நீங்களும் நோயில்லாமல் வாழலாம்/இழப்பும் பழிப்பும்

4. இழப்பும் பழிப்பும்


ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே!

என்கிறார் திருமூலர்.

கும்பகர்ணன் கதையை ஏற்கனவே படித்தோம். கடுந்தவம் செய்து என்ன பயன்? கடவுளைக் கண்டு என்ன பயன்? கொண்டிருந்த தனது கருத்தை ஒழுங்காகச் சொல்லத் தெரியாமல் உளறி காரியத்தைக் கெடுத்து விட்டானே!

அதனால்தான், எந்தக் காரியத்தையும் உணர்ச்சிவசப்படாமல் செய்ய வேண்டும் என்கிறார்கள் பெரியவர்கள். குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொள்வதுபோல, தனக்கு நன்மை தருகின்ற காரியங்களையே தனக்கெதிராக, பெரும் துன்பத்தை உண்டுபண்ணி விடுமாறு, ஒருசிலர் தாங்களே செய்து கொள்கின்றார்கள்.

இந்த உண்மையைப் புரிந்துகொண்டால், துன்பமும் வராது. துயரமும் நேராது. வந்தாலும் கரைக்கு வரும் அலைபோல, வந்து மோதிவிட்டு அதுவாகவே போய் விடும். அற்பத்தனமாக ஆசைப்பட்டு, ஆவேசத்துடன் எதையும் பெற முயற்சித்தால், மனநோயை மிகுதிப்படுத்திவிட்டு, மருகி உருகி வதைப்படச் செய்து விடுமேயன்றி, வேறு ஒரு மார்க்கத்தையும் தந்துவிடாது. இதோ இன்னொரு முனிவரின் கதையைக் கேளுங்கள்!

ஒரு முனிவருக்கு மனதிலே பெரிய குறை! தவம் செய்ய வந்தவருக்குத் தேவையில்லாத குறைதான். என்றாலும் அவரும் மனிதரல்லவா? பல ஆண்டுகள் காட்டிலே தவம் செய்கிறார். விரதம் இருக்கிறார். ஆனால், மற்ற முனிவர்களைப் போல முகத்திலே தாடி, மீசை, தலையிலே ஜடாமுடி அமையவில்லையே என்பதுதான் அந்தக்குறை. வெறுமனே இருப்பதால், எல்லோரும் தன்னை வெறுக்கின்றார்கள் என்று அவராகவே நினைத்துக் கொண்டு கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறார்.

வழக்கம்போல, தவம் பலிக்கிறது. கடவுள் எதிரே தோன்றுகிறார். கடவுளிடம் வரம் கேட்கிறார். முக்கியமான மிக வல்லமையுள்ள மூன்று வரங்களைக் கடவுளிடம் பெற்றுக் கொள்கிறார். அதாவது நினைத்ததை சாதிக்கும் சக்தி படைத்த வரங்கள். அத்தகைய வரங்கள் மூன்று கிடைத்தவுடன் அவருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. அடுத்த நொடியிலே, அவர் மனதிலே மாறாக் குறையாக இருந்த மனக்குறை முன்னே வந்து ஊஞ்சல் ஆடுகிறது.

தன்னை அரித்துக் கொண்டிருந்த கவலையின் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட வேண்டும் என்ற வேகத்துடனும் வெறியுடனும் வரத்தைப் பயன்படுத்த முனைகிறார் முனிவர். தாடி, மீசை, ஜடாமுடி இதே நினைவில் இருந்ததால், அவருக்கு எப்படிக் கேட்க வேண்டும் வரத்தை என்பதும் நினைவுக்கு வரவில்லை. ‘எனக்கு முடி வேண்டும்’ என்று ஒரு வரம் கேட்கிறார். என்ன மாயம்?

அவர் மேனியெல்லாம் முடி மயம். கரடி போல ரோமக் கற்றைகள். கண், மூக்கு, வாய் எதுவுமே தெரியாமல் முகம் முழுவதும் முடியானது மண்டி விடுகிறது. முனிவருக்கு ஒன்றுமே புரியவில்லை. முடிதானே கேட்டோம். மேனி முழுவதும் வந்து விட்டதே! பார்க்க வேண்டும் என்றால் முடியை விலக்கித்தான் பார்க்க முடிகிறது. சாப்பிட வேண்டும் என்றால் முடியைத் தூக்கினால்தான் சாப்பிட முடிகிறது. என்ன செய்வது? அதனால் எரிச்சல்பட்ட முனிவர் இன்னொரு வரத்தை பிரயோகிக்கிறார். அதாவது இந்த முடி எனக்கு வேண்டவே வேண்டாம் என்று!

என்ன ஆச்சரியம்! அவர் உடலில் இருந்த முடியெல்லாம் போய் விட்டது. உடலில் முடி இல்லாமல் போனதும், உரித்த கோழிபோல, வெள்ளைப் பிசாசுபோல ஆகி விட்டார் முனிவர். தன் கோலத்தைக் கண்டதும் அவருக்கே வெட்கமாகவும் இருந்தது. வேதனையாகவும் இருந்தது.

இருந்த வரங்களில் இரண்டு போய் விட்டதே என்ற கவலைகூட அவருக்கு வரவில்லை. எப்படி கேட்டால் தான் அழகாகத் தோன்றலாம் என்று யோசிக்கத் தொடங்கினார் முனிவர். பிறகு கூறினார். மற்ற முனிவர்களுக்கு இருப்பது போல் ஜடாமுடி அமைய வேண்டும் என்கிறார். அதேபோல் ஜடாமுடி வந்ததும் அவருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஆமாம்! மலையைக் குடைந்து ஒரு எலியைப் பிடித்த மேதாவி போல மகிழ்ச்சியடைந்தாராம் அந்த முனிவர்.

இந்த முனிவரைப்போல, எத்தனையோ பேர்கள் தன்னிடமுள்ள அரிய சக்தியை, திறமையை, அறிவின் பெருமையை அனாவசியமாக வீணடித்து விடுகின்றார்கள். சிலர் யாருக்குமே பயன்படாமலேயே வீணாகியும் போய் விடுகின்றார்கள். கடைசியிலே கிடைக்கின்ற சிறு அளவு பயனை வைத்துக் கொண்டு சந்தோஷப்படவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாகி வேதனையடைகின்றார்கள். வெதும்பிப் போகின்றார்கள்.

பொய் நோய்க்குப் பல தூதுவர்கள் உண்டு. அவர்கள் எம தூதுவர்களைவிட எமகாதகர்கள். ஏய்த்துச் சிக்கலில் மாட்டி விடுவதில் பெரும் சமர்த்தர்கள். கொஞ்சம் ஏமாந்தால் போதும். குழியைத் தாங்களே வெட்டிக் கொள்ளச் செய்து, படுத்து மண்ணைப் போட்டு மூடிக் கொள்ளவும் வைத்துவிடுவார்கள்.

பொய் நோயின் பிரதம சிஷ்யனாக விளங்குவது ஆசைதான். அந்த ஆசையோ தனக்குப் பாதந்தாங்கிகளாக அவசரம், ஆத்திரம், பொறாமை, தற்பெருமை, உணர்ச்சி வசப்படுதல், போன்றவைகளை அழைத்து வந்து, மனிதர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இல்லையென்றால், இன்பமாக வாழ வேண்டிய அனைவரும் ‘ஏதோ ஒன்று வேண்டும்’ என்று எண்ணியபடியே ஏங்கித் தவித்துக் கொண்டிருப்பார்களா?

‘இல்லாத பொருளுக்கு ஏங்கும், கையில் இருந்து விட்டால் படுத்துத் தூங்கும்’ என்ற மனதின் தன்மையை படம் பிடித்துக் காட்டுகிறார் ஒரு கவிஞர். இந்த மனத்திண்மை இல்லாததால்தான், பலர் மனதுக்கு அடிமையாகி வாழ்வின் இன்பத்தையே இழந்து நோய்வாய்ப்பட்டு, நொந்து நொறுங்கிவிட்டத் தகரம் போல காட்சியளிக்கின்றனர். இல்லையென்றால். அந்த அழகு நிலையத்தின் உரிமையாளர் அப்படி ஆவாரா? அவரை அடுத்தப் பக்கத்தில் காண்போம்! வாருங்கள்!