நீங்களும் இளமையாக வாழலாம்/இளமை வாழ்க!

14
இளமை வாழ்க!

இளமை உடலில் தங்காது, முதுமைதான் முடிவில் வரும் என்பது இயற்கை யென்றாலும், ‘இளமை வாழ்க’ என்று நான் வாழ்த்துகிறேன்.

இளமையாக இருப்பது, எப்படி என்பதுதான் நமது நோக்கமும் முயற்சியும்.

இளமையாக எந்த வயதிலும் வாழவேண்டும் என்றால், அத நிச்சயம் முடியும், அந்த சக்தி நம்மிடம் இருக்கிறது. அந்த அற்புத சக்தியை அறிவோடு பயன்படுத்தினால், அந்த அபூர்வ இளமையை நம்மிடமே தங்கவைத்துக் கொள்ள முடியும். அவற்றை இனி காண்போம்!

1. நம்மிடம் வருகின்ற முதுமையை நாம் முதலில் வரவேற்கும் மன பக்குவத்தைப் பெறவேண்டும். ‘முதுமையே வருக’ என்ற நமது முனைப்புடன் கூடிய வரவேற்பு, அதனை வாயிற்படியிலேயே நிற்க வைத்துவிடும். வந்தால் வரட்டும் என்று வரவேற்று, அதனை பாந்தமுடன் அமர்த்தி விட்டு, நமது பக்குவமான செயல்களால் அதன் ஆற்றலை அடக்கிவிட வேண்டும். அந்த கலையைத்தான் இதுவரை எழுதி வந்திருக்கிறேன்.

2. முதுமையில் பல பின் விளைவுகள் ஏற்படலாம். நோய்கள் முற்றுகையிடலாம். வலிகளும் வேதனைகளும் ஏற்படலாம் அவற்றிலிருந்து அழகாக விடுபட்டு, ஏற்பட்டிருக்கும் கரடு முரடான இடைவெளியை, எச்சரிக்கையுடன் நிரப்பிவிட்டால் முதுமையின் முதுகை நாம் ஒடித்து விடலாம். ஆகவே, முதுமையின் முரட்டுப் பிடிக்குள் அடங்காமல், நாம் திடமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

3. நோய்வந்தால் அதனைத் தீர்த்துவிட நாம் முயல்வதில்லையா! அது போல் தான் முதுமையும், நாம் முதுமை எனும் நோய்க்குள்ளே பத்திரம், மருந்து கடைபிடித்தால், பத்திரமாகவே இளமை இருக்கும். முதுமையும் கழிந்து போகும்.

4. நமது நலமான உடலைக் கண்டாலே, முதுமை முன் வராமல் திகைத்து நின்று விடும். சோம்பேறிகளையும், சொகுசுக்காரர்களையும், நோயாளிகளையும், சோற்று விரும்பிகளையும் முதுமை எளிதாகப் பிடித்துக் கொள்ளும். ஓடியாடி உழைத்துப் பாருங்கள். உற்சாகமுடன் நலமான வாழ்வு வாழுங்கள். முதுமை வந்து மூடுமா என்ன?

5. உண்ணும் உணவும், குடிக்கும் பானமும் உடலுக்கு இழந்த சக்தியை மீட்டுத் தரும் அளவுதான் அமைந்திட வேண்டுமே தவிர, உடலுக்கு அதிக எடையை ஊட்டுவனவாக அமைந்து விடக் கூடாது. தினம் உண்பதில் தீவிர கவனம் செலுத்துவது போலவே, தேகத்திற்குத் தரும் உழைப்பிலும், தேகப் பயிற்சியிலும் கவனம் செலுத்திட வேண்டும்.

6. உடலுக்கு மட்டுந்தான் அறிவுரையா என்றால் அல்ல. உள்ளத்திற்கும்தான். உள்ளம்தான் உடலைக் கட்டிக் காப்பாற்றுகிறது உரமேற்றுகிறது.

எரிகிற விளக்குக்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் திரியும் எரிந்து விளக்கே வீணாகிப் போய்விடும். அதுபோலவே, திடமான உடல்பெற, திகைத்துப் போகாத உள்ள பலம் வேண்டும்.

மனோபலத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் வாழ்வில் பலம், நலம், வளம் எல்லாமே வந்துசேரும்.

இறுதியாக ஒன்று.

இளமையில் புகழ் பெற்றவர்கள் எண்ணிக்கையில் சிலர் தாம்.

முதுமையில் புகழ் பெற்றவர்களே அதிகம் அதிகம். அவர்கள் வயதால் தோற்றத்தால் கொஞ்சம் வாடிப்போனது போல் தோன்றினாலும், இளமை உணர்வில் துள்ளும் இளைஞராகவே வாழ்ந்தவர்கள். அதனால்தான், அவர்களால் எதையும் சாதிக்க முடிந்தது. உலகத்திற்குப் போதிக்க முடிந்தது.

நல்ல இலட்சியவாதிகள் என்றுமே இளமையோடுதான் இருப்பார்கள். சிறப்பார்கள்.

நீங்களும் நல்ல இலட்சியத்துடன் இருந்து, உழைத்துப் பாருங்கள். உங்கள் இளமை உங்களை விட்டுப் பிரியவே பிரியாது.

ஆகவே, இலட்சிய வாழ்வு வாழுங்கள், இளமையாக வாழுங்கள் என்று உங்களின் எதிர் கால இனிய இளமையான வாழ்வுக்கு மனப் பூர்வமாக வாழ்த்துகிறேன்.