நேரு தந்த பொம்மை/சிறையில் தேள்



சிறையிலே தேள்!


ஜெயிலில் நேரு இருந்த போது
நடந்த நிகழ்ச்சியைத்
தெரியும் வகையில் உங்க ளுக்குக்
கூறப் போகிறேன்;
வெயிலின் கொடுமை தாங்கி டாமல்
கொடிய தேள் ஒன்று
மெல்ல அவரின் அறையி னுள்ளே
வந்து சேர்ந்ததாம்!

கண்ட வுடனே நேரு பதற்றம்
கொள்ள வில்லையாம்.
கல்லைத் தூக்கி மேலே போட்டுக்
கொல்ல வில்லையாம்.
"என்ன செய்தார்?” என்று தானே
நீங்கள் கேட்கிறீர்?
எடுத்துச் சொல்வேன்! பொறுமை யாகக்
கேட்பீர் நண்பரே.



சுருக்குப் போட்டுக் கயிற்றி னாலே
கொடுக்கில் கட்டினர்.
தூக்கிச் சுவரில் தேளைக் கட்டித்
தொங்க விட்டனர்.
அருகில் நின்று சிரித்த படியே
அதனைப் பார்த்தனர்.
அந்தப் பார்வைக் குள்ளே யுள்ள
அர்த்தம் என்னவோ?

தொங்கு கின்ற தேளைக் கண்டே
அங்கு வந்திடும்
சொந்தக் காரத் தேள்கள் ஓடி
ஒளியு மென்றுதான்
அங்கு ஜவஹர் தேளைக் கட்டித்
தொங்க விட்டனர்.
ஆனால், அதுவும் எந்த விதமோ
தப்பி விட்டதாம்!

அங்கு மிங்கும் ஜவஹர் தேளைத்
தேடிப் பார்த்தனர்.
அறையில் அதனைக் கண்டு பிடிக்க
முடிய வில்லையாம்.
இங்கே யிருந்தால் கயிற்றில் மீண்டும்
தொங்க வேண்டுமே!
என்று பயந்து கொண்டே தேளும்
ஓடி விட்டதோ!