நீங்களும் நோயில்லாமல் வாழலாம்/எதிரும் புதிரும்
எதிர் வருவது என்னவென்றே தெரியாத புதிர் நிலையில்தான் நமது வாழ்க்கை நாள்தோறும் நகர்ந்துகொண்டு போகிறது. நம்மையறியாமலேயே நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நம் கண்முன்னே நமக்குப் பிடிக்காத நிகழ்ச்சிகள் நடந்தாலும், அதனைதவிர்க்கவோ தடுக்கவோ முடியாமல் தடுமாறுகின்றோம்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும்பொழுது, படுகின்ற துன்ப வேதனைகள் தொடர்கதையாவதும் உண்டு. சில நேரங்களில், வாழ்க்கையே விடுகதை போல, விண்மீன்களின் வண்ண ஜாலம் போல வடிவெடுத்து வளைத்துக் கொள்வதும் உண்டு. ஆகவே, தனி மனிதன் ஒருவனின் வாழ்க்கையானது, இந்தத் தரணியில் வாழ்கின்ற எதிர் நீச்சல் சாதனைதான்.
அதனால்தான் வாழ்க்கையை வீரம் நிறைந்தது, விவேகம் செறிந்தது, விநயம் மிகுந்தது என்று கூறுகின்றார்கள். இருட்டிலே கருப்புப் பூனையைத் தேடுவதுபோன்ற தன்மையில்தான் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமைவதால், வாழ்க்கையை எதிர்பார்ப்பதும், எதிர் நோக்கி சமாளிப்பதும் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.
அவ்வாறு புதிர் நிறைந்த வாழ்க்கையை பெருமையுடன் வென்று, பேரின்ப சரித்திரத்தை ஒருவன் படைத்திட வேண்டுமென்றால், அவனுக்குத் தேவை, நலமான தேகம்தான். பணத்தை வைத்துக்கொண்டு படையைக் கூட்டி புதிர்களை வென்றுவிடலாம் என்று கனவு காண்பவர்கள் வாழ்க்கை, புயல் முன்னே பூங்கொடி போல முறிந்து வீழ்ந்து அழிகிறது.
திடமான தேகம் உள்ளவர்களால்தான், திறமாக, தைரியமாக வாழ்க்கையை சந்திக்க முடிகிறது. பிரச்சினைகளைத் தெளிவாக சிந்திக்க முடிகிறது.
திடமான தேகம் தான் வாழ்க்கை மாளிகையின் அஸ்திவாரமாகும். அதன்மேல்தான் வாழ்க்கையின் ஆசைக் கனவுகள் பரப்பப்படுகின்றன. நிரப்பப்படுகின்றன. தேவைகள் திரட்டப்பட்டு சேர்க்கப்படும் பொழுது, தீர்த்து வைக்க இயலாத நிலையில் தேகம் இருக்குமானால், முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போல்தான் என்றும் நாம் கூறலாம்.
திடமான தேகத்திற்கு அடிப்படை, நலம் வாய்ந்த நிலைதான். அதுவே வாழ்க்கைப் பயணத்தை வெற்றிகரமாக நடத்திச் செல்லும் வல்லமையை அளிக்கிறது. அத்துடன் வழி நடைப் பயணத்தில் பத்திரமான பாதுகாப்புத் தன்மையையும் வழங்குகிறது.
அந்தப் பாதுகாப்புத் தன்மையே அவனுக்கு பெரும்பலத்தைக் கொடுக்கிறது. அந்தப் பலமே, அவன் கொண்டிருக்கும் ஆசைக் கனவுகளை நிறைவேற்றுகின்ற ஆற்றலைக் கொடுத்து, நம்பிக்கைகளை நனவாக்கிக் காட்டுகிறது. அதனால்தான் உடல் நலம் நிறைந்தவர்கள், உலகிலேயே சிறந்த செல்வர்கள் என்று பெருமையுடன் புகழப்படுகின்றார்கள்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது எவ்வளவு பொருள் பொதிந்த உண்மை தெரியுமா? செல்வம் உள்ளவன் மனம், திண்மை நிறைந்ததாக திறம் உள்ளதாக, எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உடையதாக விளங்குகிறது. அதிலும் உடல் நலமான உயர்ந்த செல்வத்தை உடையவனுக்கோ, இன்னும் திருப்திமிக்க வாழ்க்கை வாழ்வதற்கான சகலவிதமான சக்தியையும் கொடுக்கிறது என்பதை வரலாற்று நிகழ்ச்சிகள் வடித்துக் காட்டும் உண்மைகளாகும்.
இவ்வாறு ஒரு தனிமனிதன் மகிழ்ச்சிகரமாக தனது வாழ்க்கையை நடத்த வேண்டும் என்றால், அவன் உலகில் தினந்தினம் எதிர்நீச்சல் போட்டுத்தான் முன்னேற வேண்டும், என்று முன்னமே கூறியிருந்தோம். அவனை எதிர் நோக்கிப் புதிர் போடும் பிரச்சினைகளை நாம் மூன்று வகைகளாகப் பிரித்துக் காட்டலாம்.
1. உடலால் அவன் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள்.
2. உயிரினங்களால் அவன் எதிர்நோக்கும் விவகாரங்கள்.
3. சமூக சூழ்நிலை அவனை ஒருமுகப்படுத்திடும் குழப்பங்கள் என்று அவன் மும்முனைத் தாக்குதல்களுக்கு அன்றாடம் ஆளாகும்பொழுது, அவனது நிலை எப்படி இருக்கும்?
வெயிலும் மழையும், பனியும் குளிரும், புயலும் புனலும், போன்ற இயற்கை சாதனங்கள் இழைக்கின்ற தன்மைகள், மனிதனுக்கு அடிப்படைத் தேவையான உணவு, உடை, உறைவிடம், குடிநீர் போன்றவைகள், கட்டிடங்கள், நவீன சாதனங்கள், அதனால் விளையும் தீமைகள் போன்றவற்றுடன் அவன் போராட வேண்டியிருக்கிறது.
மனிதனைச் சுற்றியுள்ள விலங்கினங்கள், மற்றும் உயிரினங்கள், செடி கொடி வகைகள், நோய்க்காளாக்கும் நுண்கிருமிகள், சுற்றிச் சுற்றி வந்து துயர் கொடுப்பதையும் மனிதன் சமாளிக்க வேண்டியிருக்கிறதே!
அத்துடன் நில்லாது, சமுதாய அமைப்பு என்று ஒன்று இருந்து கொண்டு, அவனைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறதே! சமுதாய மரபுகள், கொள்கைகள், நம்பிக்கைகள், பண்பாட்டு பழக்க வழக்கங்கள், இப்படித் தான் இருந்தாக வேண்டும் என்ற கட்டுப்பாடுகள், முள்வேலியிட்டு மடக்கும் முரண்பாடுகள் எல்லாவற்றிற்கும் மனிதன் உடன்பட்டு, எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கிறதே!
ஆமாம்! மனிதன் இந்த மும்முனைத் தாக்குதல்களை சமாளித்து வாழவே முற்படுகிறான். அதற்கு முதல் தேவை அனுசரித்துப் போகும் குணம் (Adjustment). அத்தகைய அருங்குணத்திற்கு மூலதனமாக அமைவது புத்திசாலித்தனம்! இந்தப் புத்திசாலித்தனம் எங்கிருந்து கிடைக்கிறது தெரியுமா?