நீங்களும் இளமையாக வாழலாம்/உடற்பயிற்சியே உதவும்

13
உடற்பயிற்சியே உதவும்!

முதுமையின் முரட்டுப் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள முன்வந்து உதவுவது உடற்பயிற்சியேயாகும்.

உடற்பயிற்சியின் உன்னத உதவியை ஒரு சிறிது நேரம் உணர்ந்து பார்த்தால், நமக்கு உண்மை நிலை புரிந்து விடும்.

உடற்பயிற்சி என்பது உடலுக்கு ஆதாரத் தேவையாகும்.

மனித உடல் என்பது பயன்படுவதற்காகப் படைக்கப்பட்டதாகும். அது உழைத்து உருவாகி, உழைத்து மெருகேறி, உயர்ந்த சாதனைகளை ஆற்றுகின்ற மகத்துவத்தைப் பெற்றுக் கொண்டிருப்பதாகும்.

உடலுக்கு உழைப்பைத் தராமல் ஏமாற்றி விட்டால், அது அவரையே அவர் ஏமாற்றிக் கொண்டதாக அர்த்தம்.

பயன் படுத்தப்படாத இரும்பு பாழடைந்து விடுவதுபோல, பயன்படுத்தப்படாத (உழைக்காத) உடலும் பாதகமடைந்து போகிறது.

வளர்ச்சியடைவதற்குப் பதிலாகத் தளர்ச்சியடைகிறது. மலர்ச்சிக்குப் பதிலாக மங்கிப்போகிறது.

உழைப்பு வாழ்வுக்கு உதவுகிறது என்றால், உடற்பயிற்சி உடலுக்கு உதவுகிறது.

உடற்பயிற்சியைத் தவிர்த்து விடுவதன் காரணமாக, ஒருவர் தனது உடல் சிறப்பாகப் பணியாற்றும் தகுதியிலிருந்து தன்னையே சீரழித்துக் கொள்கிறார்.

ஒருவரின் சோம்பேறித்தனமான உடல் 100க்கு 27 சதவிகிதம்தான் பயன்படுகிறது. மிகவும் சொற்பமான திறனையே வெளிப்படுத்துகிறது.

அதே மனிதர், ஆர்வத்துடன் உடற்பயிற்சியைச் செய்யத் தொடங்கும் பொழுது 65 சதவிகிதம் திறமையாளராக செயல்படுகிறார் என்று ஆராய்ச்சி அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட இன்பகரமான உடற்பயிற்சி, உடலை சாதனைக்குத் தயாராக்குவதுடன், இளமையைக் கட்டிக் காக்கவும் முதுமையை விரட்டி அடிக்கவும் உதவுகிறது. ஒத்துழைக்கிறது.


குளத்திலே பாசி நிறைந்து கிடக்கிறது. அதில் குளிக்கப் போகின்ற ஒருவர், கரையோரத்தில் நின்று பாசியைக் கையால் தள்ளி ஒதுக்கி விட்டு, தனது காரியத்தை சாதித்துக் கொள்கிறார்.

தள்ளி விடுவதனாலேயே பாசி ஒதுங்கித் தூரமாகப் போய்விடாது. மீண்டும் நீரலையோடு வந்து கொண்டு தான் இருக்கும். நாம் தள்ளிக் கொண்டுதான் இருக்க வேண்டும். பாசியைத் தள்ளும் வரை அவருக்கு இடம் கிடைக்கிறது. நிறுத்திவிடும்போது, பாசி வந்து இடத்தை மூடிக்கொள்கிறது.

இந்த முதுமையும் களத்துப் பாசி போல்தான்.

உடற்பயிற்சியை செய்துகொண்டிருக்கும் வரை, பாசியை ஒதுக்கித் தள்ளுவதுபோல, முதுமையை முட்டவிடாமல் காப்பாற்றிக்கொள்கிறோம்.

உடற்பயிற்சியை விட்டுவிட்டால், முதுமை வேகமாக வந்து மூடிக்கொள்கிறது. இதுதான் இளமையாக இருப்பதன் ரகசியமாகும்.

உடற்பயிற்சி செய்வதால் ஒருவரது பணியில் தேர்ச்சி கிடைக்கிறது. ஓய்வுநேரம் களைப்பில்லாத உல்லாசமாக அமைகிறது. உங்கள் தேக சக்தியில் 'தேஜஸ்' மிளிர்கிறது.

இதனால் நொறுக்கவரும் நோய்கள் நெருங்கப் பயந்து ஓடி ஒளிந்து கொள்கின்றன. இதனால் உறுப்புக்கள் பாதிப்படையாமல் பக்குவமாக உழைத்து, தளர்ச்சியடையாமல் மலர்ச்சிகரமாகப் பணியாற்றுகின்றன.

சுறுசுறுப்பு செயலிலும், பளபளப்பு உடலிலும் ஏறுவதால், முதுமை கொஞ்சம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இதுதான் உடற்பயிற்சியின் உண்மையான உபயோகமாகும். ரகசியமுமாகும்.

உடற்பயிற்சி என்ன செய்கிறது?

தொடர்ந்து செய்து வருகிற உடற்பயிற்சிகளால் நரம்பு மண்டலம் வலிமை பெறுகிறது செயல்களின் வேகம், உறுப்புகளின் ஒத்துழைப்பு, சீரான இயக்கம் சிறப்பான நடைமுறை விருத்தியடைகிறது. உடலின் படபடப்பும் நிதானமின்மையும் குறைகிறது.

இதயத்தின் ஆற்றல் பெருகுகிறது. இரத்தத்தை அதிகமாக அதேசமயத்தில் இலகுவாக இறைக்கின்ற சக்தியை இதயம் பெற்றுக் கொள்கிறது. நாடி துடிப்பின் எண்ணிக்கை குறைய, இரத்த ஓட்டம் செழிப்படைகிறது.

நுரையீரலின் காற்றுக் கொள்ளளவு மிகுதியாகிறது. அதனால் இரத்த ஓட்டம் விரைவு பெறுகிறது. உடலின் திறன்கள் அதிகமாகின்றன.

தசைகளுக்குள்ளே இரத்த ஓட்டம் தாராளமாக சென்று வருவதால், தசைகள் உறுதியும் வலிமையும் அடைகின்றன. உடலின் சக்தி, உடலின் வலிமை உடலின் வேலை செய்யும் அதிக நேர ஆற்றல் எல்லாமே விருத்தியடைகின்றது. எல்லாத் தசைகளும் தங்குதடையில்லாமல் உயிர்க் காற்றைப் பெறுவதால், தளர்ச்சியின்மை இல்லாமல் போகிறது.

எலும்புகளும், தசைநார்களும் வலிமையடைவதால், உடலுக்குத் தெம்பும் திறனும் அதிகமாகிறது. மூட்டுக்களில் உள்ள திசுக்கள் கட்டுக்கோப்பான தன்மையில் செயல்பட்டு உறுதியடைகின்றன.

உடலிலே கொழுப்புகள் கூடுகட்டி மேடுதட்டிப் போகும் செயல்கள் குறைகின்றன. ஆமாம்! உடற்பயிற்சியால் கொழுப்பு கரைகின்றது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைகிறது.

இப்படியாக உடலுக்கு உயர்ந்த தோற்றத்தையும், உன்னதமான ஏற்றத்தையும் உடற்பயிற்சிகள் அளிக்கின்றன. இவைகள் யாருக்கு எப்படி உதவுகின்றன தெரியுமா?

யாருக்கு? எப்படி?

இளமையாக இருப்பவர்களுக்கு, இன்னும் இளமைப் பொலிவையும், தெளிவையும், மிகுந்த வலிமையையும் உடற்பயிற்சி வழங்குகிறது.

நடுத்தர வயதினருக்கோ உடலின் எழுச்சியை மீண்டும் கொண்டு வந்துகொடுக்கிறது. தளர்வில்லாத நடை, நிமிர்ந்து நிற்கின்ற தோற்றம், நெகிழ்ந்து மயங்காத நெஞ்சுரம், நிலையுணர்ந்து போராடும் உடலாற்றல் எல்லாவற்றையும் நடுத்தர வயதினருக்கு நல்கி, அவர்களை மீண்டும் இளமையாளராக மாற்றுகிறது.

முதுமை வந்துவிட்டது என எண்ணுவோருக்கு உடற்பயிற்சி, மனோவலிமையை கொடுக்கும் மாமருந்தாகப் பயன்படுகிறது.

உடலில் ஏற்படுகின்ற வலிகளைப் போக்குகிறது. மூட்டுத்தசைகளின் நரம்புகளின் விரைப்புத் தன்மையை மாற்றுகிறது. மனசோர்வினை போக்கி, இதமான சுகத்தினை அளிக்கிறது.

‘எங்களுக்கும் தேக சக்தி குறையவில்லை. இளமை வேகம் இன்னும் மாறவில்லை. சமுதாயத்தில் நாங்களும் சகல சக்தி படைத்தவர்கள்தான்’ என்ற நம்பிக்கையை உடற்பயிற்சி ஊட்டுகிறது.

ஆகவே, உடல் உறுப்புக்களை சீர்படுத்தி செழுமைப்படுத்த உணவும், செழுமையான உடல் பகுதிகளை மீண்டும் வலிமையுடையதாக்க உடற்பயிற்சியும், இவற்றிற்கும் மேலே மனப்பண்பாடும் தான் ஒருவரை என்றும் இளமையாக இருக்கச் செய்கிறது!

அப்படிப்பட்ட அற்புதமான ஆற்றல் படைத்த உடற்பயிற்சி சிலவற்றை இனி காண்போம்.

உடற்பயிற்சி செய்வதற்கு முன், உங்களது மருத்துவரை அணுகி, உடல் நிலை பற்றிக்கூறி, அவரது ஆலோசனையின் படி செய்வது சாலச் சிறந்த முறையாகும்.

வயதான காலத்தில் உடற்பயிற்சியா என்று நீங்கள் வினா எழுப்ப வேண்டாம். வயதான காலத்தில், சாப்பாட்டை யாரும் நிறுத்தி விடுவது இல்லை. கொஞ்சம் குறைத்துக் கொள்வார்கள். அதுபோல், தான் உடற்பயிற்சியும்.

உடற்பயிற்சி செய்யும் நேரத்தையும், உடற்பயிற்சிகளின் எண்ணிக்கை அளவையும் கொஞ்சம் குறைத்துக் கொண்டால் போதும்.

இளமையாக இருப்பவர்கள் உடலழகுப் பயிற்சி முறைகள், அல்லது எடைப் பயிற்சி முறைகளைக் கை கொள்ளலாம்.

நடுத்தர வயதினர் விரும்பினால் ஆசனப் பயிற்சிகளைச் செய்யலாம். தொடரலாம்.

இன்னும் சற்று வயதானவர்கள், வேகமாக நடக்கும் நடைப்பயிற்சியைத் தொடரலாம். அதாவது மூச்சு வேகமாக வாங்குவதுபோல், நாடித் துடிப்பு கொஞ்சம் அதிகமாவது போல் நடப்பது தான் நடைப்பயிற்சியாகும். காலை அல்லது மாலை, வாய்ப்புள்ள நேரத்தில் இந்த நடையை மேற்கொள்ளலாம்.

உடலில் இதயநோய் அல்லது மற்ற கடுமையான நோய் ஏதும் இல்லாதிருந்தால், இருந்தாலும் மருத்துவர் அனுமதி அளித்தால், வயதானவர்கள் மெது ஓட்டத்தின் போது மெதுவாக நடக்கலாம், வேகமாக நடக்கலாம், மெதுவாக ஓடலாம், முடியவில்லை என்றால் நிற்கலாம். அதன் பிறகு நடக்கலாம்.

இதில் ஒரு முக்கியமான குறிப்பு என்னவென்றால், ஒரு குறிப்பிட்டத் தூரம் சென்றடைய வேண்டும். அந்தத் தூரத்தைக் கொஞ்சங் கொஞ்சமாக நீட்டித்துக் கொண்டு வருவது என்பது நல்ல உடல் வலிமையை அளிக்கும்.

உடற்பயிற்சிகள் பற்றி எழுதப் புகுந்தால் பக்கங்கள் அதிகமாகும். ஆகவே, நான் எழுதியுள்ள ‘நீங்களும் உடலழகு பெறலாம், உடலழகுப் பயிற்சி முறைகள், இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள், பயன்தரும் யோகாசனப் பயிற்சிகள்’ என்ற புத்தகங்களில் உள்ள பயிற்சி முறைகளைப் பின்பற்றிப் பயன் பெறுங்கள்.