நீங்களும் நோயில்லாமல் வாழலாம்/தவிப்பும் இழப்பும்

3. தவிப்பும் இழப்பும்

அனல் பறக்கும் வெயில் காயும் வேளை. பாலை நிலம் போன்ற வெட்டவெளிப் பகுதியில் ஒருவன் நடந்து போய்க் கொண்டிருக்கிறான். களைப்பும், இளைப்பும் அவனைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. எங்கேயாவது நிழல் இருந்தால் கொஞ்சம் உட்கார்ந்து செல்லலாம் என்ற ஆசைத் தவிப்பு அவனை ஆட்டிப்படைக்கிறது.

எதிரே ஒரு மரம் தெரிகிறது. அவன் தேகத்தில் கொஞ்சம் தெம்பு மீறிப் பாய்கிறது. தள்ளாடி நடந்து வந்து மரத்தின் நிழலில் அமர்கிறான். குளிர்ந்த தென்றல் வீசுகிறது. அவன் தேகத்தைப் பரவசப்படுத்துகிறது. அவன் தவிப்புக்குத் தகுந்த பரிசு அதுதானே! அதற்காக அவன் திருப்தியடைந்தானா! இல்லையே! அவனது ஆசை மனம் கொஞ்சம் தாலாட்டத் தொடங்குகிறது.

‘சாப்பிடுவதற்கு அறுசுவை உணவு கிடைத்தால், அதுவும் தளிர் வாழை இலையில் வைத்து விருந்தாகக் கிடைத்தால் எப்படி இருக்கும்? ஆனந்தமாக உண்டு மகிழ்வேனே’ என்று உள்ளுரத் தவிப்பு மேலிடுகிறது. யாரிடம் சொல்ல முடியும்? நினைக்கிறான். அவ்வளவுதான்.

அடுத்த நிமிடமே அவன் எதிரே அறுசுவை உணவு, இலையில் வைத்துப் பரிமாறப்பட்டிருக்கிறது. ஆவலுடன் பார்த்தான். அவசர அவசரமாக உண்டான். தென்றல் வந்து களைப்பைப் போக்கியது. உணவு வந்து பசியைப் போக்கியது. மகிழ்ந்தானா அவன்? மகிழ விட்டதா அவனது தவித்த நெஞ்சம்?

விருந்து சாப்பிட்டு விட்டு வெறுந் தரையிலா படுப்பது? நல்ல பட்டுமெத்தை போட்ட கட்டில் இருந்தால் நிம்மதியாக உறங்கலாமே என்ற ஆசை வந்தது. நினைத்தான். ஆசைத் தவிப்பு அவனை விடவில்லை. என்ன ஆச்சரியம்! மெத்தை பரப்பிய பகட்டான கட்டில் அவன் முன்னே கிடந்தது. பாய்ந்து விழுந்து படுத்தான். மெய்சுகம் அவன் மேனி முழுதும் பரவியது.

‘இதுவல்லவோ சுகம். இப்படியே வாழ்க்கை இருந்தால் எவ்வளவு சுகமாக இருக்கும்’ என்று அவன் அமைதியடைந்தானா? ஆனந்தப்பட்டானா? அதுதான் இல்லை. அவனது பேய் மனம் மேலும் தவிப்பை உண்டாக்கியது. கட்டிலும் மெத்தையும், தென்றலும் நிழலும் போதுமோ? நான்கு கன்னிப் பெண்கள் சுற்றிலும் அமர்ந்துகொண்டு கால்களைப் பிடித்துவிட்டால் அல்லவா கால்வலி போகும்? தூக்கமும் வரும் என்று நினைத்தான்!

ஆகா! அவன் நினைத்தது போலவே நான்கு அழகான பெண்கள் அவன் காலடியில், அழகான பெண்கள்தான், அமர்ந்து கால்களை மெதுவாக வருடிப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தார்கள். ‘இதுவல்லவோ பூலோக சொர்க்கம்’ என் வாழ்நாள் முழுவதும் இப்படியே கழிந்துவிட வேண்டும். என்று நினைத்தானா? அதுதான் இல்லை, சுகம் கண்ட ஆசை, சுற்றி வளைத்து பலவற்றை நினைக்கத் தொடங்கியது. அவனைத் தூண்டியது. ஆசை நோயில் வீழ்ந்தால் என்ன நடக்கும்?

‘இப்பொழுது ஒரு புலி வந்தால் என்ன நடக்கும்’ என்று அவன் மனம் எண்ணிப் பார்த்தது. அடுத்த விநாடியே ஒரு புலி வந்தது. அவனை அடித்துக் கொன்று தின்றுவிட்டுப் போய் விட்டது. பாவம்! நல்லது நினைக்கத் தெரியாத அவன் தவிப்பால், குறை வாழ்வுடன் போய் விட்டான்.

அவன் இருந்த இடமோ கேட்டதைக் கொடுக்கும். கற்பக மரம் என்பதை அவன் உணரவில்லை. ஆசைத் தவிப்பால் அனைத்தையும் இழந்ததுடன், பாவமாகத் தன்னையே பலியாக்கிக் கொண்டான்.

நமது வாழ்க்கையில் உடலும் ஒரு கற்பக மரம் போல்தான். கேட்ட இன்பங்களையெல்லாம் கொடுக்கின்ற உடல்தான். நாம்தான் கொடுக்கின்றதையெல்லாம் வைத்துக் கொண்டு அதிகமாகக் கெடுத்துக் கொள்கின்றோம்.

திடமாக இருக்கும் உடலால், மனத்தை அடக்கி வைக்க முடியும். திடமில்லாத உடலின், பலவீனத்தை வைத்து, மனம் அடிமைப்படுத்திவிடும். இது தெரியாததால்தான், தேகத்தைப் பற்றி பலர் சிரத்தைக் கொள்வதில்லை. மாறாக, அடிமையாக உடலை எண்ணி, அதனை வதைத்து, தாங்களும் வாழ்விழந்து போகின்றார்கள்.

பொய் நோயால் புகுந்துவிடும் மனத்தைக் கட்டுப்படுத்தி வாழ்வதென்பது எளிதல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். என்றாலும் நமக்குரிய சக்தியினை நாம் உணர்ந்து கொண்டு, அதற்கேற்ப நடந்து கொள்ளவேண்டும். நமக்கு என்ன வேண்டும். என்பதைத் தெரிந்தெடுப்பதில் குழப்பமோ அவசரமோ கொள்ளக்கூடாது. எதையும் நிதானமாக சிந்திக்க, நடக்க, செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும்! இல்லையென்றால் தவிப்பினால் இழப்புதான் அதிகமாகுமே தவிர குறையாது.

பல்லாண்டு காலம் கடுந்தவம் புரிந்த கும்பகர்ணன் முன்னே கடவுள் தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டாராம். சாகாத வரம் கேட்டிட வந்தவனல்லவா! என்னை யாரும் வெல்லவும் கூடாது, கொல்லவும் கூடாது என்ற குறிக்கோளின் தவிப்பிலே குளித்துக் கிடந்தவனல்லவா? தன் தவத்தை மெச்சித் தானாக வந்த இறைவனைப் பார்த்ததும், அவனது தவிப்பு மிகுதியாயிற்று, பதட்டமும், பரபரப்பும், ஆசையும் புயலாயிற்று.

நித்தமும் வாழவேண்டும் என்ற பொருளான நித்தியத்வம் வேண்டும் என்று கேட்பதற்குப் பதிலாக, நித்தமும் தூங்கிக் கிடக்கின்ற பொருளில் நித்திரைத்துவம் வேண்டும் என்று கேட்டு விட்டானாம். வரமும் வந்து விட்டது. பிறகுதான் இழப்பு தெரிந்தது, அதன்பின் தூக்கம் ஆறுமாதம், இயக்கம் ஆறுமாதம் என்று மாற்றிக் கொண்டதாகப் புராணம் கூறும்.

அப்படித்தான் தவிப்பில் திளைப்பவர்கள், இழப்பில் மாட்டிக் கொள்கின்றார்கள். அந்தநிலை வராமல் இருக்க நாம் எங்கே இருக்கிறோம்? என்ன செய்கிறோம் என்ற நினைவுடனேயே வாழ வேண்டும்.

ஒரு செயலை செய்வதற்கு முன் பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கின்ற பக்குவத்தை மனதுக்கு ஊட்டிவிட வேண்டும். அத்தகைய பண்புகள் ஒருவனை ஆனந்த வாழ்வில் வளர்த்து விடும்.

அவசரப்பட்டு எடுக்கின்ற முடிவுகள் அனைத்தையுமே கெடுத்துவிடும்.

இல்லையென்றால் வரம் பெற்ற ஒரு முனிவர் ஆத்திரத்தில் தடுமாறித் தரமிழந்து போனது போலல்லவா ஆக நேரிடும்?