அகநானூறு/81 முதல் 90 முடிய
< அகநானூறு
அகநானூறு பக்கங்கள்
களிற்றியானை நிரை 1-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100 101-110 111-120
மணிமிடை பவளம் 121-130 131-140 141-150 151-160 161-170 171-180 181-190 191-200 201-210 211-220 221-230 231-240 241-250 251-260 261-270 271-280 281-290 291-300
நித்திலக் கோவை 301-310 311-320 321-330 331-340 341-350 351-360 361-370 371-380 381-390 391-400
1. களிற்றியானை நிரை
தொகுபாடல்: 81 (நாளுலா)
தொகு- நாள்உலா எழுந்த கோள்வல் உளியம்
- ஓங்குசினை இருப்பைத் தீம்பழம் முனையின்,
- புல்அளைப் புற்றின் பல்கிளைச் சிதலை
- ஒருங்கு முயன்று எடுத்த நனைவாய் நெடுங்கோடு
- அரும்புஊது குருகின், இடந்து, இரை தேரும் 5
- மண்பக வறந்த ஆங்கண் கண்பொரக்
- கதிர்தெறக் கவிழ்ந்த உலறுதலை நோன்சினை
- நெறிஅயல் மராஅம் ஏறிப், புலம்புகொள
- எறிபருந்து உயவும் என்றூழ் நீள்இடை
- வெம்முனை அருஞ்சுரம் நீந்திச் - சிறந்த 10
- செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர்
- ஒளிறுவேல் அழுவம் களிறுபடக் கடக்கும்
- மாவண் கடலன் விளங்கில் அன்ன, எம்
- மைஎழில் உண்கண் கலுழ-
- ஐய! சேறிரோ, அகன்றுசெய் பொருட்கே? 13
பாடல்: 82 (ஆடமைக்)
தொகு- ஆடுஅமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
- கோடை அவ்வளி குழலிசை ஆக,
- பாடுஇன் அருவிப் பனிநீர் இன்இசைத்
- தோடுஅமை முழவின் துதைகுரல் ஆகக்
- கணக்கலை இகுக்கும் கடுங்குரற் றூம்பொடு 5
- மலைப்பூஞ் சாரல் வண்டுயாழ் ஆக
- இன்பல் இமிழ்இசை கேட்டுக், கலிசிறந்து,
- மந்தி நல்அவை மருள்வன நோக்கக்
- கழைவளர் அடுக்கத்து, இயலி ஆடுமயில்
- நனவுப்புகு விறலியின் தோன்றும் நாடன்! 10
- உருவவல் விற்பற்றி, அம்புதெரிந்து,
- செருச்செய் யானை செல்நெறி வினாஅய்ப்,
- புலர்குரல் ஏனற் புழையுடை ஒருசிறை,
- மலர்தார் மார்பன், நின்றோற் கண்டோ ர்
- பலர்தில், வாழி - தோழி - அவருள், 15
- ஆர்இருட் கங்குல் அணையொடு பொருந்தி,
- ஓர்யான் ஆகுவது எவன்கொல்,
- நீர்வார் கண்ணொடு, நெகிழ்தோ ளேனே? 18
பாடல்: 83 (வலஞ்சுரி)
தொகு- வலம்சுரி மராஅத்துச் சுரம்கமழ் புதுவீச்
- சுரிஆர் உளைத்தலை பொலியச் சூடி,
- கறைஅடி மடப்பிடி கானத்து அலறக்,
- களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலிசிறந்து,
- கருங்கால் மராஅத்து கொழுங்கொம்பு பிளந்து, 5
- பெரும்பொழி வெண்நார் அழுந்துபடப் பூட்டி,
- நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்,
- நறவுநொடை நல்இல் பதவுமுதற் பிணிக்கும்
- கல்லா இளையர் பெருமகன் புல்லி
- வியன்தலை நல்நாட்டு வேங்கடம் கழியினும் 10
- சேயர் என்னாது, அன்புமிகக் கடைஇ,
- எய்தவந் தனவால் தாமே - நெய்தல்
- கூம்புவிடு நிகர்மலர் அன்ன
- ஏந்துஎழில் மழைக்கண்எம் காதலி குணனே! 14
பாடல்: 84 (மலைமிசைக்)
தொகு- மலைமிசைக் குலஇய உருகெழு திருவில்
- பணைமுழங்கு எழிலி பௌவம் வாங்கித்
- தாழ்பெயற் பெருநீர், வலன்ஏர்பு வளைஇ,
- மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர
- இருநிலம் கவினிய ஏமுறு காலை- 5
- நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி,
- அயிர்க்கட் படாஅர்த் துஞ்சுபுறம் புதைய,
- நறுவீ முல்லை நாண்மலர் உதிரும்
- புறவு அடைந் திருந்த அருமுனை இயவிற்
- சீறூ ரோளே, ஒண்ணுதல்! - யாமே, 10
- எரிபுரை பன்மலர் பிறழ வாங்கி,
- அரிஞ்ர் யாத்த அலங்குதலைப் பெருஞ்சூடு
- கள்ஆர் வினைஞர் களந்தொறும் மறுகும்
- தண்ணடை தழீஇய கொடிநுடங்கு ஆர்எயில்
- அருந்திறை கொடுப்பவும் கொள்ளான், சினம்சிறந்து, 15
- வினைவயின் பெயர்க்குந் தானைப்,
- புனைதார், வேந்தன் பாசறை யேமே! 17
பாடல்: 85 (நன்னுதல்)
தொகு- நன்னுதல் பசப்பவும், பெருந்தோள் நெகிழவும்
- உண்ணா உயக்கமொடு உயிர்செலச் சாஅய்
- இன்னம் ஆகவும், இங்குநத் துறந்தோர்
- அறவர் அல்லர் அவர்' எனப் பலபுலந்து
- ஆழல் - வாழி, தோழி!- 'சாரல், 5
- ஈன்றுநாள் உலந்த மென்னடை மடப்பிடி,
- கன்றுபசி களைஇய, பைங்கண் யானை
- முற்றா மூங்கில் முளைதருபு, ஊட்டும்
- வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை;
- நல்நாள் பூத்த நாகுஇள வேங்கை 10
- நறுவீ ஆடிய பொறிவரி மஞ்ஞை
- நனைப்பசுங் குருந்தின் நாறுசினை இருந்து,
- துணைப்பயிர்ந்து அகவும் துணைதரு தண்கார்,
- வருதும், யாம்' எனத் தேற்றிய
- பருவம் காண் அது; பாயின்றால் மழையே. 15
பாடல்:86 (உழுந்துதலைப்)
தொகு- உழுந்துதலைப் பெய்த கொழுங்கனி மிதவை
- பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரைகால்
- தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி,
- மனைவிளக் குறுத்து, மாலை தொடரிக்,
- கனைஇருள் அகன்ற கவின்பெறு காலைக், 5
- கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
- கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென,
- உச்சிக் குடத்தர், புத்துகன் மண்டையர்,
- பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
- முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப், 10
- புதல்வற் பயந்த திதலை! அவ் வயிற்று
- வால்இழை மகளிர் நால்வர் கூடிக்,
- 'கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
- பெற்றோற் பெட்கும் பிணையை ஆக'- என
- நீரொடு சொரிந்த ஈர்இதழ் அலரி 15
- பல்இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
- வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்,
- கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து,
- 'பேர்இற் கிழத்தி ஆக' எனத் தமர்தர;
- ஓர்இற் கூடிய உடன்புணர் கங்குல், 20
- கொடும்புறம் வளைஇக், கோடிக் கலிங்கத்து
- ஒடுங்கினள் கிடந்த ஓர்புறம் தழீஇ,
- முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப,
- அஞ்சினள் உயிர்த்த காலை, யாழநின்
- நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை' என. 25
- இன்நகை இருக்கை, பின்யான் வினவலின்-
- செஞ்சூட்டு ஒண்குழை வண்காது துயல்வர
- அகமலி உவகையள் ஆகி, முகன் இகுத்து,
- ஒய்யென இறைஞ்சி யோளே - மாவின்
- மடம்கொள் மதைஇய நோக்கின்
- ஒடுங்குஈர் ஓதி, மா அ யோளே. 31
பாடல்: 87 (தீந்தயிர்)
தொகு- தீந்தயிர் கடைந்த திரள்கால் மத்தம்
- கன்றுவாய் சுவைப்ப, முன்றில் தூங்கும்
- படலைப் பந்தர்ப் புல்வேய் குரம்பை,
- நல்கூர் சீறூர் எல்லித் தங்கிக்,
- குடுமி நெற்றி நெடுமரச் சேவல் 5
- தலைக்குரல் விடியற் போகி, முனாஅது,
- கடுங்கண் மறவர் கல்லெழு குறும்பின்
- எழுந்த தண்ணுமை இடங்கட்பாணி,
- அருஞ்சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணெனக்,
- குன்றுசேர் கவலை, இசைக்கும் அத்தம், 10
- நனிநீடு உழந்தனை மன்னே! அதனால்
- உவஇனி - வாழிய, நெஞ்சே - மைஅற
- வைகுசுடர் விளங்கும் வான்தோய் வியனகர்ச்
- சுணங்குஅணி வனமுலை நலம்பா ராட்டித்,
- தாழ்இருங் கூந்தல்நம் காதலி
- நீள்அமை வனப்பின் தோளுமார் அணைந்தே! 16
பாடல்:88 (முதைச்சுவற்)
தொகு- முதைச்சுவற் கலித்த மூரிச் செந்தினை
- ஓங்குவணர்ப் பெருங்குரல் உணீஇய, பாங்கர்ப்
- பகுவாய்ப் பல்லி பாடுஓர்த்துக் குறுகும்
- புருவைப் பன்றி வருதிறம் நோக்கி,
- கடுங்கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய 5
- நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்து, நம்
- நடுங்குதுயர் களைந்த நன்ன ராளன்
- சென்றனன் கொல்லோ தானே - குன்றத்து
- இரும்புலி தொலைத்த பெருங்கை யானைக்
- கவுள்மலிபு இழிதரும் காமர் கடாஅம் 10
- இருஞ்சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ்செத்து,
- இருங்கல் விடர்அளை அசுணம் ஓர்க்கும்
- காம்புஅமல் இறும்பில் பாம்புபடத் துவன்றிக்,
- கொடுவிரல் உளியம் கெண்டும்
- வடுஆழ் புற்றின வழக்குஅரு நெறியே? 15
பாடல்:89 (தெறுகதிர்)
தொகு- தெறுகதிர் ஞாயிறு நடுநின்று காய்தலின்,
- உறுபெயல் வறந்த ஓடுதேர் நனந்தலை,
- உருத்துஎழு குரல குடிஞைச் சேவல்,
- புல்சாய் விடரகம் புலம்ப, வரைய
- கல்லெறி இசையின் இரட்டும் ஆங்கண், 5
- சிள்வீடு கறங்கும் சிறியிலை வேலத்து
- ஊழுறு விளைநெற்று உதிரக், காழியர்
- கவ்வைப் பரப்பின் வெவ்வுவர்ப்பு ஒழியக்,
- களரி பரந்த கல்நெடு மருங்கின்,
- விளர்ஊன் தின்ற வீங்குசிலை மறவர் 10
- மைபடு திண்தோள் மலிர வாட்டிப்,
- பொறைமலி கழுதை நெடுநிரை தழீஇய
- திருந்துவாள் வயவர் அருந்தலை துமித்த
- படுபுலாக் கமழும் ஞாட்பில், துடிஇகுத்து
- அருங்கலம் தெறுத்த பெரும்புகல் வலத்தர், 15
- விலங்கெழு குறும்பில் கோள்முறை பகுக்கும்
- கொல்லை இரும்புனம் நெடிய என்னாது,
- மெல்லென் சேவடி மெலிய ஏக
- வல்லுநள் கொல்லோ தானே - தேம்பெய்து
- அளவுறு தீம்பால் அலைப்பவும் உண்ணாள், 20
- இடுமணற் பந்தருள் இயலும்,
- நெடுமென் பணைத்தோள், மாஅ யோளே? 22
பாடல்:90 (மூத்தோர்)
தொகு- மூத்தோர் அன்ன வெண்தலைப் புணரி
- இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்
- தளைஅவிழ் தாழைக் கானல்அம் பெருந்துறை
- சில்செவித்து ஆகிய புணர்ச்சி அலர்எழ,
- இல்வயிற் செறித்தமை அறியாய்; பன்னாள் 5
- வருமுலை வருத்தா, அம்பகட்டு மார்பின்
- தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்வயின்,
- 'நீங்குக' என்று, யான் யாங்ஙனம் மொழிகோ?
- அருந்திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது
- பெருங்கடல் முழக்கிற்று ஆகி, யாணர், 10
- இரும்புஇடம் படுத்த வடுவுடை முகத்தர்,
- கருங்கட் கோசர் நியமம் ஆயினும்
- 'உறும்' எனக் கொள்குநர் அல்லர்-
- நறுநுதல் அரிவை பாசிலை விலையே! 14