நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/தேனிலவும் ஒரு சாமியாரும்
115. தேனிலவும் ஒரு சாமியாரும்
சாமியார்களையும், துறவிகளையும், பண்டாரங்களையும் கண்டால் சண்முகசுந்தரத்துக்கு அறவே பிடிக்காது.பள்ளிப் பருவத்திலிருந்து கல்லூரியில் கற்கும் நாட்கள் வரை இந்தச் சாமியார் வெறுப்பு உணர்ச்சி என்ன காரணத்தினாலோ அவனுள் முறுகி வளர்ந்திருந்தது. இன்னும் அது குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். திருமணத்தின் போதும், மாலையில் வரவேற்பின் போதும் பிரேமாவின் குடும்பத்தாருக்கு வேண்டிய சாமியார்கள் சிலர் வந்திருந்தார்கள். அவர்களிடம் கூட அவன் சுமுகமாக நடந்து கொள்ளவில்லை. தன் மனைவியின் குடும்பத்தாருக்குச் சில சாமியார்களைத் தெரிந்திருக்கிறது என்பதையே சகித்துக் கொள்ள முடியாதவனாக இருந்தான் அந்த இளம் மாப்பிள்ளை. பிரேமா அந்தச் சாமியார்களின் பாதங்களைத் தொட்டு வணங்குவதற்காகக் குனிந்த போது அவனெதிரே கைகுலுக்கித் தன் திருமணத்தை வாழ்த்த வந்திருந்த நவநாகரிக நண்பர்களிடம் பேசுகிற சாக்கில் ஒதுங்கி விட்டான். சாமியார்களைப் பொருட்படுத்தவுமில்லை; வணங்கவும் இல்லை.
“ஏதேது? ரிஸப்ஷனில் ஒரே சாமியார் மயமாய் இருக்கிறதே?” என்று ஒரு நண்பன் அவனைக் கேட்டதற்கு,“என் மாமனார் ஒரு சாமியார்ப் பைத்தியம். அவரே முக்கால் சாமியார்னு சொல்லலாம்” என்பதாகச் சிரித்துக் கொண்டே மெதுவான குரலில் பதில் சொல்லியிருந்தான் சண்முகசுந்தரம். நண்பன் அதோடு விடவில்லை.
“ஆமாம்! அவர் கால் வாசியாவது சாமியாராக இல்லாமல் இருந்ததால்தான் உனக்கு இப்படி ஒரு பெண்ணைப் பெற்றுக் கட்டிக் கொடுத்திருக்காரு இல்லாட்டி நீயும்.” என்று கிண்டலில் இறங்கினான்.
“பெரியவங்க தப்பா நினைச்சுக்கப் போறாங்க. ஒப்புக்காவது கும்பிடறாப்பல நடியுங்க” என்று சாமியார்கள் வந்து போனவுடன் பிரேமா அவன் காதருகே கொஞ்சலாகச் சொல்லிப் பார்த்தாள். அவனோ பிடிவாதமான குரலில்,“அது மட்டும் நடக்காது! இந்தியாவைப் பிடித்த துரதிர்ஷ்டமே பிச்சைக்காரங்களும், சாமியாருங்களும்தான். கல்லூரியிலே படிக்கிறப்போ நானும் என் நண்பர்களும் நடத்திய பல பகுத்தறிவு விவாதக் கூட்டங்களிலே இதை நாங்க கடுமையா விமர்சிச்சிருக்கோம். உனக்கு இதைப் பத்தி ஒண்ணும் தெரியாது. நீ சும்மா வாயை மூடிக்கிட்டு இரு, உங்க குடும்பமே ஒரு சாமியார்க் குடும்பம், அதனாலேதான் நீ இப்பிடிப் பேசறே” என்று அவள் வாயை அடக்கி விட்டான். அதன்பின் அவள் பயந்து, பேசாமல் இருந்து விட்டாள். திருமணம் முடிந்து இரண்டு மூன்று நாள் கழித்துப் பிரேமாவும், அவளுடைய கணவன் சண்முகசுந்தரமும் தேனிலவு புறப்படுகிற தினத்தன்று கூட இந்தச் சண்டை தொடர்ந்தது. மணமகள் பிரேமாவின் குடும்பம் தெய்வ பக்தி நிறைந்தது. மணமகன் சண்முக சுந்தரத்தின் குடும்பமும் அப்படித்தான் என்றாலும் சண்முகசுந்தரம் மட்டும் புதுமைவாதியாக உருவாகியிருந்தான். தன்னைப் பகுத்தறிவு மார்க்கக்காரன் என்று சொல்லிக் கொண்டான்.
“தேனிலவுக்கு எங்கே போகலாம்?” என்று தனியறையில் அந்தரங்கமாகப் பேசிக் கொண்டிருந்தபோது பிரேமா அவனைக் கேட்டாள்.
“எங்கே வேணும்னாலும் போகலாம். ஆனால் கோயில், குளம், சாமியார், மடம், அது இதுன்னு எதுவும் இல்லாத ஊராப் பார்த்துப் போகணும்.”
“ஏன்? அவங்க இருந்தா உங்களுக்கு என்னவாம்? அவர்கள் பாட்டுக்கு இருந்திட்டுப் போறாங்க.”
“அதுக்கில்லே! அப்பிடி ஊர்னாலே எனக்குப் போர் அடிக்கும்.”
“அது மாதிரி எல்லாம் இல்லாத ஒரு ஊரை இனிமே நீங்கதான் புதுசா உண்டாக்கணும்.” இதைச் சொல்லி விட்டுச் சண்முகசுந்தரத்தின் முகத்தை ஏறிட்டு நோக்கிச் சிரித்தாள் அவள்.
அவர்கள் நீண்டநேர விவாதத்துக்குப் பின் கரடி மலைக் கோடை வாசஸ்தலத்தில் போய் ஒரு வாரம் தேனிலவை அனுபவிப்பது என்று முடிவு செய்தார்கள். அப்போது கோடைக்காலம் இல்லை என்பதால் கரடி மலையில் கூட்டமும் இராது என்று தோன்றியது. கரடி மலை அவ்வளவு பெரிய கோடைவாச நகரமும் அல்ல. சில ஆண்டுகளுக்கு முன் அங்கே கட்டப்பட்ட ஒர் அணைக்கட்டு, மின்சார உற்பத்தி நிலையம் ஆகியவற்றால்தான் அது ஒரு சிறிய ஊராகி இருந்தது. அரசாங்கத்துக்குச் சொந்தமான ஒரு சுற்றுலா மாளிகையும் அங்கே இருந்தது. சுற்றுலா மாளிகையில் அதிக அறைகள் இல்லை என்பதால் முன் ஜாக்கிரதையோடு ஒர் அறைக்காகத் தந்தி மூலம் ஏற்பாடு செய்தான் சண்முகசுந்தரம். அறை கிடைத்து விடும் என்று உறுதியாயிற்று.
சென்னையிலிருந்து கரடி மலைக்குப் போக இரண்டு மார்க்கங்கள் இருந்தன. சென்னையிலிருந்து ரெயில் மூலமாகக் கரடி மலை ரோடு ரெயில்வே நிலையம் வரை பிரயாணம் செய்து அடிவாரத்தில் இறங்கி அங்கிருந்து அறுபது மைல் வரை மலைச் சாலைகளில் பஸ் மூலமோ, கார் மூலமோ பயணம் செய்து போகலாம்; அல்லது சென்னையிலிருந்தே நேராகக் கரடி மலை செல்கிற அரசாங்க எக்ஸ்பிரஸ் பஸ் மூலம் பயணம் செய்யலாம். சில நூறு மைல் தொலைவு தொடர்பாக பஸ்ஸில் பயணம் செய்வதிலுள்ள சிரமத்தைப் புரிந்து கொண்டு அப்படிச் செய்ய வேண்டாம் என்று கருதினர் புது மணத்தம்பதிகள். கரடி மலை ரோடு ரெயில் நிலையம் வரை புகைவண்டிப் பயணம் செய்து அப்புறம் மலைமேலுள்ள அறுபது மைல் தொலைவைப் பஸ்ஸில் போய்க் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டார்கள் அவர்கள். ரெயிலில் புதுமணத் தம்பதிகளுக்கு வசதியான ‘கூபே’ முதல் வகுப்புப் பெட்டியே கிடைத்து விட்டதால் சண்முகசுந்தரத்தின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது.கரடி மலைக்கு அடிவாரத்து ரெயில் நிலையத்திலிருந்து புறப்படும் மாலை ஐந்து மணி பஸ்தான் கடைசி பஸ், அது மலையுச்சியை அடைய இரவு எட்டரை மணி ஆகி விடும். அவர்கள் பிரயாணம் செய்த ரயில் கரடி மலை ரோடு ரெயில் நிலையத்தை அடையும் போது பிற்பகல் நாலே முக்கால் மணி ஆகியிருந்தது. ரெயிலிலிருந்து இறங்கியதும் நிலைய வாயிலில் பிரயாணிகளை எதிர்பார்த்துத் தயாராகக் காத்திருந்த பஸ்ஸில் அவர்கள் ஏறிக் கொண்டார்கள்.
அது நல்ல குளிர்காலத்தின் ஆரம்பமாகையால், அடிவாரத்திலிருந்த ரெயில் நிலையத்தில் இறங்கிய போதே காற்றுச் சில்லென்று வந்து முகத்தில் உராய்ந்தது. காதுகள் வெடவெடத்தன. ஐந்து மணிக்கே இருட்டி விட்டாற் போல வானம் முடிக் கொண்டிருந்தது. பஸ் புறப்படச் சிறிது நேரம் ஆகுமென்று தெரிந்ததனால் பிரேமாவையும் அழைத்துச் சென்று எதிரே இருந்த உணவு விடுதியில் தேநீர் குடித்துவிட்டு வந்தான் சண்முகசுந்தரம்.
பஸ் புறப்பட்டது. சாலை வளைந்து வளைந்து மேலே ஏற ஏறக் குளிரும் ஈர வாடையும் அதிகமாயின. நாலு திருப்பங்களில் திரும்பி ஆயிரம் ஆயிரத்தைந்நூறு அடி உயரம் ஏறுவதற்குள்ளேயே பஸ்ஸில் இரண்டொருவர் வாந்தி எடுத்து விட்டார்கள். முன்னெச்சரிக்கையாக ரெயில் நிலைய வாசலில் இருந்த சர்பத் கடையில் பிரேமாவுக்கு ஒர் எலுமிச்சம் பழம் வாங்கிக் கொடுத்திருந்தான் சண்முகசுந்தரம்.
“வாந்தி வருகிறாற் போலிருந்தால் இந்த எலுமிச்சம் பழத்தை மோந்து பார்! சரியாயிடும்” என்று அவளிடம் சொல்லியிருந்தான் அவன். குளிர் அதிகமாயிருந்தாலும் பயணம் உல்லாசமாயிருந்தது. பஸ்ஸின் வலப்பக்கம் மூன்றாவது வரிசையில் இருவர் மட்டுமே அமர முடிந்த இருக்கை ஒன்றில் சேர்ந்து உட்கார்ந்து பயணம் செய்தார்கள் அவர்கள். பஸ்ஸில் அதிகக் கூட்டம் இல்லை. அவர்களுக்கு முன் இருக்கை பின் இருக்கை இரண்டுமே காலியாக இருந்தன. அதனால், அவர்கள் இஷ்டம் போல் சிரித்துப் பேசியபடி பயணம் செய்ய முடிந்தது. சிரிப்பும், கும்மாளமும் பஸ்ஸையே கலகலக்கச் செய்தன.
பஸ் ஐயாயிரம் அடி உயரமுள்ள பகுதிக்கு வந்ததும் அங்கே ஒரு சிறிய ஊர் இருந்தது. அந்த ஊர் பஸ் ஸ்டாண்டில் பத்து நிமிஷம் பஸ் நின்று மறுபடி புறப்பட்ட போது அவர்களுக்கு முன்புறம் இருந்த ஸீட்டின் ஒரமாகக் காவி ஜிப்பா, காவி வேஷ்டி கோலத்தில் இளம் சாமியார் ஒருவர் ஏறி உட்கார்ந்தார். அவருடைய கழுத்தும் பிடரியுமே பின்னாலிருந்து பார்த்தால் தெரிந்தன. அந்தக் கழுத்தின் பின்புறம் அரிநெல்லிக்காய்ப் பருமனுக்குப் பாலுண்ணி போல் ஒரு தடிப்பு இருந்தது. ஏறி அமர்ந்திருப்பவர் சாமியார் என்பதாலும், தங்கள் தனிமைக்கு இடையூறாக அவர் வந்தவர் என்பதாலும் சண்முகசுந்தரத்திற்குத் தாங்க முடியாத ஆத்திரம் அந்தச் சாமியார் மேல் மூண்டு விட்டது; வெறியும் கிளம்பிவிட்டது.
தனக்கு முன்னால் உட்கார்ந்திருப்பவர் காது கேட்கும்படியே சாமியார்களைத் திட்டிப் பேசத் தொடங்கி விட்டான் அவன்.“மெல்லப் பேசுங்க அவர் காதிலே விழப் போகுது.”
“விழுந்தா விழட்டுமே யார் பயப்படறாங்க அதுக்கு!”
“போனாப் போகுது. தமிழிலே வேண்டாம். இங்கிலீஷிலியாவது பேசுங்க, அவருக்குப் புரியாமலாவது இருக்கட்டும்.”
“ஒகோ! உனக்கு இங்கிலீஷ் தெரியும்கிற பெருமையோ?”
அதற்குப் பின் ஆங்கிலத்தில் அந்தச் சாமியாரையும் வேறு சாமியார்களையும் பற்றித் தாறுமாறாக ஏதேதோ சிறிது நேரம் திட்டிக் கொண்டிருந்தான் அவன். ஆனால், முன்புறம் அமர்ந்திருந்த அந்தச் சாமியார் அவர்களுக்குப் பயந்தோ அல்லது அளவற்ற சகிப்புத் தன்மை காரணமாகவோ திரும்பவோ, உறுத்துப் பார்க்கவோ செய்யாமல் உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே அசையாமல் இருந்து விட்டார். பஸ் கரடி மலையை அடைவதற்குள் ஆலங்கட்டி மழை போலத் திடீரென்று பெருமழை பெய்யத் தொடங்கி விட்டது.
கரடி மலையில் பஸ் நின்றவுடன் அவர்கள் இறங்கவே முடியவில்லை. சாமியாரிடமும் வழக்கமான அவ்வூர் ஆட்களிடமும் மழைக் கோட்டு இருந்ததால் பஸ்ஸுக்குள்ளேயே மழைக் கோட்டை அணிந்து கொண்டு அவர்கள் கீழே இறங்கி நடந்து விட்டார்கள். பஸ் கண்டக்டரை விசாரித்ததில் சுற்றுலா மாளிகை அந்த இடத்திலிருந்து அரை பர்லாங்கு துரத்தில் இருக்கிறது என்று அவன் கூறினான்.அந்த மழையில் கூலிகள் யாரும் அங்கே தென்படவில்லை. வாகன வசதிகளும் அந்த வேளையில் அந்த மழையில் கிடைக்கும் என்று தோன்றவில்லை.
மழை நிற்கிற வரையில் அவர்கள் பஸ்ஸுக்குள்ளேயே நிற்க வேண்டியதாயிற்று. பஸ்ஸிலும் ஓரங்கள் எல்லாம் மழைநீர் வாரியடித்தது. பெட்டி படுக்கைகளை ஸீட்டில் வைத்து விட்டு நடுவாக நின்று கொண்டார்கள் அவர்கள்.
ஒரு மணி நேரத்துக்குப் பின்பே மழை நின்றது. “பகலில் வந்திருக்க வேண்டும், இப்படி இரவில் மழையில் வந்து மாட்டிக் கொண்டது தப்பு” என்றான் சண்முகசுந்தரம்.
“அப்பாவிடம் சொல்லி டிரைவரோடு காரை எடுத்துக் கொண்டு வந்திருக்கலாம்: நீங்களே தனிமை தனிமை என்று பறந்து இப்படி வரலாம் என்றீர்கள்” என்று அவனைக் குறை சொன்னாள் பிரேமா.
“ஹனிமூன் நமக்கா அல்லது டிரைவர், கார் எல்லாத்துக்குமா?”
“அப்படிக் கேட்டால், இந்தக் கஷ்டத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்” என்றாள் அவள்.
பெட்டி படுக்கைகளைப் பங்கிட்டுச் சுமந்து கொண்டு மேட்டில் ஏறி உயரமான சுற்றுலா மாளிகை விடுதியை நோக்கி நடந்தார்கள் அவர்கள்.அங்கே அவர்களுக்கு எதிர்பாராத இன்னொரு புதிய அதிர்ச்சி காத்திருந்தது. சுற்றுலா மாளிகை வாட்ச்மேன், “ஸார்! மன்னிக்கனும் திடீர்னு பி.டபிள்யூடி இலாகா மந்திரி, டிவிஷனல் இஞ்சினியர் எல்லாருமாகக் குடும்பத்தோடு வந்திட்டாங்க. அதினாலே இங்கே இருக்கிற ஆறு ‘சூட்’டும் நிரம்பிடிச்சு உங்களுக்கு ‘அலாட்’ ஆகியிருந்த ‘’சூட் கான்ஸ்லாயிடிச்சு” என்றான்.
“இந்த நடுராத்தியில் எங்கப்பா போறது? திரும்பற பஸ்ஸும் இனிமே இல்லே. மழையும் குளிரும் பயங்கரமாய் இருக்கு நீதான் பார்த்து ஏதாவது உதவி பண்ணேன்” என்று சண்முகசுந்தரம் அவனைக் கெஞ்சினான்.
“நான் ஒண்ணும் பண்றதுக்கில்லே ஸார்” என்று வாட்ச்மேன் கையை விரித்து விட்டான். மேலே இவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு நிற்கக் கூடத் தயாராயில்லை என்பது போல் திரும்பி உள்ளேயும் போய்விட்டான் அவன்.
“நல்ல ஹனிமூன் வந்தோம் போங்க! சிவனேன்னு ஊர்லியே இருந்திருக்கலாம். இல்லாட்டி அலுப்பில்லாமப் பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் பெங்களுர் புறப்பட்டுப் போயிருக்கலாம். தனிமை தனிமைன்னு இங்கே ஓடி வந்து இப்பிடித் தவிக்க வேண்டாம்” என்று பிரேமா வேறு அவனைக் குத்திக் காட்டுவது போல் பேசத் தொடங்கி விட்டாள்.
“எனக்குத்தெரியும். பஸ்ஸிலே எப்ப அந்தச் சாமியாரைப் பார்த்தமோ அப்பவே நம்ம துரதிர்ஷ்டம் ஆரம்பமாயிடுச்சு.”
“அவரு தலையை ஏன் உருட்டறீங்க? உங்களுக்குத் தங்க இடம் கிடைக்காட்டி அதுக்கு அவரு என்ன செய்வாரு?”
அவர்கள் மறுபடி பஸ் நிலையம் வரை திரும்பி நடந்து வந்தார்கள்.
“சுற்றுலா மாளிகை, வழிப் பயணிகளுக்கான டிராவலர்ஸ் பங்களா எல்லாத்திலியும் இனிமே ‘சர்க்காருக்கு மட்டும்’னு ஒரு போர்டே மாட்டி விடலாம். மத்தவங்களை நடுத் தெருவிலே நிறுத்தறது, திண்டாட விடறதுங்கிறது இவங்களுக்கு ஒரு பழக்கமாகவே ஆயிடிச்சு” என்று சபித்துக் கொண்டே வந்தான் சண்முகசுந்தரம்.
பஸ் நிலையத்தருகே இருந்த சாப்பாட்டு ஓட்டலையும் முடியிருந்தார்கள். பசி வயிற்றைக் கிள்ளியது. அந்தக் குளிர்ந்த சூழலில் சுடச் சுடநிறையச் சாப்பிட வேண்டும் போல் இருந்தது. தெரு விளக்குகள் மங்கலாக எரிந்து கொண்டிருந்த அந்த ஏழாயிரம் அடி உயரத்து மலை நகரம் இருளில் அடங்கியிருந்தது. மின்னல்களும் இடியுமாக வானம் வேறு குமுறிக் கொண்டிருந்தது. மறுபடி எந்த விநாடியிலும் மழை வரலாம் என்று தோன்றியது. தேனிலவுக்காக வந்த அவர்கள் நள்ளிரவில் நடுத்தெருவில் தவித்துக் கொண்டு நின்றார்கள். பஸ் நிலையத்தருகே மேட்டில் தெரு விளக்கு எரிந்து கொண்டிருந்த ஒரு வீட்டு முகப்பிலிருந்து யாரோ ‘டார்ச்’சுடன் இறங்கி வருவது தெரிந்தது. மழைக் கோட்டு, குல்லாயில் ஆளே தெரியவில்லை. ஒரு நிமிஷம் இவர்களருகே தயங்கிய அந்த ஆளிடம் சண்முகசுந்தரமே சென்று தங்கள் நிலையை விவரித்தான். உதவுமாறு வேண்டினான்.“நானே கேட்கணும்னுதான் வந்தேன். அடடா! இந்த டுரிஸ்ட் பங்களாவை நம்பியா ‘ஹனிமூன்’ புறப்பட்டு வந்தீர்கள். இது பெரும்பாலும் காலியாயிருப்பதே வழக்கமில்லையே. ப்ராஜெக்ட் ஆபீஸர், டிவிஷனல் என்ஜினியர், பி டபிள்யூ டி. அதிகாரிகள்ன்னு யாராவது தங்கிக் கொண்டே இருக்காங்களே ஒழிய எனக்குத் தெரிஞ்சு இதிலே உங்களை மாதிரி வர்ரவங்களுக்கு இடமே கிடைச்சதில்லையே?”
“நான் தந்தி கொடுத்து ரிசர்வ் செய்யச் சொல்லியிருந்தேன் ஸார்!”
“இருந்தால் என்ன? நடு ராத்திரியிலே வந்து கூட உங்க பெட்டி படுக்கையைத் தூக்கி வெளியே போட்டு விட்டு ஒர் அதிகாரி இதில் தங்கிக்க முடியுமே! சர்க்கார் சுற்றுலா மாளிகையை நம்பி யாராவது ஹனிமூன் வருவாங்களா?“
“தெரியாத்தனமா வந்து மாட்டிக் கொண்டாச்சு இப்ப என்ன செய்யறது?”
“பரவாயில்லை! என் கூட வாங்க. இன்னிக்கு நீங்க தங்கிக் கொள்ள நான் உதவ முடியும்.”
“உங்களுக்கு ரொம்ப நன்றிக் கடன்பட்டிருக்கோம் ஸார்.”
“சே! சே! அதெல்லாம் சொல்லாதீங்க இந்த நிலையிலே நான் இருந்தா நீங்க என்ன உதவி செய்ய முடியுமோ அதைத்தான் நான் செய்யறேன். வேறொண்ணும் இல்லை.அது சரி, நீங்க ,ரெண்டு பேரும் சாப்பிட்டாச்சா?” - “சாப்பாட்டைப் பத்தி என்ன சார்? இந்தக் குளிர்ல ஒண்டிக்க இடம் கிடைச்சாலே போதும்.”
“அப்படியில்லே, பட்டினியோட தூங்கக் கூடாது. வாங்க, ஏதாவது செய்ய முடியுமான்னு பார்க்கலாம்.”
அவர்கள் அந்த மனிதரைத் தொடர்ந்தனர். அவர் அவர்களை அழைத்துச் சென்றது ஓட்டு வீடு, வீடு மிக மிகச் சிறியது. அந்த வீட்டில் உள்ளே மின்சாரம் கிடையாது. தெரு விளக்கின் மின்சார ஒளிதான் கீழே இருந்து பார்க்கும் போது அந்த வீட்டைக் காட்டியிருந்தது. அரிக்கேன் விளக்கு ஒளியில் ஒர் அறை. அதற்கு வெளியே நீர் தேங்கிய முற்றம்; அந்த முற்றத்து ஒரமாகச் சார்ப்பு இறக்கிய தகரத்தின் கீழே காட்டுக் கட்டைகளை வைத்து அடுப்பு எரிய விட்டு, மண் சட்டியில் உலை கொதித்துக் கொண்டிருந்தது; எல்லாம் தெரிந்தன. அறையிலிருந்த ஒரே கட்டிலைக் காட்டி, அவர்களை உட்காரச் சொன்னார் அவர் . சுவரில் பெரிய மான் தோல் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதை அடுத்து விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்ஸர், சாரதாமணி படங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. மான் தோலைப் பார்த்து அவர் வேட்டையில் ஆர்வமுள்ளவரோ என்று முதலில் நினைத்த சண்முகசுந்தரத்துக்கு அருகே மாட்டியிருந்த படங்களைக் கண்டதும் அப்படி இராதோ என்றும் சந்தேகமாக இருந்தது. அந்த மனிதர் அதிகம் பேசவே இல்லை. அரை மணி நேரத்தில் இரண்டு தட்டுக்களில் சுடச் சுட ஆவி பறக்கும் வெண் பொங்கலும்,துவையலும் வந்தன. குடிப்பதற்கு வெந்நீரும் வந்தது.“இந்த நேரத்தில் இதைத் தவிர உங்களுக்கு அதிகமாக நான் எதுவும் செய்ய முடியவில்லை. மன்னியுங்கள்” என்றார் அந்த மனிதர்.
“மன்னிப்பதாவது! இதுவே அதிக உதவி” என்றார்கள் தம்பதிகள்.
அடுப்பிலிருந்த கட்டைகளையே அந்த அறையின் கணப்பில் கொண்டுவந்து போட்டு மேலும் கட்டைகளை அடுக்கிக் கணப்பை எரிய விட்டு, “நீங்கள் இந்த அறையில் தங்கலாம்” என்று கட்டிலைக் காண்பித்தார் அந்த மனிதர். "நீங்கள்.” என்று கேட்ட சண்முகசுந்தரத்தை இடைமறித்து, "எனக்கு வேறு இடம் இருக்கிறது. நீங்கள் அது பற்றிக் கவலைப்படவே வேண்டாம். நீங்கள் தூங்கலாம்” என்று கூறி விட்டுச் சுவரில் தொங்கிய அந்த மான்தோலை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டார் அவர். அவ்வளவு நேரத்திலும் அந்த உபகாரியை முழுமையாக அடையாளம் காணக் கூடப் போதுமான வெளிச்சம் அங்கு இல்லை என்பதுதான் சண்முகசுந்தரம், பிரேமா இருவருக்குமே வருத்தத்தை அளித்தது.
“ரொம்பத் தங்கமான மனிதர்” என்றாள் பிரேமா.
“தானே தேடி வந்து உதவி செய்திருக்கிறார்” என்றான் சண்முகசுந்தரம், அதிக நேரம் அந்தப் பரோபகாரியை வியந்தே பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். இரவு இரண்டரை மணிக்கோ மூன்று மணிக்கோ கண் விழித்த போது உள்ளே இருந்த டார்ச் லைட்டை எடுத்து முற்றத்துக் கதவைத் திறந்து விளக்கு ஒளியைப் பாய்ச்சிய சண்முகசுந்தரம் அங்கே தெரிந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்தான்.
அவர்களுக்காகக் கட்டிலையும் அறையையும் தியாகம் செய்த அந்த உபகாரி முற்றத்தின் கோடியில் மாட்டுக் கொட்டம் போல் தோன்றிய ஓரிடத்தில் மான்தோலை விரித்து உட்கார்ந்தபடியே பனியில் சிரமப்பட்டுத் துரங்கிக் கொண்டிருந்தார். முழங்காலில் முகத்தைப் புதைத்தபடி தூங்கிய அந்த மனிதரின் பிடரியில் விளக்கொளி பட்டபோது இன்னோர் அதிர்ச்சியும் காத்திருந்தது அவனுக்கு. பஸ்ஸில் தங்களுக்கு முன்புறம் அமர்ந்து வந்த சாமியாரின் பிடரியில் இருந்தது போல் ஒரு சிறு கட்டி இந்த மனிதரின் பிடரியிலும் இருக்கவே, அந்தச் சாமியார்தாம் இவரோ என்று சந்தேகம் தோன்றியது. இரவில் அதை மேலும் தெளிவாக அறிய முடியவில்லை.
திரும்பி உள்ளே வந்து, “பிரேமா நமக்காக அறையைக் கொடுத்து விட்டு அந்த மனிதர் மாட்டுக்கொட்டத்துப் பனியிலே உட்கார்ந்தபடியே தூங்கறாரு” என்றான் சண்முகசுந்தரம் தனது மற்றொரு சந்தேகத்தை அப்போது அவளிடம் சொல்லவில்லை அவன்.
விடிந்ததும் அந்தப் புதிரும் விடுபட்டது. முதல் நாள் பஸ்ஸில் முன்புறம் அமர்ந்து வந்த இளம் சாமியாரே அவர்தான். பஸ்ஸில் சாமியார்களைப் பற்றிப் பேசியது, திட்டியது எல்லாவற்றையும் எண்ணி இப்போது மிகவும் கூச்சம் அடைந்தான் சண்முகசுந்தரம். சாமியாரோ அதிகாலையில் நீராடித் திருநீறு குங்குமம் துலங்கும் நெற்றியுடன் பால் போல் வெண்மையான கறையற்ற தூயபல் வரிசை தெரிய சிரித்தபடி அவர்களுக்குத் தேநீர் கலந்து எடுத்துக் கொண்டு வந்தார். தேநீரை நீட்டிக் கொண்டே திடீரென்று சரளமானதும், அழகியதுமான நல்ல ஆங்கிலத்தில் அவர் உரையாடத் தொடங்கவே, சண்முகசுந்தரம் மேலும் மேலும் கூச்சம் அடைந்து குன்றிப் போனான்.
“சாமீ! நீங்க என்னை ரொம்ப மன்னிக்கணுங்க” என்று நாத்தழுதழுக்க அவன் தொடங்கிய போது, “இந்த மலைப் பகுதி எஸ்டேட் கூலிகளுக்குக் கல்வி, சமய ஒழுக்கங்களைப் பரப்ப எங்க மிஷன் என்னை இங்கே அனுப்பியிருக்கு. எளியேன் பெயர் பிரம்மச்சாரி சீலானந்தன்” என்று தம்மை அடக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டார் அந்த மனிதர். அவர் முகத்தில் பாலமுருகனின் களை கொஞ்சியது. பற்கள் முத்துப்போல் பளீரென்று ஒளி வீசின.
“உங்களுக்கு சாமியார்கள் மேல் இருக்கிற கோபத்தைப் பார்த்ததும் நான் யார்னு தெரிஞ்சா நீங்க ராத்திரி இங்கே என்னோட தங்கக் கூட மாட்டீங்களோன்னு பயந்து போனேன். அதனால்தான் விடியற வரை நான் யார்னு உங்களைத் தெரிஞ்சுக்க விடலை”
“தப்பு! நான் ராத்திரியே அதைத் தெரிஞ்சுக்கிட்டேன் சாமி!”
“ஆமாம்! அதுவும் எனக்குத் தெரியும்! நள்ளிரவில் நீங்கடார்ச்சுடன் முற்றத்துக்கு வந்தீங்க. அப்ப நான் கண் விழித்திருப்பது தெரிந்தால், நீங்கள் என்னோடு தர்க்கித்து நேரத்தை வீணாக்குவீர்களோ என்று அஞ்சிய நான் முழங்கால்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டு தூங்குவது போல் இருந்தேன்.”
“சுவாமி! உங்க உபகாரம் ரொம்பப் பெரிசு”
“எந்த உபகாரமும் பெரியதில்லை. உங்களைப் போன்ற கோடிக்கணக்கான கிருகஸ்தர்களுக்கு உதவவே, எங்களைப் போல நூற்றுக் கணக்கானவர்கள் சந்நியாசிகளாகிறோம். நாங்கள் உங்களுடைய தொண்டர்கள் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.”
விதண்டாவாதக்காரனும் வம்புக்காரனுமாகிய தன் கணவன் சண்முகசுந்தரம் முதல் முதலாக ஒரு சாமியாரை நோக்கிக் கண்களில் நீர் நெகிழக் குழைந்து கை கூப்பி நிற்கும் விநோதத்தைப் பிரேமா அப்போது பார்த்தாள். அவளுக்கு உடல் சிலிர்த்தது.
இரண்டு நாளைக்குப் பின் கரடி மலையிலிருந்து ஊர் திரும்பிய போது சென்னையில் ரெயில் நிலையத்தில் சண்முகசுந்தரம் தம்பதிகளைத் தற்செயலாகச் சந்தித்த ஒரு நண்பன்,”என்ன ஹனிமூன் எப்படி?” என்று சிரித்தபடி கேட்டான்.
“ரொம்ப நல்லாயிருந்திச்சு. கரடி மலையிலே நல்ல கிளைமேட். அங்கே போனப்பறம் என் மூளையேகூடத் தெளிவாகி இருக்கு” என்று பிரேமாவை நோக்கிக் கண் சிமிட்டியபடி நண்பனுக்கு மறுமொழி கூறினான் சண்முகசுந்தரம். நடுங்கும் குளிரில் ஹனிமூன் வந்தவர்களுக்கு இருந்த ஒரே கட்டிலையும் அறையையும் ஒழித்துக் கொடுத்து விட்டு முற்றத்தில் மான் தோலில் அமர்ந்தபடி சிரமப்பட்ட அந்த இளம் சாமியாரை நினைத்தபோதெல்லாம் மெய் சிலிர்த்த சண்முகசுந்தரம், திருமணமான பின் ஹனிமூனிலிருந்து திரும்பியதும் ஏன் அப்படித் தலைகீழாக மாறினான் என்பது மட்டும் அவனுடைய பழைய நண்பர்களுக்குப் பல நாள் வரை புரியாத புதிராக இருந்தது. உண்மை தெரியாத அவர்கள் தங்களுக்குள்ளே, “அவனோட மாமனார் ஒரு சாமியார்ப் பைத்தியம், இவனும் கல்யாணமானப்பறம் சாமியார்ப் பைத்தியமா மாறிட்டான். இதுதான் விஷயம்” என்று அவனுடைய மாற்றத்துக்குச் சாதாரணமான காரணங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அவனோ அந்தரங்கமான காரணத்தை விளம்பரப்படுத்தி அதன் பெருமையைக் குறைத்து விடாமல் அதை மனப்பூர்வமாகப் போற்றிக் கொண்டிருந்தான்.
(கலைமகள், தீபாவளி மலர், 1973)