?”

“அம்மா சொன்னாங்க. சொல்லா விட்டாலும் எனக்கே தெரியும். உன்னைப் போல் அழகாயிருக்கிற பெண்ணுக்கு அழகாயிருக்கிற எல்லாமே தெரிஞ்சிருக்கணும்.”

அவள் நாணத்தோடு தலை குனிந்தாள். சிரித்தாள். அதற்குள் இந்துவே கதவைத் திறந்து கொண்டு வந்து விட்டாள். சாப்பாட்டுக்குக் கூப்பிடப் போன வேலைக்காரி ஏ. ஸி. ரூமில் அதிக நேரம் தாமதிக்கவே, இந்துவுக்குச் சந்தேகம் வந்திருக்க வேண்டும்.

“சாப்பிடக் கூட்டிண்டு வரச் சொன்னால், இங்கே என்னடி வம்பளந்துண்டு நிக்கறே?”

“இல்லே. நான்தான் பூத்தொடுக்கத் தெரியுமான்னு அவளைக் கேட்டேன்...”

அவன் அவர்களோடு சாப்பிடப் போனான். பகல் உணவின் போது இந்து அவனிடம் அதிகம் பேசவில்லை. வேலைக்காரியும் அடக்க ஒடுக்கத்தோடு அமைதியாகப் பரிமாறினாள். சாப்பிட்டதுமே இந்து அவனிடம் வந்து, “இன்னிக்கி ராத்திரி உங்களோட என் ஃப்ரண்ட்ஸ் அஞ்சாறு பேரும் நுண்கலைக் கழகப் பிரமுகர்களும் சேர்ந்து சாப்பிடறா. நான் அவங்களை எல்லாம் போய் அழச்சிட்டு வரணும். நீங்கரெஸ்ட் எடுத்துங்குங்க. மூணு மூணேகாலுக்கு எழுந்திருந்தாப்போதும்” என்று சொல்லி விட்டுப் போய் விட்டாள்.

மூணே கால் மணிக்கு அவன் எழுந்து முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு, கூட்டத்திற்குத் தயாரான போது இந்து காபியுடன் வந்தாள். இப்போது பகலில் அணிந்திருந்தது போல் அவள் ‘ரவிக்’ அணிந்திருக்கவில்லை. அவள் காபி கொண்டு வருவதற்குள்ளேயே அவன் ஹாலுக்கு வந்திருந்ததனால், காபியோடு வந்த அவளை அவன் ஹாலிலேயே சந்திக்க நேர்ந்தது. அவளைத் தனியாக ஏ.ஸி. ரூமில் சந்திக்க அவன்தான் கூச வேண்டியிருந்தது.காரணம் அவளிடம் எந்தக் கூச்சங்களுமே இல்லை. அவள் ரொம்ப ‘சோஷலாக’ இருந்தாள்.

அவர்கள் வெளியேறிக் காருக்காகப் போர்டிகோவுக்கு வந்த போது தோட்டத்தில் பூத்திருந்த அவ்வளவு பிச்சிப் பூக்களையும் பறித்துக் கொட்டி அவசர அவசரமாக மாலை தொடுத்துக் கொண்டிருந்தாள் வேலைக்காரி சீதா.

“என்னடி மாலை தொடுத்தாகறது? பூஜை படத்துக்கா” இந்துவின் கேள்விக்கு வேலைக்காரி பதில் சொல்லவில்லை. ஆனால், வெளியே போகும் எஜமானியை வழியனுப்ப மரியாதையாக எழுந்து நின்றாள் அவள். கவிஞரைப் பார்த்து ஒரு புன்முறுவல் பூத்தாள். அவனும் பதிலுக்குப் புன்முறுவல் பூத்தான். “டின்னருக்கு எல்லாம் கொண்டு வரச் சொல்லி பிரம்ம பிரகாஷ் கேட்டரிங்லே அரேஞ்ச் பண்ணியிருக்கேன். முன் பக்கத்து லான்லே டேபிள் டெகரேஷனெல்லாம் நீயே கூட இருந்து கவனிச்சுக்கோ...”

“சரியம்மா. பார்த்துக்கறேன்” அடக்கமாகப் பதில் சொன்னாள் சீதா. அவனுடைய கவிதைகளில் பித்துக் கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் அந்த நகரில் ஏராளமாக இருந்ததால் சொற்பொழிவுக்குப் பெருங்கூட்டம் வந்திருந்தது.ஒரு மணி நேரத்திற்கு மேல் தேன் மழை போல் அவன் செய்த சொற்பொழிவுக்கு இடையிடையே பலத்த கரகோஷங்கள் இருந்தன. கூட்டம் முடிந்ததும் அவன் ஆட்டோகிராப் வேட்டையிலிருந்து மீளவே இன்னும் ஒருமணி நேரமாயிற்று.

அத்தனை ஆட்டோகிராபிலும் அவன் கையெழுத்துப் போடுகிற வரை இந்து பொறுமையாகக் காத்திருந்தாள். அப்புறம் இந்து வீட்டுத் தோட்டத்து லானில் முக்கியமான உள்ளூர்ப் பிரமுகர்களோடும் இந்துவின் சினேகிதிகளோடும் விருந்துண்டான் அவன். சிரிப்பும், பேச்சுமாக விருந்து முடிய இரவு பதினோரு மணிக்கு மேலாகி விட்டது.

கவிஞன் ஊர் திரும்ப வேண்டிய விமானம் மறுநாள் காலை ஏழு மணிக்கு இருந்ததால், ஒய்வு கொள்வதற்காக அவன் விரைவில் தூங்கப் போனான். அறையில் முற்றிலும் எதிர்பாராத அன்பளிப்பு ஒன்று ஒரு சிறிய கடிதத்தோடு வைக்கப்பட்டிருந்தது அவனுக்கு.

அவன் தன் கழுத்தில் அணிந்து கொள்வதற்குரிய அளவு பெரிதான ஒரு பிச்சிப்பூ மாலையை தொடுத்துப் படுக்கை மேல் வைத்திருந்தாள் சீதா, அதன் மேல் உறையிட்டு ஒட்டி இருந்த சிறிய கடிதத்தை அவன் பிரித்துப் படித்தான்.

“பிரியமுள்ள கவிஞருக்கு,

வேலைக்காரி சீதா அநேக வணக்கங்கள். சொற்களால் எத்தனை எத்தனையோ மாலைத் தொடுக்கும் உங்களுக்கு நான் இந்தப் பூமாலையைத் தொடுத்து வைத்திருக்கிறேன். ‘நல்லாப் பூத்தொடுக்கத் தெரியுமாமே?’ என்று என்னைக் கேட்டீர்கள். நான் நன்றாகத் தொடுக்கிறேனா இல்லையா என்பதை இனி நீங்கள்தான் சொல்ல வேண்டும். நீங்கள் இருவரும் கூட்டத்துக்குப் போகும் போது ‘மாலை, பூஜை படத்துக்கா?’ என்று அம்மா கேட்டது உங்களுக்குத் தெரியும். படங்களுக்குத் தினந்தோறும் பூஜை செய்கிறேன். இன்று உங்களைப் பூஜிக்க நேர்ந்தது என் பாக்கியம். நான் இந்தக் கடிதம் எழுதினது அம்மாவுக்குத் தெரிய வேண்டாம்”

'உங்கள் கவிதைகளைப் பூஜிக்கும் சீதா’ என்று அதில் எழுதியிருந்த வாக்கியங்கள் அவன் மனதுக்கு இதமாக இருந்தன. இரண்டு மூன்று மணி நேரம் ஏர்கண்டிஷன் அறையில் இருந்ததன் காரணமாக அந்த மாலை அறையையே மணத்தினால் நிரம்பச் செய்திருந்தது. அந்த நறுமணத்தில் அவன் சுகமாகத் தூங்கினான்.

காலையில் சீதா காபி கொண்டு வந்த நேரத்தில் அப்போது கைவசமிருந்த தன் கவிதைத் தொகுதியின் ஒரே ஒரு பிரதியை கையொப்பமிட்டு, அவளுக்கு ஏதோ எழுதிக் கொடுத்தான் அவன்.

சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு அவனை அழைத்துச் செல்ல வந்தாள் இந்து. அவனும் தயாராயிருந்தான். கார் காம்பவுண்டைத் தாண்டுகிற வரை சீதா வீட்டு வாயிலில் நின்று பார்ப்பதைக் கவிஞன் காரிலிருந்தே கவனிக்க முடிந்தது. அவன் பெருமூச்சு விட்டான்.

கவிஞர் புறப்பட்டுப் போன மறுதினமோ என்னவோ பகலில் எங்கோ வெளியில் போய் விட்டு வந்த இந்து சீதாவைக் கூப்பிட்டு வாய் ஓயுமட்டும் குரல் கொடுத்து அலுத்த பின் அவளைத் தேடி மாடிப்படியருகே கீழே அவள் உபயோகத்துக்கும் ஸ்டோர் ரூமுக்காகவும் சேர்த்து விட்டிருந்த அறையில் போய்ப் பார்த்த போது சீதா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் கையருகே ஏதோ - தூங்குமுன் அவள் படித்துக் கொண்டிருந்த புத்தகம் நழுவியிருந்தது. வேலைக்காரி என்ன புத்தகதைப் படித்துக் கொண்டிருக்கிறாள் என்று சாதாரணமாக அவள் பார்க்க விரும்ப மாட்டாள். ஆனால் இன்று என்னவோ அதை எடுத்துப் பார்க்க வேண்டும் போல ஆவலாயிருந்தது அவளுக்கு. மெல்ல ஒசைப்படாமல் அதை எடுத்துப் பிரித்தாள் இந்து. முதல் பக்கத்தில்-

‘அழகும் மணமும் நிறைந்த மாலைகளைத் தொடுக்கும் நல்ல கைகளுக்கு - அன்புடன் - கவி குமுதசந்திரன் - என்று எழுதித் தேதியிட்டுக் கையொப்ப மிட்டிருந்ததைக் கண்டதும் இந்துவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அப்பாவி போல் தூங்கும் அந்த வாலிப வேலைக்காரியின் மேல் அவளுக்குத் திடீரென்று கோபமாகவும் பொறாமையாகவும் இருந்தது. கழுத்தை நெரித்து அவளைக் கொன்று விட வேண்டும் போல் வெறி வந்தது.

'கவிஞன் தனக்கு ஒரு புத்தகத்தை இப்படிக் கையொப்பமிட்டுக் கொடுத்திருந்தால், அதை ஊரெல்லாம் சொல்லிப் பெருமைப்பட முடியும். அந்தக் கவிஞனின் நோக்கில் என் வீட்டு வேலைக்காரியின் பெருமானம் கூட நான் மதிப்புப் பெறவில்லையா?’ என்றெண்ணிய போது இந்துவுக்கு அழுகையே வந்து விடும் போலிருந்தது. விழாவன்று மாலை தானும் அவரும் புறப்படும் போது வேலைக்காரி சீதா மாலை தொடுத்துக் கொண்டிருந்தது இந்துவுக்கு ஞாபகம் வந்தது. அவர் புத்தகத்தின் முதல் பக்கத்தில் எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்திருப்பதையும் சீதா மாலை தொடுத்துக் கொண்டிருந்ததையும் சேர்த்து நினைத்த போது என்ன நடந்திருக்க முடியும் என்பதை இந்துவால் அனுமானிக்க முடிந்தது.

ஒரு கவியின் அன்பைப் பெறுவதற்காக அளவுக்கதிகமான விலையைக்கூட கொடுக்க இந்து துணிந்திருந்தாள். மற்றொருத்தியோ ஒரு சர்வ சாதாரணமான விலைக்கு அதை வாங்கியிருக்கிறாள். சீதாவின் மேலேற்பட்ட கோபவெறி தணிந்து தனக்குத்தானே வாய் விட்டுக்கோவென்று கதறி அழுது விடவேண்டும் போலிருந்தது இந்துவுக்கு. சிரமப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்டு ஒசைப்படாமல் புத்தகத்தைத் தூங்குகிறவளின் கையருகே எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு,

‘ஒரு கவியின் விலையை நிர்ணயம் செய்வதில் என் அளவுகோல் எங்கோ ஒரு நூலிழை தவறி விட்டது’ என்று மனத்திற்குள் நினைத்தபடி நடைப் பிணம் போல் மெதுவாக அங்கிருந்து நகர்ந்தாள் இந்து.

(1974-க்கு முன்)