நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/விதிவிலக்காக ஒரு வியாபாரம்
119. விதிவிலக்காக ஒரு வியாபாரம்
டெல்லியிலிருந்து ஒரு வார விடுமுறையில் சென்னை வந்த சப்த ரிஷி தன் பழைய நண்பர்களில் யார் யாரைச் சந்திக்கலாம் என்று யோசித்த போது முதலில் எழுத்தாளர் சண்டமாருதனுடைய நினைவே வந்தது. சண்டமாருதனுடைய சொந்தப் பெயர் எஸ்.கே.வி.ரங்கசாமி. புனை பெயராகச் சண்டமாருதன் என்பதை வைத்துக் கொண்டிருந்தான். சப்தரிஷிக்கு ஊர் லால்குடி. ரங்கசாமிக்கு ஊர் ஸ்ரீரங்கம். இருவரும் திருச்சியில் கல்லூரி ஆண்டுகளில் ஒன்றாகப் படித்தவர்கள். கல்லூரிக்கு அப்பால் இருவருடைய வாழ்க்கை வழிகளும் திசைகளும் வேறு வேறாகப் பிரிந்து விட்டன. சப்தரிஷி ஹானர்ஸ் முடித்து ஐ.எஃப்.எஸ். பரீட்சை எழுதி பாரத அரசாங்கத்தின் வெளி உறவு இலாக்கா அமைச்சரகத்தில் வேலைக்குச் சேர்ந்தான். ரங்கசாமி பி.ஏ. இறுதி ஆண்டு தேர்வே எழுதாமல் பாதியில் படிப்பை விட்டு விட்டுச் சென்னைக்கு வந்து ஒரு புதிய பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்து, அது பாதியில் நின்று போனதனால் எழுத்தையோ, பத்திரிகைப் பணிகளையோ முழு நேரத்துக்கும் நம்பி வாழ முடியாது என்று புரிந்து கொண்ட பின், மவுண்ட்ரோடில் இருந்த ஒரு பெரிய ஏலக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து எழுத்தை உபதொழிலாகச் செய்து காலம் தள்ளி வந்தான்.
அவனுடைய குரல் கணீரென்று இருக்கவே, இந்த வெண்கலத் தொண்டை ஆசாமியையே ஏலம் போடுகிறவராகப் பயன்படுத்திக் கொண்டால் என்ன? என்று கம்பெனிக்குத் தோன்றியது. ரங்கசாமியைக் கூப்பிட்டுக் கேட்டார்கள். ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்த நானூறு ரூபாய் சம்பளத்தோடு இன்னும் ஒரு நூறு ரூபாய் சேர்ந்துத் தருவதாகச் சொன்னார்கள். ஏலம் போடுகிற வேலை வாரத்தில் ஒருநாள் மட்டுமே. மற்ற நாட்கள் அலுவலக வேலைதான். ஞாயிற்றுக்கிழமை காலையில் தொடங்கும் ஏலத்துக்காக சனிக்கிழமையன்று பொருள்களை ஒழுங்குபடுத்த வேண்டியிருந்ததனால், அன்று அலுவலகத்துக்கு விடுமுறை. ரங்கசாமி அடிக்கடி எழுதிய கடிதங்களிலிருந்தும், நேரில் சென்னையில் சந்திக்க நேர்ந்த நேரங்களில் கூறியதிலிருந்தும் இந்த விவரங்களை எல்லாம் சப்தரிஷி தெரிந்து கொண்டிருந்தான்:
சப்தரிஷி சென்னைக்கு விமானத்தில் வந்து இறங்கிய தினம் சனிக்கிழமை. மறுநாள் ஏலத்துக்குப் பண்டங்களைத் தயார்படுத்தி வைப்பதற்காகக் காலையில் கம்பெனிக்கு அரை நாள் போய்விட்டு, ரங்கசாமி பிற்பகலில் வீடு திரும்பி விடுவான் என்று சப்தரிஷிக்குப் புரிந்தது. சனி ஞாயிறு இரண்டு நாட்களும் சென்னை யிலிருந்து விட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு மெயிலில் லால்குடி போக வேண்டும் என்பது சப்தரிஷியின் திட்டம். நினைத்தபடி அன்று எழுத்தாளர் சண்டமாருதன் என்னும் தன் கல்லூரி நண்பன் எஸ்.கே.வி.ரங்கசாமியைச் சந்திக்கச் சென்றான் சப்தரிஷி. ரங்கசாமி என்ற சண்டமாருதன் சப்தரிஷியை தேடிச் சென்ற போது வீட்டில்தான் இருந்தான். அவன் ஏதோ பத்திரிகைக்குக் கதை எழுதிக் கொண்டிருந்தான் போலிருக்கிறது. சண்டமாருதனின் மனைவிதான் சப்தரிஷியை வரவேற்றாள்.
“அப்பா! டில்லி மாமா வந்திருக்காருப்பா” என்று சண்டமாருதனுடைய ஐந்தரை வயதுப் பையன் மழலையில் குரல் கொடுத்தான். அவனுக்காகச் சாந்தினி செளக் வரை தேடிப் போய் வாங்கி வந்திருந்த ‘ட்ரை ஃப்ரூட்ஸ்’ பொட்டலங்களை அவனிடம் கொடுத்து விட்டுச் சண்டமாருதனின் அறைக்குள் நுழைந்தான் சப்தரிஷி.
“வாப்பா! எப்போ வந்தே? உன்னை எங்கோ நைஜீரியாவிலோ, லிபியாவிலோ ஹைகமிஷனராய் போட்டிட்டதாக யாரோ சொன்னாங்கள்ளே?”
“ஏண்டா பாவி! எவண்டா சொன்னான் அப்பிடி? சொன்னதுதான் சொன்னான், லண்டன், பாரீஸ், ஃபிராங்பர்ட்னு ஏதாவது நல்ல இடமாச் சொல்லியிருக்கப் படாதோ? எதுக்கு நைஜீரியாவையும், லிபியாவையும் சொன்னான்?”
“அது அவனைப் போய்க் கேட்கணும். என்னைக் கேட்டா நான் என்ன சொல்றது?”
“சரி! அப்படியே நைஜீரியாவிலோ, லிபியாவிலோ போட்டிருந்தாக் கூட நான் போய் வேலை பார்ப்பேன்னு வச்சுக்கோ. மெட்ராஸிலே நீ ‘தாம்ஸன் அண்ட் ஃபிரடரிக் ஆக்ஷன் கம்பெனி’யில் ஒரு தரம் ரெண்டு தரம்னு கூவிக் குவி ஏலம் போடறதை விட அது ஒண்ணும் மோசமில்லேடா.”
“நீ தெரியாமல் பேசறே. ஒரு வகையிலே இந்த ஏலக் கம்பெனி வேலை எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. என்னைச் சுத்திப் பழகற மனிதனும், ஒவ்வொரு ஏலப் பொருளும் ஒரு கதையாயிருக்கும். வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை எட்டரை மணி முதல் பகல் ஒண்ணரை மணி வரை ஏலம் விடற சமயத்திலே விதவிதமான உணர்ச்சிகளும் தாபங்களும் தவிப்புகளும், நிறைந்த மனிதர்களைச் சந்திக்கிறேன் நான்.”
“பழைய பீரோக்கள், கட்டில்கள், நாற்காலிகள் ஏலம் போடற வேலையிலே இத்தனை கர்வமா?”
“கர்வத்தான். எங்க கம்பெனியிலே மரச் சாமான்கள் மட்டுமே ஏலத்துக்கு வரலை. கடிகாரங்கள்,எலக்ட்ரிகல் அயிட்டங்கள், கட்டில்கள், ஸோபா ஸெட்டுகள், சமையல் ஸ்டவ்கள் இன்னும் என்னனென்னவோ ஏலம் விட வருது. ஒவ்வொரு பண்டத்துக்கும் நம்பர் கொடுத்து லிஸ்ட் பிரிண்ட் பண்ணித் திங்கட்கிழமை முதலே அதை வர்ரவங்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சிடுவோம். லிஸ்டிலே இருக்கிற அதே நம்பர் பண்டங்களின் மேலேயும் ஒட்டியிருக்கும். லிஸ்டை வைத்துக் கொண்டு ஏலம் எடுக்க வருகிறவர்கள் பண்டங்களைப் பார்த்து விடலாம். ஞாயிற்றுக்கிழமை காலை ஏலம் விடறப்போ நம்பரை மட்டும் சொல்லி விட்டுப் பொருளைப் பத்தி ஒரு சிறு வர்ணனை கொடுப்போம். பெருங்கூட்டம் வந்திருக்கும். எங்க கம்பெனிக்கு வேண்டிய புரோக்கர்களையும் நிறுத்தி வைத்திருப்போம். அவங்க விலையை ஏத்தி விடுவாங்க. ,சமயங்களிலே பண்டங்களை ஏலத்துக்குக் கொடுத்தவங்களே வந்து ஆட்களோட நின்னு விலையை ஏத்தி விடுவாங்க. விற்கிற பண்டங்களின் விலை மேலே எங்களுக்குப் பன்னிரண்டு சதவிகிதம் கமிஷன் உண்டு.
ஏலம் எடுத்தவங்க முழுப்பணத்தையும் அன்னிக்கே கட்டணும்னு அவசியமில்லை. மொத்தத் தொகையிலே இருபத்தஞ்சு சதவீதம் உடனே கட்டினால் போதும். மீதத்தை அந்த வார இறுதிக்குள் கட்டிப் பொருளை டெலிவரி எடுத்துக் கொள்ளலாம். இந்த ஏலத்தில் பெறுமானம், மதிப்பீடு எல்லாம் கூடவோ குறையவோ இருக்கும். நீ எங்கள் ஏலக் கம்பெனிக்கோ வேறு எந்த ஏலக் கம்பெனிக்கோ போனதில்லை என்று நினைக்கிறேன்.போய்ப் பார்த்தால் ஆச்சரியப்படுவாய். ஏழு ரூபாய் கூடப் பெறாத ஒரு கள்ளிப் பலகையிலான நாற்காலி எழுபது ரூபாய் விலைக்குப் போய் விடும். ஆக்ஷன் ஷாப்பிலே ஒவ்வொரு பண்டத்துக்கும் சாதாரணமான விலை ஒன்று, ஸென்டிமென்டல் விலை ஒன்று இருக்கும். ஒரு வெல்வெட் தலையணை முப்பது ரூபாய் கூடப் பெறாதது, முந்நூறு ரூபாய்க்கு ஏலம் போச்சு. அதிலே ஒரு பெரிய சோகக் கதையே இருந்ததுன்னா நீ நம்புவியோ?”
“நம்ப மாட்டேன். நீ எழுத்தாளன். அதனாலே ஏலம் போன தலையணையை வியாஜமாக வச்சுக் கொண்டு நீயே ஒரு கதை அளந்துடுவே.”
“அப்படிச் சொல்லாதே. ஒரு நாற்காலி, ஒரு கட்டில், தலையணை எல்லாமே வரலாறாக மாறிய பின்னும் அதைத் தாங்களே வாய் விட்டுச் சொல்ல முடியாத, மெளன அனுபவங்களாக ஊமைக் கதாபாத்திரங்களாக - பேச முடியாத சாட்சிகளாகவே ஏலக் கடைக்கு வருகின்றன. அவை மட்டும் பேச முடியுமானால், மனிதர்கள் சொல்லாத, சொல்லக் கூசுகின்ற எத்தனையோ அனுபவங்களை அவற்றிடமிருந்து நாம் அறியலாம். மனிதர்களின் பழைய அனுபவங்களை ஏலம் போட்டால் விற்காது. ஆனால், அவர்கள் ஆண்டு அனுபவித்த மேசை, நாற்காலி, பாத்திரம், பண்டம் எல்லாம் ஏலம் போட்டால் விற்கும்.”
“அனுபவங்களை ஏலம் போட்டு விற்கத்தான் உன்னைப்போன்ற எழுத்தாளர்கள், பிரசங்கிகள், கவிஞர்கள், நாடகாசிரியர்கள் எல்லாரும் புறப்பட்டிருக்கிறீர்களே?”
“அப்படியானால் நான் ஒருவனே இரண்டு வகையில் ஆக்ஷனராக இருக்கிறேன். மனித அனுபவங்களை ஏலம் போடுகிற சண்டமாருதனை உனக்குத் தெரியும். ஆனால் மேசை, நாற்காலி, கட்டில், சோபாக்களை ஏலம் போடுகிற எஸ்.கே.வி.ரங்கசாமியை உனக்குத் தெரியாது. நீ என்னுடைய கம்பெனிக்கு வந்ததே இல்லை. நாளைக்கு என்னோடு வா. அங்கே ஒவ்வொரு சாதாரணப் பொருளுக்கும் ஒரு ‘ஸென்டிமென்டல் வேல்யூ’ இருப்பதை நீ புரிந்து கொள்ளலாம். அப்புறம் நாளை இரவு நீ ரெயிலேறுவதற்கு முன் நான் சந்தித்த ஒரு சுவாரசியமான கதாபாத்திரத்தைப் பற்றி உனக்குச் சொல்லுகிறேன்.” .“என்னைப் பொறுத்த வரை எங்க வெளியுறவு இலாக்காவின் பால பாடமே எழுத்திலோ, பேச்சிலோ ஸென்டிமென்டல் அப்ரோச்சோ, ஸென்சேஷனல் அப்ரோச்சோ கூடாது என்பதுதான்.”
“சர்க்கார் உத்தியோகத்துக்கு அது அவசியமாயிருக்கலாமடா சப்தரிஷி! ஆனால் மனித உணர்வுகளும், மனக்கிளர்ச்சிகளுமே என் போன்ற இலக்கிய கர்த்தாக்களுக்கு ஜீவ ஊற்று. அவை இல்லாத உலகத்தில் புத்தி மட்டுமே இருக்கும். உணர்வுகளே இல்லாத புத்தி, உலகை வறளச் செய்துவிடும் புத்தி என்பது வெறும் கால்குலேஷன்தான். வேறொன்றும் இல்லே.”
“ஆனாலும், நம்மவர்கள் எப்போதும் எதிலுமே அளவுக்கு மிஞ்சி ‘ஸென்டிமென்டலாக’ இருக்கிறார்கள். அது எனக்குப் பிடிப்பதில்லை.”
“உன்னுடைய சென்டிமென்டலான ஒரு நிலைமையை நீ சந்திக்கிறவரை இப்படித்தான் மற்றவர்களிடம் எல்லாம் சொல்லிக் கொண்டிருப்பாய்.”
“சரி! நாளைக்கு உன்னோடு ஆக்ஷன் ஹாலுக்கு வருகிறேன்.போதுமா?” என்றான் சப்தரிஷி. அவ்வளவில் அந்தப் பேச்சு முடிந்தது. சண்டமாருதனின் மனைவி காபி, சிற்றுண்டி கொண்டு வந்தாள். நண்பர்கள் இருவரும் காபி, சிற்றுண்டியை முடித்துக் கொண்டு அடையாற்றில் தங்களுக்கு மிகவும் வேண்டியவனான மற்றொரு நண்பனைக் காணச் சென்றார்கள். அந்த நண்பன் சப்தரிஷி, சண்டமாருதன் இருவரையும் தன்னோடு முதல் ஆட்டம் சினிமாவுக்குக் கூப்பிட்டான். தட்டிச் சொல்ல முடியவில்லை. இருவரும் அந்த நண்பனோடு சினிமாவுக்குப் போனார்கள். கடற்கரைக்குப் போய்ப் பேசிக் கொண்டிருக்க ஆசைப்பட்டான் சப்தரிஷி, ஆனால் நண்பனின் பிடிவாதமே வென்றது.
இரவு ஒன்பதே முக்கால் மணிக்குச் சினிமா முடிந்ததும் உட்லண்ட்ஸில் போய்ச் சாப்பிட்டார்கள். சப்தரிஷி அங்கேயே தங்கியிருந்ததனால், அப்படியே தன் அறைக்குப் போய் விட்டான். அடையாறு நண்பன் தன் காரிலேயே சண்டமாருதனை வீட்டில் கொண்டு வந்து விட்டுப் போனான். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை எட்டரை மணிக்கே ஏலத்துக்குப் போக வேண்டும் என்பதால், சண்டமாருதன் சீக்கிரமே படுத்துத் தூங்கி விட்டான். வழக்கமாக இரவு ஒரு மணிக்கு மேலும் கண் விழித்து எழுதிக் கொண்டிருக்கக் கூடிய அவன் அன்று சீக்கிரமே படுத்தது அவன் மனைவிக்கே ஆச்சரியமாக இருந்தது.
மறுநாள் காலை சரியாக ஏழரை மணிக்கே சண்டமாருதனின் வீட்டுக்கு வந்து விட்டான் சப்தரிஷி. அங்கேயே காலைச் சிறறுண்டியை முடித்துக் கொண்டு சப்தரிஷியும், சண்டமாருதனும் மவுண்ட்ரோடில் மிகவும் பிரதானமான இடத்திலிருந்த ‘தாம்ஸன் அண்ட் ஃபிரடரிக் ஆக்ஷன்’ ஹாலுக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
ஆக்ஷன் ஹால் ஏலத்துக்கு வந்த பொருள்களாலேயே பிரமாதமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. ஏலம் கேட்க வந்தவர்கள் உட்காருவதற்கு ஏலத்துக்காக வந்த நாற்காலிகள், சோபாக்கள், பெஞ்சுகளாலேயே இடவசதிசெய்திருந்தார்கள். ஒரு கோர்ட்டில் நீதிபதி ஆசனம் எவ்வளவு உயரத்தில் இருக்குமோ, அவ்வளவு உயரத்தில் அதே அமைப்பில் ஏலம் கூறுகிறவரின் ஆசனம் இடப்பட்டிருந்தது. நவநாகரிகப் பெண்கள், பழங்கால மடிசார் மாமிகள், முதியவர்கள், இளைஞர்கள், வியாபாரிகள், குடும்பஸ்தர்கள் என்று கூட்டம் அங்கே அலை மோதியது. ஆக்ஷன் ஹால் வாசலில் அன்றைக்கென்றே சில தற்காலிக டீ, கோகோ கோலா ஸ்டால்கள் முளைத்திருந்தன. சில வெளிநாட்டுக்காரர்கள் கூடக் கூட்டத்தில் தென்பட்டனர். மிகச் சமீப காலத்து ஃபேஷன்களையும் அந்தக் கூட்டத்தில் காண முடிந்தது. லுங்கி,பெல்பாட்டம், ஜீன்ஸ் அணிந்த பெண்கள் கூட அங்கே ஏலம் கேட்க வந்து உட்கார்ந்திருந்தனர்.
சரியாக எட்டு அடித்து இருபத்தொன்பதாவது நிமிஷத்தில் ஏலம் கூறுவதற்காகச் சண்டமாருதன் நீதிபதி ஆசனம் போல் உயரத்தில் இடப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தான். பக்கத்தில் சற்றே தணிவான இருக்கையில் ஏல விவரங்களைக் குறித்துக் கொள்வதற்காக மற்றொருவர் அமர்ந்தார்.
ஏலம் ஆரம்பமாயிற்று. சண்டமாருதனின் கண்களும், வாயும் சுறுசுறுப்பாகப் பார்த்தன; பேசின. இருநூறு ரூபாய் ஒரு தரம், இரண்டு தரம் என்பது போல் அவனுடைய வெண்கலக் குரலில் கூவி, அவ்வளவு பெரிய கூட்டத்தில் எந்த மூலையில், யார் எதைச் சொல்லி விலையை உயர்த்தி விட்டாலும், அந்தப் பக்கம் விரைந்து பார்வையைப் பாய்ச்சி அவர்களைக் கண்டுகொள்ளும் விரைவு எல்லாம் அதிசயிக்கத்தக்க வேகத்தில் இருந்தன. சண்டமாருதன் அஷ்டாவதானம் செய்தான். துரிதமாக இயங்க வேண்டிய பல காரியங்கள் அடங்கிய வேலையாகிய அந்த ஏலத்தை, ஒரு சிறு பதற்றமும் இல்லாமல் மிகவும் அநாயாசமாகச் செய்தான் சண்டமாருதன்.
ஆக்ஷன் பட்டியலில் 647 அயிட்டங்கள் போட்டிருந்தன. அவ்வளவும் எட்டரை மணியிலிருந்து பகல் ஒன்றரை மணிக்குள் ஏலம் போட்டு முடிக்கப்பட்டு விட்டன. பதினொன்றரை மணிக்கே கூட்டம் மெல்ல மெல்லக் கலையத் தொடங்கியது.
முதலில் கடிகாரத்தில் தொடங்கி, எலெக்ட்ரிக்கல் சாமான்கள், சமையல் ஸ்டவ்வுகள், குக்கர்கள் எல்லாம் ஏலம் போடப்பட்ட பின் பன்னிரண்டரை மணிக்கு மரச் சாமான்கள் ஏலத்துக்கு வந்தன. மரச்சாமான்களே அதிகம். அப்படியிருந்தும் ஏலம் ஒன்றரை மணிக்கே முடிந்துவிட்டது.
ஏலம் முடிந்ததும் சப்தரிஷியைத் தன் வீட்டுக்குச் சாப்பிட அழைத்துச் சென்றான் சண்டமாருதன். சாப்பாடு முடிந்ததும், “நேத்துச் சொல்லியிருந்தேனே, அந்தக் கதையை இப்போது கேட்கிறாயா?” என்று சண்டமாருதனே தொடங்கினான். சப்தரிஷியும் கதை கேட்கச் சம்மதித்தான்.
“எனக்கு ‘சென்டிமென்ட்ஸ்’ எதுவும் இல்லே. ஆனாலும் உன்னுடைய ஸென்டிமெண்டல் கதையைக் கேட்க ஆட்சேபணை கிடையாது” என்றான்.
“நீ செண்டிமென்டல் ஆசாமியா, இல்லையா என்பதைக் கதையை நான் முடித்ததும் பார்ப்போமே!” என்று சொல்லி விட்டுக் கூறத் தொடங்கினான் சண்டமாருதன்.“இரண்டு மாசத்துக்கு முன்னே சென்னை அடையாறு பகுதியிலிருந்த சோமாபுரம் அரண்மனையை இடித்து, அங்கே ஐந்து நட்சத்திர ஹோட்டல் கட்ட அஸ்திவாரம் போட்டார்களே, அப்போது அந்த அரண்மனையைச் சேர்ந்த கட்டிடங்கள், அவுட் ஹவுஸ்கள் ஆகியவற்றின் மரச்சாமான்கள், லஸ்தர் விளக்குகள், சுவர்க் கடிகாரங்கள், அலங்காரக் கதவுகள்,கட்டில்கள், வெல்வெட் மெத்தைகள், அபூர்வ வேலைப்பாடு அமைந்த தலையணைகள் எல்லாமே எங்கள் கம்பெனி மூலமே ஏலத்துக்கு வந்தன. அந்தப் பண்டங்கள் ஏலத்துக்கு வந்து, நாங்கள் அவற்றுக்கு நம்பர் கொடுத்து லிஸ்ட் போட்டு ஒரு விசேஷ விளம்பரத்தையும் பத்திரிகைகளில் கொடுத்தோம். ‘அருமையான’ வேலைப்பாடுகள் அடங்கிய சோமாபுரம் அரண்மனைப் பொருள்கள் ஏலத்துக்கு வருகின்றன என்று விளம்பரப்படுத்திய மறுநாளிலிருந்து பொருள்களைப் பார்ப்பதற்கே ‘தாம்ஸன் அண்ட் பிரடெரிக் ஆக்ஷன்’ ஹாலில் கூட்டம் அலை மோதிற்று.
“சோமாபுரம் ஆந்திராவில் ஒரு பழைய சமஸ்தானம் என்பது உனக்குத் தெரியும். பாலஸ் ‘பர்னிச்சர்ஸ்’ ஏலம் பற்றி நாங்கள் விளம்பரம் செய்த மறுநாளிலிருந்தே எங்களுக்கு ஹைதராபாத், விஜயவாடா, கர்நூல் என்று எங்கெங்கிருந்தோ டிரங்க் கால்கள் வந்தன. பம்பாய், டெல்லி, கல்கத்தாவிலிருந்து சில சினிமா ஸ்டூடியோ உரிமையாளர்கள், சில பெரிய ஹோட்டல் அதிபர்கள் கூட அந்த ஆக்ஷன் நடக்கிற போது சென்னை வந்து தங்களுக்குத் தேவையானவற்றை ஏலம் எடுக்கப் போவதாகக் கூறி ஃபோன் செய்திருந்தார்கள். சோமாபுரம்அரண்மனைப் பொருள்கள் காரணமாக எங்கள் கம்பெனியே பரபரப்பு அடைந்திருந்தது. ஒரே டிரங்க் கால்கள், விசாரணைகள், பிரமுகர்களின் விஜயங்கள் என்று கம்பெனியே அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. அரண்மனைக் கட்டில்களில் விரித்திருந்த பெட்ஷீட், பெர்ஸியன் கம்பளங்கள் எல்லாம்கூடப் பல ஆண்டுகள் ஆகியும், புத்தம் புதியனவாக அப்படியே இருந்தன. அவற்றுக்கே ஏகப்பட்ட போட்டி இருந்தது.
“அரண்மனைப் பண்டங்களை எங்கள் ஆக்ஷன் ஹாலில் அடுக்கவே மூன்று நான்கு நாட்கள் பிடித்தன. மற்றவற்றை ஒதுக்கி விட்டு அவற்றை நன்றாக ‘டிஸ்பிளே’ செய்ய வேண்டியிருந்தது. அந்த ஆக்ஷனுக்குச் சில மந்திரிகள், கவர்னர், அந்நிய நாடுகளின் துாதர்கள் கூட வருவார்கள் என்று எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டிருந்தது. அதனால் ஏலக் கூடத்தைச் சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருக்க நாங்கள் பெருமுயற்சி செய்தோம். அந்த அரண்மனையது அரச பரம்பரையின் உறவினர்கள், நண்பர்கள் கூட அப்பொருள்களில் மிகவும் அக்கறை காட்டினர். அதிகார பூர்வமாக ஏலம் நடப்பதற்கு முன்பிருந்தே, ‘இதை எனக்கு எப்படியாவது தந்து விடுங்கள். எவ்வளவு விலையானாலும் தருகிறேன்’ என்று கேட்டு ஒவ்வொரு பண்டத்துக்கும் கிராக்கி இருந்தது. எங்கள் கம்பெனிச் சட்டமோ, எந்தப் பொருளையும் ஏலம் போட்டு மட்டுமே விற்பது என இருந்தது.
“இருந்தும் சில சமயங்களில் அதை மீறி விதிவிலக்காக சில விற்பனைகளைச் செய்திருக்கிறோம். ஏலம் போட்டு விற்றது போலக் கணக்கில் எழுதிக் கொண்டு ஏலம் போடாமலேயே அவற்றை விற்றிருக்கிறோம். ஆனால், இந்தச் சோமாபுரம் அரண்மனைப் பொருள்களுக்கு ஏலத்தில் கடும் போட்டி இருக்கும் போலத் தோன்றியதால், கம்பெனி டைரக்டர் போர்டே விசேஷக் கூட்டம் நடத்தி எல்லாப் பொருளையும் கண்டிப்பாக ஏலம் கூறியே விற்பது” என்று முடிவு எடுத்து அறிவித்து விட்டது.
ஆவலோடும், பரபரப்போடும் எதிர்பார்த்த அந்த ஏலத்துக்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. ஞாயிறன்று ஏலம் என்றால், வியாழக்கிழமை பிற்பகல் இரண்டரை மணிக்கு ஒரு விநோதமான அனுபவம் எனக்கு ஏற்பட்டது.
பொருள்களைப் பார்க்க வந்த கூட்டத்தினிடையே ஒரு முதிய தெலுங்கர் அரண்மனைக் கட்டில்கள் வைத்திருந்த பகுதியில் ஒரு கட்டிலில் உட்கார்ந்து தலையணையை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்து விட்டாரென்றும், கம்பெனி ஊழியர்கள் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் அவர் கட்டிலிலிருந்து எழுந்திருக்க மறுக்கிறார் என்றும், என் அறையில் வந்து எனக்குத் தகவல் கூறப்பட்டது. உடனே எங்கள் கம்பெனி ஜெனரல் மானேஜர் ஜம்புநாதன் போலீஸுக்குப் போன் செய்யலாம் என்றார்.
நான் அப்படிச் செய்யக்கூடாது என்றேன். ‘நானே போய்ப் பார்த்துப் பேசி அந்த ஆளைக் கிளப்பி வெளியேற்றுகிறேன். போலீஸ் எதற்கு?’ என்று கூறி விட்டு எங்கள் அலுவலக அறையிலிருந்து ஆக்ஷன் ஹாலில் அரண்மனைக் கட்டில்கள் வைத்திருந்த இடத்துக்கு விரைந்தேன் நான்.
அங்கே ஒரேயடியாகக் கூட்டம் கூடியிருந்தது. சுமார் அறுபத்தெட்டு வயது மதிக்கத்தக்க ஆஜானுபாகுவான ஓர் ஆந்திரக்காரர் கட்டிலில் அமர்ந்து, அதில் இருந்த வெல்வெட்டுத் தணையணையை நெஞ்சோடு அணைத்தபடி கண்களில் நீர் சோர வீற்றிருந்தார். அவரை முதற்பார்வையிலேயே ஒரு பழைய நாடக நடிகர் அல்லது கலைஞர் என்று அனுமானிக்க முடிந்தது. ஆனால், அவரிடமே கேட்டதில், என் அனுமானம் பொய்த்து விட்டது. அவர் ஒரு கல்லூரியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் என்று மட்டும் தம்மைப் பற்றிச் சொல்லிக் கொண்டார். பெயர், ஊர் எதையும் சொல்ல மறுத்து விட்டார். பதில் கூறுமுன் பாதியிலேயே மறுபடி அழ ஆரம்பித்து விட்டார்.ஆனால், அதே கூட்டத்தில் இருந்த மற்றோர் ஆந்திர சகோதரர் என்னைக் கூப்பிட்டு,’அவர் வெறும் கல்லூரி ஆசிரியர் மட்டும் இல்லை. ஆந்திராவில் பெரிய கவி. பூர்வீகத்தில் சோமாபுரம் அரண்மனையோடு தொடர்புடையவர். பாவம்' அவரை ஒன்றும் தொந்தரவு செய்து விடாதீர்கள்’ என்றார்.
‘தொந்தரவுசெய்யாமல் எப்படி? பொது இடத்தில் இப்படிநியூசன்ஸாக…’ என்று நான் பதிலுக்கு அவரைக் கேட்டாலும், என் மனத்தில் ஓர் அனுதாபம் சுரந்து விட்டது.
“யாருக்கும் இடையூறு இல்லாமல் பத்து நிமிஷம் உட்கார்ந்து விட்டு எழுந்து போகா விட்டால், நாங்கள் அவரை வெளியேற்ற வேண்டியதாகி விடும்.”“பாவம் ஒன்றும் செய்யாதீர்கள். அவரே எழுந்து போய் விடுவார்” என்றார் முதலில் பேசிய மனிதர்.
“ஆனால், மாலையில் கடை அடைக்கிற வரை அந்த ஆள் எழுந்திருக்கவில்லை. முரட்டடியாக அவரை எழுப்பவும் எனக்கு மனம் வரவில்லை. யாருடனும், எதுவும் பேசாமல் நினைவுகளை எங்கோ உலாவ விட்டவர் போல் மோட்டு வளையைப் பார்த்தபடி தலையணையை அணைத்துக் கொண்டு ஆடாமல், அசையாமல் வீற்றிருந்தார் அவர். அவரது உடலில் முதுமையைக் கழித்து விட்டுப்பார்த்தால், பால்ய வயதில் அவர் அதி செளந்தர்யவானாக விளங்கியிருக்க வேண்டும் என்று உய்த்துணர முடிந்தது.
“இரவு மணி ஏழு. எங்கள் ஆக்ஷன் கம்பெனி மானேஜர் மறுபடி போலீஸைக் கூப்பிடலாம் என்றார். ஏழரைக்குக் கடை அடைப்பது வழக்கம். கடை அடைப்பதற்குள்ளாவது அந்த ஆளை வெளியேற்ற வேண்டுமே.”
“தயவு செய்து போலீஸைக் கூப்பிட வேண்டாம். வாட்ச்மேன் மட்டும் இருக்கட்டும். நீங்கள் எல்லோரும் போகலாம். நான் பார்த்துக் கொள்கிறேன். அவர் ஆந்திராவில் பெரிய கவியாம். ஒரு கவியை நாம் அவமானப்படுத்தி விடக் கூடாது. நான் இதமாகச் சொல்லி வெளியேற்றுகிறேன்” என்று நான் பொறுப்பேற்றுக் கொண்டு மற்றவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். கடையில் கூட்டம் குறைந்து, தனிமை வாய்த்தது.
ஆக்ஷன் ஹாலைப் பூட்டுவதற்காக ஒரு வாட்ச்மேன் மட்டும் வெளியே கதவருகே காத்திருந்தான். கடைக்குள் என்னையும், அந்தக் கிழட்டுத் தெலுங்குக் கவியையும், அரண்மனைப் பொருள்களையும் தவிர வேறு யாரும் இல்லை.
“ஓர் எழுத்தாளன் என்ற முறையில் அந்த விஷயத்தை மிகவும் சிரத்தையோடும் பொறுமையோடும் கவனித்தேன் நான். சிறிதுநேரத்தில் அந்தக் கவி தலையணையை நெஞ்சில் அணைத்தபடியே கட்டிலிலிருந்து எழுந்திருந்து, அரண்மனை ஓவியங்கள் அடுக்கப்பட்டிருந்த பகுதிக்குப் போய், அங்கே நிலைக் கண்ணாடி உயரத்துக்கு இருந்த சோமாபுரம் இளவரசியான விஜய செளந்தர்யா தேவியின் அழகிய ஓவியத்தின் முன் பித்துப் பிடித்தவர் போல நின்றார். ஒரு தெலுங்குக் கவிதையை உரத்த குரலில் பாடினார். எனக்குக் கொஞ்சம் தெலுங்கு மொழி தெரியுமாகையினால், அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த அர்த்தம் என் மனத்தை உருக்கியது.”
“உனது வைகறைகளிலும், இரவுகளிலும், வசந்தங்களிலும், பனிக்காலங்களிலும், சுகங்களிலும், துக்கங்களிலும், வாழ்விலும், மரணத்திலும் நான் அருகே இல்லா விட்டாலும், என் நினைவுகளை நீ உன் அருகிருத்திக் கொள். உனது விழிப்புகளில் நான் ஒரு கனவு. உனது கனவுகளில் நான் ஒரு விழிப்பு. உனது தலையணையில் என்னுடைய நினைவுகளால் நீ சிந்தும் கண்ணீர் நனையும் போது, எங்கோ தவிக்கும் என் சூடான இதயம் அதில் குளிரும்” என்ற பொருளுள்ள கவிதை அது.”பின்பு ஏதோ ஒரு தீர்மானத்துடன் (மன அமைதியுற்றவர் போல்) என் பக்கம் திரும்பி, ‘தயவுசெய்து என்ன விலையானாலும் இந்த ஓவியத்தையும், இந்தத் தலையணையையும் இப்போதே எனக்கு விற்க முடியுமா?’ என்று கெஞ்சுகிற குரலில் கேட்டார் அவர்.
“முதல் முதலாக என்னிடம் அந்த முதியவர் அப்போதுதான் வாயைத் திறந்து பேசினார்.
“எங்கள் கம்பெனி விதிப்படி, எதை விற்பதானாலும் ஏலம் கூறித்தான் விற்க முடியும். ஞாயிறு காலை எட்டரை மணிக்கு ஏலம். நீங்களே வந்து இதை ஏலம் கேட்டு எடுக்கலாமே?” என்றேன்.
“என்னை விரும்பாத இதே அரச குடும்பத்துக்கு வேண்டிய வேறு பலருங் கூட அந்த ஏலத்துக்கு வருவார்கள். ஏலம் எவ்வளவு உயர்ந்து போனாலும், அவர்கள் நான் இவற்றை எடுக்க முடியாதபடி விலையை மேலே, மேலே தூக்கி விட்டு விடுவார்கள். என் மேல் அவ்வளவு கோபம் அவர்களுக்கு வரக் காரணம் உண்டு. என்னை எண்ணித் தவித்துத் திருமணமாகாமலேயே மாண்டாள் இவள். இவளை எண்ணித் தவித்துப் பிரம்மசாரியாகவே மூத்துக் கவியாகித் திரிகிறேன் நான். இதற்குமேல் எங்கள் அந்தரங்கங்களை நான் உங்களிடம் கூற விரும்பவில்லை. இவள் கிடைக்காததால், நான் கவியானேன். நான் கிடைக்காததால் இவள் பிணமானாள்.”
அவரது பேச்சு உணர்ச்சி வசமாகி மறுபடியும் அழுகையில் போய் முடிந்தது.
ஒரு கவி என்பவன் ரசிக்கத்தக்கவன்; அவன் செண்டிமென்டலாக இருக்கும் போதோ, மேலும் ரசிக்கத் தக்கவனாகி விடுகிறான். அவருடைய நிலை என்னை மனமிளகச் செய்து விட்டது. கம்பெனி சட்ட திட்டம், வியாபார நேரம் முடிந்து விட்டதே என்ற நிலை எல்லாவற்றையும் மறந்தேன்; அந்தத் தலையணையும், அந்த ஓவியமும் என்ன விலைக்கு ஏலத்தில் போக முடியுமோ அந்த விலையைச் சொல்லி அவருக்கு விற்று விட்டுத் தேதி போடாமல் ரசீதும் கொடுத்துப் பணம் வாங்கியாயிற்று. அவர் அவற்றை எடுத்துக் கொண்டு போக ஒரு டாக்சி கொண்டு வரச் சொல்லி வாட்ச்மேனையும் அனுப்பி வைத்தேன். அவர் என்னை வெகுவாக வியந்து பாராட்டினார்.
“என் வரலாற்றைக் கேட்டு விசாரித்துத் தொந்தரவு செய்யாமல் என் கோரிக்கையை மதித்து விதி விலக்காக இவற்றை எனக்கே விற்ற உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது?”
“நன்றி எதுவும் சொல்ல வேண்டாம். உங்கள் சோகக் கதை எனக்குப் புரிகிறது. நீங்கள் ஒரு கவி. நான் ஒரு கதாசிரியன். கவிகளுக்கு இலக்கணமே கூட விதி விலக்குத் தருகிறது. வளைந்து கொடுக்கிறது. விட்டுக் கொடுக்கிறது. வியாபாரம் விதி விலக்குத் தருவதா பெரிது? போய் வாருங்கள்.” என்றேன்.அவரையும், படங்களையும் ஒரு பெரிய டாக்சியில் ஏற்றி விட்டு விட்டு, அன்றிரவு நான் கடையைப் பூட்டும் போது இரவு மணி ஒன்பது. ‘இன்டர்ஸ்டேட் லைசென்ஸ்’ உள்ள அந்தப் பெரிய டாக்சியை அவர் ‘விஜயவாடா வரை வர முடியுமோ?’ என்று கேட்டுக் கொண்டிருந்த போதுதான், நானும் வாட்ச்மேனும் ஏலக்கடையைப் பூட்டி விட்டுப் புறப்பட்டோம்.
பின்பு மறுநாள் என்னுடைய இந்தச் செயல் கம்பெனி மானேஜிங் டைரக்டர் வரை போயிற்று. கூப்பிட்டு என்னைக் கடுமையாக விசாரித்தார்கள்.
நான் நடந்ததைச் சொன்னேன்; அவர் அந்த இளவரசி படத்தின் முன் பாடிய கவிதையை விவரித்தேன்; ‘கவிகள் விதி விலக்கானவர்கள், அவர்களுக்கு எந்த விதியும் பொருந்தாது. எந்த விதியும் அவர்களைக் கட்டுப்படுத்தாது; உங்கள் தாம்ஸன் அண்ட் பிரடெரிக் ஆக்ஷன் கம்பெனியின் விதி மட்டும் எம்மாத்திரம்?’
ரசிகத் தன்மை உள்ள எங்கள் கம்பெனி மானேஜிங் டைரக்டர் என்னை உடனே மன்னித்து விட்டார். இந்த ஆக்ஷன் கம்பெனியில் வேலைக்கு வந்ததிலிருந்து நான் அடைந்த மெய் சிலிர்க்கச் செய்யும் அனுபவம் இது” என்று சண்டமாருதன் கூறியதும், “நன்றாகத்தான் இருக்கிறது. எங்கே, அந்த தெலுங்குக் கவிதையின் சுருக்கத்தை இன்னொரு தடவை சொல்லு! பார்க்கலாம்.பொருள் நிறைந்து, அழகாக இருக்கிறதே” என்று ஆவலோடு கேட்டான் நண்பன் சப்தரிஷி.
“உனது வைகறைகளிலும், இரவுகளிலும், வசந்தங்களிலும், பனிக்காலங்களிலும், சுகங்களிலும், துக்கங்களிலும், வாழ்விலும், மரணத்திலும், நான் அருகே இல்லாவிட்டாலும், என் நினைவுகளை நீ உன் அருகிருத்திக் கொள். உனது விழிப்புகளில் நான் ஒரு கனவு. உனது கனவுகளில் நான் ஒரு விழிப்பு. உனது தலையணையில் என்னுடைய நினைவுகளால் நீ சிந்தும் கண்ணீர் நனையும் போது, எங்கோ தவிக்கும் என் சூடான இதயமும் அதில் குளிரும்.” .
இதைக் கேட்டுச் சண்டமாருதனின் நண்பன் சப்தரிஷி, சில நிமிஷங்கள் அப்படியே மிகவும் உணர்ச்சி வசப்பட்டுச் சென்டிமெண்டலாகி ஒன்றும் பேசத் தோன்றாமல் கண் கலங்கி அமர்ந்திருந்தான்.
(கலைமகள், தீபாவளி மலர், 1974)