நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/பெண்ணுக்கு மரியாதை

116. பெண்ணுக்கு மரியாதை

ங்கீதச பையின் வருடாந்தரப் பேரவைக் கூட்டம் அந்த ஞாயிற்றுக்கிழமை காலை காபி, சிற்றுண்டியுடன் தொடங்கியது. இதற்கு முன்பெல்லாம் ‘ஜெனரல் பாடி’ கூட்டத்துக்கு வரச் சொல்லி ஒரு தபால் கார்டு மட்டும்தான் அழைப்பாக வந்து சேரும். இந்த வருடம் சபையின் பொருளாதார நிலைமை மிகவும் திருப்திகரமாக இருந்ததாலோ, உறுப்பினர்கள் நிறைய வர வேண்டும் என்பதற்கு ஒரு கவர்ச்சி அம்சமாகவோ கார்டில் கீழே ஒரு குறிப்பாக ‘உறுப்பினர்களுக்குக் காலைச் சிற்றுண்டி, காபி கூட்டத்திலேயே வழங்கப்படும்’ என்றும் சேர்த்து அச்சிட்டிருந்தார்கள். அப்பா காலமான பின் நாலு மாதத்துக்கு முன் குடும்பத்தின் ‘மெம்பர்ஷிப் கார்டு’ தன் பெயருக்கு மாற்றப்பட்டதிலிருந்து இன்று வரை சுந்தரேசன் சபா பக்கமே போக நேரவில்லை. நடுவே இரண்டொரு நாடகங்களுக்காக வந்த டிக்கெட்டைக் கூட நண்பர்கள் யாரிடமோ கொடுத்தனுப்பியிருந்தான்.அம்மா போக முடியாது. அவனும் போக விரும்பவில்லை. டிக்கெட் வீணாக வேண்டாம் என்றுதான் நண்பர்களை அனுப்பியிருந்தான் அவன்.

சுபாவத்தில் அவன் பெரிய சங்கோஜி. அளவுக்கு அதிகமான கூச்சக்காரனும்கூட. கூட்டத்தில் திடீரென்று நாலைந்து பேராக அவனருகே பேச வந்து விட்டால் கூடத் திணறிப் போவான் அவன். அந்த நாலைந்து பேரில் யாராவது ஒரு பெண்ணும் இருந்து விட்டால் சொல்லவே வேண்டாாம். ’என்ஜினியரிங்’ கல்லூரியில் சேர்ந்ததும் ‘ராகிங்’ தொல்லைகளுக்குப் பயந்து கொண்டு முதல் மாதம் முழுவதும் உடல் நலமில்லை என்று டாக்டர் சர்டிபிகேட்வாங்கிக் கொடுத்து விட்டு வீட்டிலேயே அடைந்து கிடந்திருக்கிறான் அவன். அவ்வளவு பயந்த சுபாவம்.

“உன்னைப் போல் இருக்கிறவனைத் திருத்தி விட முடியுமானால் ‘ராகிங்’ கூட அவசியம்தான்னு தோன்றது” என்று அப்போதெல்லாம் தந்தையே அவனைக் கேலி செய்திருக்கிறார். போகட்டும். அதெல்லாம் பழங்கதை. அப்பா காலமான புதிதில் சபாவுக்குப் போனால் யார் யார் அங்கேயே தன்னை துக்கம் விசாரிக்கக் கூடுவார்கள் என்று எண்ணி அவர்களுக்குக் கூசியே அங்கே போகாமலிருந்தான் அவன். இப்போது மாதங்கள் சில ஆகி விட்டதால் இன்றையப் பேரவைக் கூட்டத்துக்குப் போகலாம் என்று கொஞ்சம் துணிவு வந்தது சுந்தரேசனுக்கு.

சிறப்பம்சமாகக் காபி - சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்திருந்ததனால் காலை எட்டு மணிக்குப் பேரவையைக் கூட்டியிருந்தார்கள். சுந்தரேசன் சபாவுக்குப் போய்ச் சேரும் போது மணி எட்டேகால் ஆகியிருந்தது. கூசிக் கூசி உள்ளே நுழைந்தான் அவன். நல்லவேளையாக அது பேரவைக் கூட்டமாகையினால் இளம் பெண்கள் அதிகமாகத் தென்படவில்லை. ஆண்களைப் போல துணிவு, பார்வை, தைரியம் எல்லாம் பெற்று விட்ட சில நடுத்தர வயது மாமிகள் மட்டும் தென்பட்டனர். மற்றவர்கள் அனைவரும் சிற்றுண்டியில் தீவிரமாயிருந்தனர். சுந்தரேசனின் நல்லவேளையோ, போதாத வேளையோ அவன் உள்ளே நுழைந்ததும் சபையின் தலைவர் ஒய்வு பெற்ற பெரு நீதிமன்ற நீதிபதி உத்தமனூர் கணபதி சாஸ்திரியின் பார்வையில் பட்டு விட்டான். “ஹலோ! உங்க ஃபாதர் இந்த சபையிலே இருபது வருஷம் எவ்வளவோ ‘ஆக்டிவ்’ஆக இருந்தார். ஃபவுண்டர் மெம்பர் வேறே. நீ என்னடான்னா இந்தப் பக்கம் எட்டிப் பாக்கிறது கூட இல்லை. உன்னைப் போல வாலிபப் பிள்ளைகள் எல்லாம் நிறைய ஒத்துழைக்கணும் அப்பா” என்று சாஸ்திரி அவனை மிகவும் உற்சாகமாக வரவேற்கவே, அவன் திணறிப் போனான்.

சாஸ்திரிக்கு அருகே அவருடைய பெண் வயிற்றுப் பேத்தி பஞ்சாபி டிரஸ்ஸில், திமிறிக் கொண்டு பாய்வதற்குத் தயாராகக் காத்திருக்கும் அரபிக் குதிரை போன்ற உடற்கட்டுடன் நின்று கொண்டிருக்கவே, சுந்தரேசனின் கூச்சம் அதிகமாயிற்று. சாஸ்திரியின் பெண்ணும் மாப்பிள்ளையும் டேராடூனில் இருந்தாலும், பேத்தி கல்லூரிப் படிப்புக்குச் சென்னையைத் தேர்ந்தெடுத்திருந்தாள். தாத்தா, பாட்டியோடு தங்கிப் படித்துக் கொண்டிருந்தாள். சங்கீத சபா வாலிபர்களிடையே இவள் அழகும் கவர்ச்சியும் எல்லாம் போதுமான அளவு விளம்பரம் பெற்றிருந்தன. நாலைந்து வழுக்கைத் தலைகளும், ஐந்தாறு கிழங்களும் கூடஅவளருகே சூழ்ந்து நின்று கொண்டு, ‘இந்த டிரஸ் உனக்குப் பிரமாதமா இருக்கு, பேபி’ என்று புகழ்ந்து கொண்டிருந்தன. சாஸ்திரி தம் பேத்தியைச் செல்லமாக அழைக்கும் பெயர் பேபி என்பது.

“பேபீ! இவனைத் தெரியுமா? நம்ம சபேசனோட ஸன். பி.இ. முடிச்சிட்டு ஃபாதரோட கன்ஸர்ன்ஸ் எல்லாம் கவனிச்சுக்கிறான்” என்று சாஸ்திரி தம்முடைய பேத்திக்கு சுந்தரேசனை அறிமுகப்படுத்திய போது, அந்த அரபிக் குதிரை அபிநயம் பிடிப்பது போல் அழகாகக் கை குவித்து, அவனை வணங்கியது. அவள் முகத்தையும், அப்புறம் அந்த முகத்தில் மாதுளை மொட்டுப் போல் உதடுகளையும், அப்புறம் அதில் சிரிப்பையும் ஒரு முறை நன்றாக நிதானமாகப் பார்த்து விட வேண்டும் என்று உள்ளே ஆசை தவித்தும் தைரியமில்லாமல் அவன் பராக்குப் பார்த்துச் சமாளித்தான். கேசத்திலிருந்து கால்கள் வரை, மறுபடி கால்களிலிருந்து கேசம் வரை அவளை ஒரு முறை, இரு முறை, பல முறை பார்த்து விடத் துடித்தும், அவனால் துணிய முடியவில்லை. அதட்டுவது போன்ற குரலில் கணபதி சாஸ்திரி அவனிடம் கூறினார்.

“எங்கேயாவது மூலையில் போய் உட்கார்ந்து விடாதே. முதல் வரிசையில் உட்கார், ஆல் தி ஃபவுண்டர் மெம்பர்ஸ் ஷூட் பி இன் த ஃபர்ஸ்ட்ரோ , தெரிஞ்சுதா?”

சுந்தரேசன் பயந்தபடியே சரி என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டி வைத்தான். ஆனால் தன்னை அவர் எதற்காக் அப்படி முதல் வரிசையில் அமரச் செய்தார் என்பது மட்டும் அவனுக்குத் தெரிந்திருந்தால் அவன் அங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஒடிப் போயிருப்பான்.

ஜெனரல் பாடி கூட்டத்திற்கு சாஸ்திரி தலைமை வகித்தார். கூட்டத்தின் ‘அஜெண்டா’வில் அன்று செய்யவிருந்த காரியங்களாகக் குறித்திருந்தவை ஒரு செயலாளர், ஒரு கூட்டுச் செயலாளர், நிர்வாகக் குழுவினர் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதாகும். சாஸ்திரி மேடையில் போய் அமர்ந்ததும், அவரோடு இருந்த அவர் பேத்தி முதல் வரிசையில் சுந்தரேசனுக்கு அருகே காலியாயிருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தாள். அவளுடைய நளினமான வாசனைகள், பவுடர், ஹேர் ஆயில் கமகமப்பு, மல்லிகைப் பூவின் மணம் எல்லாமாகச் சேர்ந்து நிராயுதபாணியாக இருந்த சுந்தரேசன் மேல் ஒன்று கூடிப் படையெடுத்தன. கால் மேல் கால் போட்டு சுதந்திரமாக உட்கார்ந்திருந்த சுந்தரேசன் மெல்லக் காலை எடுத்து விட்டு நாற்காலியோடு ஒட்டினாற் போல் ஒடுங்கி இடுங்கி உட்காரத் தொடங்கியதைக் கண்டு,

“ஸிட் யுவர் ஸெல்ஃப் கம்ப்பர்ட்டபிலி, ஐ திங்க் ஐ யாம் நாட் டிஸ்டர்பிங் யூ” என்று சொல்லிப் புன்முறுவல் பூத்தாள் பேபி. அப்போதும் அவள் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க முயன்று முடியாமல் தோற்றான் அவன். உடனே பொருத்தமாக அவள் நெஞ்சில் போய் இறங்கிச் சுகமாகத் தங்கும்படி நாலு இங்கிதமான வார்த்தைகளைப் பதிலாகச் சொல்ல எண்ணி வார்த்தைகளும் துணிவும் வராததால் சும்மா இருந்து விட்டான். அவன் சும்மா இருந்தததைக் கண்டு ‘மேனர்ஸ்’ தெரியாதவன் என்று அவள் அவனைப் பற்றி நினைத்திருக்கக் கூடும். அவள் அப்படி நினைத்து விடக் கூடாதே என்றும் அவன் மனம் தயங்கியது. அவள் அருகே அமர்ந்திருக்கிற பரபரப்பில் அவனுக்கு ஒரு வேலையுமே ஒடவில்லை. ஒன்றுமே பேச வரவில்லை. ஒன்றுமே செய்ய முடியவில்லை.

சபாவின் செயலாளர் பதவிக்கு முந்திய ஆண்டில் இருந்தவருடைய பெயரே பிரேரேபிக்கப்பட்டது. கூட்டுச் செயலாளர் பதவி என்ற ஒன்றே முந்திய ஆண்டில் கிடையாது.செயலாளருக்கு அதிகமாயிருக்கும் வேலைகளைப் பகிர்ந்து கொள்வதற்கு என்று இந்த ஆண்டு அந்தப் பதவிக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர்.அந்த சபாவில் தலைவர் கணபதி சாஸ்திரியின் செல்வாக்கு நிரந்தரமானது. அவர் ஒரு பதவிக்கு யாருடைய பெயரையாவது குறிப்பிட்டு அதற்குப் போட்டி வருமென்பது நடவாத காரியம். அவர் வார்த்தைக்கு எல்லாருமே கட்டுப்படுவார்கள்.

திடீரென்று சுந்தரேசன் முற்றிலும் எதிர்பாராதபடி கூட்டுச் செயலாளர் பதவிக்கு அவன் பெயரையே பிரேரேபணை செய்து வைத்தார் கணபதி சாஸ்திரி,

"இந்தச் சபையை உருவாக்குவதில் அந்தக் காலத்தில் எனக்குத் துணையாயிருந்த காலஞ் சென்ற தொழிலதிபர் சபேசனின் புதல்வர் சுந்தரேசனைக் கூட்டுச் செயலாளர் பதவிக்குப் பிரேரணை செய்கிறேன்” என்று சாஸ்திரி கூறியதும், அந்தப் பிரேரணை ஏக மனதான ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. அவன் எழுந்து மறுக்கவும் முடியவில்லை. - “கங்கிராஜுலேஷன்ஸ்” என்று அவன் காதருகே இனிய குரலில் கிளுகிளுத்தாள் அருகே உட்கார்ந்திருந்த பேபி. அந்தப் பாராட்டுக்கு நன்றி சொல்லவும் அவனால் முடியவில்லை. தன்னுடைய அடக்கத்தையும் மரியாதையையும் அவள் சரியாக எடுத்துக் கொள்வாளா, அல்லது தன்னை பயந்தாங்கொள்ளி என்று எடுத்துக் கொள்வாளா என்பதாக அவனுள்ளே அப்போது ஒரு சிந்தனை ஒடியது.

வெறும் பயம் மட்டும் மரியாதையாகி விடாது; உலகில் எல்லா இடங்களிலும் பயபக்தியினாலேயே மரியாதை செலுத்தி விட முடியாது; பயமின்றி மரியாதை செலுத்தும் இடங்களும் உண்டு என்று அவன் மனத்தில் இன்னொரு குரல் அவனை இடித்துக் காட்டவும் செய்தது. தான் இயலாமையினால் பயப்படுகிறோமே ஒழிய மரியாதையால் பயப்படவில்லை என்று அவன் மனமே அவனை இடித்துக் காட்டவும் தவறவில்லை. கூட்ட முடிவில் சபாவின் மூத்த உறுப்பினர்களும், நண்பர்களும் கூட்டுச் செயலாளராக அவன் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதற்காக அவனைப் பாராட்டினர். அப்படி அவர்கள் எல்லாரும் தன்னை வந்து பாராட்டும்போது பேபியும் அருகே நின்று கொண்டிருந்தததனால் தன் அருகே அவள் சேர்ந்து நிற்பதைப் பற்றி அவர்களெல்லாம் என்ன நினைத்துக் கொண்டு போவார்களோ, என்ன பேசிக் கொண்டு போவார்களோ என்று அவன் மனம் தயங்கியது.

‘கணபதி சாஸ்திரியின் பேத்தியும் சுந்தரேசனும் ரொம்ப நெருக்கம் போலிருக்கிறது’ என்று யாராவது பேசிக் கொண்டு போனால் அது எவ்வளவு மரியாதைக் குறைவாக இருக்கும் என்று எண்ணிப் பயந்தான் அவன்.

‘சரிதான்! கணபதி சாஸ்திரி இவனை இதற்காகத்தான் இங்கே கூட்டுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் போலிருக்கிறது’ என்று யாரோ பேசிக் கொண்டு போவது போல் அப்போதே ஒரு பிரமை அடைந்து விட்டான் சுந்தரேசன். உடனே அவள் பக்கத்தில் நிற்கும் அந்த இடத்திலிருந்து நகர விரும்பி, மெல்ல வெளிப்பக்கம் நகர்ந்தான் அவன். அப்படிப் போகும் போது அவளிடம் சொல்லிக் கொள்ள நினைத்து ஒர் இளம் பெண்ணிடம் ஒர் இளைஞன் சொல்லி விடைபெற்றுக் கொள்வது போன்ற உற்சாகமோ, உவகையோ இல்லாமல், பயபக்தியோடு விலகி நாலடி தள்ளி, ஒரு வி.ஐ.பி.க்கு வணக்கம் செலுத்துவது போல் பேபிக்கு வணக்கம் செலுத்தினான் சுந்தரேசன்.

பேபி அவன் எதிர்பார்த்தது போல் பதிலுக்கு அவனை வணங்காதது அதிர்ச்சியளிப்பதாயிருந்தது. அவன் விலகி நின்று கைகூப்பியதற்குப் பதிலாக அலட்சியமான புன்னகை ஒன்றை இதழ்களில் சிந்தினாள் அவள். சபாவுக்குள் வந்ததும், இவன் நம்ம சபேசனோட சன் என்று சாஸ்திரி அவளுக்குத் தன்னை அறிமுகப்படுத்திய போது கன்னங்கள் கனிய நாணிச் சிரித்து, இங்கிதமாக கை கூப்பிய அவள்தான் இப்படி அலட்சியமாகச் சிரித்துக் கொண்டு நிற்கிறாள் என்பதை இப்போது அவன் நம்பவே முடியாமலிருந்தது.

தான் இவ்வளவு கவனமாக மறந்து விடாமல் செலுத்திய மரியாதைக்குப் பதில் மரியாதை கூடச் செலுத்தாமல் அவள் ஏன் இப்படி அலட்சியமாக மரம் போல் நிமிர்ந்து நின்று சிரிக்கிறாள் என்பது புரியாமல் அவன் குழம்பினான்.

வீட்டுக்குத் திரும்பி வந்த பின்னும் பேபியைப் பற்றி இந்த சிந்தனையை விட முடியாமல் இதையே நினைத்துத் தவித்துக் கொண்டிருந்தான் சுந்தரேசன். திடீரென்று தான் சபாவுக்கு எந்தக் கோலத்தில் போயிருந்தானோ, அந்தக் கோலத்தில் நிலைக் கண்ணாடிக்கு முன்னே போய் நின்று தன்னை அழகு பார்த்துக் கொண்டான் அவன். தன்னுடைய இந்தத் தோற்றம் அவளுடைய கண்களைக் கவர்ந்து மனத்தில் பதிந்திருக்குமா இல்லையா என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டுத்தான் இப்படிக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டான் அவன். ரொம்பவும் ‘ஸ்மார்ட்டாகவும்’ அழகாகவும்தான் இருந்தது. ‘டியூக் ஆஃப் எடின்பரோ’ போல் உயரம், ‘கிரிகிரி பெக்’கின் முக அமைப்பு எல்லாமே ஸ்மார்ட் ஆகத்தான் இருந்தன. இந்த உவமைகள் எல்லாம் அவன் நண்பர்கள் பல முறை அவனிடம் கூறி அலுத்தவை.

சங்கீத சபையில் இருந்து புறப்படு முன் அவளிடம் எப்படிச் சொல்லி விடை பெற்று வணங்கினானோ அப்படியே கண்ணாடிக்கு முன் வணங்கிப் பார்த்தும் சந்தேகத்தைப் போக்கிக் கொண்டான் அவன். எதிரே மகாத்மா காந்தியையோ, விவேகானந்தரையோ பார்த்தது போல் அவ்வளவு பயபக்தியோடுதான் அவளை வணங்கியிருக்கிறோம் என்பதும் உறுதியாயிற்று. ‘அளவு கடந்த மரியாதையோடு பழகிய தன்னிடம் அவள் ஏன் விடை பெறும் போது இவ்வளவு அவமரியாதையாக நடந்து கொண்டாள்?’ என்பதுதான் அவனுக்குப் புதிராக இருந்தது.

சாஸ்திரி அறிமுகப்படுத்தியதும் நாணிச் சிரித்த அதே நளினம். நான் அவளிடமிருந்து விடைபெறும் போது எங்கு போயிற்று? திடீரென்று அவள் ஏன் என்னிடம் மாறினாள்? அவள் அப்படி மாறும்படி எந்த விதத்திலும் நான் அவளிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளவில்லையே?

இரண்டு மூன்று நாட்களுக்குப் பின் கன்னிமராவில் ஜூனியர் சேம்பர் கூட்டத்துக்குப் போய் விட்டு அவன் மாலை ஏழு மணிக்கு வீடு திரும்பிய போது சாஸ்திரி போனில் அவனைக் கூப்பிட்டார். அடுத்து வரும் மாதங்களில் நடைபெற வேண்டிய ‘சபா’ புரோகிராம்களை எல்லாம்பேசி முடிவு செய்வதற்காகச் செயலாளர் வந்திருப்பதாகவும், கூட்டுச் செயலாளராகிய அவனும் உடனே வர வேண்டும் என்றும் சொன்னார் அவர்.

ஜூனியர் சேம்பரிலிருந்து வந்தவன், உடையைக் கூட மாற்றிக் கொள்ளாமல் அப்படியே மறுபடி காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

சாஸ்திரி வீட்டுக்குள் அவன் நுழைந்த போது கூடத்து ஸோபா கம் பெட்டில் சாய்ந்து உமன் மேகஸினைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பேபி, அவனைப் பார்த்த பின்னும் அவள் எழுந்திருக்கவில்லை. அந்த மரியாதையற்ற வரவேற்பு அவனைத் துணுக்குறச் செய்தது. அவன் தயங்கினான். “ஹலோ” என்று வாய் நுனி வரை வந்து விட்ட வார்த்தை அதை முதலில் சொல்ல வேண்டிய அவள் சும்மா இருந்ததினால் அடங்கி விட்டது. அதற்குள் மிஸஸ் சாஸ்திரி உள்ளேயிருந்து வந்து விட்டாள். அவன் மிஸஸ் சாஸ்திரியை எதிர் கொண்டான். “மாடியிலே இருக்கார் போங்கோ. உங்களுக்கு ஃபோன்கூடப் பண்ணினாரே” என்று அந்த அம்மாள் கூறியதும், மாடிக்கு விரைந்தான் சுந்தரேசன். பேபியினுடைய நடத்தை அவனுக்குப் புதிராயிருந்தது.

மாடியில் அவனுக்கும், சபா செயலாளருக்கும் டீ கொண்டு வந்து கொடுத்து உபசரித்தது கூட மிஸஸ் சாஸ்திரிதான். பேபி அந்தப் பக்கம் வரவே இல்லை. சபா நிகழ்ச்சிகளை முடிவு செய்ய ஒரு மணி நேரத்துக்கும் மேலாயிற்று. போகும் போது செயலாளரை டிராப்' செய்து விடச் சொல்லி சுந்தரேசனை வேண்டினார் சாஸ்திரி. அவன் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டான். இருவரையும் கார் வரை வந்து வழியனுப்பும் போது கூடசாஸ்திரியும் அவருடைய மனைவியும்தான் வந்திருந்தார்கள்.

காரில் திரும்பும் போது “சாஸ்திரியோட கிராண்ட் டாட்டருக்கு உடம்பு செளகரியமில்லையா என்ன? காணவே இல்லியே” என்று செயலாளரிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தான் சுந்தரேசன்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லியே? நான் வந்தப்ப என் கூட ரொம்ப நாழி ஹால்லே பேசிண்டிருந்தாளே, மாமா! அடுத்த மாசப்ரோக்ராம்லே பால முரளி கிருஷ்ணாவைக் கண்டிப்பாகச் சேர்க்கணும்னு கூடச் சொன்னாளே”

சுந்தரேசன் பதில் சொல்லாமல் கேட்டுக் கொண்டே வந்தான். இரண்டு நிமிஷ மெளனத்திற்குப் பின் மறுபடியும் தாமாகவே,

“ஷீ இஸ் ஸ்மார்ட் அண்ட் ஜோவியல்” என்று செயலாளர் கூறிய போது,

“யெஸ் யெஸ்! ஷீ இஸ் வெரி வெரி வெரி ஸ்மார்ட் அண்ட் ஜோவியல்” என்று உதட்டளவில் அவனும் முணுமுணுத்தான். ஒரு விஷயம் இப்போது அவனுக்குத் தெளிவாகி விட்டது.செயலாளர் வந்த போது பேபி, அவரை ஜோவியலாக வரவேற்றுப் பேசியிருக்கிறாள்; வேண்டுமென்றே தான் வரும் போது இவள் தன்னைக் கவனிக்காதது போல் இருந்து விட்டாள் என்பது அவனுக்குத் தெளிவாய்ப் புரிந்தது.

"பிஃபோர் மீ ஷீ வாஸ் அன்ஸெரிமோனியல் அண்ட்இன் எ பாய்காட்டிங் மூட்...” என்று கறுவிக் கொள்வது போல் வார்த்தைகளை நினைத்து, அதை உடன் வந்து கொண்டிருந்த செயலாளரிடம் சொல்லி விடாமல் தன்னைத் தடுத்துக் கொண்டான் சுந்தரேசன்.

அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை சபா நிகழ்ச்சி இருந்தது. எல்லாரையும் வரவேற்று உட்காரச் செய்ய வேண்டும் என்பதற்காக அரை மணி நேரம் முன்னாலேயே அவனும் செயலாளரும் சபா கட்டிடத்துக்குப் போய் விட்டார்கள்.

ஒவ்வொருவராக வரவேற்று அழைத்துப் போய் உட்கார வைத்துக் கொண்டிருந்த சுந்தரேசன், நீல வாயில் புடவை அசைய ஒரு பெண்ணுருவம் தென்பட்டதும் சரியாக நிமிர்ந்து கூடப் பார்க்காமல், “மேடம் ப்ளிஸ் கம். திஸ் வே.” என்று சொல்லி விட்டு, அபூர்வமாக ஏற்பட்டு விட்டஏதோ ஒரு விதத் துணிச்சலுடன் ஏறிட்டுப் பார்த்த போது, எதிரே பேபி நின்று கொண்டிருந்தாள். அவனை வெட்டி விடுவது போல் முறைத்துப் பார்த்து விட்டுத் தலையைத் திருப்பிக் கொண்டு உள்ளே போய் விட்டாள் அவள்.

தான் அவளை மேடம்' என்று கூப்பிட்டது அவளுடைய ‘ஸ்மார்ட்னெஸ்ஸை’ அவமானப்படுத்தி இருக்குமோ என்பதாகத் தோன்றியது அவனுக்கு என்ன செய்வது? பேசிய ஒரு வார்த்தையை மறுபடி விழுங்க முடியாதே?

அன்றைய சபா நிகழ்ச்சி முடிந்து ஒன்பதரை மணிக்கு அவன் வீட்டுக்குப் போய் உடை மாற்றிக் கொண்டு டைனிங் டேபிளில் சாப்பிட உட்கார்ந்த போது எதிர்பாராத விதமாக டெலிபோன் மணி அடிக்கத் தொடங்கியது. அவன் ஒடிப் போய் எடுத்தான். எதிர்ப் புறமிருந்து ஒரு பெண் குரல் சீறியது. அது பேபியின் குரல் என்று அவன் அடையாளம் புரிந்து கொள்ளவே சில விநாடிகள் ஆயின.

"மிஸ்டர், உங்களுக்கு என்னைப் பிடிக்கலேன்னா வரவேற்காம இருந்துடலாம், அதுக்காக ‘மேடம், மாமி, அத்தை, பாட்டி’ அப்படீன்னெல்லாம் கூப்பிட்டு இப்படி அவமானப்படுத்த வேண்டியதில்லே. தெரிஞ்சுக்குங்கோ.”

இதைக் கேட்டு அவன் திணறிப் போனான்.

“அது ஒரு மரியாதை வார்த்தைன்னு மட்டும் நீங்க புரிஞ்சுண்டா அதிலே தப்பா எடுக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லியே” என்று அவன் ஏதோ பதில் சொல்ல முயன்ற போது அவள் குறுக்கிட்டு, “ஒரு பெண்ணுக்கு எப்படி மரியாதை செய்யறதுன்னு நீங்க இனி மேல்தான் படிச்சுக்கணும். நல்ல வேளை. ‘அத்தைப் பாட்டீ’ன்னு கூப்பிடாம இருந்த மட்டிலே சரி..” என்று கடுமையாகச் சீறி ஃபோனை வைத்து விட்டாள்.

மறுபடி அவளைத் தானே கூப்பிட்டுச் சமாதானமாகப் பேசலாம் என்று அவனுக்குத் தோன்றியது. ஃபோனை அவள் எடுக்காமல் சாஸ்திரியோ, மிஸஸ் சாஸ்திரியோ எடுத்துத் தொலைத்தால் என்ன செய்வது என்ற தயக்கம் தடுக்கவே அந்த எண்ணத்தைக் கைவிட வேண்டியதாயிற்று. ஆனால் இந்த நிகழ்ச்சி அன்றிரவு அவனைத் துரங்க விடாமல் செய்து விட்டது. ஓர் இளம் பெண்ணின் முகத்தில் நாணத்தை வரவழைக்க முடியாமல் போகுமளவுக்குத் தன்னிடம் எது குறைகிறதென்று அவனுக்கே புரியாமலிருந்தது. ‘இவள் என் பேத்தி’ என்று சாஸ்திரி முதன்முதலாக அவளைத் தனக்கு அறிமுகப்படுத்திய தினத்தன்று தளதளக்கும் அரபிக் குதிரை போல இளமை திமிறிக் கொண்டு பாய அவள் நின்ற அந்தத் தோற்றத்தையும், அப்போது அவள் முகத்தில் தோன்றிய நாணச் சிரிப்பையும் எண்ணி எண்ணி உருகினான் சுந்தரேசன். மறுபடி அந்த நாணத்தை அவள் முகத்தில் வரவழைக்கும் மாயம் புரியவில்லை அவனுக்கு.

மறுநாள் காலை இதை மறக்கும்படி வேறொரு தலைவலி வந்து சேர்ந்தது. திருவொற்றியூரில் அவனுடைய ஃபவுண்டரியில் ஏதோ லேபர் அன்ரெஸ்ட் வந்து, அது கடைசியில் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் முடிந்தது. தொடர்ந்து நாலைந்து தினங்களாக அவன் அது சம்பந்தமாக யூனியன் தலைவர்களையும் தொழிலாளர்களையும் சந்தித்துக் காரண காரியங்களோடு கண்டிப்பாகப் பேச வேண்டியிருந்தது. தினம் மாலையில் ஃபவுண்டரியிலிருந்து வீடு திரும்ப ஐந்து மணி ஆறு மணி என்று ஆகிக் கொண்டிருந்தது.அவனே நேரில் தொழிலாளர்களோடு பேசி அவர்களும், அவனும் நியாயமாக ஒரு முடிவுக்கு வந்து எல்லாம் சமரசமாக முடிவாயிற்று. அந்தச் சமரசம் நேர்ந்த வெற்றிக் களிப்போடு அன்று தானே காரை டிரைவ் செய்து கொண்டு பீச் ரோடு வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தான் அவன். துணிவாகவும், நியாயமாகவும் முயன்றால் எதையும் சமாளிக்க முடியும் என்ற தைரியமான மனநிலையில் அவன் அன்று இருந்ததனால், வழக்கத்திற்கு விரோதமாக அதிக பட்ச வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான் அவன்.

விவேகானந்தர் சிலையைக் கடந்து ராணி மேரி கல்லூரி அருகே வந்தபோது கையில் புத்தக அடுக்குடன் அங்கே பேபி நிற்பதைப் பார்த்து விட்டு அவன் காரை ‘ஸ்லோ’ ஆக்கி அவளைக் கையசைத்துக் கூப்பிட்டான். அதே பஞ்சாபி டிரஸ். அதே இளமைத் திமிறிப் பாயும் தோற்றம். புத்தகங்கள் கையில் இருந்ததால், இன்னும் அதிகம் ‘ஸ்மார்ட்டாக’த் தோன்றினாள் அவள். அவன் கூப்பிட்டதைப் பார்க்காதது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அவள். அவன் விடவில்லை. காரை விட்டு இறங்கி அருகே நெருங்கிச் சென்று “ஹேய் பேபீ! உன்னைத்தான்... நான் கொண்டு போய் வீட்டிலே ‘டிராப்’ பண்றேன்; ஏறிக்கோ” என்றான்.

அவள் திரும்பிப் பார்த்தாள். தயங்கினாள். அப்புறம் மெதுவாக நடந்து வந்தாள். அவனுக்கு வெற்றி. மகத்தான வெற்றி! பின் ஸீட்டில் ஏறிக் கொள்ளப் போனவளை முன் ஸீட் கதவைத் திறந்து விட்டு அங்கே ஏறிக் கொள்ளச் சொன்னான் அவன். அவள் மறுக்கவில்லை. காரை ஸ்டார்ட் செய்து திடீரென்று இடது பக்கம் திரும்பிக் கடற்கரை உள்சாலையில் செலுத்தினான் அவன்.

“எங்கே...?' என்றாள் பேபி.

"இப்ப என்ன அவசரம்? கொஞ்ச நாழி பீச்லே உட்கார்ந்திட்டுத்தான் போகலாமே?”

இதற்கும் அவள் மறுக்கவில்லை. கடற்கரை உட்புறச் சாலையில் காரைப் பார்க் செய்துவிட்டு இருவரும் மணலுக்குப் போவதற்காகச் சாலையில் குறுக்கே நடந்த போது தலை குனிந்து நடந்த அவள் ஒரு ஐஸ்கிரீம் வண்டியில் மோதிக் கொள்ள இருந்தாள். சட்டென சுந்தரேசன் அவள் கையைப் பிடித்துப் பின்னுக்கு இழுத்தான். அவள் முகம் சிவந்தது.

“கையை விடுங்கோ.”

அவள் குரலிலும், முகத்திலும், சிரிப்பிலும் எந்த நாணத்தைக் கடந்த பல வாரங்களாக அவன் எதிர்பார்த்து வெற்றி கொள்ளத் தவித்தானோ அந்த நாணம் ஒலித்தது. தெரிந்தது. ஒளிர்ந்தது.

‘பேபீ தேர் யூ ஆர்...’ என்று அவன் மனம் எக்காளமிட்டது. “ஒரு கோல்ட்ஸ்பாட் சாப்பிடறியா?”

அவள் ஆகட்டும் என்பதற்கு அடையாளமாகத் தலையை ஒயிலாக அசைத்தாள்.

இருவரும் பக்கத்தில் இருந்த ஒரு ஸ்டாலில் கோல்ட் ஸ்பாட் சாப்பிட்டார்கள். இப்போது அவள் அவனிடம் நிமிர்ந்து பார்த்துப் பேசவே நாணப்பட்டாள். கூச்சப்பட்டாள். ஆயிரம் தொழிலாளர் பிரச்சினையைச் சமாளித்ததை விட இன்று அவனுக்கு இது பெரிய வெற்றி.

கடற்கரை மணலில் அமர்ந்திருந்த போதும் கீழே பார்த்து மணலைக் கீறிக் கோடு போட்டுக் கொண்டிருந்தாள் அவள்.

"பேபீ! உன்னை ஒண்னு கேக்கணும்...”

"கேளுங்கோ.”

"அன்னிக்கி ஃபோன்லே கோபமாப்பேசினியே, அப்ப, ‘ஒரு பெண்ணுக்கு எப்படி மரியாதை செய்யறதுன்னு நீங்க இனிமேல் தான் படிச்சுக்கணும்’னியே இன்னிக்கு நான் அதை ரொம்பச் சரியாப் படிச்சிண்டுட்டேன்னு நினைக்கிறேன், சரிதானே?”

அவள் பதில் சொல்லவும் இல்லை; தலை நிமிரவும் இல்லை. இன்பக் கிளுகிளுப்புடன் கூடிய சிரிப்பு மட்டும் அவளிடமிருந்து ஒலித்தது. அந்தச் சிரிப்பே அவன் சொல்வது சரிதான் என்று ஒப்புக் கொள்வதாக இருந்தது.

"அம்பிகாபதி அமராவதிக்கும் பில்ஹணன் தன்னைக் காதலித்த ராஜகுமாரிக்கும், துஷ்யந்தன் கண்வருடைய மகளுக்கும் செய்த மரியாதை இதுதானே?”

இதைக் கேட்டு அவள் முகம் கனிந்து சிவப்பதை அவன் தலை தாழ்த்திப் பார்க்கிறான். பதில் சொல்லவும் நாணி ஒடுங்கி விட்டாள் அவள் என்பது அவனுக்குப் புரிகிறது; நன்றாகப் புரிகிறது.

‘தேர்யூ ஆர்!’

அவன் மனம் கு தூகலத்தால் துள்ளுகிறது. ஓர் இளம் அரபிக் குதிரையைப் பழக்கி வசப்படுத்தி விட்ட ஆண்மைப் பெருமிதத்தால் பூரிக்கிறது.

திரும்புவதற்காக இருவரும் காரருகே வரும் போது கொழுகொம்பைச் சார்ந்த கொடி போல் அவனருகே துவண்டு தளர்ந்து துடியிடை அசைய நடந்தாள் அவள். பழைய குதிரை நடை இல்லை இப்போது.

காரில் ஏறுமுன்,

“உங்களைத்தானே! பீச்சுக்கு வந்தது தாத்தாவுக்குத் தெரிய வேண்டாம்” என்று மெல்லிய குரலில் பயத்தோடு அவள் கூறிய போது, “ஏன் பயந்து சாகிறாய், பேபி!” என்று அவன் ஆண் சிங்கமாகப் பதில் சொன்னான். அவள் அதை எதிர்த்துச் சொல்லவில்லை. அவன் பயந்த வரை முற்றிலும் அவனை மதிக்காமல் இருந்து விட்டு, அவனே துணிந்த பின் அவள் அவனுக்குப் பயந்து மரியாதை செய்தாள்.

வீட்டில் அவளை இறக்கிவிட்ட போது அவன், “மறந்துடாதே, ராத்திரி போன் பண்ணு” என்று கூறியவுடன், “உஷ்! மெதுவாச் சொன்னால் என்ன?” என்று சிணுங்கினாள் அவள். அப்போது அவள் முகத்தில் நாணத்தின் எல்லையைக் கண்டான் சுந்தரேசன்.

‘தேர் யூ ஆர்.’

அவளிடம் இவ்வளவு நாணம் எப்படி, எங்கே இருந்து வந்தது என்பதே அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. சில வாரங்களுக்கு முன் தன்னிடமிருந்த அவ்வளவு நாணமும் அவளிடமும், அவளிடமிருந்த அவ்வளவு துணிச்சலும் இப்போது தன்னிடமும் இடம் மாறிவிட்டதை உணர்ந்தான் அவன்.

‘பெண்ணைப் பெண்ணாக அங்கீகரித்துப் பெண்ணாகப் புரிந்து கொண்டு, பெண்ணாகவே நடத்துவதை விடப் பெரிய மரியாதையை எந்த ஆணும் ஒரு பெண்ணுக்குச் செய்துவிட முடியாது’ என்று அறிந்த போது அவன், தான் ஓர் ஆண்மகன் என்பதை நன்றாக உணர முடிந்தது. திடீரென்று அவன் பெரியவனானான். இப்போது ஒரு பெண்ணின் ‘ஸ்மார்ட்னெஸ்’ஸை மதிக்க அவனுக்கு வழி தெரிந்து விட்டது. ‘பேபீ! தேர் யூ ஆர்’ என்று அவளை அவன் சரியாகக் கண்டு பிடித்து விட்டான். அடுத்த வாரம் முதல்முதலாக அவன் மீசையும் வைத்துக் கொண்டான்.

(1974-க்கு முன்)