நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/009-013


9. இருளும் ஒளியும்


Page வார்ப்புரு:Largeinitial/styles.css has no content.முன்னொரு காலத்தில், ஓர் அரசனுக்கு நீண்ட நாட்கள் குழந்தையில்லாமல் இருந்தது. பிற்காலத்தில் அருமையான ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரண்மனையில் குழந்தை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரலாயிற்று. குழந்தை வளர வளரக் கூடவே மட்டுமிதமற்ற துடுக்குத்தனமும் வளரத் தொடங்கிற்று. ஓடுவது, தாண்டுவது, குதிப்பது போன்ற விளையாட்டுகளில் மிக அதிகமாக ஈடுபட்ட காரணத்தினால், ஒருநாள் சிறுவனுடைய கால் இடறி விழுந்து சரிப்படுத்த இயலாத அளவு ஊனமடைந்து விட்டது. அதனால், அவன் குந்திக் குந்தி நடக்க நேர்ந்தது. ஊனமுற்ற குழந்தையைப் பார்த்துப் பார்த்து ஈன்றோர் உளம் வருந்தினார்கள்.

தைமூர்லங்க் என்ற பெயருடன் ஊனமுற்ற அந்த அரச குமாரன், பிற்காலத்தில் தேசத்துக்கு அதிபதியானான். ஆயினும், அவன் உள்ளமோ ஊனமடைந்து விட்டிருந்தது. எனவே, உள்ளமும், உடலும் ஊனமில்லாத நல்ல மனிதர்களைக் காணும்போது அவனுடைய உள்ளத்தில் குரூர குணம் உண்டானது. ஒவ்வொரு நாளும் சேவகர்களைவிட்டு நல்ல மனிதர்களைப் பிடித்துக் கொண்டு வரச் செய்து குற்றவாளிகளைப் போன்று தன் முன் நிறுத்தி மனிதத் தன்மைக்குச் சிறிதும் ஒவ்வாத குற்றங்களைச் சுமத்தி அவர்களைத் தண்டித்து அவன் மன மகிழ்ச்சி அடைந்தான்.

மனிதத் தன்மையை அறவே இழந்துவிட்ட இந்த மாபாவி மன்னனுக்கு, தகுந்ததாக எதிர்காலம் என்ன வைத்துக் கொண்டுள்ளதோ அளிப்பதற்கு! இறந்தகாலம் இவனுக்குத் தகுதியான வரலாறு எப்படி எழுதப் போகிறதோ? அதை நாம் அறியோம்.

வழக்கம்போல, அன்றைய நாள், மிகவும் துக்ககரமான ஒரு நாளாக அமைந்துவிட்டது. தண்டனைக்காக, அன்று நூற்றுக்கு மேற்பட்ட குற்றவாளிகள், அவனெதிரில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர். வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த இக்குற்றவாளிகளில் முதல் ஆளாக நிறுத்தப்பட்டவர் புகழ் வாய்ந்த உருது மொழிக் கவிஞர் அகமது. தான் செய்த குற்றம் தான் என்ன? எதற்காக என்னைக் கொண்டு வந்து இங்கே நிறுத்தியிருக்கிறார்கள்? என்ற ஆழ்ந்த சிந்தனை அவருடைய முகத்தில் தேங்கி இருந்தது. தைமூர்லிங்க், கவிஞர் அகமதுவைக் கண்டவுடனேயே சற்று வியப்படைந்தவனாய், “ஓகோ, கவிஞர்! உங்கள் பெயர்தானே அகமது! உங்களுடைய ஒவ்வொரு பாடல் வரியும் சுத்தமான வெள்ளியைக் காட்டிலும் பத்தரை மாற்றுத் தங்கத்தைக் காட்டிலும் விலை மதிப்புடையது அல்லவா?” என்று கிண்டல் செய்தான்.

கவிஞர் அகமது தலையைத் தாழ்த்தாது, “ஆமாம், இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்றார்”, “அப்படியா! அப்படியானால் இந்தக் குற்றவாளிகளில் ஒவ்வொருவருக்கும் நீர் நிர்ணயிக்கும் மதிப்பீடு தான் என்ன?” என்றான் அரசன். “ஒவ்வொருவனுடைய விலை மதிப்பும், ஒவ்வொரு விதமாக இருக்கும். இப்பொழுது இங்கே உங்களுக்கு எதிரில் தண்டனைக் குள்ளாகி நின்று கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான மனிதர்களின் சராசரி விலை சுமார் நான்கு கோடி ரூபாய்கள் மதிப்பிடலாம்” என்றார் கவிஞர் அகமது.

இது அரசன் எதிர்பாராத பதிலாக இருந்தது. உள்ளத்தில் உதித்த சினம், அவனுடைய கண்களைச் சிவக்கச் செய்தது. தன் பற்களை நற நற வென்று கடித்துக் கொண்டான். கோபக் குரலில் “என்ன சொன்னாய்?” ஒருவனுடைய விலை நான்கு கோடி ரூபாய்களா? அப்படியானால் இந்த நாடு முழுவதையும் கட்டி ஆட்சி செய்கிற அரசனாகிய என்னுடைய மதிப்பீடுதான் என்ன?” என்று ஆவேசமாகக் கேட்டான்.

கவிஞர் புன்னகை புரிந்தார். சாதாரணமான குரலில் “உங்களுடைய விலை சற்று அதிகமாகவே வைத்து மதிப்பிட்டாலும் ஒரு நூறு ரூபாய்களுக்கு மேற்பட முடியாது” என்றார். “அடே, என்ன உளறுகிறாய்; நாவினை இறுக்கிப் பிடி; நீ யாரை இவ்விதமாகக் கிண்டல் செய்து கொண்டிருக்கிறாய் என்பதை நினைத்துப் பார்த்தாயா? சாவின் எல்லையில் நிறுத்தப் பட்டிருக்கும் உனக்கு இன்னமும் என்னோடு விளையாடும் எண்ணமா? நான் அவ்வளவுக்கு ஓர் அற்பனா?” என்று அரசன் கர்ஜனை செய்தான்.

இந்தக் கர்ஜனைக்குக் கவிஞர் ஒரு துளியுங்கூட அச்சப்ட்டவராகத் தெரியவில்லை. உள்ளத்தில் ஒளிவு மறைவு இல்லாது நயமான குரலில் சொல்லத் தொடங்கினார் : “அரசர் வீணாக இவ்வாறு ஆவேசப்படவேண்டிய அவசியமில்லை. நான் சொன்ன விலை மதிப்பு உங்களுக்கல்ல, நீங்கள் அணிந்து கொண்டிருக்கிற அணிகலன்களுக்கும், ஆடை களுக்கும் மட்டும்தான் அது”. “அப்படியானால் நீ எனக்கு நிர்ணயம் செய்த விலை மதிப்பீடுதான் என்ன?” என்று கேட்டான். உங்களுக்கு ஒரு விலையை மதிப்பிட்டுக் கூறுவது இயலாததாக உள்ளது. ஏனெனில் இந்த உலகத்தில் மனிதனாகப் பிறந்த எவன் ஒருவனின் இருதயத்தில் ஈவு, இரக்கம், நீதி, ஒழுக்கம், கருணை, அன்பு, சத்தியம் என்னும் இவை இருக்கவில்லையோ அப்படிப்பட்ட ஒருவனை யாரும் மனிதனென்று கூட மதிக்க மாட்டார்கள். ஆனதினால் தாங்கள் ஒரு விலை மதிப்பிட முடியாத மகாத்மாவாகவே கூட இருக்கலாம்”.

(Upload an image to replace this placeholder.)

கவிஞர் அகமது தமது திடமான குரலில் கூறிய இந்த வார்த்தைகள், அரசனுடைய நெற்றியில் சுத்தியைக் கொண்டு ஓங்கி அடித்தது போல மிகமிகக் கடினமான வலியை ஏற்படுத்தின. எதுவும் சொல்லத் தோன்றாமல் திக்பிரமை பிடித்தவன் போலச் சற்று நேரம் உட்கார்ந்தவாறு இருந்தான். அவனுடைய உள்ளத்தில் அச்சம் படிந்தது போலிருந்தது. உடல் மட்டுமன்றி, கை கால்களும் நடுங்கலுற்றன. உடனடியாக குற்றவாளிகளாக அன்று கொண்டு வந்து அங்கு நிறுத்தப் பட்டிருந்த அனைவரையும் விடுதலை செய்ய உத்தர விட்டான். இந்த ஆன்மீக அறநெறியை அஞ்சா நெஞ்சத்துடன் எடுத்துக்காட்டி, விலங்குத் தன்மையிலிருந்து, தன்னை மனிதத் தன்மைக்கு மாற்றிய கவிஞர் அகமதுவுக்கு நன்றியும், வணக்கமும் தெரிவித்தான். தன்னுடைய அகக்கண்ணைத் திறக்கும்படி செய்த கவிஞர் அகமதுவை மிகவும் அழுத்தமாக உடலோடு ஒட்டத் தழுவிக் கொண்டு கவிஞருக்கு வேண்டிய அளவு உபசாரம் செய்து உள்ளம் உவக்க அரண்மனையிலிருந்து அவரை வீட்டிற்குச் சிவிகையில் ஏற்றி அனுப்பி வைத்தான் தைமூர்லங்க்.