நீதிதேவன் மயக்கம்/நீதிதேவன் மயக்கம்: காட்சி-10
காட்சி - 10
இடம் : தேவலோகத்தில் ஒரு நந்தவனம்.
இருப்போர் : அகலிகை, தோழி, சீதை.
[அகலிகையும், தோழியும், பூப்பறித்துக் கொண்டே
அக : என்னதான் சொல்லடி, அவர் கருணாமூர்த்தி என்றால்.
கருணாமூர்த்திதான். என்னை என் கணவர்,
கல்லாகும்படி சாபம் இட்டு விட்டார் – கவனிப்பாரற்றுக்
கிடந்தேனல்லவா வெகு காலம் – எவ்வளவோ
உத்தமர்கள், தபோதனர்கள் அவ்வழிப் போய்க்
கொண்டும் வந்து கொண்டுந்தான் இருந்தனர் – ஒருவர்
மனதிலும் துளி இரக்கமும் உண்டாகவில்லை.
தோழி : கல் மனம் படைத்தவர்கள்.
அக : கனி வகைகளைக் கொடுத்திருப்பேன், அவர்களில்
எவ்வளவோ பேருக்கு. காலைக் கழுவி, மலர்தூவி
இருப்பேன் – ஒருவருக்கும் இரக்கம் எழவில்லை.
கடைசியில் என் ஐயன் கோதண்டபாணி, மனதிலே
இரக்கம் கொண்டு என்னைப் பழையபடி பெண்
உருவாக்கினார் என் கணவரையும் சமாதானப்
படுத்தினார் அவருடைய இரக்கத்தால்தான் எனக்கு
விமோசனம் கிடைத்தது.
[அகலிகை பேசுவதைக் கேட்டுக் கொண்டே வந்த
சீதை]
சீதை : எவருடைய இரக்கத்தால்?
[அகலிகை ஓடிவந்து சீதையின் பாதத்தில் மலர் தூவி,
நமஸ்கரித்த பிறகு தோழியும் நமஸ்கரிக்கிறாள்.]
அக : அன்னையே! நமஸ்கரிக்கிறேன். தங்கள் நாதன்,
ஸ்ரீராமச்சந்திரருடைய கலியாண குணத்தைத்தான் கூறிக்
கொண்டிருந்தேன். அவருடைய கருணையால்தான்
இந்தப் பாவிக்கு, நற்கதி கிடைத்தது.
சீதை : அவரைத்தான். இரக்க மனமுள்ளவர் என்று
புகழ்கிறாயா?
அக : ஆமாம். அம்மணி ஏன்?
சீதை : அவரையா? அடி பாவி! அவருக்கா இரக்க சுபாவம்
என்று வாய் கூசாது கூறுகிறாய்?
அக : [திகைத்து ] தாயே! என்ன வார்த்தை பேசுகிறீர்.
சீதை : பைத்தியக்காரி! இரக்க சுபாவமா அவருக்கு! என்னைக்
காட்டுக்குத் துரத்தினாரே, கண்ணைக் கட்டி அப்போது
நான் எட்டு மாதமடி முட்டாளே கர்ப்பவதியாக இருந்த
என்னைக் காட்டுக்கு விரட்டின கல்மனம்
கொண்டவரை, இரக்கமுள்ளவர் என்று
சொல்கிறாயே. எவனோ, எதற்காகவோ, என்னைப்
பற்றிப் பேசினதற்காக ஒரு குற்றமும் செய்யாத
என்னை – தர்ம பத்தினி என்ற முறையிலே அவருடன்
14 வருஷம் வனவாசம் செய்த என்னை –
இராவணனிடம் சிறை வாசம் அனுபவித்து அசோக
வனத்திலே அழுது கிடந்த என்னை, கர்ப்பவதியாக
இருக்கும்போது, காட்டுக்குத் துரத்திய காகுத்தனைக்
கருணாமூர்த்தி என்று புகழ்கிறாயே!
கல்லுருவிலிருந்து மறுபடியும் பெண் ஜென்மம்
எடுத்தது இதற்காகவா? கடைசியிலும் என்னைச்
சந்தேகித்து, பாதாளத்தில் அல்லவா புகவைத்தார்.
அப்படிப்பட்டவரை, அகல்யா! எப்படியடி,
இரக்கமுள்ளவர் என்று கூறுகிறாய்? வில்வீரன் என்று
புகழ்ந்து பேசு, சத்துரு சங்காரன் என்று பேசிச்
சாமரம் வீசு, என்ன வேண்டுமானாலும் பேசு
புகழ்ச்சியாக, ஆனால் இரக்கமுள்ளவர் என்று –
மட்டும் சொல்லாதே இனி ஒரு முறை – என் எதிரில்
"பிராணபதே! என்னைப் பாரும்! இந்த நிலையிலா,
என்னைக் காட்டுக்குத் துரத்துகிறீர்? ஐயோ! நான்
என்ன செய்தேன்? குடிசையிலே இருக்கும்
பெண்களுக்குக் கூட, கர்ப்பகாலத்தில், சுகமாக
இருக்க வழி செய்வார்களே! சக்கரவர்த்தியின் பட்ட
மகிஷியான எனக்கு இந்தக் கதியா? நான் எப்படித்
தாளுவேன். பிரியபதே! என்னைக் கவனிக்காவிட்டால்
போகிறது, என் வயிற்றிலுள்ள சிசு – உமது குழந்தை–
அதைக் கவனியும். ஐயோ! கர்ப்பவதிக்குக் காட்டு
வாசமா? ஐயோ! உடலிலே வலிவுமில்லை –
உள்ளமோ, துக்கத்தையோ, பயத்தையோ தாங்கும்
நிலையிலே இல்லை. இந்த நிலையிலே என்னைக்
காட்டுக்குத் துரத்துவது தர்மமா? நியாயமா? துளியாவது
இரக்கம் காட்டக் கூடாதா? அழுத கண்களுடன் நின்று
அவ்விதம் கேட்டேனடி – அகல்யா! என் நாதரிடம்.
அசோக வனத்திலே கூட அவ்வளவு அழுத்\தில்லை.
அவனிடம் பேசினபோது கூட, என் குரலிலே
அதிகாரம் தொனித்தது; மிரட்டினேன், இவரிடம்
கெஞ்சினேன். ஒரு குற்றமும் செய்யாத நான் – இரக்கம்
காட்டச் சொல்லி இரவிகுலச் சோமனைக் கேட்டேன்.
சீதா! நான் ராமன் மட்டுமல்ல ராஜாராமன்! – என்றார்.
ராஜாராமன் என்றால் மனைவியைக் காட்டுக்கு
அனுப்புமளவு கல் நெஞ்சம் இருக்க வேண்டுமோ
என்று கேட்டேன்.
அகல்யா! என் கண்ணீர் வழிந்து கன்னத்தில் புரண்டது.
புயலில் சிக்கிய பூங்கொடி போல உடல் ஆடிற்று. என்
நிலையை அந்த நேரத்தில் அரக்கனான இராவணன்
கண்டிருந்தால் கூட உதவி செய்வானடி ஆனால் நீ
புகழ்ந்தாயே கருணாமூர்த்தி என்று, அவர், என்
கண்ணீரைச் சட்டை செய்யவில்லை – நான்
பதறினேன்,கருணை காட்டவில்லை, காலில் வீழ்ந்தேன்
– ஏதோ கடமை கடமை என்று கூறிவிட்டு, என்னைக்
காட்டுக்குத் துரத்தினார். அப்படிப்பட்டவரை, தன்பிராண
நாயகியிடம், ஒரு பாவமுமறியாத பேதையிடம்,
கர்ப்பவதியிடம், கடுகளவு இரக்கமும் காட்டாதவரை,
அகல்யா! புத்தி கெட்டவளே! கூசாமல் கூறுகிறாய்.
இரக்கமுள்ளவரென்று. இனி ஒரு முறை கூறாதே; என்
மனதை வேக வைக்காதே."
[சீதை கோபமாகச் சென்று விட, அகல்யா திகைத்து