நீங்களும் நோயில்லாமல் வாழலாம்/மெய்யும் நோயும்
தனக்குவமை இல்லாமல் மனக்கவலைகளை வாரி இறைத்து, மாயமானாக அலைந்து மயக்கி, கானல் நீராகத் தோன்றி அலைக்கழித்து, ‘என்னவென்று சொல்லத் தெரியவில்லையே’ என்று ஆட்பட்டவர்களை இனம் புரியாமல் திண்டாடச் செய்து, திகைத்திட வைக்கின்ற மனநோயை பொய் நோய் என்றும், உடலில் தோன்றும் நோய்களை மெய்நோய் என்றும் இரண்டாகப் பிரித்திருந்தோம். உடலாகிய ‘மெய்யில்’. உண்மையாக என்னவென்று உணர்வதுபோலத் தெரிவதால், மெய்நோய் என்று இங்கே தந்திருக்கிறோம்.
‘உங்களுடன் இனி ஒத்துழைக்க முடியாது. களைத்துப் போய்விட்டேன். இனிமேல் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று ஒத்துழைக்க உடல் மறுத்து, ‘ஸ்டிரைக்’ செய்கின்ற நிலையைத்தான் ‘நோய்’ என்கிறார்கள் பெரியோர்கள்.
மனதிற்கு வயதில்லை. அது என்றும் இளமைதான். தசையாலும் எலும்புகளாலும் ஆன நம் தேகத்திற்கு இளமையும் உண்டு. நாளாக நாளாக முதுமையும் உண்டு. இளைப்பும் களைப்பும் உண்டு.
ஆகவே, மனதின் வேகத்திற்கு மார்க்கம் காட்ட முடியாத அலைச்சலிலே, இரவு பகல் பாராது உடலை வாட்டிவதைக்கும் பொழுது மட்டுமல்ல, அதனை வாய்ப்பாகக் கவனித்துக் கொள்ள மறந்துவிடுகின்ற வேலையிலும் ‘உடலானது நோய் என்று படுத்துக் கொள்கிறது. ‘படுத்தி’ வைக்கிறது’.
வந்தபின்தான் உடலை நாம் காப்பாற்றிக் கொள்ள முயல்கிறோமே தவிர, வருவதற்கு முன் தடுத்துக்கொள்ள முயல்வதில்லை. ‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும்’ என்று வள்ளுவர் பாடுவதற்கேற்ப, நெருப்பில் விழுந்த துரும்பு போல, உடலைக் காவாதார் வாழ்க்கை முடிந்து போகும்.
ஆக, வந்த பிறகு வைத்தியரிடம் செல்வதைக் காட்டிலும், வராமல் தடுக்கின்ற விதங்களைக் கற்று, பின்பற்றி வாழ்பவரே அறிவுடையோராவார்.
காட்டிலே ஒரு இராணுவ வீரன் பயணம் செய்து கொண்டிருக்கிறான். வழியிலே அழகான சிங்கக்குட்டி ஒன்று அநாதையாகக் கிடக்கிறது. அதைப் பார்த்ததும், தூக்கித் தழுவி, தடவிப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வேகம் பெறுகிறது.
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, குட்டியைத் தூக்குகிறான், தடவுகிறான், தழுவுகிறான். அத்துடன் அவன் ஆசை அடங்கிவிடவில்லை. அணைந்து போகவில்லை. தொடர்கிறது. மனம் துணிகிறது.
வீட்டுக்குக் கொண்டுபோய் வளர்க்க வேண்டும் என்ற வேட்கை. கையுடன் கொண்டு போகிறான். குழந்தையைக் காப்பது போல, ‘கண்ணிமை காப்பது போல’, சிங்கக் குட்டியை வளர்க்கிறான்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறது சிங்கக் குட்டி. ஒவ்வொரு முறை அவன் வெளியேபோய் வீட்டிற்குத் திரும்பும் பொழுதெல்லாம், ஒரு புதுமை.
அவனுக்கு கைகொடுப்பது போல (Shake Hands) பழக்கி வைத்திருந்தான். அது அவனுக்கு இன்பமாக இருந்தது.
குட்டி குட்டியாகவே இருந்துவிடுமா என்ன? அது வளர்ந்துகொண்டே வந்தது. சிங்கமாகவும் மாறிவிட்டிருந்தது. ஒருநாள் படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கிறான். பாசத்தோடு பழகிய சிங்கமும் பக்கத்தில் வந்து, வழக்கம் போல ‘கைகொடுக்கும்’ பாவனையில் தனது கையினைத் தூக்கிப் போடுகிறது.
தூக்கிய வேகத்தில், அவன் தேகத்தில் அதன் நகங்கள் பதிகின்றன. இரத்தம் கசியத் தொடங்குகிறது. மீண்டும் ஒருமுறை வைக்கும் பொழுது, இரத்தப் போக்கு. திடுக்கிட்டான் அவன். இரத்த வாடையைக் கொண்டு சிங்கத்தின் போக்கும் மாறிவிட்டிருந்தது.
மறுமுறை அதன் நகம் அவன் மேல் பட்டால் என்ன ஆகும்? தன் நிலையைப் புரிந்து கொண்டான். தலையணை அடியிலே வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டு, சிங்கத்தைக் கொன்று, தன்னைக் காத்துக் கொண்டான். அதன் பின்னரே அவனுக்கு ‘ஞானம்’ வந்தது. என்னதான் பழகினாலும், சிங்கத்தின் குணம் மாறுமா என்பதுதான்.
அந்த இராணுவ வீரன்தான் நாம். நாம் கடைப்பிடிக்கின்ற தீய பழக்கவழக்கங்கள் (Habits) தான் சிங்கக் குட்டி. ஆரம்பக் காலத்தில் அழகு முகம் காட்டி, ஆனந்தச் சுவையை ஊட்டி, அதனுள்ளே ஆளை சிக்க வைத்து, அகப்பட்டவுடன் அவைகள் நம்மை அடிமையாக்கி விடுகின்றன.
வளர்ந்த சிங்கத்திடம் வளர்த்தவன் பயப்படுவது போல, தீய பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொண்ட நாம், நம் தேகத்திற்கும் வாழ்க்கைக்கும் முடிவு வந்திருக்கின்றது என்று தெரிந்தவுடன்தான் அந்த ‘ஞானோதயம்’ பிறக்கிறது.
‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்களே, சாகப் போகிறவன் ‘சங்கரா சங்கரா’ என்று புலம்புவதாகக் கூறுவார்களே, அதுபோல, தீய பழக்கங்களை முதுகிலே சுமந்து கொண்டு திரிந்ததன் பலன் நோயாக முகிழ்த்து. முற்றி வதைக்கின்ற பொழுதுதான் நிலைமை புரிகிறது.
நோய் நிலைமையை நாம் சற்று மறந்து, நோய்க்குப் பாயாகக் கிடைக்கும் தேகத்தினை முதலில் பார்ப்போம். வாழ்க்கைப் பயணத்தின் மோகனம் நிறைந்த வாகனமாக அல்லவா நமது தேகம் பயன்படுகிறது. சுவர் இல்லாமல் சித்திரமா? உடல் இல்லாமல் உலக வாழ்க்கையா? கண்ணிரண்டை விற்று ஓவியம் வாங்குகிற புத்திசாலியைப் போல, உடலைக் கெடுத்து உலக இன்பம் அனுபவிக்க முயன்றால் முடியுமா?
நமது உடலின் மகிமை என்ன? திறமை என்ன என்று நாம் ஒருமுறை உணர்ந்து, புரிந்து கொண்டால், அதன் பின்னர் அதனை முறையுடன் பின்பற்றத் தொடங்கிவிட்டால், பெறும் இன்பந்தான்! என்னே! பேரின்பம் அல்லவா தோன்றும்!