நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/ஒர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது

117. ஓர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது

“இளைய ராஜாவை யாரோ பார்க்கணும்னு வந்திருக்காங்க.” குரலைக் கேட்டு ஆத்திரத்தோடு திரும்பிய ரகுநாத பாண்டிய ராஜ பூபதி என்ற ஆர்.பி.பூபதி.

“இந்தா மருதமுத்து உனக்கு எத்தினி வாட்டி சொல்லியிருக்கேன்,’இளைய ராஜா’ அந்தராஜா இந்த ராஜா எல்லாம் கூடாது.சும்மா 'ஐயா’னு கூப்பிட்டாப் போதும்னு.” என்று வேலைக்காரனை இரைந்தான். அவனுடைய முகத்தில் கடுங்கோபம் தெரிந்தது. வேலைக்காரன் விஸிட்டிங் கார்டு ஒன்றை நீட்டிக் கொண்டே கூறினான். “வளமுறையை எப்பிடி விட முடியும் இளையராஜா?”

“பார்த்தியா, பார்த்தியா, மறுபடியும் இளையராஜா வா! அதானே வேணாம்னு இவ்வளவு நேரமாத் தொண்டை தண்ணி வற்றினேன். ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எழுபத்தி மூணாம் வருசத்திலே. இதெல்லாம் என்ன பைத்தியக்காரத்தனம்; நம்மை நாமே ஏமாத்திகலாம்னா இப்பிடி எல்லாம் கூப்பிட்டுச் சந்தோஷப்பட்டுக்கலாம்.”

“அப்படியில்லீங்க - வந்து?”

“வந்தாவது, போயாவது, இந்தக் கோட்டை மதில் சுவருங்க இருக்கே, இதை வெளி உலகமே நம்ம கண்ணுக்குத் தெரியாதபடி அந்தக் காலத்திலே ரொம்ப உயரமாக கட்டிப்பிட்டாங்க. அதான் உங்களுக்கெல்லாம் வெளி உலகமே தெரியலே. காலம் ஓடிக்கிட்டு இருக்குங்கிறதும் தெரியலே. சொப்பனத்துலே வாழுங்க. பீமநாதபுரம் சமஸ்தானம் அஸ்தமிச்சு இருபத்தியாறு வருசம் ஆகப் போகுது. அது அஸ்தமிச்சுப் போச்சுங்கிறது இன்னும் வெளிப்புறத்து மதில்களைத் தாண்டி இங்கே உள்ளே தெரியலே. அதுதான் கோளாறு. முதல்லே இந்த மதில் சுவர்களை இடிச்சுத் தள்ளணும்.”

“வந்திருக்கிறவரு காத்துக்கிட்டிருக்கிறாரு.”

“வரச் சொல்லு.”

மிடுக்காக உடையணிந்த ஒரு நடுத்தர வயது மனிதர் வந்தார். அங்கே கிடந்த பழைய காலத்து அலங்கார நாற்காலிகளில் ஒன்றைக் காட்டி அவரை உட்காரச் சொன்னான் பூபதி.

“ஹைனெஸ்ஸை இவ்வளவு சீக்கிரமாச் சந்திக்கிற பாக்கியம் கிடைக்கும்னு இந்த ஏழை நினைக்கலே” என்று பவ்யமாக வணங்கிய அந்த நடுத்தர வயது மனிதர், நாலைந்து யுவர் எக்ஸெலன்ஸி எல்லாம் போட்டுப் பேசவே எரிச்சலடைந்தான் பூபதி.

“ஐ யாம் பூபதி. ப்ளீஸ் ஸே மிஸ்டர் பூபதி. தட் இஸ் எனஃப்” என்று அவரை மடக்கினான்; எரிச்சலோடு இரைந்தான்.

“நான் ஒரு வாரத்துக்கு முன் பெரிய ராஜாவை பெங்களுர் ரேஸில் சந்திச்சுப் பேசற பாக்கியம் கிடைச்கது.”

“அதாவது எங்க ஃபாதரை பெங்களுர் ரேஸ்லே பார்த்தேன்கிறீங்க. பெங்களூர் ரேஸ்லே மட்டும் என்ன, எங்கே ரேஸ் நடந்தாலும், அவரைப் பார்க்கலாம்.”

“நோ நோ. அப்படிச் சொல்லப்படாது, பெரிய ராஜா.”

“மிஸ்டர். உங்க பேரென்ன? சாமிநாதனா..? சாமிநாதன்! இதா பாருங்க சுற்றி வளைக்காமே வந்த காரியத்தை ஸிம்பிளா சொல்லுங்க. இப்ப இந்த இடம் சமஸ்தானமும் இல்லை. நான் சின்ன ராஜாவும் இல்லே. எங்க அப்பா பெரிய ராஜாவும் இல்லே. எல்லாரையும் போல நாங்களும் ஜனங்கதான். இந்த மதிற் சுவர், கோட்டை, நந்தவனம் இதை எல்லாம் விட்டு விட்டு, வேற வீடு புதுசாக் கட்ட வசதி இல்லாததாலேதான், இன்னும் நாங்க இதிலேயே குடி இருக்கோம். இதிலேயே தொடர்ந்து இருக்கறதுனாலே நாங்க ராஜாக்கள் ஆயிட மாட்டோம். நாங்க ராஜாவா இருந்ததை நாங்களே மறக்க ஆசைப்படற்றப்போ நீங்க அதை நினைப்பு மூட்டி விடறீங்களே, அதிலே உங்களுக்கு என்ன சந்தோஷம்?”

“தப்பா ஏதாவது பேசியிருந்தால், இளைய ராஜா இந்த ஏழையை மன்னிக்கணும்.”

“இன்னமும் தப்பாத்தான் பேசிக் கிட்டிருக்கீங்க மிஸ்டர் சாமிநாதன்! போகட்டும் வந்த வேலையையாவது சிம்பிளா சொல்லுங்க.”

“அந்த மோகினி பெயிண்ட்டிங்க்ஸ் விஷயமா பெரிய ராஜாகிட்டப் பேசினேன்.”

“என்ன பேசினீங்க?”

“அந்த பிரஞ்சுக்காரன் இந்த சீரிஸ் முழுவதையும் பதினையாயிரம் ரூபாய்க்குக் கேட்கிறான்.”

“மிஸ்டர் சாமிநாதன்! உங்களுக்கு நான் சில உண்மைகளைச் சொல்லுகிறேன். எங்க ஃபாதரோடு நீங்க ரொம்ப நாளாப் பழகறிங்க. அதனாலே அவரோட எல்லா ‘வீக்னஸ்ஸும்’ உங்களுக்குத் தெரியும்.அவருடைய புத்திர பாக்கியங்களிலே என்னைத் தவிர மீதி மூணு பேர் காலேஜிலே படிச்சிக்கிட்டிருக்காங்க. ஒவ்வொருத்தனுக்கும் மாசம் பிறந்தா எழுநூறு ரூபாய்க்கு பேங்க் டிராஃப்ட் எடுத்து மெட்ராஸுக்கு அனுப்ப வேண்டியிருக்கு. சாதாரணமா மத்தக் குடியானவங்க வீட்டுப் பையன் இதே படிப்பை முந்நூறு ரூபாய்க்கும் குறைவாச் செலவழித்துப் படித்து விடுவான். ‘பீமநாதபுரம் யுவராஜா’ என்கிற பொய்யான பிரமையிலே என் தம்பிகள் அதிகமாகச் செலவழிக்கிறாங்க. அரண்மனைங்கிற இந்தப் பெரிய மாளிகையிலே கலியாணங் கட்டிக் கொடுக்க வேண்டிய பெண்கள் இன்னும் ஒரு டஜன் எண்ணிக்கைக்குச்ச ரியா இருக்காங்க.

ஃபாதரோ பிரிட்டிஷ்காரன் காலத்தில் இருந்த மாதிரியே இன்னும் ஜபர்தஸ்தா இருக்காரு. அவரோடு பழகறவங்களும் அப்படித்தான் இருக்காங்க. ஃபாதரோட கிளப் மெம்பர்ஷிப் பில்களே மாசம் மூவாயிர ரூபாய்க்கு மேலே வந்திடுது. ஸ்பென்சர் சுருட்டு, ஸ்காட்ச் விஸ்கி, ரேஸ், சீட்டாட்டம் எதையும் அவர் விட மாட்டேங்கிறாரு. வீட்டு வரவு செலவு, நிர்வாகம், எல்லாம் என் தலையிலே விழுந்திருக்கு. மாசா மாசம் பணக் கஷ்டம் தாங்க முடியலே. எதை எதையோ விற்று எப்படி எப்படியோ சமாளிக்கிறேன். எங்கப்பாவிலேருந்து இந்த மாளிகையிலே ராணிகள் என்ற பேரிலும், ராஜகுமாரிகள் என்ற பேரிலும், சின்ன ராஜாக்கள், சின்ன ராணிகள் என்ற பேரிலும் அடைந்து கிடக்கிற யாருக்கும் இங்கே உள்ள அசல் வறுமைகள், அசல் சிரமங்கள் எதுவுமே தெரியாது. யாருமே ரியாலிட்டியை ஃபேஸ் பண்ண எப்பவுமே தயாராயில்லை. வாழ்க்கை சிரமங்கள் தெரியாமல் எங்க வீட்டிலே ஒவ்வொருத்தரும் பீமநாதபுரம் ராஜா, பீமநாதபுரம் ராணி, பீமநாதபுரம் சின்னராணின்னு கூப்பிட்டுக் கொண்டும் கூப்பிடச் சொல்லியும், எழுதியும் எழுதச் சொல்லியும் போலியாப் பெருமைப்பட்டிக்கிட்டிருக்காங்க. இங்கேருந்து மெட்ராசுக்கு முதல் வகுப்பு ரெயில் டிக்கெட் வாங்கறப்பக் கூட ரிஸர்வேஸன் சார்ட்லே இடச் சுருக்கத்துக்காக வி.ஆர்.பி.பூபதின்னு போட்டா எங்கப்பா கோபிக்கிறாரு. ‘ராஜா விஜய ராஜேந்திர பீமநாத பூபதி’ன்னு முழுப் பெயரும் போடாட்டி அந்த ரெயில்லே ஏறிப் போக மாட்டேங்கறாரு ஆனா அந்த ரயில் டிக்கெட்டை நான் எப்படி வாங்கறேன், எதை விற்று வாங்கறேன்னு தெரிஞ்சா அவருக்குத் தன் நிலைமை புரியும்.

நவராத்திரி சதஸ், மன்னர் பிறந்த நாள், அன்ன தானம் என்று பழைய நாளில் ஆயிரம் இரண்டாயிரம்பேருக்குச் சோறு வடிக்க, சாம்பார் வைக்க என்று ஏராளமான அண்டாக்கள், குண்டாக்கள், தூக்கு வாளிகள், பாத்திரங்கள் எல்லாம் இங்கே ஒரு கட்டிடம் நிறைய அடைஞ்சு கிடக்குது. இந்த வீட்டின் மாதாந்திர வரவு-செலவு இப்போது எல்லாம் அப்படிப் பழைய பண்டங்களை விற்றுத்தான் நடக்குது. கீழவெளி வீதியிலே உள்ள சோமநாத நாடார் பாத்திரக் கடையிலே பின்பக்கமாகப் போய் நீங்க நுழைஞ்சா அங்கே எங்க பாத்திரங்களைப் புதுப் புதுப் பாத்திரமா வார்ப்பதற்காக அடித்து உடைத்து உருக்கிக் கொண்டிருப்பாங்க. அந்தப் பெரிய பாத்திரங்களிலே ரெண்டு, மூணு ஆள் கூட உள்ளாறப் புகுந்து உட்காரலாம். இப்ப விற்கிற காப்பர் விலை, பித்தளை விலையிலே, அதை எல்லாம் நல்லா விற்க முடியுது. பாத்திரங்களிலே ‘பாலஸ்-பீமநாதபுரம்’னு பேர் வெட்டியிருக்காங்க. கடைக்காரரு அதை உருக்கி வேற பாத்திரமாக்கறப்போ எப்பிடி அந்தப் பேர்களும் எழுத்துகளும் அழிஞ்சிடுமோ, அப்படியே எங்களைக் குறித்த, காலத்துக்கும் மணிபர்ஸுக்கும் ஒத்து வராத டம்பங்களும் ஆடம்பரங்களும் இன்றும் இனிமேலும் அழிந்துவிட வேண்டும் என்று நானே ஆசைப்படுகிறேன்.

இந்த நாலு மதில் சுவருக்கும் உள்ளே இவ்வளவு பெரிய மாளிகையிலே மொத்தம் எட்டு நூறு பல்புகளும், நூற்றைம்பது டியூப்லைட்டுகளும் இருநூற்று எழுபது மின்சார விசிறியும், நாலு கார்களும், ஏழு ஃபிரிஜிடேரும், நாலு ஏர்கண்டிஷன் பிளாண்டும் இருக்கு. இதுக்கு மாசா மாசம் எலெக்ட்ரிக் பில்லே ஆயிரம் ரூபாய்க்கு மேலே வருது. இங்கே இந்த மதில் சுவருக்கு உள்ளே இருக்கின்ற கோவிலின் சிப்பந்திகள் உள்பட கார் டிரைவர் நாலு பேரையும் சேர்த்து மொத்தம் முப்பத்தாறு பேர் இங்கே வேலை பார்க்கிறாங்க. இவங்களோட மாதாந்திரச் சம்பளம், அலவன்ஸ் வகையிலே மட்டும் மாசம் ஆறாயிரம் ரூபாய் வரை செலவாகுது. இதிலே யாரையும் வேலையிலிருந்து நிறுத்த ஃபாதர் சம்மதிக்க மாட்டேங்கறாரு. இந்த வீட்டோட வரவு - செலவு எனக்குத்தான் பச்சையாய்த் தெரியும். எதை எதையோ விற்று ஒவ்வொரு மாசமும் ஓட்டிக்கிட்டிருக்கேன். சிரமங்கள் புரியாம எல்லாருமே பழைய ராஜா, ராணி மனப்பான்மையிலே இருக்காங்க ஒருத்தரும் ஒரு செளகரியத்தையும் குறைச்சுக்கத் தயாராயில்லே. எதுக்குச் சொல்ல வந்தேன்னா, இந்த நிலைமை உங்க காது வரையும் கூட எட்டியிருக்கு. அது தெரிஞ்சுதான் வெளிநாடுகளுக்குச் சிலைகள், ஓவியங்கள், சிற்பங்கள், புராதனப் பொருள்களை ஏற்றுமதி செய்கிற ‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ கம்பெனி வைத்திருக்கிற நீங்க என்னையும் ஃபாதரையும் சுற்றிச் சுற்றி வர்றீங்க.”

“நோ நோ. உங்களுக்கு இஷ்டமில்லேனா நான் வற்புறுத்தலே. நல்ல விலை வருது. அதுதான் தேடி வந்தேன்.”

“அவசரப்படாதீங்க மிஸ்டர் சாமிநாதன்! நான் சொல்றதை முழுக்கக் கேளுங்க.”

“சொல்லுங்க”

“போன வாரம் ஒரு ஈவினிங்கிலே போலீஸ் இன்ஸ்பெக்டர் திடீர்னு என்னைத் தேடி வந்தாரு. என்னிடம் ஒரு வெள்ளி சந்தனக் கும்பாவை எடுத்துக் காட்டி அதிலே எங்க குடும்பத்து முத்திரை இருந்ததையும் என் கவனத்துக்குக் கொண்டு வந்து, இதை உங்க அரண்மனை வேலைக்காரி ஒருத்தி வெள்ளிக் கடையிலே நிறுத்து விலைக்குப் போட வந்தா. கடைக்காரர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் ஃபோன் பண்ணினாரு நாங்க போயி உடனே வேலைக்காரியை லாக் அப்பிலே வச்சிட்டு உங்களைத் தேடி வந்திருக்கோம், தயவு செய்து என்ன பண்ணலாம்னு சொல்லுங்கன்னாரு “அந்த வேலைக்காரியைப் பார்த்துக் கேட்கணும். நானே போலீஸ் ஸ்டேஷனுக்கு வரன்னேன்.” ‘நீங்க வர வேண்டாம்! அவளை இங்கேயே கூட்டிக்கிட்டு வரச் சொல்றேன்’னு இன்ஸ்பெக்டர், ஸ்டேஷனுக்கு போன் பண்ணினாரு. கால் மணி நேரத்துக்கெல்லாம் ஒரு கான்ஸ்டபிள் அந்த வேலைக்காரியை அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான்.”

“ஏம்மா, நீயா இதைக் கடைக்குக் கொண்டு போனியா அல்லது இங்கேருந்து யாராவது கொடுத்து வித்துக்கிட்டு வரச் சொன்னாங்களா?”

அவள் பதில் சொல்லத் தயங்கினாள். அழுதாள், நான் அவளை மேலும் தூண்டினேன்.

“சொல்லும்மா -பயப்படாதே! உனக்கு ஒரு கெடுதலும் வராது.”

மீண்டும் அவள் தயங்கினாள். நான் அவளிடமிருந்து உண்மையை வரவழைக்கத் தூண்டினேன். கடைசியாக அவள் கண்ணீருக்கிடையே உண்மையைக் கக்கினாள்.

“சோப்பு, ஷாம்பு, பேஸ் பவுடர், ஹேர் ஆயில் எல்லாம் வாங்கப் பணம் இல்லேன்னு சின்னராணி பத்மாம்பாள் இதைக் கொண்டு போய் வெள்ளிக்கடையிலே நிறுத்துப் போடச் சொன்னார்... நீங்க இதை ராணிக் கிட்ட சொன்னீங்கன்னா என்னைக் கொன்னுடுவாக... என் வேலை போயிடும்”னு கதறினாள் அந்த வேலைக்காரி. இன்ஸ்பெக்டர் என்னிடம் வருத்தம் தெரிவித்து விட்டுப் போய்ச் சேர்ந்தார். வேலைக்காரியைக் காப்பாற்றுவதற்காக நானே பாத்திரத்தை வாங்கி வைத்துக் கொண்டு, சோப்பு, சீப்பு, ஹேர் ஆயில், ஷாம்பு எல்லாம் வாங்கப் பணம் கொடுத்து அவளை அனுப்பினேன். எதுக்குச் சொல்ல வந்தேன்னா ராயல் ஃபேமிலி அது இதுன்னு நீங்க வச்சுக்கிட்டிருக்கிற வீண் பிரமையை எல்லாம் இனிமேலாவது விட்டுட ணும் எல்லாரையும் போல நாங்களும் மனுஷங்க. எங்களுக்கும் தேவைகளும், வறுமைகளும் உண்டு. அர்த்தமுள்ள வறுமைகளும் உண்டு. ஃபேஸ் பவுடருக்காக வெள்ளிப் பாத்திரத்தை விற்கிற மாதிரி அர்த்தமில்லாத வறுமைகளும் உண்டு. அதை எல்லாம் நீங்க தெரிஞ்சுக்கணும்.”

“ஐ ட்டூ ரியலைஸ் இட் யுவர் எக்ஸ்லென்ஸி...”

“பார்த்திங்களா.பார்த்திங்களா? ‘யுவர் எக்ஸ்லென்ஸி’தானே வேணாம்கிறேன்.”

“இந்த மாதிரி சிரமங்கள் எல்லாம் இருக்கறதுனாலேதான் அந்த பிரெஞ்சுக்காரனோட ‘ஆஃபரை’ ஒத்துக்கலாமான்னு கேட்க வந்திருக்கேன்.”

“அதுக்குத்தான் இப்போ நான் கிளியர் கட்டா உங்களுக்குப் பதில் சொல்லப் போறேன் மிஸ்டர் சாமிநாதன்! இந்த அரண்மனைங்கிற சத்திரத்தைக் கட்டிக் காக்க எதை எதையோ தெரிஞ்சும், தெரியாமலும் விற்கிறோம்.சோப்பு, சீப்புக்காக வெள்ளிப் பாத்திரத்தை இரகசியமா விற்கிறவங்க, ஸ்பென்சர் சுருட்டுக்காகத் தங்க நகையை விற்கிறவங்க, ரெயில் டிக்கெட்டுக்காகப் பாத்திரங்களை எடை போடறவங்க, எல்லாரும் இந்த மதில் சுவர்களுக்குள்ளே இருக்கோம். எங்க மான, அவமானங்களை வெளியே உள்ளவர்களுக்குத் தெரிய விடாமல் இந்த மதில் சுவர்கள் மறைத்து விடுகின்றாற் போல் உயரமாக அந்தக் காலத்திலேயே இதைக் கட்டி வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் நடக்கலாம். ஆனா இங்கே உள்ள ரேர் புக்ஸ் எல்லாம் அடங்கின லைப்ரரி, அருமையான பெயிண்டிங்க்ஸ் அடங்கிய கலைக் கூடம், பிரமாதமான பஞ்ச லோகச் சிலைகள் அடங்கிய சிற்ப சாலை இவை மூன்றை மட்டும் நான் எக்காரணத்தைக் கொண்டும் விற்க மாட்டேன். மற்றவர்களை விற்க விடவும் மாட்டேன். இவை இந்தக் குடும்பத்தில் என்றோ ஒரு தலைமுறையில் இண்டெலக்சுவல்ஸ் இருந்திருக்கிறார்கள் என்பதற்கும் மிகச் சிறந்த கலா ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கும் இன்றைய அடையாளங்கள். இவற்றிலிருந்து ஒரு துரும்பு விற்கப்பட்டாலும் நான் தூக்குப் போட்டுக் கொண்டு செத்துப் போவேன், மிஸ்டர் சாமிநாதன்! இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என் தாத்தா பாஸ்கர பூபதி பெரிய கலை ரசிகர். அவர் பீமநாதபுரம் ராஜாவாக இருந்தவர் என்பதை விட மாபெரும் கலா ரசிகராக இருந்தவர் என்பதற்காகவே நான் பெருமைப்படுகிறேன். அந்தப் பெருமையை நான் விலை பேசி விற்க மாட்டேன். பேரம் பேச மாட்டேன். இங்கே உள்ள பெயிண்டிங்க்ஸிலேயே மிக அருமையான கலெக்‌ஷன் அந்த மோகினி சீரிஸ்தான். அதைப் பேரம் பேச நீங்கள் வந்திருக்கிறீர்கள் இல்லையா...?”

“உங்களுக்கு விருப்பமில்லை என்றால் வேண்டாம். பெரிய ராஜா பெயிண்டிங்க்ஸை விலைக்குக் கொடுத்து விடலாம் என்பது போல் என்னிடம் சொன்னார். அதுதான் இப்போது தேடி வந்தேன்.”

“நன்றி! இந்த விஷயமாக இனி மேல் தேடி வராதீர்கள். ஒரு நிமிஷம் இருங்கள். குடிப்பதற்கு என்ன கொண்டு வரச் சொல்லட்டும். காபியா, டீயா? ‘எகானமி டிரைவ்’ காரணமாக இப்போதெல்லாம் இங்கே தேடி வருகிறவர்களுக்கு நான் குடிக்க எதுவுமே தருவதில்லை. ஆனால் உங்களை அதிக நேரம் காக்கும்படி செய்து விட்டேன்.”

“பரவாயில்லை, எனக்கு ஒன்றும் வேண்டாம்! நான் வருகிறேன்...”

“சரி! உங்கள் இஷ்டம்” என்று அவரை அதிகம் வற்புறுத்தாமல் எழுந்து கை கூப்பி விடைகொடுத்தான் பூபதி. வந்தவர் போனதும் வேலையாள் மருதமுத்துவைக் கூப்பிட்டு, “இந்தா மருதமுத்து! காரியஸ்தர் நாகராஜ சேர்வையிடம் போய் லைப்ரரி, கலைக்கூடம், சிற்பசாலை மூணுக்கும் உள்ள சாவிக் கொத்துக்களை உடனே வாங்கிட்டு வா. இனிமே அது எங்கிட்டத்தான் இருக்கணும். இல்லாட்டி எனக்கு தெரியாமலே சுருட்டுக்கும், விஸ்கிக்கும், ரேசுக்குமாக ஒண்ணொண்ணா வித்துப்பிடுவாங்க...” என்று இரைந்தான் அவன். பத்து நிமிஷங்களில் வேலைக்காரன் மூன்று சாவிக் கொத்துக்களை வாங்கி வந்து பூபதியிடம் கொடுத்து விட்டுச் சென்றான். பூபதி மேல் எல்லாருக்கும் அதிக மதிப்பு உண்டு. வாசனைச் சோப்பு, சில்க் சட்டை, தங்கச் செயின் என்றெல்லாம் மினுக்கும் மற்ற அரச குடும்பத்து இளைஞர்களோடு மாறுபட்டு எளிய உடை, எளிய பழக்க வழக்கங்கள், ஆடம்பரங்களில் வெறுப்பு, காந்தி, மார்க்ஸ், லெனின் ஆகியோரின் கோட்பாடுகளில் பற்று என்று முக்கால் கம்யூனிஸ்டு போல வாழ்ந்தான் அவன். அவனிடம் போலித் தனம் எதுவுமே கிடையாது. ராஜாவின் எட்டாவது வைப்பாட்டியின் மூன்றாவது பெண் கூட, அந்த மாளிகை எல்லையிலிருந்து வெளியே போகக் கார் இல்லாமல் நடந்து போகாத போது பூபதி நடந்தே வெளியே உலாவச் செல்வான். எல்லாரிடமும் சகஜமாகப் பழகுவான். நன்கு உழைப்பான். அவனைக் கண்டால் அவனுடைய அப்பாவும் பெரிய ராஜாவுமான விஜய ராஜேந்திர பீமநாத பூபதிக்குக் கூடப் பயந்தான்.

“எங்க அப்பாவைப் போல் பூர்ஷ்வாக்கள் ஒழிந்தால்தான் நாடு உருப்படும்” என்று பூபதியே தன் நண்பர்களிடம் தந்தையைப் பற்றிக் கிண்டல் செய்வது உண்டு. ஒரே ரெயிலில் ஒரே ஊருக்குப் போகும் போதுகூடத் தந்தை ரெயிலில் ஏஸி வகுப்பிலும், அவன் மூன்றாவது வகுப்பு ஸ்லீப்பிங் பெர்த் கோச்சிலும்தான் பயணம் செய்வார்கள். அந்த அளவிற்கு அவன் தீவிர வாதி. அவன் இருக்கிற வரை பீமநாதபுரம் அரண்மனையின் ஒவியங்கள், பஞ்சலோக சிலைகள் எதையுமே மலிவான விலைக்கு வாங்கி அந்நிய நாடுகளுக்கு அனுப்பிப் பணம் பண்ண முடியாதென்று எண்ணி ‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ உரிமையாளர் சாமிநாதன் தந்திரமாக வேறு முயற்சிகளில் இறங்கினார். சாமிநாதனிடம் தமிழ்நாடு முழுவதிற்கும் ஒடியாடித் திருடி வந்து சேர்க்கக் கூடிய சிலை திருடும் நாகரிகமான ஏஜெண்ட்டுகள் பலர் இருந்தனர். பீமநாதபுரம் பெரிய ராஜாவோ பலவீனங்கள் நிறைந்தவர். அவரைச் சந்தித்து அவ்வப்போது ஐயாயிரம், பத்தாயிரம் என்று ‘பிராமிஸ்ரி நோட்’ எழுதி வாங்கிக் கொண்டு தாராளமாகக் கடன் கொடுக்கத் தொடங்கினார் சாமிநாதன். அங்கே பீமநாதபுரம் அரண்மனைக் கலைச் செல்வங்கள் எல்லாம் கிடைத்தால் அவை மொத்தம் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் பெறும் என்று சாமிநாதன் ஒரு மதிப்பீடு வைத்திருந்தார். மகன் பூபதிக்குத் தெரியாமலே பெரிய ராஜா பீமநாதபூபதி, சாமிநாதனிடம் கணக்கின்றி அவ்வப்போது பணம் வாங்கி வந்தார்.

அந்த வருஷ இறுதியில் பெரிய ராஜாவின் கடன் பன்னிரண்டு லட்சம் வரை போய் விட்டது. நடுவே சாமிநாதனின் கூட்டுறவோடு ‘பீமநாத் புரொடக்ஷன்ஸ்’ என்று ஒரு புது சினிமாக் கம்பெனியும் ஆரம்பித்தார். அது நிறைய நஷ்டத்தைத் தேடித் தந்தது. எல்லாக் கடன்களும் அரண்மனை மேல்தான் வாங்கப்பட்டிருந்தன. ஒரு நாள் பூபதிக்கும் இது தெரிய வந்தது.ஆனால் அதற்குள் நிலைமை எல்லை மீறி அரண்மனை ஜப்திக்கு வந்து விட்டது. பத்திரிகைகளில் ஏல நோட்டீஸ் கூடப் பிரசுரமாகி விட்டது. அரண்மனை வாசலில் பொருள்களும், கட்டிடமும் ஏலத்துக்கு வந்த போது, சாமிநாதன் தன் ஆட்களையே பணத்துடன் நிறுத்தி வைத்து லைப்ரரி, ஓவியங்கள், சிற்பங்கள் எல்லாவற்றையும் ஏலத்தில் எடுத்து விட்டார். அரண்மனையும், அதைச் சுற்றியிருந்த இடங்களும் கூட ஏலத்துக்குப் போய் விற்று விட்டன.

ஏலத்தை வேடிக்கை பார்க்கக் கூடியிருந்த கூட்டத்திலிருந்த உள்ளூர்ப் பிரமுகர் ஒருவர், பூபதியின் அருகே வந்து, “ரொம்ப வருத்தப்படறேன் இளையராஜா! உங்கள் தந்தை பெரிய ராஜா இப்படிப் பண்ணியிருக்க வேண்டாம்... எல்லாம் காலக் கோளாறு” என்றார்.

“நான் வருத்தப்படலே இந்த உயரமான மதிற்கவர்களுக்கு வெளியே தெருவில் தூக்கி எறியப்பட்ட பின்பு, இனியாவது என் தந்தைக்கும், மற்றவர்களுக்கும் வாழ்க்கை எத்தகையது என்பது புரிந்தால் சரிதான். இந்த அரண்மனை ஏலம் போவதில் எனக்கு மனக் கஷ்டமே இல்லை. இது போகும் போதாவது எங்கள் குடும்பத்தைப் பிடித்த பீடைகளான சோம்பல், வறட்டுக் கவுரவம், டம்பம், எல்லாம் தொலைந்தால் சரிதான். இன்று நான் வருந்துவதெல்லாம் இங்கே இருந்த அறிவு நூல்கள், சிற்பங்கள், ஒவியங்கள் எல்லாம் அந்நிய நாடுகளுக்குச் சோரம் போகின்றனவே என்பதற்காகத்தான். முடிந்தால் மறியல் செய்து அதைத் தடுப்போம், அல்லது அரசாங்கமே இவற்றை மீட்டு இங்கேயே ஒரு மியூஸியமும், லைப்ரரியும் அமைக்க வேண்டும் என்று கலெக்டர் மூலம் மனுக் கொடுப்போம்” என்று, நிதானமாகவும் திட்டத்தோடும் மறுமொழி கூறினான் பூபதி. அடுத்த கணம் அவன் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் மறியலுக்காகவும் கலெக்டரிடம் மகஜர் தரச் செல்லும் ஊர்வலத்துக்காகவும் காலதாமதமின்றிக் கூட்டம் சேர்க்கத் தொடங்கினான். அந்தக் கூட்டத்தை அவனால் மிகக் குறுகிய நேரத்திலேயே பெரிய அளவில் சேர்த்து விட முடிந்தது. “சிலைத் திருடர்கள் ஒழிக. சொந்த நாட்டுக் கலைப் பொருள்களை அந்நிய நாடுகளில் விற்றுச் சோரம் போகாதே” என்ற கோஷங்களோடு லைப்ரரியிலும், கலைக் கூடத்திலும், சிற்பச் சாலையிலும் பொருள்களை ஏற்ற வந்த ‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ஸின் லாரிகளை மறித்தார்கள் அவர்கள். உள்ளூரின் எல்லா அரசியல் கட்சிகளும் இதில் பூபதியோடு ஒத்துழைத்தன. ஏலம் முடிந்தும் கூட அது ஒரு பொது ஜன இயக்கமாக உருவெடுத்தது. அரண்மனையிலிருந்து கார்கள், ஃபிரிஜிடேர்கள் எதை எடுக்கும் போதும் மறியல்காரர்கள் தடுக்கவில்லை. குறிப்பாக லைப்ரரி, கலைக் கூடம், சிற்பச் சாலை மூன்றிலிருந்தும் ஒரு துரும்பு கூட வெளியேறாமல் தடுத்து விட்டார்கள் அவர்கள். சில மாதங்கள் வரை அந்த மறியல் நீடித்தது. முடிவில் மறியல்காரர்களுக்கு வெற்றியும் கிடைத்தது. அரசாங்கப் பழம் பொருள் பாதுகாப்பு இலாகா உரியதும் நியாயமானதுமான காம்பென்சேஷன் தொகையைக் கொடுத்து ஏலம் எடுத்தவர்களிடம் இருந்து சிலைகள், லைப்ரரி, ஒவியங்களை மீட்டுத் தந்து உள்ளூரிலேயே அவற்றை ஒரு புதிய கட்டிடத்தில் காட்சிக்கு வைக்கவும் உத்தரவு பிறப்பித்து விட்டது. பூபதிக்கு இந்த வெற்றி பெரும் திருப்தியை அளித்தது. ‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ சாமிநாதன் மட்டும் ரொம்ப நாள் வரை தன் சிநேகிதர்களிடம் ‘பீமநாதபுரம் பாலஸ் ஆக்ஷன்’ பற்றி பேச்சு வரும் போதெல்லாம், ‘எல்லாம் அந்த இளைய ராஜா பூபதியாலேதான் கெட்டுப் போச்சு, அவன் பெரிய கலகக்காரன்! காருக்காகவும் ஃபிரிஜிடேருக்காகவுமா அந்த அரண்மனையை நான் அவ்வளவு சிரமப்பட்டு ஏலத்துக்குக் கொண்டு வந்தேன்? லட்ச லட்சமாகப் பெறுகிற பிரமாதமான சிலைகள், ஒவியங்கள், ரேர் புக்ஸ் எல்லாம் கிடைக்கும்னு ஆசைப்பட்டுத்தான் குடிகாரனான பெரிய ராஜாவைக் குளிப்பாட்டி ரூபாயாலே அவனை அபிஷேகம் பண்ணினேன். இந்த பூபதி எல்லாத்தையும் பாழாக்கி மியூஸியம் கட்டி அதிலே கொண்டு போய் வச்சுட்டான்’ என்று சலிக்காமல் பூபதியைத் திட்டிக் கொண்டிருந்தார். பூபதியோ அதற்கு நேர்மாறாக, அரண்மனை என்ற ‘வெள்ளை யானை’ அபாயத்திலிருந்து மீட்டுத் தன் குடும்பத்தை வெளியே அனுப்பி, அவர்களை இந்தக் கால உலகுக்குரிய உழைப்பாளிகளாகவும், கஷ்டம் தெரிந்த மனிதர்களாகவும் மாற்றியதற்காகச் சாமிநாதனை அடிக்கடி வாயார வாழ்த்திப் புகழ்ந்து கொண்டிருந்தான்.

(1974-க்கு முன்)