நீங்களும் இளமையாக வாழலாம்/இளமையை எப்படி இழக்கிறோம்?

12
இளமையை எப்படி இழக்கிறோம்?


செல்லாத செல்கள்

ஒருவரது தேகம் தளர்கிறது என்றால். செல்களுக்கிடையே ஏற்படும் தளர்ச்சியேயாகும்.

உடலுக்கு சக்தியான உணவு, உயிர்க் காற்றின் நிறைய சுவாசம், கழிவுப் பொருட்கள் உடலிலிருந்து விரைவாக வெளியேற்றம், உடலுக்குத் தரும் ஓய்வு, உன்னதமான உழைப்பு, இவற்றை அடிப்படையாக வைத்தே உடலின் வீரியம் உணரப்படுகிறது.

ஒரே வயதினராக இரண்டு பேர்கள் இருந்தாலும், உடல் தோற்றத்தில் வித்தியாசமாகத் தோன்றுகிறார்கள். உடல் பெறும் வளர்ச்சியின் எழுச்சி வேறு வயது வேறு.

உடலின் வளமான வயது, உள்ளுறுப்புக்களின் அமைப்பு. அவற்றின் உழைப்பு இவற்றைப் பொறுத்தே எல்லாம் அமைகிறது. சில மாற்றங்கள் சிலரது உடலில் சீக்கிரம் ஏற்பட்டு, சிதைந்துவிடுகின்றன. சில தேகங்கள் சிதைவு ஏற்படாமல் தாங்கி செழித்து நிற்கின்றன.

உணவும் உழைப்பும்

சீக்கிரம் தளர்ந்து போகும் உடலுக்கு சத்துள்ள உணவு இல்லாதது மட்டும் காரணமல்ல. உழைப்பில்லாததும்தான். அதாவது உடலுறுப்புக்களை சரிவர செயலாற்றலுக்குப் பயன்படுத்தாது சோம்பிக் கிடப்பதுதான்.

உழையாத உள்ளுறுப்புக்கள் ஒரு பக்கம் தேய, வெளிப்புறத் தாக்குதல்களாக பல்வேறு விதமான நோய்கள், காயங்கள், உடலுக்கு ஏற்படும். எரிச்சல் போன்ற சூழ்நிலைகள் மறு பக்கத்துத் தாக்குதல்களாகப் பாய, உடல் தளர்ச்சியுறுகிறது. மலர்ச்சி கெடுகிறது.

அப்படிப்பட்டவர்களுக்கு வயதுத் தோற்றம் அதிகமாகத் தெரிவது போலவே, அகால மரணமும் எதிர்பார்க்காத நேரத்தில் ஏற்பட்டு விடுகிறது. முன்னாட்களில் இயற்கையோடு போராடிப் போராடி, மனிதர்கள் சுகமான வாழ்வை வாழக் கற்றுக் கொண்டார்கள்.

அழகான இல்லங்கள், பணியாற்றத் தொழிலகங்கள், பணியாற்ற வரைமுறைகள், உழைப்புக்குப் பிறகு வேண்டப்படும் ஓய்வு முறைகள், உறக்க நெறிகள், உடலைக் காக்கும் உணவு முறைகள் எல்லாவற்றிலும் நிறைவான நுணுக்கங்களைப் பெற்று நேர்த்தியான வாழ்க்கை வழிகளில் வாழ மக்கள் வகுத்துக் கொண்டார்கள்.

பயங்கரக் கொள்ளை நோய்களான காலரா, பிளேக், அம்மை, நச்சுக்காய்ச்சல், எலும்புருக்கி நோய் போன்ற நோய்களைப் புறமுதுகிட்டு ஓட வெற்றிகொண்டார்கள். அதன் பயனாக, மனிதர்கள் இளமைக் காலத்தில் இறப்பது தடுக்கப்பட்டது. அதிக நாள் உயிர் வாழும் வாய்ப்பு நீட்டிக்கப்பட்டது.

இந்தியர்கள் இறக்கும் வயது 30 அல்லது 35 என்று இருந்த நிலைமை மாறி, இப்பொழுது 60க்கும் மேலாக உயர்ந்து விட்டிருக்கிறது. இன்று 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உலகில் 58 கோடிக்கு மேல் இருக்கிறார்கள் என்றும் கணக்கெடுத்துக் காட்டியிருக்கின்றார்கள்.

மனிதர்கள் வாழும் ஆண்டு நீண்டு கொண்டுபோனது உண்மை தான். ஆனால் மனிதர்கள் புரியாத தெரியாத புதுப்புது நோய்களால், தாக்குண்டு இறந்து போகக் கூடிய நிலைமை சமுதாயத்தில் நிறைய ஏற்பட்டு விட்டிருக்கிறது என்பதும் கசப்பான உண்மை தான்.

அதாவது உடலுக்கு உள்ளேயே உறுப்புக்கள் பாதிக்கப்பட, செயல்பட முடியாத இடர்ப்பாடு, இப்படியாக உடல் நாளுக்கு நாள் நலிந்து மெலிந்து மறைந்திடும் கொடுமை உருவாகியிருக்கிறது.

இரத்தக் குழாய்கள் கடினத்தன்மை அடைதல், இதயக்குழாய்கள் தடித்துப்போதல், நரம்புகள் நலிவடைந்து போதல், பல உறுப்புக்களில் புற்றுநோய் தாக்குதல் இப்படியாக நாகரிக மனிதர்களின் உடலை முதுமைப்படுத்தி, நிதமும் வதைத்துக் கொல்கின்றன.

இனி, முதுமையானது உடலை எப்படியெல்லாம் முற்றுகையிட்டு வளைத்து வெற்றி பெறுகிறது என்பதைக் கவனிப்போம்.

முதுமை உடலின் வெளிப்புறத்தைத் தாக்கி, உட்புறத்தையும் மாற்றியமைக்கிறது எப்படி என்றால் இப்படித்தான்.

வெளிப்புற மாற்றங்கள்:

பெண்களுக்கு 16 வயது முதல் 18 வயது வரையிலும், ஆண்களுக்கு 18 வயது முதல் 20 வயது வரையிலும் வளர்ச்சி பூரணத்துவம் பெற்றுக் கொள்கிறது. முதுமையிலோ உயரத்தின் அளவு குறைகிறது. தொங்கும் கன்னத்து சதைகள், ஒடுங்கிப் போகவும் செய்கின்றன.

முதுகு வளைந்து கூன் விழுந்து போகிறது.

மார்பு கூடுகட்டிக் கொள்கிறது மூட்டுகள் விறைப்புத் தன்மை அடைகின்றன.

தோல் சுருங்கி வரி வரியாக வளையம் கொள்கிறது.

முடி விழுந்து வழுக்கையாகிறது. இருந்தால் நரைத்துப் போகிறது.

விழியில் உள்ள லென்ஸ் விறைப்புத் தன்மை பெற்று, பார்வையின் நுண்மையைப் பறித்து விடுகிறது.

காதுகளும் மூக்கும் தமது நிலையான வடிவத்திலிருந்து மாறி, வளர்ந்து அவலமாகக் காட்சியளிக்கின்றன.

தலையின் அளவும் விரிவடைந்து விடுகிறது.

சாதாரணமாக நோய் தாக்கினாலும் அகப்பட்டுக் கொள்ளும் அசட்டு நிலைக்குத் தேகம் வந்துவிடுகிறது.

நடுத்தர வயது வரை உடல் எடை ஏறிக்கொண்டே போய், 50 அல்லது 55 வயதுக்கு மேல் எடை குறைந்து வரத் தொடங்குகிறது.

உட்புறமாற்றங்கள்:

பாதிக்கப்படும் உட்புற முக்கிய உறுப்புக்கள் 1.நுரையீரல்கள், 2. இதயமும் இரத்த ஓட்டமும்.

இதனை கொஞ்சம் விஞ்ஞானப் பூர்வமான விளக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

1. சுவாசமும், சுவாசப்பைகளும்

சுவாசம் இழுப்பதும் வெளிவிடுவதும் தான். மனிதர்க்கு முக்கியமான செயலாகும். இந்த சுவாச அவயவங்களில் தான் பிராணவாயு உடல் முழுதும் போய்ச்சேருகிறது. உடலிலுள்ள திசுக்களுக்கு பிராணவாயு சேர்ந்துவிட, அங்கிருந்து கார்பன்டை ஆக்சைடு எனும் கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு நுரையீரலுக்கு வர, அங்கிருந்து மூச்சு விடுவதன் மூலம் கெட்டக்காற்று வெளியேற்றப்படுகிறது.

வெளிக் காற்றிலிருந்து பிராணவாயுவை எடுத்துக் கொள்வது சாதாரணமாக 21 சதவீதம் (பிராணவாயு) என அமைகிறது. இது ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. அதாவது, வெளிக் காற்றினை உள்ளுக்கு எவ்வளவு இழுக்கிறோமோ, அவ்வளவு சதவிகிதம் பிராண வாயுவை அதிகமாகவே பெறமுடிகிறது.

நுரையீரல் விரிவடைவதற்கும், மீண்டும் சுருங்கி வருவதற்கும் உதரவிதானமும் (Diaphragm) அதற்கும் மேற்புறம் அமைந்துள்ள விலா எலும்புகளும் (Ribs) அவற்றைச் சார்ந்த தசைகளுமே காரணமாகவும் அடிப்படை ஆதாரமாகவும் விளங்குகின்றன.

ஒருவர் உடற்பயிற்சி செய்யும் பொழுது, மார்புப்பகுதி விரியும்போது, நுரையீரலுக்குள் நிறைய காற்று உள்ளே புக நேரிடுகிறது. ஏனெனில் நுரையீரலில் காற்று புகப் புக, நுரையீரல் விரிந்து கொண்டு ஏற்கும் அளவுக்கு (மார்பு விரிவதால்) இடம் கிடைக்கிறது.

வெளிப்புற அழுத்தத்தின் விளைவாக, மூக்கிற்குள் காற்று நிறையப் புகுகிறது. பிறகு மூச்சை வெளியேவிட நுரையீரல் மார்புத் தசைகள் போன்றவை உட்புறமாக அழுத்தித்தான் வெளியே அனுப்புகிறது.

அதாவது உட்புற சுவாசம் வெளிப்புற அழுத்தத்தால் நடக்கிறது. வெளிவிடும் மூச்சோ உட்புறத் தசைகள் வலிவோடு இயங்கும்போது நடக்கிறது. இது, உடலானது இயக்கத்தில் இருக்கும்பொழுது நடைபெறக்கூடிய இயல்பான காரியமாகும்.

ஒரு மனிதன் ஓய்வு எடுக்கும்பொழுது அல்லது உறங்கும் பொழுது, மூச்சு இழுப்பதும் மூச்சு விடுவதும் உதரவிதானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சீராக நடைபெறுகிறது. இவ்வாறு பொதுவான மூச்சிழுப்பும் வெளிவிடுவதும் 1 நிமிடத்திற்கு 4 முதல் 20 வரை இருக்கும் என்றும், அது சராசரியாக 17 முறை இருக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கின்றனர்.

ஆக, ஓய்வு நேரத்தில் எல்லா மனிதர்களும் சராசரியாக ஒரு அளவுதான் சுவாசம் மேற்கொள்வதில் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஆனால், மனிதர்கள் மும்முரமான செயல்களில் ஈடுபட்டிருக்கும்பொழுது, அதிகமான மூச்சிழுப்பிலும் வெளிவிடுவதிலும் தம்மையறியாமலே செயல்படுகின்றனர். அது இரண்டு நிலைப்படுகிறது.

ஒன்று: நுரையீரல் அதிகமாக விரிந்து அதிகமான பிராண வாயுவைப் பெறுவதற்கு மார்பின் விலா எலும்புகள் மேற்புறமாக விரிந்து கொடுப்பது.

இரண்டு: அந்த விலா எலும்புத் தசைகள் மீண்டும் உட்புறமாக சுருங்கிவரச் செய்வது.

ஒருவர் உடற் பயிற்சி செய்பவராக இருந்தால், அவருடைய உதரவிதானம், விலா எலும்புக் கூடு மற்றும் தசைகள் அடிக்கடி இயங்கி வலிமை பெறுவதுடன், அதிகமான பிராண வாயுவைப் பெற்றிடும் நுரையிரலுக்காக விரியும் ஆற்றலைப் பெற்றுக்கொள்கின்றன.

அதிகமான வெளிக்காற்று உள்ளே சுவாசிக்கப்படும் பொழுது, அதிகமான பிராண வாயுவை அவற்றிலிருந்து பெற்றுக் கொள்ள முடிகிறது. அதிகமான காற்றை வெளியேற்றும் பொழுது, கொஞ்சம் குறைவான கரியமில வாயுவே உள் தங்க நேரிடுகிறது.

அப்படி ஆற்றலுடன் விளங்கச் செய்வதுதான் உடற்பயிற்சி செய்பவர்கள் பெறுகின்ற தனித் தன்மையாகும்.

ஒருவருக்கு வயதாகும் பொழுது, நுரையீரலில் காற்றைப் பெறுகின்ற ஆற்றல் குறைகிறது. காரணம் நுரையீரல் அதிகமாக செயல்படாமல் போவதுதான் அதற்குக் காரணம். அந்த மனிதர்கள் உழைப்பில் அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடாததுதான் முக்கிய காரணமாகும்.

நல்ல உழைப்பில் அல்லது பயிற்சியில் ஈடுபடுபவர்களின் நுரையீரல் நன்கு செயல்பட உதவுகின்றன. கொஞ்சங் கொஞ்சமாக அதன் செயல் வேகம் குறைவதை இடையில் தடுத்து நிறுத்த, அவரது உடற்பயிற்சியானது உதவுகின்றது.

சுறுசுறுப்பான, நிறைய சுவாசம் பெறுகின்ற நுரையீரல், நிறைய ஆற்றலைக் கட்டிக் காத்துக் கொள்கிறது என்பதுதான் இளமையின் ரகசியமாகும்.

சரியான வேலையின்மை, சுத்தமில்லாத காற்றை சுவாசித்தல், நுரையீரல் பாதிப்பு, மற்றும் நோயால் தாக்குண்டு கிடத்தல் போன்ற காரணங்களால், நுரையீரலின் வேலைகள் சரிவர நடைபெறாமல் போவதால், எதிர்பார்த்ததற்கு சீக்கிரமாகவே, முதுமை வந்து உடலை மூடிக்கொள்கிறது.

நுரையீரலைப் பாதிக்கும் நோய்களில் முக்கியமானவை எம்பிசீமா (emphysema); பிரான்கிட்ஸ் (Bronciaits) என்பனவாகும்.

எம்பிசீமா நோய் வந்தால் நுரையீரல் காற்றை பெறுவதையும் வெளியிடுவதையும் தடைசெய்கிறது. நுரையீரல் நீண்டு, தடித்து, புண்ணாகிப் போவதால் சுவாசம் சரிவர நடைபெற முடியாமல் போகிறது.

நுரையீரல் குழாய்கள் பிரான்கிட்ஸ் நோயால் பாதிக்கப்படுவதால், காற்றைப் பரிமாற்றம் செய்யும் வேலையை நுரையீரல் செய்ய முடியாமல் தடுத்து விடுகிறது.

இதனால் இளமை பறிபோய் விடுகிறது.

காற்றை சுவாசிக்கும் ஆற்றல் குறைவதால் தான் கட்டிளமை கொஞ்சங் கொஞ்சமாக கரைந்து போகின்ற விந்தையை, அறிந்து கொண்டோம்.

காற்றினை சுவாசித்த பிறகு ஏற்படுகின்ற மாற்றங்கள் உடலுறுப்புகளை ஏமாற்றமடையச் செய்து விடுவதால்தான், மீதி இழப்பும் மிகுந்து தொடர்கிறது. அது எப்படி என்பதை இனி வரும் பகுதியில் விளக்கமாகக் காண்போம்.

காற்றும் பரிமாற்றமும்

நுரையீரலில் உள்ள காற்றான பிராண வாயுவானது, நேராகப் போய் இரத்த ஓட்டத்தில் கலந்து கொள்கிறது.

நுரையீரலுக்குள்ளே ‘ஆல்வியாலி’ (Alveoli) என்று அழைக்கப்படும் சிறு சிறு காற்றுப் பைகள், மில்லியன்கள் கணக்கில் இருக்கின்றன. அதைச் சுற்றிலும் இரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த ஆல்வியாவிலிருந்து வெளிப்படுகிற அழுத்தத்தினால், குறைந்த அழுத்தமுள்ள சிவப்பு இரத்த செல்களுக்குள் உயிர்க்காற்று புகுத்தப்படுகிறது.

இதற்குள்ளே இரத்தத்தைப் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வோம்.

இரத்தம் என்பது திரவ ரூபத்தில் உள்ள திசுவாகும். உடம்பின் மொத்த எடையில் 1/12 பாகம் இரத்தத்தின் எடையாகும்.

இரத்தத்தில் 55 சதவிகிதம் திரவமாக உள்ள திரவத்திற்கு பிளாஸ்மா (Plasma) என்று பெயர். மற்ற 45 சதவிகிதத்தில் பல விதமான அணுக்கள் அடங்கியுள்ளன.

பிளாஸ்மா என்பது மஞ்சள் நிறமுள்ள நீர்ப்பகுதியாகும். காரத்தன்மையுடைய இந்த நீரில், தண்ணீர் 90 சதவிகிதமும் புரோட்டின் 8 சதவிகிதமும், உப்புகள், உணவு சத்துக்கள், நைட்ரோ ஜீனஸ் எனும் கரைக்கப்பட்ட வாயுக்கள், ஹார்மோன்கள், நோய் எதிர்ப்பு அணுக்கள், என்சைம் மற்றும் வைட்டமின்கள் மீதி 2 சதவிகிதத்திலும் உள்ளன.

இந்த இரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் என்று இரு பிரிவுகள் உள்ளன.

ஒரு கியூபிக் மில்லி மீட்டர் அளவுள்ள இரத்தத்தில் 5.5 மில்லியன் சிவப்பு அணுக்களிலேதான் ஹீமோகுளோபின் என்பது உள்ளது.

உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால்தான், இந்தக் காற்றினைக் கவர்ந்திழுக்கும் சக்தி படைத்த ஹீமோகுளோபினும் அதிகமாக இருக்கும்.

நுரையீரல் எவ்வளவு தான் அதிகமாகக் காற்றை இழுத்தாலும்; உடல் நலமில்லாதவர்கள் அதிகமாகக் காற்றினைப் பெற்றுக் கொள்ள முடியாததற்குக் காரணம், அவர்களுக்கு அதிகமான சிவப்பு இரத்த அணுக்களும் (ஹீமோகுளோபினும்) குறைவாக இருந்து கொண்டிருப்பதால் தான்.

உடல் வளமானவர்களுக்கு அதிக ஹீமோகுளோபின் இருப்பதுடன் அதிகமான பிளாஸ்மாவும் இருக்கிறது. அதனால் அதிக ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு அதிகமான இரத்த ஓட்டம் இருக்கிறது என்கிறார்கள்.

இதயமானது, பிராணவாயு கலந்த இரத்தத்தை உடலெங்கும் இறைத்து விடுகிறது. கழிவுப் பொருட்களான கரியமிலவாயு போன்ற பொருட்களைத் திரட்டிக்கொண்டு வந்து, இரத்தமானது நுரையீரலுக்குள் தள்ளிவிடுகிறது.

உடற்பயிற்சி செய்து நலமுடன் இருப்பவர்கள் இதயம் ஓய்வுடனும், சக்தியுடனும் இயங்குகிறது. பலமற்றவர்களுக்கு கடுமையாக, அதிகமாக, ஓய்வின்றி இதயம் உழைக்கிறது.

அது எப்படி என்று காண்போம்.

இதயத்தின் வேலை

உடற்பயிற்சி செய்கிறவர் இதயம் 1 நிமிடத்திற்கு 60 முறை (இதயம்) துடித்து இரத்தத்தை இறைக்கிறது. ஒரு மணிக்கு அது 3600 முறையும், 24 மணி நேரமாகிய ஒரு நாளைக்கு அது 86,400 முறையும் துடித்து உழைக்கிறது.

உடற்பயிற்சி செய்யாத ஒருவரது இதயம் 1 நிமிடத்திற்கு 80 முறை துடிக்கிறது 1 மணிநேரத்திற்கு 4,800 முறையும், ஒரு நாளைக்கு 1,15,200 முறையும் துடிக்கிறது.

அதாவது, உடற்பயிற்சி செய்யாத ஒருவரது இதயம் நல்ல பயிற்சி செய்பவர் இதயத்தைவிட, ஒரு நாளைக்கு 30,000 முறை அதிகமாகத் துடிக்கிறது.

பயிற்சி செய்பவரது இதயம் குறைவாகத் துடித்து, அதிகமான இரத்தத்தை உடலுக்கு இறைக்கிறது. இதனால், உடலானது அதிக இரத்தக் குழாய்களை தசைகளுக்குள் வளர்த்துக்கொள்ள முடிகின்றன. இப்படி தசைகள் தமது செல்களுக்கு நிறைய இரத்தத்தைப் பெறுவதால், நலமாகவும் வளமாகவும் இருப்பதால்தான், வயது அதிகமானாலும் உடலை முதுமை தாக்க முடியாமற் போகிறது.

பயிற்சி செய்பவருக்கு இரத்த ஓட்டம் சீராகவும் தடையில்லாமலும் ஓடுகிறது. பயிற்சி செய்யாதவருக்குத் தடைகள் இருப்பதால், அதாவது இரத்தக் குழாய்களில் தசைகள் வளர்ந்து, இரத்தக் குழாய்களின் வழியை அடைத்துக் கொள்வதால், இரத்தம் மிகவும் திக்கித் திணறியே ஓட வேண்டியிருக்கிறது. அதனால்தான் அவர்களுக்கு இரத்த அழுத்த நோய் (Blood Pressure), உண்டாகிவிடுகிறது.

நல்ல பலத்துடன், நலத்துடன் உள்ள இதயமானது, ஓய்வுடன் கூடிய உழைப்பு (Reduced heart Rate) இரத்தக் குழாய்கள் தசைகளில் செழித்து வளர்தல் மற்றும் குறைந்த இரத்த அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம் இவற்றால் பயிற்சி செய்பவர்களை இளமையாக வாழச் செய்கிறது.

வயது ஏறினாலும் தொடர்ந்து, சீராகப் பயிற்சி செய்து வருபவர்களுக்கு இதய நோய் வர வாய்ப்பேயில்லை.

இதயத் திசுக்களுக்கு உயிரூட்டமுள்ள பிராணவாயு நிறைய வந்து கொண்டேயிருந்தால், இதயநோய் வரவே வராது.

இதயத்தைப் பாதிக்கும்படி நாம் செய்துவிட்டால், நோய் மட்டுமா ஏற்படுகிறது? நோய் வந்து நொந்துபோவதுடன், நளினமிக்க இளமையும் அல்லவா நாசமாகிப் போகிறது!

இதயத்தைப் பாழடிக்கக் கூடிய கெட்டப் பழக்கங்கள் பல உள்ளன.

உணவுப் பழக்கத்தில் தரமின்மை, பரம்பரைநோய், புகைத்தல், மது அருந்துதல், ஊளைச் சதை வந்துவிடுதல், உடற்பயிற்சியின்மை போன்ற பல காரணங்கள் இதயத்தைப் பாதிக்கின்றன.

இவை எல்லாம் இருந்தால்தான் இதயம் பாதிக்கப்படுமா என்றால் அப்படி அல்ல. ஏதாவது ஒரு கெட்டப்பழக்கம் அளவுக்கு மீறிப்போகும்போது கூட, அந்த அவல நிலை ஏற்படலாம்.

ஒருவர் அதிகமாக சாப்பிடுவதால் அல்லது அதிகமாகப் புகைப்பதால் குடிப்பதால் அல்லது அதிகமாகக் கவலைப்படுவதால் அல்லது உடற்பயிற்சியே இல்லாமல் இருப்பதால் போன்ற ஏதாவது ஒன்று இதயத்தின் இனிய வேலையை எதிர்பார்ப்பதற்கு மேலாகவே பாழடித்து, வீழ்த்தி விடுகிறது.

சுவாசமும் இரத்த ஓட்டமும் தான் உடலை உயிராகக் காக்கின்றன என்பதை நாம் அறிந்து கொண்டோம்.

பழக்கங்கள் பாதிக்கும்

பழக்கங்கள் எல்லாம் சுவாசத்தை மிகுதிப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை விரைவு படுத்தவும் கூடிய வகையில் அமைவது தான் சிறந்த வாழ்க்கையைக் குறிப்பதாகும்.

ஒவ்வொரு மனிதரும் இளமையாகவும் இனிமையாக வாழ வேண்டும் என்றால், தடையிலா இரத்த ஓட்டத்தை மிகுதிப்படுத்திக் கொள்ளவே முயல வேண்டும்.

இரத்தக் குழாய்கள் தடித்துப்போகவும், குழாய்களுக்குள் கொழுப்புச் சத்து ஏறிக் குறுக்கிட்டு தடுக்கவும் செய்கின்ற காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு, இதயம் சுமையேறி, வேதனைக்கு ஆளாவதுதான் முடிவானதாகி விடுகிறது. பிறகு, அவர்களுக்கு நிம்மதிதான் எது?

ஆகவே, சுவாசத்தின் அளவைக் குறைப்பதும், இரத்த ஓட்டத்தின் விரைவைத்தடுப்பதும், இதயத்திற்கு வலிமையை அளிக்காமல் நலிவினைக் கொடுப்பதும், இளமையை இழக்கச் செய்யும் காரியங்களாகும் என்பதை நாம் அறிந்து கொண்டோமானால், அவற்றிற்கு ஒரே பரிகாரம், இளமையை மீட்கும் மேலான வழி உடற்பயிற்சியே என்பதையும் நாம் உணர்ந்து கொள்வதுடன், ஒத்துக் கொண்டும் செயல்பட வேண்டும்.