நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/008-013

 

8. இரத்தினக்கல்


 

பாடலிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு அசோகச் சக்ரவர்த்தி மகத தேசத்தை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. மிகச் சிறந்த வீரரான அவர் அண்டை அயல் நாடுகளையெல்லாம் போரிட்டுக் கைப்பற்றித் தன் இராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்தார். அப்படி வெற்றி பெற்ற நாடுகளிடம் கிடைத்த வைரம், வைடுரியம், நவரத்தினம் எனப் பல்வேறு விதமான கற்களை ஏராளமாகச் சேகரித்துத் தன் கஜானாவில் நிரப்பி இருந்தார். தான் சேகரித்து வைத்திருந்த அளவு அழகிய விலையுயர்ந்த கற்கள் வேறு எங்கும் இருக்கவில்லை என்ற இறுமாப்பும் அவரிடமிருந்தது. ஒரு நாள் புகழ்பெற்ற பௌத்தத் துறவி ஒருவர் அரண்மனைக்கு வருகை தந்தார். அவரிடம் நீண்ட நேரம் பல்வேறு கருத்துக்களைக் கேட்டறிந்த அரசன் தன் கஜானாவில் சேகரித்து வைத்திருக்கும் கற்களையும் காட்டத் தவறவில்லை.

“சுவாமி! நீங்கள் பல நாடுகளைச் சுற்றி வந்திருக்கிறீர்கள். ஆனால் இப்படிப்பட்ட ஒளிவீசும் கற்களை எங்காவது கண்டதுண்டா?” எனப் பெருமிதத்துடன் வினவினார். துறவியின் முகத்தில் புன்னகை அரும்பியது. “ஆம் அரசே! இதை விட விலை மதிக்கமுடியாததும் பல மடங்கு பெரியதுமான கல்லைப் பார்த்திருக்கிறேன்” என்றார் துறவி. அரசரால் நம்ப முடியவில்லை. “அப்படியா சுவாமி! நான் உடனே அதைப் பார்த்தாக வேண்டும். அது எங்கே இருக்கிறது எனச் சொல்லுங்கள்” என்றார். “அதிக தூரம் ஒன்றுமில்லை அரசே. இதோ உன் நாட்டின் எல்லையில்தான் இருக்கிறது. இப்போது வேண்டுமானாலும் சென்று பார்க்கலாம்”.

சக்கரவர்த்தி இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. “என்ன! என் நாட்டிலா? இதைவிடப் பெரிய கல்லா? இருக்க முடியாது! அதுவும் நான் அறியாமல் இருக்கவே முடியாது” என்றார். “நான் அதை உனக்கு இப்போதே காட்ட முடியும். நாம் போவோம் வா!” என அரசரோடு புறப்பட்டு விட்டார் துறவி.

ஊரின் எல்லை வந்தது. அங்கு அரண்மனைக்குச் சொந்தமான ஒரு சத்திரத்திற்குள் துறவி புகுந்தார். அரசருக்கு ஒன்றும் புரியவில்லை. துறவியைப் பின்பற்றினார். தானியம் அரைக்கும் மிகப்பெரிய கல் ஒன்று அங்கு போடப்பட்டிருந்தது. வழிப்போக்கர்கள் தங்கும் போது மாவு அரைத்து உணவு தயாரிப்பதற்காகப் போடப்பட்ட கல் அது. துறவி அதைச் சுட்டிக் காட்டி “அரசே! பார்த்தாயா, உன்னிடம் இருக்கும் கல்லை விட இது எத்தனை மடங்கு பெரியது என்று?” “அரசனுக்குச் சினம் பொங்கியது. சுவாமி! என்ன, என்னைக் கேலி செய்கிறீரா? மாவு அரைக்கும் இக்கல் எங்கே? விலை மதிப்பற்ற அந்தக் கல் எங்கே? என்ன நினைத்துக் கொண்டு சொல்கிறீர்கள்” என்றான் கோபத்தோடு, “இல்லை அரசே! நான் உண்மையைத் தான் சொல்கிறேன். உன் மூதாதையர் காலந்தொட்டு இந்தக்கல் இங்கே
 
 
இருக்கிறது. இங்குத் தங்குவோர் அனைவரின் பசியையும் போக்கி அரச வம்சத்தின் புகழை ஞாபகப்படுத்துகிறது. பல பசியாறிய வழிப் போக்கர்கள் உன்னையும் உன் மூதாதையர்களையும் வாழ்த்தி வணங்கி விட்டுச் செல்கின்றனர். ஆனால் உன்னிடம் உள்ள கல் அதை வைத்திருந்த அரசர்களை மட்டுமன்றி பல்லாயிரக்கணக்கான வீரர்களையும் பறித்தன.

இளம் மங்கையர்களின் வாழ்வையும் பறித்தது. அவர்களை விதவையாக்கியது. இப்போது சொல் அரசே அனைவரின் இரத்தத்திலும் தோய்ந்தெடுக்கப்பட்ட அந்தக் கல் உயர்ந்ததா? பலரின் பசியைப் போக்கி நின் புகழ் பாடும் இந்தக் கல் உயர்ந்ததா?” அரசன் அசையாது நின்றான். அவன் அறிவுக் கண் திறந்தது. “ஆம் சுவாமி தாங்கள் கூறுவதே உண்மை. இனி நான் என் உயிர் உள்ள வரை போர் புரிய மாட்டேன்! அன்பே என் வழியாகக் கொண்டு வாழ்வேன். என்னுடைய இந்தச்செயலுக்காக என்னை மன்னித்தருளுங்கள் சுவாமி” என்றார்.

பாரத தேசத்தில் போற்றப்படும் அரசர்களில் இவரும் ஒருவராகத் திகழ்கிறார்.