நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 1

நெருப்புத் தடயங்கள்

1


ழசாய் போன குட்டாம்பட்டிக்கு, புதுமை சேர்ப்பதுபோல், 'பிளான்' போட்டு கட்டப்பட்ட வீடு. கிணறு என்ற பழமையுடனும், சமையலறைக்குள் குழாய் கிணறு எடுத்து, 'அடிபைப்' என்ற புதுமை மூலம் அமர்க்களப்படும் இல்லம். வயல் மாடுகளையும், வண்டி மாடுகளையும் கட்டுவதற்காக தனியாய் கட்டப்பட்ட தொழுவத்தில் 'சாணத்தை' எடுத்து, சாண எரிவாயு அமைக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் கிடைக்கும் மின்சாரம், சமையலறையில், எவர் சில்வர் அடுப்பிற்கு, சூட்டையும் சொரணையையும் கொடுத்துக் கொண்டிருந்தது. கம்பீரமும், எழிலும், கருங்கற்களோடும், சிமெண்ட் சிலாப்களோடும் கலந்து கட்டப்பட்டது போன்ற, இன்னும் 'பால்' காய்க்கப்படாத அந்த புத்தம் புதுவீட்டின் முகப்பறையில், 'மொஸாய்க்' தரையின் தொடர்ச்சி போல் பகட்டில்லாத பளபளப்புடன், திகட்டில்லாத ஒய்யாரத்துடன் காணப்பட்ட தமிழரசியை, கண்டுபிடிக்க முடியவில்லை. அவள் 'தலையெடுக்க' முடியாத அளவிற்கு, பலதர வயதுப்பட்ட பெண்கள் சுற்றி நின்றார்கள். சூழக் குவிந்தார்கள். 'தமிழு... தமிளு...' என்று பல வகையான சத்தங்கள் கேட்டதே தவிர, தமிழின் சாரம் கேட்கவில்லை. வெளித்தளத்தில் - 'முற்றம்' என்று சர்வ சாதாரணமாய் சொல்ல முடியாத, மண் தளம் போடாமல் சிமெண்டால் தளமான திறந்த வெளிக்கூடத்தில், ஊர்ப்பெரியவர்கள் பெஞ்சுகளிலும், நாற்காலிகளிலும் உட்கார்ந்தபடி, வெற்றிவையை சுண்ணாம்பால் வெள்ளையடித்து, வாயில் ரத்தச் சிவப்பு நீரைச் சுவைத்துக் கொண்டிருந்தபோது-

பாட்டி முத்துமாரி, ' படபட உடம்போடு, தடதட சத்தத்தோடு, தமிழரசி இருந்த இடத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தாள். பலாப்பழம் போல் தோல் சுருக்கங்கள் உடம்பெங்கும் தோன்ற, எழுபது வயதிலும் பல் போகாமலும், சொல் போகாமலும் கூன்படா முதுகோடு, குறுகாத தலையோடு அவள் ஓடிக் கொண்டிருந்தாள். நரைபட்ட தலைமுடிக்கும், தோள் வரை வியாபித்த வெள்ளைப் புடவைக்கும் இடையே, வெடித்த பருத்திச் செடிகளுக்கு இடையே உள்ள ஆமணக்குத் தண்டு போல் தோன்றிய கழுத்தை முன்நோக்கி நீட்டியபடி கத்தினாள்."

"எனக்குக் கொஞ்சம் வழிவிடுங்க அம்மாளு... என் தங்கத்த பார்க்க எனக்கும் ஆச இருக்காதா?..."

பெண்கள் எல்லோரும் புயல்பட்ட மரக்கிளைகள் போல் விலகிக் கொண்டார்கள். இந்த முத்துமாரிப் பாட்டி, நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தன் ஒரே ஒரு மகளை, எட்டு வயதில் சாகக் கொடுத்தாளாம். அதனால், மூன்றாண்டு காலம் மூளை பிசகி, அவள் கைக்கும், காலுக்கும் விலங்கு போட்டிருந்தார்களாம். பிறகு, பைத்தியம் போய்விட்டதென்றாலும், இப்பவும் ஆண்டுக்கு மூன்று தடவையாவது அது, அவளை எட்டிப் பார்க்குமாம். எங்கேயாவது செத்த வீட்டில், 'துஷ்டி' கேட்பதற்காகப் போகும் போது புத்திசாலியாகப் போகும் பாட்டி, திரும்பும்போது, பைத்தியமாகத் திரும்புவாளாம். அவளுக்குப் பைத்தியம் வந்து விட்டால், ஊராருக்கும் பைத்தியம் வந்ததுபோல் ஆகிவிடுமாம். புதுப் பணக்காரர்களின் பழைய குப்பைகளைக் கிளறுவதோடு, பட்டுப் புடவைக்காரிகளின் பழைய வரலாற்றை நிர்வாணப்படுத்தி விடுவாளாம். ஆகையால் முத்துமாரிப் பாட்டிக்கு, வழி, வழிக்கு வந்தது. பெண்கள், அவளைப் பார்த்ததும் தாதிகளானார்கள்.

சுவரை ஒட்டிப் போடப்பட்ட நாற்காலியில், பிரயாண அலுப்பைத் தீர்ப்பது போல் தலைசாய்த்து அமர்ந்திருந்த தமிழரசியின் தலையை, குனிய விரும்பாத-அல்லது முடியாத பாட்டி, தன் முகத்திற்கு நேராக இழுத்து, அவள் கன்னத்தில் வைத்த வாயை, ஒரு நிமிடம் வரை எடுக்காமல் இருந்தாள். அண்ணி தமிழரசியைப் பார்க்க வந்த 'பத்தொன்பது' பொன்மணி, சும்மா இருந்திருக்கலாம். இருக்கவில்லை. "பார்த்து பாட்டி... அண்ணிக்கு கன்னம் இருக்கட்டும்..." என்றாள், பொன்மணியின் போறாத காலம், உடனே எல்லாப் பெண்களும் சிரித்து விட்டார்கள். தமிழரசியின் கன்னத்தைச் சுவைத்த பாட்டி. வாயை விலக்கி, அவலைச் சுவைப்பவள்போல், நாக்கை அசைபோட்டுப் பேசினாள்.

"நான், என்ன... வயலுல தண்ணி பாய்க்கிறவன் சாப்பிடுறதுக்காவ மம்பெட்டிய மாத்தும்போது உதடு வள மாத்துறேனா... சோளத்தட்டை மறைப்புல அவன சுன்னத்துல 'கன்னம்' போடுறேனா... அவனுக்கு ஊட்டி விடுறேனா... நான் என்ன ஆம்புளைக்கா முத்தம் கொடுத்தேன்?..."

பொன்மணி வெறும் மணியானபோது, ஒருத்தி, "பாட்டிக்கு இன்னும் ஆச போகல பாரு"... என்று சொல்லிவிட்டு, தன்னைக் கூட்டத்துள் மறைத்துக் கொண்டாள். பாம்புக் காதுப் பாட்டி, நீர்ப்பாம்பு போல் நெளிந்தபடி கேட்டாள்;

"யாரு... ராஜகிளியா? கல்யாணமான மூணு வருஷத்துல நாலு பிள்ள பெத்த நீயா சொல்லுதே? எங்கே, இன்னொரு தடவ என்கிட்ட சொல்லு... நீராத்திரில ... ஒன் புருஷனை படுத்துற பாட்டை ரேடியோ மாதிரி ஒப்பிக்கேன். ஏகேன்னானாம்!"

தமிழரசி புரிந்து கொண்டாள். பாட்டியை அங்கே நிற்கவைத்தால், பல பெண்கள் அங்கே மட்டுமல்ல, வேறு எங்கேயும் நிற்கமுடியாது. நாற்காலியை விட்டு எழுந்து அதன் சட்டத்தைப் பற்றியபடியே, "இந்த தள்ளாத வயசுல நீ ஏன் பாட்டி வந்தே? மெட்ராஸ்ல இருந்து ஊருக்கு வந்துட்டு, எப்போவாவது ஒன்னைப் பார்க்காமல் போயிருக்கேனா? சாயங்காலமாய் ஒன் வீட்டுக்கு வாரேன்" என்றாள், முத்துமாரிப்பாட்டி, ஆனந்தவாசியானாள்.

"பாத்தியளா அம்மாளுவளா. என் ராசாத்தி சொல்லுததை கேட்டியளா. நீங்க ஆயிரந்தான் குலுக்குனாலும், சிலுக்குனாலும், என் தங்கத்தோட குணம் வருமாடி? நிறம் வருமாடி? நெட்டையாய் போவாமலும், குட்டையாய் இல்லாமலும், கள்ளக்கண்ணு போடாமலும், நொள்ளக்கண்ணு இல்லாமலும், நேருக்கு நேராய் பாக்குற இந்த லட்சணம் எவளுக்குடி வரும்? ஆனாலும், தமிழரசி, என் தங்கம், நீ கொண்டய இப்படி தூக்கி வைக்கப்படாது... லேசா சரிச்சி போடணும்."

தமிழரசி உட்கார்ந்திருந்த நாற்காலியில் சாய்ந்தபடி தரையில் உட்கார்ந்திருந்த கலாவதி, கிழவி, தன் பெரியப்பா மகள் தமிழரசிக்கு-அதுவும் காலேஜ்ல-அதுவும் மெட்ராஸ் காலேஜ்ல பி. ஏ. படிக்கிற பொண்ணுவளுக்கே வாத்தியாரம்மாவாய் இருக்கிறவளோட கொண்டையை விமர்சனம் செய்தது பிடிக்கவில்லை. கோபத்துக்கும், சாந்தத்திற்கும் இடைப்பட்ட குரலில் "ஒன் வேலய பார்த்துக்கிட்டு இரேன் பாட்டி. கொண்டை சரியில்லம்ப, அப்புறம் மூக்கு சரியில்லம்ப, வந்தோமா பார்த்தோமான்னு உட்காரேன்!" என்றாள்.

'பாட்டி பேசுனால் பேசட்டுமே...' என்று தன் கொண்டையை இறக்குவதற்காக தமிழரசி கைகளை தலைக்கு மேல் குவித்தபோது, முத்துமாரிப் பாட்டி எகிறினாள்.

"ஏண்டி கலா, ஒன்கிட்ட எந்த விவகாரமும் இல்லங்ற தைரியத்துலயா பேசுறே? வரட்டும், வரட்டும், நீயும் 'ஆம்புள' விஷயத்துல சிக்காமலா இருக்கப்போற? வயசு இருக்கத்தானே செய்யுது? பேய்ப்பய மவளே ...நான் எதுக்குச் சொன்னேன்னு கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா? முகம், குடுவை மாதிரி கூம்பாமலும், பனங்காய் மாதிரி படராமலும், மூக்கு சப்பாமலும், முன்னால நீளாமலும், கழுத்து கொக்கு மாதிரி வளையாமலும், குடமிளகாய் மாதிரி குறுகாமலும், இந்த நாடு ராச்சியத்தில... என் ராசாத்தி 'தமிளு' மாதிரி யாரு பிள்ள இருக்காவ? ஊருக்கு... எத்தனயோ பேரு.... ஆபீஸரா இருக்கவமுல்லாம் வாரான்... இவள பார்க்க வாரது மாதிரி ஊர்க் கூட்டம் எங்கேயாவது உண்டா? அவள் கொண்ட அழகாத்தான் இருக்கு திருஷ்டிப் பரிகாரமாய் சாய்க்கச் சொன்னேன். நீ என்னடான்னால்..."

கூட்டத்துப் பெண்களில் ஒருத்திக்கு மாமியார் உயிரோடு இருப்பது நினைவுக்கு வந்தது. அதே சமயம், தமிழரசியிடம் நேருக்கு நேர் இரண்டு வார்த்தை பேசாமல் போக மனம் வரவில்லை.

"பாட்டி, நாங்களும் எங்க பங்குக்கு கொஞ்சம் பேசாண்டாமா? நீயே பேசிக்கிட்டே இருந்தால் எப்டி? நகரு."

"எப்டிளா நகர முடியும்? அஞ்சு வருஷத்துக்கு முன்னாலயே என்னவெல்லாமோ எழுதி, எனக்கு மாசா மாசம் 'பென்ஷேன்' வாங்கித் தந்த என் ராசாத்திய விட்டுட்டுப் போவ மனம் வர மாட்டக்கே..."

பெண்கள் கைகளைப் பிசைந்தார்கள். வெளியே, பெஞ்சில் ஊர்ப் பெரியவர்களோடு உட்கார்ந்திருந்த கல்யாண மாப்பிள்ளையான தமிழரசியின் அண்ணன் ராஜதுரை, மிடுக்காக அங்கே வந்தான். முத்துமாரிப் பாட்டியின் கையை பலமாகப் பிடித்தபடி "சரி, போதும் பாட்டி, புறப்படு..." என்றான். பாட்டி படபடப்பானாள்.

"கையை விடுடா பேய்ப்பவ மவனே! என்னம்மா வலிக்கு! கல்யாண பந்தலுல, மணவறையில, பொண்ணு கையயும் இப்டி பிடிச்சுடாதல... அப்புறம் பொண்ணு ராத்திரி வரப்படாதுன்னு பகலையே நெனைப்பாள். ஒப்பனும் இப்பிடித்தான். கல்யாணத்துல, ஒம்மா கையை அவன் பிடிச்ச பிடியில, பாவம் அவள் கை வளையலு நொறுங்கி- நொறுங்குனது அவள் கையக் குத்தி, கண்ணாடி சதைக்குள்ள போயி, அப்புறம் நாட்டு வைத்தியர் வந்து, பச்சில கட்டுனாரு, இல்லியா பகவதி?"

மகளை, கதவிடுக்கில் நின்று பெருமிதமாகப் பார்த்துக் கொண்டிருந்த தமிழரசியின் தாய் பகவதியம்மாள், அப்போது தான் அது நடந்தது போல் வெட்கப்பட்டாள். பிறகு, கிழவியின் வாயில் மேலும் விழாமல் இருக்கக் கருதி, "தமிழரசி, வெளில பெரியவங்க ஒனக்காவ காத்திருக்கது தெரியல? அவங்கள போய் விசாரி" என்றாள்.

முத்துமாரிப் பாட்டி, குறுக்கு விசாரணையைத் துவக்கினாள்.

"பகவதி... ஒன்னத்தான்! நம்ம ராஜதுரைக்கு வடக்குத் தெரு ராமையா மகள நிச்சய தாம்பூலம் செய்யப்போறது சரிதான். அதோட அவரு மகன் இனுசுபெக்டருக்கு நம்ம தமிழரசியை கொடுத்துட்டா என்ன? ஒரே பந்தலுல ரெண்டு கல்யாணம் நடத்திட்டால் செலவு மிச்சம்பாரு."

பகவதியம்மா விளக்கினாள்:

"நாங்களும் அப்படித்தான் நெனச்சோம். ஆனால் ஒரே பந்தலுல வீடு பால் காய்க்கிறதும், ரெண்டு கல்யாணமும் நடக்கப் படாதாம்..."

"அதுவும் சரிதான். ஆனால், இப்பவே பேசி முடிச்சிடுங்க. கல்யாணத்த அடுத்த வருஷம் வச்சுக்கலாம்."

அன்னக்காவடி-அனாதைக் கிழவி, அப்படிப் பேசுவது, இன்னும் நிச்சயிக்கப்படாத கல்யாணத்தின் மாப்பிள்ளையான ராஜதுரைக்கு, அதிகப்பிரசங்கித் தனமாகத் தெரிந்தது. "சரி ... எல்லாம் ஒன்கிட்டேயே கேட்டு முடிக்கோம்" என்று சொல்லியபடியே, அவளை இழுத்துக் கொண்டு போகப்போனான்.

"தொடாதடா, எனக்கு நடக்கத் தெரியும், போகும் போது ஒண்ணே ஒண்ணை சொல்லிட்டுப் போனால்தான் என் மனசு ஆறும். அதாவது, வடக்குத்தெரு ராமையா, ஒன் முஞ்சிக்காவ அவரு மவள தரல. என் தங்கம் தமிழரசியின் முகத்தைப் பார்த்துட்டு ஒனக்கு தர்ரார். மறந்துடாதடா மங்குளிப் பய மவனே."

ராஜதுரை, பாட்டியை விரைவு படுத்துவதுபோல், அவள் முதுகை லேசாகத் தள்ளியபடியே "நீ வேற... நானும் என் தங்கச்சி தமிழரசி சொன்னதால தான் ராமையா மாமா மவள கட்டப்போறேன். என் தங்கச்சிக்கு எழுதிக் கேட்டேன். அவள் சம்மதமுன்னு சொன்ன பிறகு தான் நான் சம்மதிச்சேன். சரி, சரி, எட்டி நட" என்றான்.

தமிழரசியின் அருகே இருந்த கல்யாணப் பெண்ணின் தங்கை-முன்பு பாட்டியிடம் எடுத்த எடுப்பிலேயே வாங்கிக் கட்டிக்கொண்ட அதே அந்த பொன்மணி "எங்க அக்காவுக்கு என்ன குறை? ஏதோ தயவுபண்ணி காட்டுறது மாதுரி பேசுறீரு? நாங்களும் தமிழரசி அண்ணியை எங்க இன்ஸ்பெக்டர் அண்ணன் தாமோதரனுக்கு எடுக்கணுமேன்னுதான் எங்க அக்காவை கொடுக்கோம். ஞாபகம் இருக்கட்டுமிய்யா" என்றாள்.

தமிழரசிக்கு, யார் சொன்னதும் காதில் விழவில்லை. காதில் விழுந்தாலும் கருத்தில் விழவில்லை. தாமோதரன் வந்திருக்காராமே... அவருக்கே என்னைக் கொடுக்கிறதா தீர்மானமாயிட்டா, குட்! இந்த தடவையாவது அவர் கிட்ட பேசணும். அவரைப் பேச வச்சுடணும். என்னடி இது.... லீவுல அவரைப் பார்த்தால் பேசுறீயே... பேசுராரே... அப்டில்ல! வேறமாதிரி பேசணும்.... 'என்ன சுகமா'ன்னு முன்னால பேசுறது மாதிரிப் பேசப் படாது... 'சுகமாய்' பேசணும்...

கனவுலகில் இருந்து நழுவி, மெள்ள மெள்ள நனவுலகிற்கு வந்த தமிழரசி, பாட்டியை அண்ணன் பலவந்தமாக இழுத்துக்கொண்டு போவதைப் பார்த்தாள். மனசு கேட்கவில்லை. "பாட்டிக்கு நடக்கத் தெரியும் அண்ணா" என்றாள் பலமாக. பிறகு, அண்ணனின் வன்மம் இல்லாத வன்முறைக்கு பரிகாரம் செய்பவள் போல், "பாட்டி, எங்கேயும் போயிடாதே. சாயங்காலமாய் வாரேன்" என்றாள். திரும்பி ஏதோ பேசப்போன பாட்டியை, ராஜதுரை பலவந்தப்படுத்திக் கொண்டிருந்தான். இதற்குள், பாட்டிமேல் பார்வை படாதபடி, அவளைப் பெண்கள் கூட்டம் மறைத்தது. ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பார்த்தாள். ஒட்டுமொத்தமாகப் புன்னகைத்தாள். ஏதேதோ பேச்சுக்கள்; தத்தம் வீட்டுக்கு வரவேண்டும் என்று அழைப்புக்கள். தன் மகளிடம் இன்னும் பேச முடியவில்லையே என்று தாய் பகவதியம்மாவின் தவிப்புக்கள். வெளியே கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்திருந்த தந்தைக்காரர் அருணாசலம் “தமிழு, ஒனக்காகத்தான் காத்து இருக்காங்க; இன்னும் அங்கே என்ன பேச்சு?” என்றார் செல்லமான அதட்டலோடு.

தமிழரசி வெளியே வந்தாள், காதுகளில் ‘ரிங்’ ஊஞ்சலாட, கன்னக் கதுப்பில் முடிமோத, எல்லோரையும் பார்த்துக் கும்பிட்டபடி வந்தாள். ஊரார் பேசும் முன்னாலயே பேசினாள் :

“என்ன மாமா... அத்தைக்கு உடம்புக்கு இப்போ எப்படி இருக்கு? தாத்தா, ஒங்க பேரன் இப்போ எப்படி படிக்கான்?”

“ஏதோ படிக்கான்... கழுதப் பயலுக்கு நீதான் ஒரு வேல வாங்கிக் கொடுக்கணும்.”

“என்னால எப்டி முடியும்?”

“ஏம்மா முடியாது? மந்திரியோடவும், அதிகாரிகளோடயும் நீ இருக்கிற போட்டோவ பார்க்கத்தானே செய்யுறோம்.”

“அதுவா? சில இலக்கியக் கூட்டத்துல பேசச் சொல்லுவாங்க. அங்க மந்திரியும் அவர் பாட்டுக்கு வந்திருப்பார். அவ்வளவுதான்.”

“அவ்வளவோ... எவ்வளவோ... ஒன்னத்தான் நாங்க நம்பியிருக்கோம். நம்ம ஊர்ல - பிறந்து, பெரிய பெரிய வேல பார்க்கிற ஆம்புளப் பயலுவ, சொந்த ஊரை அசலூராய் நினைச்சுட்டானுவ. நீதான் ஊருக்கு நல்லது செய்யணும்.”

இடையில் பேசியவரை மறித்து ஒருவர் பேசினார்.

“என்னவே, இது ஒம்ம பையனுக்கு வேலை, வாங்கிக் கொடுத்தால் ஊருக்கு நல்லது செய்ததாய் ஆயிடுமா? அவனும் அப்புறம் மெட்ராஸ்லயே பழி கிடப்பான்.”

“என்னவே நீங்க... வந்ததும் வராததுமாய் சிபாரிசு கேக்கிய? தமிழு, வெள்ளிக் கிழம நிச்சய தாம்பூலத் துக்கு இருந்துட்டு காலேஜ் போறியா? இல்ல, கல்யாணம் வரைக்கும் இருக்கப் போறீயா?”

“காலேஜ்ல மாணவர் தேசிய சேவை திட்டமுன்னு ஒண்ணு இருக்கு. அதுக்கு நான்தான் பொறுப்பு. வேல இருக்கு. நிச்சய தாம்பூலத்துல கலந்துகிட்டு, அப்புறம் மெட்ராஸ் போயிட்டு, கல்யாணத்துக்கு வரணும்.”

“ஏதோ ... என் மகன் பரீட்சை பேப்பர் அங்கேதான் வருமாம். நீதான்...”

“நீங்க பேசுறதைப் பார்த்தால், நான் எலெக்ஷன்ல நிற்கலாம் போலுக்கு...”

“எந்தெந்த கழுதையோ நிக்கும்போது, நீ ஏன் நிக்கப்படாது?”

ஊர்ப் பெரியவர்கள், ஒருவழியாகப் போய்விட்டார்கள். தமிழரசி, முந்தானையால் முகத்தில் வீசியபோது, பகவதி அம்மா வீட்டுக்குள் இருந்தே குரல் கொடுத்தாள்:

“வந்தது மத்தியானம் ரெண்டு மணி; இப்போ நாலு: மணி. முதல்ல உள்ள வா. குளிச்சுட்டு, சாப்புடப் போறியா? சாப்பிட்டுட்டு குளிக்கப் போறியா?”

அம்மா சொல்வது, சென்னையிலும் இதர நகரங்களிலும் இப்போது நடைபெறும் பட்டிமன்றங்களுக்கு, அருமையான தலைப்பு என்பது போல், பல பட்டிமன்றங்களில் கலந்து கொள்ளும் தமிழரசி ரசித்தபடி நின்றாள். பிறகு “குளிச்சுடுறேம்மா...” என்றாள்.

சமையலறைக்குள் இருந்து, சித்தப்பா மகள் கலாவதியின் குரல் கேட்டது:

“வெந்நி ரெடி...”

வேண்டாம்... எனக்கு பச்சைத் தண்ணி போதும்...”.

தமிழரசி, குளிப்பதற்காக உள்ளே போகப் போனாள். வெளித்தளத்தில் கல்தூணில் சாய்ந்தபடி, தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கலாவதியின் தந்தை, மாடக்கண்ணுவைப் பார்த்தாள். அப்பா கூடப்பிறந்த சொந்த சித்தப்பா. அண்ணன் மகள் வேறு, தன் மகள் வேறு என்று வித்தியாசம் பாராட்டாமல் சிறு வயசில் இருந்தே, இருவரையும் இருதோளில் போட்டவர். இருவருக்கும் எது வாங்கி வந்தாலும் சமமாக வாங்கி வருபவர். வாய் அதிர்ந்து பேசியோ, கையதிர ஆரவாரமாகவோ பேசாதவர். இதனால் ஊரில் அவருக்கு ‘பைத்தியாரத் தர்மரு’ என்று பட்டப்பெயர். அதனாலோ என்னவோ, எப்படியோ சொத்தை கோட்டை விட்டார். ஊரார் பாதி பிடுங்கிவிட்டார்கள் என்றால், அப்பா மீதியைப் பிடுங்கி விட்டார். இப்போ அவருக்கு ஒரு ஓலை வீடும், கலாவதியும், மகன் வினைதீர்த்தானுமே சொத்துக்கள்.

அண்ணன் மகளின் பார்வை, தன்மேல் படுவதற்காக தவம் இருப்பவர் போலவும், அதே சமயம் தனது நிலைமையை எண்ணி, பெஞ்சில் உட்கார விரும்பாதவர் போலவும், விக்கித்து, தரையில் இருந்தவரை, தமிழரசி தாளமுடியாமல் பார்த்தாள். பிறகு “பெஞ்சில் உட்கார்ந்தால் என்ன சித்தப்பா?” என்றாள். சித்தப்பாவிற்கு, அன்றைக்கே ஒரு எட்டுமுழம் மல் வேட்டியும், ஜரிகைத் துண்டும் எடுத்துக் கொடுத்துவிட்டால், அவராகவே, தானாக பெஞ்சில் உட்காருவார் என்று நினைத்துக் கொண்டாள். ஊர்ப் பெரியவர்களை அனுப்பி விட்டு உள்ளே வந்த தந்தை அருணாசலம், “முதல்ல குளிம்மா...” என்றார். உள்ளே அவள் வருகையை அம்மாவும், சித்தப்பா மகள் கலாவதியும், மணப் பெண்ணின் தங்கை பொன்மணியும் ஆவலோடு எதிர்பார்ப்பதுபோல், கண்களை அகலப்படுத்தினர்கள்.

தமிழரசி வீட்டுக்குள் போகப் போனபோது—

வெளியே உரக்க சத்தம் கேட்டது. சத்தம் முடியு முன்னாலேயே, தமிழரசியின் சித்தப்பா மகன், ஒரு வாலிபனை கழுத்தோடு சேர்த்துத் தூக்கிப் பிடித்துக் கொண்டு வந்தான். தமிழரசியின் முன்னால் அவனை நிறுத்திவிட்டு “ம்...என் தங்கச்சி காலுல விழுந்து மன்னிப்பு கேட்கிறியா...மண்டைய ஒரேயடியாய் உடைக்கட்டுமா” என்றான்.

இதற்குள், வெளியே இருந்து நான்கு பேர் ஓடி வந்தார்கள். ஆயுதம் தனியாகத் தேவையில்லை என்பது போன்ற உடம்புக்காரர்கள்! வந்தவர்களில் ஒருவன் “டேய் வினைதீர்த்தான்... இப்போ கொலை விழணுமுன்னு நினைக்கியா” என்று அதட்டினான். வினைதீர்த்தான் கீழே கிடந்த மண்வெட்டியைப் பார்த்தான்.