பக்கம்:சோழர் வரலாறு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

சோழர் வரலாறு



புத்திரர்’ ஆகலாம் என்று பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் கருதுகின்றனர்.[1] கோசர் எவரே ஆயினும், தமிழகத்துக்குப் புதியவர் என்பதில் ஐயமில்லை.

மோரியர் படையெடுப்பு

வடுகர், கோசர் என்னும் படைவீரர் தவிர, மோரியர் படை ஒன்று தனியே இருந்தது. அப்படையில் தேர்கள் இருந்தன. எனவே, இத்தமிழகப் படையெடுப்பில் மோரியர் படை, கோசர் படை, வடுகர் படை என மூவகைப்படைகள் இருந்தன. (1) இம்மூவருள் முன்னுற வந்த கோசர் தமிழகத்தின் வடமேற்கு எல்லை வழியாக நுழைந்து துளுவ நாட்டை அடைந்தனர்; அந்நாட்டரசனான நன்னன் என்பானைக் காட்டிற்கு விரட்டினர்; அவனது பட்டத்து யானையைக் கொன்றனர், துளுவ நாட்டைக் கைப்பற்றினர்;[2] அவனது காவல் மிகுந்த பாழி என்னும் இடத்தே வடுகர் தங்கிவிட்டனர்.[3] வென்ற நாட்டில் வென்றவர் படை இருந்து பாதுகாத்தல் இயல்பே யன்றோ?

(2) நன்னனை வென்ற கோசர், சேரன் தானைத் தலைவனும் முதிரமலைத் தலைவனுமான பிட்டங் கொற்றன் என்பானைத் தாக்கினர்; போர் நடந்தது. முடிவு தெரியவில்லை.[4] (3) பின்னர் ‘வாட்டாறு’ என்ற ஊரையும் ‘செல்லூர்’ என்பதனையும் ஆண்ட எழினி ஆதன் என்பவனைக் கோசர் எதிர்த்தனர். அவன் செல்லுர்க்குக் கிழக்கே கோசரோடு, போரிட்டு, வேல் மார்பில் தைக்கப் பெற்று இறந்தான்.[5] (4) கோசர் சோழ நாட்டை அடைந்து அழுந்துரர் வேளான திதியனைத் தாக்கினர்; திதியன் கடுங்கோபம் கொண்டு, புலிக் கூட்டத்துள் சிங்கம்


  1. Vide his ‘Cholas’, vol. I p.28.
  2. குறுந்தொகை 73.
  3. அகம், 375.
  4. புறம், 169.
  5. அகம், 90, 216.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/44&oldid=480433" இலிருந்து மீள்விக்கப்பட்டது