நீங்களும் இளமையாக வாழலாம்/முதுமைக்குள்ளே முளைக்கும் நோய்கள்


11
முதுமைக்குள்ளே முளைக்கும் நோய்கள்!

நோயும் வாயும்

வயதாகி வருகிறது என்றாலே நோய்களும் கூடவே வருகின்றன என்றே பலர் நினைக்கிறார்கள். மற்றும் பலர் நம்புகின்றனர். அஞ்சி நடுங்குகின்றனர்.

முதுமையை நாம் நோய் என்றால், இளமையும் நோய்தான். பிஞ்சுப் பருவமும் நோய்தான். பேதைப் பருவமும் நோய்தான்.

நோய்க் கூறுகள் உடலுக்குள் உறைந்து ஒளிந்து கொண்டுதான் கிடக்கின்றன. வலிமையான உடலமைப்பும், வளமையான உறுப்புக்களும், வளையம் வரும் நோயணுக்களை விரட்டியடிக்கின்றன. இல்லையென்றாலும் அவைகளை வாலாட்ட விடாமல் ஒதுக்கித் தள்ளி வைக்கின்றன.

சரியாக உடல் நலத்தைப் பேணிக் காக்காமல், சந்தர்ப்பங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் சாகசப்பட்டு, அந்த சதிர்களுக்குள்ளே புதிர்களை எழுப்பிக் கொண்டு புதைந்து போய் நலிந்திடும் மானிடர்கள்தாம், இவ்வாறு நோய்களால் தாக்குண்டு நொறுங்கிப் போய் கிடக்கின்றனர்.

அதாவது நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தது போல, உடல் இயற்கையாக முதுமை அடைவதைக் காட்டிலும், நோய்கள் தான் முதுமை அடைவதைக் கரம்கூப்பிக் கூட்டிக் கொண்டு வந்து நிற்கின்றன.

நோயைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் Disease. அதைப் பிரித்தால் Dis+Ease என்று ஆகிறது. Ease என்றால் உடலுறுப்புக்கள் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட்டு, சகஜமான சூழ்நிலையில் செளகரியமாக பணிபுரிவது என்பது அர்த்தம்.

Disease என்றால் அதற்கு மாறுபட்ட அர்த்தமாகும். தமிழிலும் நோய் என்றால் துன்பம் என்பதுதான் பொருள். உடன் உழைக்காத உறுப்புக்களில் ஓர் உறுப்பு ஒன்று, முரண்பாடு கொண்டு போவதால் துன்பம் தோன்றுவது இயற்கை தானே.

இயற்கையாகவே வயதாகிப் போவதால், முதுமை வரும்போது கூடவே தோன்றும் அறிகுறிகளை நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம்!

நோய் மூன்று வகை

நரம்பு மண்டலம் தளர்ச்சியடையும் போது நடுக்கம் ஏற்படுகிறது. கைகள் நடுங்கத் தொடங்கி, கழுத்தும் நடுங்கி, கால்களும் தள்ளாடி இப்படி ஒரு நோய்.

ஏதாவது தசைகளைப் பயன்படுத்தி ஒரு காரியம் செய்யும்பொழுது கைகால்கள் நடுங்குவதை நாம் காணலாம். இன்னும் ஒன்று. ஏதோ ஒரு பண்டம் வாயில் இருப்பதை போன்று மெல்லுவதுபோல, வெறும் வாய் அசைந்து, தாடைகள் அசைந்து கொண்டிருக்கும் வாய் இயக்கம் முதுமைக்குரிய தோற்றம்தான்.

அடுத்தது தள்ளாட்டம் தரும் மயக்கம். இது பொதுவான பலஹீனத்தால் மட்டும் வருவதல்ல. பல காரணங்களால் வரும். பொதுவாக, ஒரு காரணத்தை மட்டும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இரைச்சலுக்குரிய மூலஸ்தலமாக நமது காது இருக்கிறது. இந்த காதின் உட்புறத்தில்தான், சம நிலை ஈர்ப்புப் பகுதி (Equilibrium) அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியில் இரைச்சல் அதிகமாகி, உடலை நிலைநிறுத்தி நேராக வைக்கின்ற சமநிலை ஈர்ப்பு பாதிக்கப்படும் போதுதான். தள்ளாட்டமும் தடுமாற்றமும் உண்டாகிறது.

இன்னும் உடலுக்குள் அதிகமாகிக் கொண்டே வருகிற இரத்த அழுத்தமும், கடினமாகிக் குறுகிப்போகின்ற மூளையின் இரத்தக் குழாய்களும் இதுபோலவே தடுமாற்றத்தை (Dizziness) ஏற்படுத்துகின்றன.

மூன்றாவது வகை நோய்த் தன்மை உறக்கமின்மையாகும். இளைஞர்களே நிறைய நேரம், நீண்ட நேரம் உறங்குகிறார்கள். முதியவர்களோ அடிக்கடி விழித்துக் கொண்டு, தூக்கம் வராமல் அல்லாடுகின்றார்கள்.

இதற்குக் காரணம், முதுமைக்குள்ளாகுபவர்கள், தங்கள் நிலைமை, உள்ளதைவிட மிகைப் படுத்திக் கொண்டு, உணர்ச்சி வசப்படுவதால்தான். ‘நமக்குப் பாதுகாப்பில்லை’ மற்றவர்களிடையே மதிப்பில்லை. ‘ஜென்மம் வீணான ஜென்மம்’ இப்படியெல்லாம் கற்பனைக் கவலைகள் எனும் காட்டுக் குதிரைகள் மீது ஏறிக் கொண்டு காடுமலை மேடு பள்ளம் சுற்றும்போது, கண்களுக்கு உறக்கம் எப்படி வரும்?

முதியவர்களுக்குத் தேவை உடல் ஓய்வு மட்டுமல்ல. முறுக்கியெடுக்கின்ற முற்றாத மனத்தை அடக்கி வைக்கின்ற மன ஓய்வும் தான்.

படுக்கப் போகுமுன், இதமான சூடுள்ள பாலை அருந்தலாம். அல்லது நல்ல வெந்நீர் குளியல் போட்டுவிட்டு வந்தால், சுகமான உறக்கம் வரும்.

ஆகவே, தூக்கமின்மையை ஒரு நோயாக வளர்த்துக் கொண்டு, இரவில் தம்மையறியாமல் நடந்து போகும் போது கொடுமையான வியாதிக் குழியில் விழுந்துவிட வேண்டாம். எனவே, நல்ல உறக்கத்தை வளர்க்கும் நல்ல பழக்கங்களை முதியவர்கள் வளர்த்துக் கொள்வது நல்ல தற்காப்பாகும்.

இவற்றை ஏன் குறிப்பிடுகிறோம். என்றால், முதியவர்களுக்கு ஏன் நோய் வருகிறது? எப்படி உண்டாகிறது? இவற்றை முறியடிக்கும் முறைகள் என்னென்ன என்றெல்லாம் அறிந்து கொண்டு ஓர் ஆரோக்கியமான வாழ்வை வாழத்தான்.

காரணம் காரியத்திற்கே

இளமையான ஒருவருக்கு முழங்காலில் மூட்டுப் பிடி (Rheumatism) மிகுந்த வலிமையோடு வருகிறது என்றால், கடுமையான உடற்பயிற்சி செய்யும் போதும், தேவையான மருந்தை உண்ணும்போது எளிதாக வலிபோய் விடுகிறது.

வயதானவருக்கு வலி வரும்போது, உடலில் வலிமையில்லாததால், உயிர்க்காற்று போதிய அளவு இழுக்கப்படாததால், சிறந்த நிவாரணம் பெற முடியாமலே தேகம் தவிக்கிறது.

உறுப்புகள் நலிவு பெறும் போது, அதற்குரியவரின் உடல் வலிமையும் உள்ள வலிமையும் தான் மிகுதியாகக் கைகொடுத்துக் காப்பாற்றுகிறது. முதியவர்கள் உடல்நிலையோ முழுவதும் பலஹீனம் நிறைந்ததாக இருப்பதால், மூட்டுகள் நெகிழுந் தன்மையை இழந்து, விறைப்பாகக் கட்டை போலாகி விடுகின்றன. அதனால்தான், வலி குறையாது. நோயும் வளர்ந்து கொண்டே போகிறது.

முதிய உடம்பில் உடலுறுப்புக்களின் ஒற்றுமையின்மை அதிகமாகிப் போவதுதான் முக்கிய காரணம் என்பதும், முளைக்கின்ற நோய்களுக்கு எதிர்ப்பு குறைந்திருப்பதாலும் நோய்கள் எளிதாகத் தங்கள் ஆளுகையை விரிவுபடுத்திக் கொண்டே போகின்றன.

நோய்களின் பட்டியல்

அதிகமாக முதிய உடம்பில் ஆதிக்கம் செலுத்தவரும் சில நோய்களின் பட்டியலைப் பாருங்கள்.

புற்றுநோய்; உடம்பில் உள்ள சிவப்பணுக்கள் குறைந்து வெள்ளை அணுக்கள் மிகுதியாகும் கொடுமை. இந்த வியாதி எந்த வயதினருக்கும் வரலாம் என்றாலும், வயதானவர்களுக்கே அதிகம் வருகிறது என்று கூறுவாரும் உண்டு.

தோலில், உதடுகளில், வாயில், நாக்கில், நுரையீரலில், வயிற்றில், மார்பகத்தில், பெண்கள் பிறப்புறுப்பில் இன்னும் பல இடங்களில் உண்டாகும் புற்றுநோய் வகைகள் பல உண்டு. எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அடுத்தது எலும்புருக்கிநோய் இளைஞர்களுக்கு இது ஏற்படும் போது, காய்ச்சல் வரும். உடல் எடைகுறையும். களைப்பு மேலிடும். இந்த அறிகுறிகளைக் கண்டுபிடித்து, சிகிச்சை செய்து எளிதில் குணப்படுத்தி விடலாம்.

ஆனால் முதுமைக் காலத்தில் விரைந்து வரும் இந்நோய், மேலே கூறிய அறிகுறிகள் அதிகமாக வெளிப்படாமல் போகும். ஆனால் அதிகமான இருமலால் இந்நோயைப் புரிந்து கொள்ளலாம். மிகுந்த கவனத்துடன் வாழ்வது நல்லதாகும்.

மூட்டுவலிகள்: (Rheumatism) மூட்டுகள் உள்ள இடமெல்லாம் வேதனை. மூட்டுகள் விறைப்படைந்து போகின்ற சோதனை, தசைகளில் தசைநார்களில் ஏற்படும் வலிகள் போன்று பல உபாதைகள். இப்படி ஏற்படுகின்ற வலியும், தசை விறைப்பும், சமயத்தில் இதயத்திற்குக் கூட இன்னலை ஏற்படுத்தி விடுவதுண்டு.

மூட்டுப் பிடிப்புகள்: (Arthritis) முதுகுப் பிடிப்பு, கழுத்துப் பிடிப்பு, தொடைத் தசைகளில் கடுமையான வலி, கால்களில் வேதனை, உள்நரம்புகளில் வீக்கம் போன்றவை முதுமைக்காலத்தில் அதிகம் வருகின்ற நோய் என்பார்கள்.

இப்படியே தொடர்ந்தால், முதுகினையும் முதுகுத் தண்டையும் பலவீனப்படுத்தி, வளையச் செய்வதால், தாக்குதலுக்குட்பட்டவர்கள் நிமிர்ந்து நிற்க முடியாமல், கூன் போட்டு வளைந்துபோய் விடுவார்கள்.

ஏற்கனவே பல நோய்கள் பற்றி நாம் எழுதி விட்டதால், முதுமைக்குள் முளைக்கும் நோய்களின் பட்டியலை இத்துடன் முடித்துக் கொள்வோம். ஓர் உண்மை நிலை இதிலிருந்து ஒரு முக்கியமான கருத்தை நாம் புரிந்து கொள்வோம்.

ஓர் உண்மை நிலை

இதிலிருந்து ஒரு முக்கியமான கருத்தை நாம் புரிந்து கொள்வோம்.

உடலில் உள்ள ஓர் உறுப்பானது, தனது அமைப்பில் மாற்றம் பெற்றால், அல்லது தொழில் தன்மையில் ஆற்றல் குறைந்தால் அல்லது மற்ற உறுப்புகளுக்கு இணையாக இதனால் உழைக்க முடியாமல் போனால், மற்றவைகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்பட்டால், அங்கேதான் நோய் ஆரம்பித்திருக்கிறது என்று அர்த்தம்.

விளைகின்ற நோய்கள் உறுப்புகளின் வீரியத்தை ஒழிக்கவே முயல்கின்றன. ஆகவே, உடலுறுப்புகளை ஒழுங்காகப் பாதுகாக்காதவர்கள்தான் முதலில் பாதிக்கப்படுகின்றனர். படுவேதனைகளுக்கும் ஆளாகின்றனர்.

ஆனால், புத்திசாலித்தனம் நிறைந்த முதியவர்கள் பலர், தங்கள் சூழ்நிலையின் சூட்சமத்தை உணர்ந்து, சுகமாக அதனைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வதால், தவறி வீழ்ந்து விடாமல் தப்பித்துக் கொள்கின்றனர்.

நோய்கள் வரவே கூடாது என்பது நமது வாதமல்ல. வருகின்ற நோய்களைத் தவிர்ப்பது எப்படி? பிறகு தேறிக் கொள்வது எப்படி? என்பதைத் தெரிந்து கொண்டவர்களே முதுமையின் கொடுமையிலிருந்து தப்பலாம்.

மேலும், இளமையை வளர்த்துக் கொண்டு மகிழலாம். முதுமையில் இளமையைக் காண்பது என்பது முடியாத ஒன்றல்ல முயன்றால் எல்லாமே முடியும்... படியும்.

அறிவுக்கும் அனுபவத்திற்கும் அகப்படாத சுக விளைவுகள் இல்லையென்றே சொல்லலாம். அந்த விளைச்சலில் முதுமையைப் போக்கலாம். இளமையைச் சேர்க்கலாம்.

நமது இலட்சியமும் இதுதானே!